சனி, 10 டிசம்பர், 2022

பாட்டன் மறுபடியும் வரவேண்டும்....

சிந்துவேந்தனுக்குப் பிறந்தநாள் (டிசம்பர், 11ஆம் நாள்).   மக்கள்கவி, மாந்தநேயன், நாட்டுப்பற்றாளன், விடுதலைப் போராட்ட வீரன், சமுதாயச் சீர்திருத்தவாதி,  என்றெல்லாம் ஊரெங்கும் போற்றப்பட்ட மகாகவியின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் வெறும் 14 பேர்கள் மட்டுமே!  இருக்கும் போது ஒருவரின் மதிப்பைப் போற்றாது விட்டுவிட்டு, இல்லாமல் போன பின்னர், நம்நாட்டு அரசியலார் செய்கின்ற மரியாதை என்ன; சூட்டுகின்ற கணக்கிலடங்கா மாலையென்ன; நடத்துகின்ற நாடகமென்ன?

கம்பன், புகழேந்தி, ஔவை, ஒட்டக்கூத்தர், காளமேகம், தாகூர், பாவேந்தர், கவியரசு, சேக்சுபியர், காஃப்கா, யீட்சு, கீட்சு, வேட்சுவர்த்து, நெருடா, எசுரா பவுண்டு, பைரன் இப்படிப் பலரின் (இன்னும் பல கவிஞர்கள்) பாடற்   படைப்புகளில் மூழ்கித் திளைத்தே அகங்குளிரச்  சுவைத்திருந்தாலும்,  நம்முடைய சிந்து வேந்தனின் கவிதைகளே என்றன் முதல் காதலி; அவனே என்றன் கவிதைகளின் தோணி.  இந்தப் பிறந்தநாளில் அவனுடைய மொழியாற்றலை, கவித்திறனை, நாட்டுப்பற்றை, சமத்துவ அறத்தை, குமுகாயச் சிந்தனையை எண்ணி நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.  

=========================================
தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்  
காணிநிலம் காளியிடம் கேட்டவனின் பாக்களிலே 
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
=============================













=============================
பாட்டன் வரவேண்டும் இன்று!
=============================
மொழியென்னும் தமிழ்புரவித் தேரைப் பூட்டி,
.....மோடுமுட்டிச் சழக்ககலப் பாட்டுந் தீட்டி,
வழக்கென்றும் மன்றென்றும் அலைந்தே சோர்ந்த, 
.....மாகவிக்கின் றூரெல்லாம் முழங்கும் வாழ்த்து!
செழுமையுடன் சுற்றமதோ வாழ்த்த வில்லை;
.....செருக்கர்கள் நீபிழைக்க விடவு மில்லை;
இழுத்திழுத்தே ஊரெங்கும் ஓட விட்டே,
.....இளைப்பார இடமுமின்றி மாய்ந்தா யன்றே!

துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை பூச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பேச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்! 
நடிக்கின்ற அரசியலார் செய்யும் கேட்டை 
.....நயபுடைக்கும் நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

மற்றவரின் தாய்மொழியை அழித்தே இங்கு, 
....மயக்குமொழி பேசிநிதம் ஏய்த்தே வாழும், 
குற்றமன உணர்வுநிலை ஏது மில்லாக் 
.....கொக்கரிக்கும் மேட்டிமையின் திட்டம் மாய, 
முற்றிவிட்ட பைத்தியஞ்செய் சட்டஞ் சாய, 
.....முத்தமிழால் சொல்லடுக்கும் பாட்டுத் தீயால், 
வற்றிவிட்ட வண்டமிழை காக்க வென்றே, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

கரிமிதித்தோ காலனவன் கவர்ந்தா னும்மை? 
.....கால்வருடிக் கயவருனைக் காட்டித் தந்தே, 
சிரித்தபடி சிலுவையிலே அறைந்தாற் போலச் 
.....தீயுளத்தோர் வஞ்சகமாய்ச் சாய்த்து விட்டார்; 
எரித்தழிக்க முடியாத காற்றின் வீச்சாய், 
.....எத்தரையே பொசுக்கிவிடும் கவிதை மூச்சாய், 
மரிக்கொழுந்தின் மயக்குமந்த மணத்தை போல, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 
==================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 29 நவம்பர், 2022

கயல்விழியும் கூருகிரோ.....

காதலெனும் கடல்............

இரைகின்ற பெருந்நாகமோ இல்லை பின்னலெனும் வெறுங்கூந்தலோ? சீறிவரும் கூருகிரோ இல்லை சீராரும் கயல்விழியோ?

=========================================








========================================= 
அவனுக்கோ...
===========
சேர்த்துக் கட்டி வரிந்தாலும், 
பார்த்தால் உளம்கொய்திட,
ஆர்ப்ப ரித்தே இரையுமொரு, 
பெருந்நாகம் என்றானால்:

அவளுக்கோ...
===========
நீள்விரலால் வாகொதுக்கத்
தோள்சரிந்தே காதோரங்
காற்றலைவிற் கதைபேசும், 
பின்னலெனும் வெறுங்கூந்தல்...

அவனுக்கோ...
===========
உளங்கிழிக்கச் சட்டென்றே, 
மின்னலதன் வடிவதுவாய், 
உயிர்குடிக்கச் சீறிவருங்  
கூருகிர்கள் என்றானால்;

அவளுக்கோ...
===========
அவனெழிலை அமிழ்தெனவே 
அன்பதனால் அன்றாடம்
தான்குடிக்க ஏங்குகின்ற, 
சீராருங் கயல்விழியோ?
====================
இராச. தியாகராசன்

பிகு:
கூருகிர் = கூரிய நகம்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாயக் குதிரை......

என்னுடைய மைந்தர் வைகறைச்செல்வன், 2015ஆம் ஆண்டென்னை ஒரு குதிரைப் பாட்டு எழுது என்று பணித்ததால், வந்த வரிகளிவை!  பாயுங்குதிரை,  மாயக்குதிரை, பாட்டுக் குதிரை, வேட்டுக் குதிரை, காட்டுக் குதிரை, நெருப்புக் குதிரை, நேசக்குதிரை, மந்திரக்குதிரை;  இஃதொரு தந்திரக் குதிரை.

==========================================













===========================================|
மாயக்குதிரை....
===================
சிட்டாப் பறக்குது சின்னக் குதிரை;
.....சீறிப் பறக்குது செல்லக் குதிரை;
பட்டாப் பறக்குது பஞ்சுக் குதிரை;
....பரிவாப் பறக்குது பருவக் குதிரை;

கருக்காப் பறக்குது காட்டுக் குதிரை;
....காத்தாப் பறக்குது கருப்புக் குதிரை;
செருக்காப் பறக்குது சீலக் குதிரை;
....தெறிக்கப் பறக்குது சீமைக் குதிரை;

காராப் பறக்குது கர்வக் குதிரை;
....கழுகாப் பறக்குது கனவுக் குதிரை;
சோராப் பறக்குது சூரக் குதிரை;
....சோக்காப் பறக்குது துப்புக் குதிரை;

பாடிப் பறக்குது பாசக் குதிரை;
....பழகிப் பறக்குது பாலக் குதிரை;
ஆடிப் பறக்குது ஆசைக் குதிரை;
....அழகாப் பறக்குது ஆக்கக் குதிரை

விண்ணில் பறக்குது மின்னல் குதிரை:
....விரைந்தே பறக்குது வெள்ளைக் குதிரை;
மண்ணில் பறக்குது மட்டக் குதிரை;
....மயக்கப் பறக்குது மாயக் குதிரை;

பாய்ந்தே பறக்குது பழுப்புக் குதிரை;
....பதுங்கிப் பறக்குது பருந்துக் குதிரை;
மாய்ந்தே பறக்குது மஞ்சுக் குதிரை;
....வசமாப் பறக்குது வண்ணக் குதிரை;

தழலாப் பறக்குது சந்தக் குதிரை;
....தணலாப் பறக்குது தங்கக் குதிரை;
அழலாப் பறக்குது அன்புக் குதிரை;
....அறிவாப் பறக்குது அருமைக் குதிரை;

செழிவாப் பறக்குது செவத்தக் குதிரை; 
....தீயாப் பறக்குது செருவக் குதிரை
நிழலாப் பறக்குது நேசக் குதிரை;
....நெருப்பாப் பறக்குது நெஞ்சக் குதிரை;

பொறியாப் பறக்குது பொள்ளுக் குதிரை;
....பூவாப் பறக்குத்து பொங்கு குதிரை;
அறமாப் பறக்குது ஆவல் குதிரை;
....அழிக்கப் பறக்குது ஆட்டக் குதிரை;

இடியா பறக்குது இரும்புக் குதிரை;
....எடுப்பாப் பறக்குது எரியுங் குதிரை;
முடுக்காப் பறக்குது மோக குதிரை;
....முறுக்காப் பறக்குது மோனக் குதிரை!

எழிலாப் பறக்குது இன்பக் குதிரை;
....எமனாப் பறக்குது எண்ணக் குதிரை;
பொழிவாப் பறக்குது போட்டிக் குதிரை;
....பொலிவாப் பறக்குது போத்துக் குதிரை!

பாட்டாப் பறக்குது பளிங்குக் குதிரை;
....பதமாப் பறக்குது பண்ணுக் குதிரை;
வேட்டாப் பறக்குது வெளிச்சக் குதிரை;
....விரசாப் பறக்குது விந்தைக் குதிரை!
==================================
இராச. தியாகராசன்

பிகு:
====
துப்பு = வலிய
செருவம் = போர்
மட்டக்குதிரை = உயர்ந்த இனக்குதிரை
மஞ்சு = முகில்
பொள்ளுதல் = தீச்சூடு
அழல் = நெருப்பு, தீச்சுவாலை
முடுக்கு = மிடுக்கு
போத்து = சிற்றகவை

புதன், 23 நவம்பர், 2022

இல்லத்தரசியின் கதை...

இயல்பு வாழ்வியலில் அன்பு செய்வதன்றி, துணைவர் துணைவியை அடிப்பதோ, துணைவி துணைவரை அடிப்பதோ என்றும் சரியில்லை;  எந்தக் கருத்து வேற்றுமையையும், ஆர, அமர்ந்தே, ஆழ்ந்து, விவாதித்துத் தீர்வு காண்பதுதான் முறையான வழி. 

இது நகைச்சுவை இழையோடுமொரு கவிதை அவ்வளவே!  படியுங்கள்;  சுவையுங்கள்;  சிரியுங்கள்! 

(நான்கைந்து தமிழ்ச் சொற்களையும் பெய்திருக்கிறேன்: பொருள்களின் பெயரை மாற்றுவது கொலைக் குற்றம் என்போர், தயைகூர்ந்து கடந்து போகவும்.  விவாதத்திற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை/ நேரமும் இல்லை!) 
============================================


============================================
ஒர் இல்லத்தரசியின் கதை....
==========================
நான்செய்யும் நாவூறும் நற்புழுக்குத் தட்டம் பிடிக்கவில்லை;
தேன்போன் றினிக்குமென் சுவையார் கடினி பிடிக்கவில்லை;
வான்வாழுந் தேவர் மயங்குமாச் சில்லும் பிடிக்கவில்லை;
கோன்மக்கள், குவலயம் கொண்டாடுங் குளம்பி பிடிக்கவில்லை;

தேன்சுவை ஊறவே நான்கலக்கித் தருகும் தேநீரும் பிடிக்கவில்லை;
ஊன்சுவை யார்க்குமென் மாட்டூன் வறுவல் பிடிக்கவில்லை;
நான்தோய்த் தடுக்கும் காலுறை, துணிகளும் பிடிக்கவில்லை;
என்றும்நான் செய்கின்ற இல்லப்பணி எதுவுமே பிடிக்கவில்லை;

என்தவறே தென்றுநான் இடிந்தமர்ந்து நினைத்தே நைந்தபோது,
என்னுளத்தில் பளிச்சென்ற மின்னலாய் வெட்டிய எண்ணமொன்று;
அன்றவனின் அன்னைபோல் கன்னத்தில் விட்டேன் ஓரறை;
இன்றவனுக்கு என்செயல் எல்லாமும் இயல்பாய்ப் பிடிக்கிறது!
======================================
இராச. தியாகராசன்.

பிகு:
======
புழுக்குத் தட்டம் = கேசரோல் (Casserole)
கடினி = கேக்கு (Cake) 
மாச்சில்லு = பிசுக்கோத்து (Biscuit) 
குளம்பி = காப்பி (Coffee)
தேநீர் = சாயா (Tea -  என்ன செய்ய, இதையும் சொல்ல  வேண்டிய காலம்!)
மாட்டூன் வறுவல் = மாட்டிறைச்சி வறுவல் (Beef Stew)
காலுறை = சாக்சு (Socks)

ஞாயிறு, 6 நவம்பர், 2022

கவியெனச் சாற்றினனே.....

தளிர்த்தே அழிந்த கனவுக் கவிதை, 
பொலிந்தே அழிந்த கவிதைக் கனவு......

==================================











==================================
கவியெனச் சாற்றினனே.
(கட்டளைக் கலித்துறை)
=======================
வளமும் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே; 
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடும் தெண்டிரையே; 
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே; 
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!

மலர்ந்து மணந்தே மனத்தை கவர்ந்திடும் மல்லிகையே;
சிலிர்த்து நிதமும் சிந்தையை அள்ளிடுமச் செம்மலரே;
மலிந்த பரிவால் என்னை அணைத்திடும் மதிமுகமே; 
பொலிந்தே அழிந்த கனவைக் கவியெனப் போற்றினனே!
======================================================
இராச. தியாகராசன்.

எயிட்சு இல்லா இனிய உலகம்....

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி,  புதுவையரசில் எனக்கொரு பரிசிலும் பெற்றுத் தந்த எண்சீர் அகவல் விருத்தமிது.  "மாந்தரினமே முன்னெடுப்பீர் (LET COMMUNITIES LEAD)."  பன்னாட்டு ஆட்கொல்லி ஆட்கொல்லி நோய்க்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும், போதை ஊசிப் பழக்கத்தை வேரறுப்பீர்; ஓரினச் சேர்க்கையை புறந்தள்ளுவீர்;  பிறன்மனை வேண்டாத பேராண்மையே பேரறம் என்று வாழ்வீர்; சமூகத்தில் ஆண்/பெண் என்று பேதமில்லாமல்  கலந்துறையும் பணிகளில் இருக்கும் பேர்களும், நீண்ட தூரம் சரக்குந்து ஓட்டுகின்ற பேர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்/பெண் இரு சாராரும், மனவுறுதியுடன் வேற்றாளிடம்  உடலுறவில்லாமல் இருக்க உறுதி கொள்வீர்;  (அப்படி உறவில்லாமல் இருக்க ஏலாதென்னும் குறைந்த விழுக்காடு பேர்கள் உடலுறவின் போதாவது உறையைப் பயன்படுத்துவீர்!).

புதுவையில் இற்றைக்கு 100க்கு 95 விழுக்காடு பேர்கள் மணமுடித்ததும் மணவினையை முறையாகப் பதிவு செய்கிறார்கள்.  ஆகவே திருமணத்தைப் பதிவு செய்கையில், மணமக்கள் இருவர்க்கும் ஆட்கொல்லி நோயில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கக் கட்டாயமாக்கப் படுத்தப்பட  வேண்டும் என்று நான் பேசுமிடமெல்லாம்  வலியுறுத்துகிறேன்.  இன்னும் வேளைதான் வரவில்லை.
=============================================








============================================
எயிட்ஸ் இல்லா இனிய உலகம் 
============================================
(இதனை ஆதாஹ சந்துமா அல்லது உலகிலுள்ள 
பெரியோரே என்ற மெட்டில் பாடலாம்)
============================================
திருநிலவாய்ப் பூத்துநிற்கும் அமுதாம் பெண்ணே!
.....தித்திக்கும் வாழ்க்கையெனுங் கடலில் உன்னை, 
அருமையுடன் அனுப்பிடவே உன்றன் பெற்றோர்
.....அலைந்தலைந்து மணமகனைத் தேர்வுஞ் செய்தார்!
விருந்தின்று போட்டதுபோல் காணே னென்றே, 
.....விருந்துண்டு திருமணத்தை ஊரார் போற்ற, 
கரும்பினியாள் கழுத்தினிலே தாலி யிட்டு, 
.....கனவுகளும் நனவாக மாலை யிட்டான்!         (திருநிலவாய்)

மணமுடித்து திங்களைந்து போக வில்லை;
.....மயக்கமென மருமகனும் நாளுஞ் சொல்லித்
தணலெரிவாய்த் பெண்ணவளின் அன்புந் தீய,
....தளர்ந்துடலும் குறுகிநிதம் என்புந் தேய,
மணமகனி னுடலினுள்ளே உயிரைக் கொல்லும்,
....மாவரக்கன் புதுந்துவிட்ட சேதி கேட்டுக் 
கணக்கின்றிச் சீர்களெல்லாம் சேர்த்த தந்தை,
.....கட்டிவைத்த கோட்டைகளுஞ் சரிய நின்றார்! (திருநிலவாய்)

கோனோடு பெண்ணவளும் உறவில் சேர்ந்தே,
....குறைவில்லா இல்லறத்தின் இன்பம் தேர்ந்தே,
வானோடு வாழ்ந்திருக்கும் நிலவைப் போல, 
.....வன்சுடராய் வீசுஞ்செங் கதிரைப் போல, 
தேனோடு வானமிழ்தம் கலந்தாற் போல,
.....தேர்ந்தொருவ ரொருத்தியென வாழும் வாழ்வில், 
ஊனோடு கலந்திருக்கும் உயிரைக் கெல்லி, 
.....உறவறுக்கு முயிர்கொல்லிக் கிடமு மேது?    (திருநிலவாய்)

திருமணத்தின் முன்பேயே வீணில் தீய்ந்தே, 
.....சிதைந்தழியும் வழிகளிலே நடந்தே வீழ்ந்த, 
பெருந்துயரே கரணியமா யறிந்த போதில்,
.....பேர்துலங்கச் செய்திட்ட செலவில் சேர்த்தே,\
ஒருசெலவாய் மருத்துவரின் குருதிச் சான்றை, 
.....ஓர்ந்திடாத அறிவின்மை; உறுதி கொள்வோம்!
மருத்துவரின் சான்றதனை மணத்தின் முன்பே, 
.....மணமக்கள் இருவர்க்கும் கேட்போ மென்றே! (திருநிலவாய்)
==================================
இராச. தியாகராசன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

அரைக காசும் உன்னுடன் வருமோ???

வாழ்வது சிலநாள், சிலரை விரும்புவதேன்?  சிலரை வெறுப்பதுமேன்?  அனைவரையும் நேசியுங்கள்;  தாழ்வுற்றவர்க்காய் உதவுங்கள்.  வரும்போது எதையும் கொண்டுவரவில்லை: போகும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை.  இறங்கி, இருந்து, இறக்கும் வரையில் இருப்பிற்கொரு காவல் நாம் என்றுணர்ந்து வாழுங்கள்;  அடுத்தவர்க்காய் வாழுங்கள்; அடுத்தவரின் அவலநிலையில் அடுப்பெரிக்காமல் வாழுங்கள்!  

என்காலம் முடியும் போது, 100 (அ) 200 பேர் இரங்கற் சேதி தெரிவித்துவிட்டு, ஓரிரு வாரம் கழித்து, அவரவர் பணியைப்  பார்க்கப்  போகிறார்கள்; நெருங்கிய சொந்தங்கள் இன்னும் கூடுதலாய் ஓராண்டோ/ ஈராண்டோ நினைந்துருகப் போகிறார்கள்;  இதுதான் வாழ்வியல் நீதி.  நானிங்கு சொன்னவற்றில் இருக்கும் அறமென்பது என்றும் மாறாதது.  அறத்தின்பாற்பட்டு வாழ்வோரின் வாழ்வும்;  அவர்கள் சுற்றத்தின் சுகமும்;  பிள்ளைகளின் நலமும் என்றென்றைக்கும் உயர்ந்தே தானிருக்கும்.
===============================================








===============================================
அரை காசும் உன்னுடன் வருமோ.....
===============================================
பெற்றவரை அன்பதனால் தாங்குகின்ற, 
பிள்ளைகளோ பெருமைகளைச் சேர்த்துவிடும்;
கற்றவரின் உள்ளத்திலே ஓங்குகின்ற,
கல்வியெனும் செல்வமதை வாங்கிவிடும்!

தன்னாட்டின் மக்களையே மாக்களெனத்
தானெண்ணித் தருக்குடனே ஆண்டவரின்,
முன்நிகழ்ந்த வரலாறு சொல்லுகின்ற,
முகவரியை அறியாமல் தினந்தோறும்,

கைந்நிறைய காசென்றும் மணிக்கணக்கிற் 
காத்திருந்து கூவுகின்ற மக்களென்றும்,
வையகத்தின் புகழ்போதை தலைக்கேற
வசதியொடு மன்னரென வாழ்வோரும், 

மொத்தசுகம் பெரிதென்றே அலைந்தாலும்,
முற்றியிங்கு சருகிலையாய் உதிர்கையிலே
அத்தனவன் கயிற்றாட்டம் நிற்கையிலே,
அரைகாசும் அவருடனே வருமாமோ?
================================
இராச. தியாகராசன்

காப்பதுன்றன் பாரமே....

கருப்பையா, கருப்பையா காப்பதுன்றன் பாரமே! அருள்மிகு ஐயப்பன் பஜனையில் நான் பாடும் பாட்டின் மெட்டு.  

===================================


===================================
கருப்பையா, கருப்பையா
==========================
கருப்பையா, கருப்பையா 
குலதெய்வக் கருப்பையா;
கருப்பையா, கருப்பையா, 
கருணைசெய்வாய் கருப்பையா                     (கருப்பையா)

காட்டின் நடுவில் கனசோராய்
கருப்பன் என்ற பேரினிலே,
தபசில் அமர்ந்தச் சாமியை,
தளபதி கருப்பா காக்கின்றாய்!      (தளபதி) (கருப்பையா)

அவல்பொரி கடலைவைத்து
அன்பாய்ப் பூசை செய்குவேன்;
கருப்பட்டிஎள் வைத்தேநான்
கருப்பனுன்னைப் பாடுவேன்!         (கருப்ப)   (கருப்பையா)

புனுகுதனை வாங்குவேன்;
புருவங்களில் சாத்துவேன்;
கண்மலரும் சாத்துவேன்
காப்பதுன்றன் பாரமே!                       (காப்ப)  (கருப்பையா)

பதினெட்டு படிகளிலே
வாழுமென்றன் கருப்பனே;
கதியின்றே அலையுமெனை
காப்பதுன்றன் பாரமே!                        (காப்ப)   (கருப்பையா)
=================================
இராச. தியாகராசன்.

பாப்புதுவை வாழியவே....

 நற்புதுவை வாழியவே; கவிப்புதுவை வாழியவே; பாப்புதுவை வாழியவே!

=====================================









=====================================
எம்புதுவை வாழியவே....
=======================
திரையொலிக் கடல்போற் றிகழ்ந்திடுந் தமிழிலே
வரைந்திடும் வண்ணமாய், வள்ளையாய்ச் சிந்துமாய்,
நரையறா இலக்கணஞ்சேர் நற்கவிதை நான்வனைய,
கரையிலா இலக்கியக் கவிப்புதுவை வாழியவே!

நிறைவான இலக்கியமும், நேர்த்திமிகு இலக்கணமும்,
நறுந்தேனாய்ப் பொலிகின்ற நாவினிக்கும் பாட்டியலும்,
அறம்பொருள் இன்பவியல் அத்தனையும் நானெழுதச் 
சிறப்புடனே மின்னுகின்றச் சீர்புதுவை வாழியவே!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழிற் சொல்லெடுக்கித் 
தூவானச் சாரலென தொல்தமிழில் பன்னூறாய்
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனைய
பாவானம் போலொளிரும் பாப்புதுவை வாழியவே! 
======================
இராச. தியாகராசன்

வருவானே நிச்சயம் வருவானே....

மழலையரோ, இளையவரோ, முதியவரோ, மகளிரோ, ஆடவரோ, கல்வி கற்றவரோ, கற்காதவரோ,பாவலரோ, படித்தவரோ, பண்பாளரோ, பற்றுள்ளவரோ, பற்றறுத்தவரோ, மந்தையுளம் கொண்டவரோ, அரசியலாரோ, ஆத்திகரோ, நாத்திகரோ எவராயினும் சரி அவன் வரும்போது எவரும்/ எதுவும் தடுக்க ஏலுமோ?
===================================









===================================
வருவானே நிச்சயமாய் வருவானே...
===================================

(எடுப்பு)
========
நாட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும்
வீட்டுக்குள்ளும், உறவுக்குள்ளும் 
காட்டுக்குள்ளும், கொட்டிமுழக்கி....                    (வருவானே)
வருவானே நிச்சயமாய் வருவானே!

(தொடுப்பு)
===========
அவனிங்கே உன்வாழ்வில் வருவானே;
தவறாமல் உனைத்தேடி வருவானே!    
அறுந்தாடும் வாலெனவே ஊழ்வினையால், 
இறுமாப்பில் நானென்றே அலைந்தாலும்,         (வருவானே)

(முடிப்பு)
=========
தடுத்தாலும் அரண்டிங்கே அழுதாலும், 
சொடுக்கினிலே தாள்பற்றி தொழுதாலும், 
வெடுக்கென்று மிரண்டிங்கே ஒளிந்தாலும்,
அடுக்கிச்சேர் செல்வத்தை அளித்தாலும்,           (வருவானே)

நடித்தாலும் தரைநோகத் துதித்தாலும், 
துடித்தாலும் சுள்ளென்றே மிதித்தாலும், 
கொடுத்தாலும் வேதனையில் கொதித்தாலும், 
வெடித்தாலும் கோடிதந்தே மதித்தாலும்,             (வருவானே)

கறும்பணத்தின் ஊழலிலே களிப்பவரின் 
அறமில்லா ஆட்டங்கள் சாய்த்துவிட,
திறனில்லா ஆட்சியரும் மீளாமல்  
உறங்கிவிழும் வேளையிலே உயிர்பறிக்க,          (வருவானே)

என்படத்தை என்பெயரை எழுதென்று,
மன்னரென ஆடுவோர்க்கும், தலைபொறித்தச்
சின்னத்தின் சிற்றெழுத்துக் கட்டளையால்,
மன்பதையில் உனைத்தேடி உயிரெடுக்க,          (வருவானே)

மழலைகளோ, முதியவரோ, கவிஞர்களோ, 
எழில்பூத்த நங்கையரோ, இளையவரோ,
பழந்தின்று கொட்டையிட்டத் தீயவரோ, 
கொழுப்பெடுத்தக் கொடுங்கோல ரானாலும்,  (வருவானே)

கருகருத்தக் கொம்புமிளிர் அணிநடை
எருமையதன் மீதேறி ஒருகரத்தில் 
திரிசூலம், மறுகரத்தில் உயிர்பறிக்கும்
பிரிபோன்ற பாசமதைச் சுழற்றியிங்கு                (வருவானே)
==============================================
இராச. தியாகராசன்

பிகு: 
அணிநடை எருமை = சங்கத்தமிழ் சொல்லாட்சி.
எமனின் பாசம் = உயிர்பறிக்கும் கயிறு.

திங்கள், 17 அக்டோபர், 2022

லிங்க பைரவியே.....

2022ஆம் ஆண்டு நவராத்திரித் தொடக்கத்துக்காக எழுதிய வரிகள்...
===============================================










===============================================
லிங்க பைரவியே (கலித்தாழிசை)....
===================================
அன்றலர்ந்த ஆம்பல்போல் அன்றாடம் புன்சிரிக்குந் 
தென்றலிழை பூங்காவின் சீர்மகளே! தேனமுதே! 
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கற்பகமே! 
மின்னொளி போலிங்கே வீசுமொளிர் வித்தகியே! 
....வெண்ணிலவின் தண்மையென வீசுமொளிர் வித்தகியே!

தேடுவதைத் தேடித் தளர்ந்துநான் நிற்கையிலே, 
நாடுகின்ற மெய்யை நலுங்காமல் கொண்டிடத்தான் 
வாடுகின்ற என்னுளமும் மாரியவள் பேரருளைப்  
பாடியே நித்தம் பரவசமாய் ஆடுகின்றேன்! 
....பைரவியை எண்ணிப் பரவசமாய் ஆடுகின்றேன்!

பித்தனவன் ஊழாழி பற்றியெனை ஆட்டிவைக்கச் 
சித்தினியுன் பாசமெனும் தேன்மாரி காத்துநிற்க, 
அத்தனை ஆயிரமாய் ஆட்டத்தை தானடக்கி, 
மத்தியிலச் சக்தி மனங்குளிரச் செய்வாளோ? 
....மாநிலமே போற்ற மனங்குளிரச் செய்வாளோ?

கள்ளதனின் போதையெனக் கார்முகிலின் தூரலெனத்
துள்ளிவரும் குற்றாலத் தூய்மையதன் சாரலென, 
வெள்ளமென நானும் வெடிக்கின்ற பாப்புனைய, 
அள்ளிவரம் தந்தருளும் ஆரமுதே! அம்பிகையே!
....அன்பதனால் என்னிலுறை ஆரமுதே அம்பிகையே!

உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்தளிப்பாள் காளி;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்தவென் லிங்க பயிரவியே!
....எழிலாம் வடிவேயென் லிங்க பயிரவியே!
=====================================
இராச. தியாகராசன்

அறப்பாட்டு....

நம் தாய்நாட்டு மண்மீதிலே இற்றைக்குத் தாண்டவமாடும் கோர நிகழ்வுகள், சாதி/ மத/ பதவி/ பண-பிணச் சழக்குகள், ஊழல் தலைவிரித்தாடும் துயரம்/ அறத்தையே காலிலிட்டு மிதிக்கும் வாக்கு வங்கி அரசியல், வெறும் TRPக்காக, குற்றம் செய்துவிட்டு தண்டனையும் பெற்றவரையு விடுதலை வீரராகப் போற்றி, வரிந்து வரிந்து சேதிகளில் திரும்பத் திரும்பக் காட்டுகின்ற மனச்சான்றே இல்லாத கோணல் ஊடகங்கள், கலியுகத்தின் கோரமுகம், காணுமிடமெல்லாம் சுயநலத்தின் பெருங்களியாட்டம், அறச்சீற்றமே இல்லாமல் நடைபிணமாய் மக்கள் வாழும் வாழ்க்கை (எனையும் சேர்த்தே!)

வேளாண்மை செய்பவர் படும் துன்பங்கள், சிறார்/ மகளிர் மேல் பாலியல் வன்மங்கள், வன்முறையாளரின் வாதங்கள்/ தீவினைகள்/மூளைச்சலவை செய்யப்பட்ட கோமாளிகளின் கூப்பாடு, அடிப்படைவாதிகளின் வரம்பில்லாக் குற்றங்கள்/ கொடுஞ் செயல்கள்,  அவர்களையும் தலைமேலே தூக்கியாடும் மாந்தர்கள்;  எதைச் சொல்ல எதை விட? 

ஆழிப் பேரலையென/ முள்முடி நுண்தொற்றென இவை அனைத்தையும் ஒரு நொடியில், ஒரே ஒரு அறப்பாட்டால் அழிக்க ஏலாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பாடல்....
===============================================

===============================================
அறப்பாட்டு அரற்றியதே நெஞ்சம்......
===============================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க,
வியன்கவி யத்தனை விண்டேனிங் காயின் 
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசு மென்னுள்ளே பொங்குந் துயரம்!

மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தே,
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்!
விதியென் றிதையே உரைத்தாலு மென்றன்
கொதிக்கு முளமெனைக் கொல்கிறதே! உண்மை!

நெறித்தே பிழையென நீதியும் கேட்கும்
வெறுத்த நினைவுகள்; வேதனை கொண்டே
பிறக்கு  முயிரும் புவியில் நிலையா
தறுக்கு  மறப்பாட் டரற்றியதே உள்ளம்!

முற்றுமொரு பாடம்; முதலுமொரு பாடம்!
சுற்றமொரு பாடம்; சுமத்த  லொருபாடம்!
நிற்றலொரு பாடம்; நிகழ்வு மொருபாடம்!
கற்றலொரு பாடம்; கருவு மொருபாடம்!

வெற்றுமொரு பாடம்; விசன மொருபாடம்!
பற்றுமொரு பாடம்; பரிவு மொருபாடம்!
குற்றமொரு பாடம்; குறையு மொருபாடம்!
உற்றதொரு பாடம்; உறவுகளும் பாடம்!

கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்க,
அரிக்குந் துயரத்திற் காளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி னியல்பற, எண்ணம்
வரித்த தமிழே மருந்து!
===============================================
இராச. தியாகராசன்.

வாழ்வதுதான் செறிவு...

வாழ்வதுதான் செறிவு.   மதிப்பெண்ணுக்கும், தேர்வுக்கும், காதலுக்கும், வேறு எதையும் எதிர்கொள்ளத் துணியாமல் சாவை ஏற்பதா நிறைவு?  எல்லீரும் வாழ்வீரே!  விதிக்கப்பட்ட நாள்வரை வாழ்வதுதான் இயல்பென்றே வாழ்வீரே!  நொடிப் போதில் எடுக்கும் முடிவால் எல்லாம் முடிந்து விடும்;  ஆனால் பெற்றவரும், உற்றவரும், தோழமையும் இந்தப் பிரிவாற்றாமையால், எத்தனை துயரடைவர் என்பதை ஒரு நொடி சிந்தித்தால், இப்பாழ் முடிவைப் பலரும்  எடுத்திருக்கவே மாட்டார் என்பது திண்ணம்.
==========================================









==========================================
வாழ்வதுதான் செறிவு....
=========================
சுழலெனவே சுற்றுகின்றச் சோதனையில் சோர்ந்துநிதந் 
தழலெனவே எரிந்துமனந் தளர்ந்துவிழும் நேரமதில்,
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் எண்ணமதால், 
விழலெனவே மண்டுகின்ற வெறுங்கனவுக் கற்பனைகள்!

ஏதுமற்ற இருள்நினைவில் இதயத்தைத் தான்தொலைத்தே, 
உதயமாகும் உணர்வுகளில் உருகிநிதம் உறவாடி,
சிதிலமென சிதறிவிட்டச் செங்கல்லாய் நினைவெரிக்கப் 
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி, 
அலைந்தலைந்தே அதன்மீதில் அடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்;
உலைநெருப்பில் உழல்வதுபோல் உலகாய உணர்வின்றி, 
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் அறமாமோ? 

தளர்ந்துவிட்ட வாழ்வியலில் தனிமையிலே தடுமாறி, 
துளித்துளியாய் யுள்ளத்தில் சூழ்கின்ற துயரமதால், 
களிபொங்கச் சாவினையே கரங்கோக்கத் துடிதுடிக்கும், 
ஒளிர்வெளியி னிளையோர்உம் உயிரழிக்க ஏதுரிமை?

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு 
கந்தமென மணக்கின்ற கவிதையிலோ இல்லையெனுஞ் 
சிந்தனையைத் தேர்ந்திருக்கும் தெளிவான உளங்களிலே
வந்துதிக்கும் வளந்தருகும் வாழ்வறந்தான் அறிவன்றோ?
=====================================================
அன்பன் 
இராச. தியாகராசன்

தோற்பேனோ காதலிலே.....

நீர்க்குமிழி போன்றவனை நீர் வெல்லலாகுமோ!  நடவாது....... நாணலென வாழ்வேன் நான், என்றன் வரிகளிலே!
======================================







======================================
தோற்பேனோ காதலிலே....
=========================
அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேசமெனும்  நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றுஞ் 
சிலையழகே! செம்புலத்து நீரெனநாம்  என்றிணைவோம்?

வானகத்தி லுலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனையைத் தான்தந்தே,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்வதுமேன்?

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகுமோ? 
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன்நான்; தோற்பேனோ  காதலிலே?
==========================
இராச. தியாகராசன்

கவிபுனைந்தேன் காற்றினிலே...

காற்றலைத் தூதுவன் உன்றன் காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலை சற்றசைத்துத் தூது சொல்வதும் உனக்குக் கேட்கவில்லையோ???

====================================================













====================================================
கவிபுனைந்தேன் காற்றினிலே......
===============================
வழிநிறையும் வெறுந்தனிமை மனமெங்கும் கருநிழல்கள்;
சுழல்கின்ற காற்றினிலும் துயரவொலி கேட்கின்றேன்;
கழிந்துவிட்ட காலமெனுங் கனவுகளில் மூழ்கிநிதம்
பிழிந்துவிட்ட புதுத்துணியாய்ப் பேச்சின்றித் துவள்கின்றேன்!

பொழிலூடு மணந்தூவும் பூந்தென்றல் தழுவலென,
எழிலாரும் இன்பமகள் இழுத்தணைத்தே என்னிதழில்
முழவோசை ஆர்ப்பதுபோல் முத்தங்கள் பொழிந்ததையே 
நிழலாடுந் தனிமையிலே நினைந்துருகி எரிகின்றேன்;

எழுகின்ற தழலெனவே என்னவளும் இதயத்தில், 
நிழலென்றும் நிசியென்றும் நினைவென்றும் பாராமல், 
கழலொலிக்கக் கருத்தேறி, கவிமயிலாய் ஆடுகின்றாள்;
பொழிகின்ற மழைமுகிலாய்ப் பூஞ்சாரல் தூவுகின்றாள்!

இமயமலைக் குளிருறையும் இனியமகள் நினைவுகளால்
சிமிழுள்ளே அடையாத சிந்தனையைச் செதுக்கிநிதம் 
அமுதமென எம்மொழியில் அழகான சொல்லடுக்கிக்
கமழ்கின்றக் காதலுக்காய்க் கவிபுனைந்தேன் காற்றினிலே!
======================================================
இராச. தியாகராசன்

முழுநிலவே முத்தமிழே....

அன்னையொருவர் தன் மழலைக்காய், நந்தமிழிற் பாடுமொரு தாலாட்டுப் பாடல்....
==========================================

==========================================
முழுநிலவே... முத்தமிழே!
==========================
சின்னஞ் சிறுவிரலாற் றீண்டுமின்ப ஓவியமே!
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுக் காவியமே! 
மின்ன லொளிவீசும் மென்மழலைச் சொற்பதமே!
அன்பில் உருவெடுத்த ஆரமுதா மற்புதமே!

முக்கனியுஞ் சேர்ந்த முழுநிலவாம் முத்தமிழே!
சொக்குமெழிற்  றோய்ந்த தொடுவானச் சித்திரமே!  
மன்னுதமிழ் மாண்பாம் மரபென்னுஞ் சத்தழகே! 
பொன்நே ரிலக்கியப் பூந்துகிலாம் புத்தமிழ்தே! 

மடியில் தவழ்தெனை மயக்கிடும் மல்லிகையே! 
செடியில் சிரிக்குமென் தேனமுதச் செண்பகமே! 
கொடியி லாடுகின்ற கொன்றையின் பூமணமே!
பொடியாய்ப் பொலிகின்ற புல்லினிதழ் பூம்பனியே!

என்னிலே விளைந்தநல் லின்பத்தின் சிலையே!
கண்ணையே கவர்ந்திடும் கனவுலகின் கலையே!
தென்றலாம் காற்றிலே தவழ்நீ ரலையே!
பன்னீராய் மணந்திடும்  பழமுதிர் பொழிலே!

மழலைப் பருவத்தின் நித்திலச் சுடரே!
கழறும் விந்தையாம் கிளிமொழிப் பேச்சே!
வண்ணப் பொக்கை வாயிதழ் சிரிப்பிலென்
எண்ணக் கவலையை எரித்திடும் மருந்தே!
===================
இராச. தியாகராசன்.

இருப்பவர் உரையதை ஏத்திடுவோம்...

இறந்தவரின் நல்வரிகளை/ நற்கவிதையைப் போற்றுவது மிக உயர்வான செயலே!  இருப்பினும் இருக்கும் போதே தன் பாடல் வரிகள் போற்றப்படுவதைக் காண்கையிலே பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும், ஒரு கவிஞனுக்கு வேறென்ன சிறந்த மகிழ்வை, எந்த விருது தரமுடியும்?
==========================================

==========================================
இருப்பவர் உரையினை போற்றுவோம்.....
==========================================
மின்னும் பாக்கள் மலரும் மாகடல்
பின்னும் பாவலர் பாடும் பாக்கடல்
சித்தக் கடலிலே சிக்கும் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்கும் முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் தமிழ்மனக்
கரங்களில் கிடைப்பதோ கிளிஞ்சலும் சோழியும்!
ஆழியாம் தமிழின் அலையிற் சிக்கிடும்
சோழியும் சங்கதும் சிறப்பாம்; சேருமக்
கவிதைச் சொல்லின் கிளிஞ்சலு(ம்) அழகாம்;
கவிகளில் எவர்க்கோ கிடைக்கும் புதையல்!

மொழிக்குக் கவிதை பழமைதா(ன்) ஆயினும்
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து!
ஆழ்கடல் செந்தமிழ் அறிஞரும் தமிழினை
மூழ்கியேத் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழி லழகினைச் சொல்கையில்
வாழ்விலே காணுமவ் வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலைச் சொல்கையில்
புவியினை யழித்திடும் போதையைச் சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்
இன்றையப் பெண்சிசு இனக்கொலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைச் சொல்கையில்
நாட்டின் மதம்வெறி நாசமுஞ் சாடுவீர்!
நாணுமத் தமிழ்மொழி நங்கையைச் சொல்கையில்
காணுமச் சமூகக் கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி சொல்கையில்
பண்பறு மாந்தரின் புன்னெறி சாடுவீர்!

பல்சுவை யுணவோ பூந்துகி லுடையோ
நல்லெழில் மனையோ நிறைவு தருமோ?
இருக்கையில் பாக்கள் இன்றே பெற்றிடும்
பெருமை ஒன்றே பாவலர்க் கனவாம்!
இறந்தநற் கவிஞரில் எழுத்தினை யென்றும்
நிறைவுடன் போற்றும் நிலையுட(ன்) இன்று
இருப்பவர் எழுதிய எழில்மிகு கவிதை
உரையதை ஏத்திடு(ம்) உயர்வது(ம்) செய்வமே!
===========================================
இராச. தியாகராசன்

சனி, 25 ஜூன், 2022

காவடியாம் காவடி...

காவடிப் பாட்டொன்றை ஒரு ஐயப்ப பூசையில் 4 வரிகள் ஒருவர் பாடினார். அதன் தாக்கத்தால், நானெழுதிய காவடிப்பாட்டு இது. கூகுளில் காவடி வகைகள் என்று தேடிய போதில், எத்தனைக் காவடிகள் என்று அசந்து போனேன். ==============================
=======================================
காவடியாம் காவடி கதிர்வேலன் காவடி
=======================================
காவடியாம் காவடி கதிர்வேலன் காவடி; கந்தனுக்கும் காவடி; செந்திலுக்கும் காவடி; வேலனுக்கு அரோகரா; வேந்தனுக்கு அரோகரா.. மலையனுக்கு அரோகரா; மருதனுக்கு அரோகரா. (வேலனுக்கு) (காவடி) திருத்தணிகை தீரனுக்குத் திருவேலால் காவடி; சித்திதரும் நந்தனுக்குச் சித்திரத்தால் காவடி; திருச்செந்தூர் தேவனுக்குத் திருநீறால் காவடி; சிங்கார சூரனுக்கு தேங்காயால் காவடி! (காவடி) வள்ளிமண வாளனுக்கு வங்கிவளைக் காவடி; வள்ளியூர் வள்ளலுக்கு வண்ணத்தேர்க் காவடி; புள்ளிசைக்கும் பொம்மனுக்கு புங்கங்பூக் காவடி புவனகிரி வேலனுக்குப் பூந்துகிலால் காவடி; (காவடி) மாலவனின் மருகனுக்கு மஞ்சளிலே காவடி; மதுரவயல் முருகனுக்கு மருக்கொழுந்துக் காவடி; சேலையூரின் சேயனுக்குத் செங்கமலக் காவடி; செந்தமிழின் செல்வனுக்குச் செந்தூரக் காவடி! (காவடி) குறவள்ளி காந்தனுக்கு குங்குமத்தால் காவடி; குன்றிலாடு குமரனுக்குக் கூடையாலே காவடி;
மறத்தமிழர் மாரனுக்கு மாம்பழத்தால் காவடி; மருதமலை மாயனுக்கு மாவிலையில் காவடி! (காவடி)
விராலிமலை வினயனுக்கு விளாம்பழக் காவடி; வேங்கையின் மார்பனுக்கு வேப்பிலையால் காவடி சிராவண சிங்கனுக்குச் சில்லறையால் காவடி; சிங்கபுரி தேயனுக்குத் தீச்சுடரால் காவடி! (காவடி) சங்ககிரி நாதனுக்கு சர்ப்பத்தால் காவடி; சதுரகிரி சாந்தனுக்கு சலங்கையில் காவடி; தங்கமயில் நேயனுக்கும் சல்லடையில் காவடி; சம்புவன சாந்தனுக்கு தங்கரளிக் காவடி! (காவடி) கண்ணழகு காந்தனுக்குக் கர்ப்பூரக் காவடி; கதிர்காமக் கோலனுக்குக் கற்கண்டால் காவடி; எண்ணமுற்ற ஏந்தலுக்கு இளநீரால் காவடி; ஏலகிரி எழிலனுக்கு ஏலக்காய் காவடி! (காவடி) வேல்கொண்ட வேந்தனுக்கு விளாமிச்சைக் காவடி; வெள்ளிமலை வாசனுக்கு வெல்லத்தால் காவடி; பால்போன்ற பாலனுக்குப் பன்னீரால் காவடி; பழநிமலை வீரனுக்குப் பால்பழத்தால் காவடி! (காவடி) அள்ளுமெழில் அன்பனுக்கு அன்னத்தால் காவடி; அரனுடைய மைந்தனுக்கு அரக்கினால் காவடி; கள்ளமிலாக் கந்தனுக்குக் கருகமணிக் காவடி; கந்தமலை கொற்றனுக்கு கதிர்நெல்லால் காவடி! (காவடி) குடவாசல் கொம்பனுக்குக் கொஞ்சுதமிழ்க் காவடி; விருதுநகர் வள்ளலுக்கு வெங்காயக் காவடி; வடபழனி வம்பனுக்கு மயிற்பீலிக் காவடி; மயில்கொண்ட மலையனுக்கு மகிழம்பூக் காவடி! (காவடி) ====================================== இராச. தியாகராசன்.

புதன், 27 ஏப்ரல், 2022

உண்மையின் ஒளி...

 நானே அவனா?  அவனே நானா? உள்ளத்தின் குரல்.
================================================












================================================
உண்மையின் ஒளி...
===================
நானென்ற அவனும் நேற்றென் 
கனவில் வம்புக்கிழுத்தான்;
அவனிடம் எனக்கென்ன பேச்சென்றே  
மோனத்திலாழ்து மல்லாந்தே,
விட்டத்து வாரைகளை
எண்ணத் தொடங்கினேன்; 
நானென்ற அவனுக்குக் பீறிடும்  
சிப்பாணி! அடக்க முடியாமல்
சிரித்தபடி கேட்டான்; அந்த 
நூலாம்படையை எண்ணி முடித்து.....

    அவசியக் கவிதையை விடுப்பாயா?- இல்லை
    அவசரக் கவிதையை முடிப்பாயா? - இல்லை
    அரசியல் கவிதையைத் தொடுப்பாயா?

விட்டத்தில் வெளிச்சம் தேடிய
நானும் அவனை அடித்துவிரட்ட 
வேறுவழியின்றி வாய் திறந்தேன்,
"இன்று நேற்றாகவும் இல்லை;
நேற்று இன்றாகவும் இல்லை;
நாளை என்றாக இருக்குமோ அறியேன்!
இதில் நீயும்வந்து கெக்கலிக்கிறாய்;
போடா! ஊரில் அத்தனைபேர்
இருக்கிறார்களே அவர்களின் 
கனவிற்போய் கருத்துமழை பொழி! 
எனக்குக் கவிதை நேரமாவது மிஞ்சும்!"
இன்னும் பெரிதாக, வயிற்றைப் 
பிடித்து, உருண்டு புரண்ட 
சிரிப்போ சிரிப்பு அவனுக்கு!  
நானான நீயே, உன்னைப் பெரிய 
பிரபலமென்று கற்பனையில்
கவிதை சொல்லி நாளுமிங்கே  
கருத்துக் கந்தசாமியாய் 
கோணங்கி செய்கிறாய்;
போகும் வயதாகிறது; உனக்கே
இது இன்னும் புரியவில்லை; 
உண்மையும் தெரியவில்லை
இதிலே ஊரார் கனவிலே
உபதேசமா? 
உன்னைத்தான்
எனக்குப் பிடிக்கிறது!
நான் தானே நீயானாய்!
நீதானே நானாவேன்! 
நீயாரென் றுன்னுள்ளே நீயாக
நினைத்தாலும் நீயில்லை;
நானாரென் றுன்னுள்ளே 
நானாக நினைத்தாலும் - அது
நானில்லை அறிவாயோ?
பெரிய டமடமா சத்தம்; 
இடியின் முழவோசை: 
மழையின் இன்னிசை!
கனவு கலைந்தெழுந்தேன்;
போய்விட்டான்! .....
போய்விட்டானா?
பார்க்கலாம் நாளையும் வருவான்;
நானிருக்கும் வரையிலும் 
வந்து கொண்டே இருப்பான்!
===============================================
இராச. தியாகராசன்

முள்முடித் தொற்று...

முள்முடி நுண்மித் தொற்று கற்றுத் தந்த பாடங்கள்...
==========================================

=========================================
எச்சரிக்கை எச்சரிக்கை...
========================================= 
ஓங்கலெலாம் எனதென்று கொக்க ரித்தே,
.....உள்ளதெலாம் என்வசமென் றூளை யிட்டு,
ஆங்கொளிரும் அறிவியலின் ஆற்றல் கொண்டே,
.....அடவிகளை அழித்தழித்தே ஏற்றம் கண்டு,
தீங்கிழைக்கும் அணுகுண்டின் சீற்றம் ஆர்க்க,
.....தீய்த்துவிடும் ஏவுகணை பலவும் சேர்த்து,
பாங்கெழிலாய் அண்டவெளிக் கோல மிட்டு,
.....பார்போற்றும் நிலவுக்கும் பாலம் செய்தாய்!

ஒருகணத்தில் மறைந்துவிடும் குமிழைப் போல,
.....உயிர்க்குருவிக் கூட்டைவிட்டே பறந்து நாளும்
எரிந்துவிழும் பிணக்குவியல் சொல்லு கின்ற 
....இன்றுலக நுண்தொற்றின் பாடம் என்ன?
கரியமனக் காலனென கண்ட தையும்
.....கருக்கிவிடும் மாந்தர்க்கு மெச்ச ரிக்கை;
நரம்பின்றி நாடோறும் பேசி ஏய்க்கும்,
....நயங்கெட்ட அரசியலார்க் குமெச்ச ரிக்கை!

பெருந்தாதா போல்சின்ன நாட்டை தீய்க்கும் 
.....பேர்கொண்ட நாடுகட்கும் எச்ச ரிக்கை:
தெரிந்துநிதம் இறைவனையே நம்பும் பேரை,
.....சிந்தனையின் றிமதத்தால் ஆள எண்ணும்,
விரிந்துபரந்த வன்முறையே விதியாய்க் கொண்ட,
.....மதவாதத் தருக்கருக்கு மெச்ச ரிக்கை;
தரமுயர்ந்த பாரதத்தில் சாதி யென்று
....தாழ்ந்தவரை மிதிப்பவர்க்கு மெச்ச ரிக்கை!
=========================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

காலச்சுழல்....

என்றோ எழுதியவோர் அறிவியற் புனைவு நெடுங்கதையிது.  இன்று எதையோ தேடுகையில் கிடைத்தது.  நண்பர்களுக்காகப் பகிர்கிறேன்.
====================================== 

======================================
காலச்சுழல்.....
==============
கி.பி. 88501ஆம் ஆண்டு. புவியக மக்கள் வசிப்பதற்கென்றே வியாழக்கோளில் வலுவாக அமைக்கப்பட்ட, ஜோவியப் பெருங்கண்ணாடிக் குமிழ் (great jovian recidential glass bubble) வசிப்பிடத்திற்கு வெளியே அமோனியப் பெருஞ்சுழல்வளியின் வேகமும், ஒலியும், சிறுபாறை/அமில மழையும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். பாதுகாப்பின்றி எவரும், எந்தக் கலமும் வெளியில் செல்லவே ஏலாது.  நாம் கதையைத் தொடங்கும் நாளில், அமோனியாக் காற்றின் கேட்பளவு (decibel) கூடுதலாகவே இருந்தது. அங்கு வீசுகின்ற சுழிக்காற்று, அமிலமழை, இடி, மின்னல், எல்லாமே அணுக்கட்டுப்பாட்டு முறையில் ஓரளவு ஒழுங்குபடுத்தப் பட்டு, உயிர்வளி, பரிதியொளி ஆகியவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, மாந்தர்கள் அந்தக் கண்ணாடிக் குமிழில் 85 விழுக்காடு பாதுகாப்பாகவே வசிக்க வைக்கப்பட்டனர்.  

என்ன செய்வது.... 
ஒளிவீசும் நம்முடைய பரிதியானது, எரிந்தழியும் சூப்பர் நோவா (Super-nova)  எனப்படும் வெடிப்பொளியின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், புதன், வெள்ளி முதலான முதற்கோள்கள் பொசுங்கிப் போயிருந்தன. பூமிக் கோள் முழுவதும் நிலமும், நீருமற்ற, உயிரினம் வாழவே முடியாத, சுட்டெரிக்கும் மேக்மா (magma) எனப்படும் தீக்குழம்பாய் தகித்துப் போனதும், செவ்வாய்க் கோள்  பாலைநிலமும், மேக்மாவும் கலந்த கோர வடிவமாய் ஆனதும் அன்றைய மெய்ம்மை.  சோலார் ஃபேமிலி (solar family) எனப்படும் பரிதிக் குடும்பத்தில் மீதமிருந்த ஜோவியன் எனப்படும் வியாழன், சனி, நெப்டியூன், முதலான மற்றேனைய கோள்களும், மற்றேனைய துணைக் கோள்களும், பிழம்பானப் பரிதியின் சூட்டினை உணரத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆயிரமாண்டுகளில் பரிதிக் குடும்பமே எரிந்தழியும் நிலை. வியாழன், அதற்கப்பாலிரும் கோள்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் மனித வாசனை.  ஏறக்குறைய வாழ்வியல் வசதியுள்ளவர் மட்டுமே  ஒளியாண்டு விண்கலங்களில் (faster than light space ship) பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு, பன்னிரெண்டு ஓளியாண்டுக்கு (12 light-year) அப்பாலிருக்கும், நம்முடைய பரிதியை ஒத்த, டா செட்டி (Tau Ceti) என்ற பெயர் கொண்ட விண்மீனைச் சுற்றிவரும் சிண்ட்ரெல்லா கோளுக்குப் பயணப்பட்டு விட்டனர். பரிதிக் குடும்பக் கோள்களில் மீதமிருந்தவர்கள், பயணத்திற்காக மும்முரமாய் வசதி சேர்த்துக் கொண்டிருக்கும் ஜனா போன்ற நடுத்தர வர்க்கத்தினரும், எதுவுமே செய்ய முடியாத ஏழைகளும் தாம்.  நிலை விளக்கத்தைத் தாண்டி, இனி கதைக்கு வருகிறேன்.

அப்பா கேட்டச் செப்புக் கம்பிகளையும், உணவுக்குழல்களையும் வாங்கிக் கொண்டு, ஓய்விடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான் ஜனா.  அடடே.... ஜனா யாரென்று சொல்லவில்லையே!  ஆணான 24147987ஆக்ட்(2414787OCT)-க்கும், பெண்ணான 32316566ஜூன்(32316566JUN)-க்கும் முதல் உறுப்பினனாய் வந்த ஆண் வாரிசு தான் ஜனா.  அவனுடைய அடையாளம் அல்லது ஐ.டி. 32312414ஜன்(32312414JAN).  அவனுடைய குடும்பத்தில், அவர்கள் மூவருடன், அடுத்த உறுப்பினராய், நான்காவதாக வந்த அடுத்த வாரிசுப் பெண்ணின் அடையாளம் 24143231நோவ் (24143231நோவ்).  அடையாள எண்ணைச் சொல்லாமல் வேறு பெயர்கள் வைத்து அழைப்பது உலகப் பெருமவையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆனால் அவர்கள் குடும்பத்தில், குடும்பத் தலைவர்களின் நினைவாற்றல் வறட்சியால், அவர்களுக்குள்ளாகவே ஒரு இரகசிய முறையேற்படுத்திக் கொண்டனர்.  ஓய்விடத்தில் இருக்கும்போது மட்டும் பழங்கால முறைப்படி, வீட்டு உள்தலைவரான ஆண் - அப்பா (அ) ஆக்டா என்றும், வீட்டு வெளித்தலைவரான பெண் - அம்மா (அ) ஜூனோ என்றும், முதலுறுப்பின ஆண் ஜனா என்றும், கடைசியுறுப்பினப் பெண் நோவா என்றும் அழைத்துக் கொண்டார்கள்.  

நமக்குக் கூட இந்த எண்களும் அடையாளமும் தலைச் சுற்றுவது போலிருக்குமென்பதால், நாமும் ஆக்டா/ ஜூனோ/ ஜனா/ நோவா என்று அழைப்போமே!  அம்மாவான ஜூனோ உலகப் பெருமவையில், ஏதோவொரு மூலையில், குப்பை அலுவலகத்தில், கணினி எழுத்தர். மகள் நோவா இன்னும் அரசாங்கப் படிப்புக் குடும்பத்தில் இருந்தாள்.  பட்டம் வாங்கி வெளி வந்ததும் அவளுக்கும் குடும்ப ஓய்விடத்தில் வசிக்க பாஸ்போர்ட்டைப் பெருமவை அளிக்கும். அப்பா ஆக்டா குடும்ப ஓய்விடத்தின் தலைமைப் பொறுப்பாளர்.  அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட அறையில், அவர் கூடுதலாகத் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிகளை, பெருமவையின் அனுமதியுடன் மேற்கொண்டிருந்தார்.  படித்து முடித்த ஜனா ஆக்டாவின ஆராய்ச்சிகளுக்கு உதவுவதுடன், குடும்ப ஓய்விடத்தின் மேற்பார்வையாளனாகவும் இருந்தான்.  உலகப் பெருமவை அவனுக்கு இணை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் குடும்பத்தைப் போலவே அவனும் தனக்காக ஒதுக்கப்படும் ஓய்விடத்தின் தலைமைப் பொறுப்பாளனாய் இருப்பான். வாரிசுகள் எனும் போது, அறிவியலால் தீர்மானிக்கப்பட்டு, குறை உடற்காரணிகள், ஜீன் கோளாறுகள், நோய்கள் இவையாவும் வடிகட்டப்பட்ட பெண் கருமுட்டை, ஆண் உயிர்விந்து இவையொன்று சேர்க்கப்பட்டு, எதிர்காலத்தில் குழந்தை என்கிற உறுப்பினர் உருவாகங்கள், சோதனைச் சாலையில் நடைபெற்றன. 

குடும்பத்தின் பொதுநிதிக் கணக்கை முறையாக மேம்படுத்தியிருந்தால், உலகப் பெருமவையின் முறைமை விதிப்படி, அவர்கள் நால்வரும் முன்னர் புறப்பட்ட ஒளியாண்டு விண்கலங்கள் ஏதேனுமொன்றில் இடம் கிடைத்து, இந்நேரம் சிண்ட்ரெல்லாவில் குடியேறியிருப்பார்கள்.  ஆனால் ஆக்டாவின் தொடர்ச்சியான ஆராய்ச்சிச் செலவுகள், அவர்களின் குடும்ப நிதிநிலையை சீராக இருக்கவே விடவில்லை.  இதனால் ஜூனோவுக்கும், நோவாவுக்கும் ஆக்டா மீது சரியான எரிச்சல். ஆனால் ஓய்விடத் தலைவரென்பதைத் தாண்டி, அறிவியலாளர் என்பதால், ஜனாவுக்கு மட்டும் அவர்மீது  அளவுகடந்த பெருமை.  அவருடனே இருக்கும் அவனுக்கல்லவா தெரியும், அவருடைய தற்போதைய ஆராய்ச்சியின் இன்றியமையாத்தன்மை.  

அதுவென்ன ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா? டெம்போரல் லீனியர் வோர்ட்டெக்ஸ் (Temporal Linear Vortex) என்கிற காலத்தின் நீளவாட்டுத் தன்மை பற்றிய அவருடைய ஆராய்ச்சி மட்டும் வெற்றியடைந்தால், இப்படி ஒட்டுமொத்தமாக விண்மீன்/ கோள் மாறி, இடம்பெயர்ந்து அலையாமல், காலத்தின் முன்னோக்கியோ (அ) பின்னோக்கியோ சென்று, ஒரு தகவான ஆண்டில், அலுங்காமல் தன்னுடைய குடும்பத்துடன் குடிபெயர்ந்து விடலாம் என்பது ஆக்டாவின் கணிப்பு.  ஜனா தான்வாங்கி வந்த உணவுக் குழல்களை குளிர்ச்சுவர்ப் பேழையில் அடுக்கினான். உலகப் பெருமவை அளித்த விடுமுறையை ஓய்விடத்தில் கழிக்க வந்த நோவாவும், பணியிலிருந்து திரும்பிய ஜூனோவும், ஏறிவந்த காற்றுக்கலம், ஓய்விடத்தில் நுழைந்தது.  

இருவரும் ஒருசேர உள்ளே நுழைகையில், ஜனா செப்புக் கம்பிகளை ஆக்டாவிடம் தருவதைக் கண்டுவிட்ட ஜூனோ, ஆக்டாவைப் பார்த்துச் சீறினாள்; 

"மறுபடியும் வீணத்த ஆராய்ச்சிக்காக தண்டச் செலவா?  இப்போதுதான் நிதிக்கணக்கு 800 கிரிடிட் வந்திருக்கு. மறுபடியும் வெற்றுச் செலவுக்கு எவ்வளவு எடுத்தீங்க?"

அதற்கு ஆக்டா, "25 கிரிடிட்தான் ஜூனோ. அதில்கூட வார உணவுக்கு 15.  செப்புக் கம்பிக்கு வெறும் 10." என்று தலை குனிந்தபடி முனகினார்.

"போன பத்தாவது பகலில், ஆராய்ச்சிக்கு 15 எடுத்தீங்க. அதை என்ன பண்ணீங்க? நம்ம வீட்டு துஸ்குவாச்சு ரோபாவாட்டம் கம்பியெல்லாம் தின்னா போடறீங்க?" பின்னர் ஜனாவிடம் திரும்பி, "உன்னைச் சொல்லணும்.  எத்தன வாட்டி சொல்லிட்டேன்; பொதுக் கணக்கிலேந்து எடுக்காதேன்னு.  கால் கிரிடிட் பெறாத வேலைக்கு, பத்தும் பதினஞ்சுமா போகணுமா?" என்று கத்தினாள். 

உடனே ஜனா, "ஏம்மா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க? ஐன்ஸ்டைனின் ஈ=எம்.சி ஸ்கொயர் (E=MC2) என்பதன் அடிப்படையான ஒளிவேகப் பயணம்;  கலத்தின் வேகத்திற்கேற்ப பயணம் செய்பவரின் காலத்தை நீட்டிக்கும் தேற்றம், இதையெல்லாம் கண்கூடாகவே காட்டும் இந்த ஒளியாண்டு விண்கலப் பயண காலத்தில், காலத்தைக் கண்சிமிட்டில் கடக்கும் முதல் அற்புத கலத்தை நிறுவப் போகும் மிகப்பெரிய அறிவாளியின் சக குடும்பத் தலைவரென்பது உங்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை?"

"உன்னோட பெருமையைக் கொண்டுபோய் அணுவுலையில் போடு.  இதுவரைக்கும் காலப்பயண ஆராய்ச்சியில் பைத்தியம் பிடிச்சு மண்ணாய்ப் போன அறிவாளிகள் பல்லாயிரத்துக்கும் மேல்.  இதெல்லாம் சரிப்பட்டு வராது.  1500 கிரிடிட் சேர்ந்துவிட்டால், ஒளியாண்டு விண்கலத்தில் இடங்கிடைத்து, சிண்ட்ரெல்லாவில் ஒய்விடம் ஒன்றை வாங்கி, நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினேன்.  ஓட்டைக்குழலில் போடும் மண்ணைப் போல, கிரிடிட் எல்லாம் போய்க்கிட்டே இருக்கு. இன்னொரு தடவை கம்பி, குச்சின்னு பொதுக்கணக்கில் இருந்து எடுத்தீங்க, நான் பொல்லாதவளாயிடுவேன். அப்புறம் பன்னாட்டு அறமன்றத்தில் தாவா தான்.  நீங்க ரெண்டு பேரும் நெப்டியூன்ல மண் அள்ளத்தான் போகணும். சொல்லிட்டேன்."

இதைக் கேட்ட ஆக்டா, "ஜூனோ, நீ அறிவியல் படித்தவள் தானே?  எல்லாம் முடிந்து, காரியம் கைகூடி வரும்போது, இப்படிப் பண்ணுவது சரியே இல்லை.  மற்ற அறிவியலார் எல்லாம் காலமென்பது நீளவாட்டில் பயணப்படுகிறது என்றே முடிவுகட்டி, ஆராய்ந்தார்கள்; அதனால் தோற்றார்கள்.  பொதுவாகப் பார்த்தால் சரியாகவே தோன்றக் கூடும்.  ஆனால் என்னுடைய ஆராய்ச்சிகளின் படி காலமென்பது முடிவற்ற ஒரு சுழலில் பயணம் செய்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறேன்.  இதோ இந்த இருப்புக் கம்பிச் சுழலைப் (Iron Spring) பார். அடிக்கும் நுனிக்கும் தூரமிருக்கலாம். ஆனால் முதற்புரியில் ஓரிடம் அடுத்த புரியின் ஒரிடத்துக்கு மிக அருகில் இருப்பதைப் போல,  88500 ஆண்டுக்கு பக்கத்தில் 87500-ஆம் ஆண்டின் புரி (அ) இழை மிக அருகில் தானிருக்க வேண்டுமென்பதைப் போன்றது என்னுடைய உறுதியான கணிப்பு.  அதாவது ஆயிரமாயிரம் ஆண்டு ஆண்டுகளாகத் தாவுவது மிக எளிதென்று கண்டுபிடித்திருக்கிறேன்.  இன்னும் 10 பகலுக்குள் என்னுடைய முதல் காலக்கலம் தயாராகிவிடும்," என்றார். 

அதற்கு ஜூனோ, "எது எப்படியோ, இனி பொதுக் கணக்கிலிருந்து எடுக்கக் கூடாது.  வேண்டுமானால், உங்கள் தனி படியிலிருந்து 5 விழுக்காடு செலவு செய்து கொள்ளுங்கள்.  இந்தக் கலத்தால் நமக்கென்ன பயன், உலகப் பெருமவையைக் கூட்டி, சுண்டைக்காய் அளவு பிளாட்டின மெடல் குத்துவாங்க.  அதை விற்றால் கால் கிரிடிட் கூடக் கிடைக்காது," என்றாள்.

"நீ தப்புக்கணக்கு போடுகிறாய் ஜூனோ.  இன்னும் உலகப் பெருமவைக்கு நானிதைச் சொல்லவில்லை. வெள்ளோட்டப் பயணத்துக்குப் பின்னர், எல்லாம் வெற்றிகரமாக முடிந்தால், நீ, நான், ஜூனோ, நோவா எல்லோரும் அனைத்து வசதிகரமான விஷயங்களுடன், சிண்ட்ரெல்லாவுக்குப் போகத் தேவையே இல்லை.  இன்றைக்கு சீந்துவாரற்ற தங்கத்தைக் கிலோ கணக்கில் ஏற்றிக் கொண்டு, எவருமறியாமல் 2500-ஆம் ஆண்டுக்குப் போனால் போதும் ஆனந்தமாக வாழலாம்."

இதுவரை பேசாமலிருந்த நோவா, "ஐய்யய்யோ.... அந்தக் கற்காலத்துக்கா?  கோடிக்கணக்கில் தொற்றிகள் (Virus), நுண்ணுயிரிகள் (Bacteria), ஒட்டுண்ணிகள் (Parasite), வயிற்றில் குழந்தை வளர்த்தெடுக்கும் ஆதி மனிதர்கள், கொசு/குளவி/ஓணான்/ எறும்புக் கூட்டம், காற்றின் மாசு, கொடிய காட்டு விலங்குகள்.  இதென்ன பைத்தியக்காரத்தனம்," என்றலறினாள்.  

அதற்கு ஜனா, "நோவா, கலத்தை உருவாக்கும் அப்பா, இதெல்லாம் யோசிக்காமலா இருப்பார்?  தேவையான அனைத்து வித மருந்துகள், தடுப்பூசிகள், பண்ட பரிமாற்றத்திற்கு வேண்டிய தங்கம், மின்னேற்றப்பட்ட சூரிய மின்கலன்கள் (Charged Solar Batteries),  ஆயத்தநிலை லேசர் படைகலங்கள் (Ready Laser Guns), மின்காந்தக் காப்புடைகள், இன்னும் பல முன்னேற்பாடான விஷயங்களுடன் தான் நாம் கலத்திலேறப் போகிறோம்," என்றான்.

"ஆக நீங்கள் முன்னரே பேசி வைத்துவிட்டீர்கள், காலக்கலம் இனிமேல்தான் உருவாகப் போகிறதா, இல்லை வெள்ளோட்டம் எல்லாம் பார்த்தாயிற்றா?" என்று வினவிய ஜூனோவைத் தோளணைத்த ஆக்டா, காற்றணையில் அவளை அமர்த்தி, கலத்தின் முப்பரிமாண பிம்பத்தை முன்னே இருந்த மின்முக்காலியில் கைச்சொடுக்கில் வரவழைத்தார்.  வெள்ளோட்டத்தின் போது மாதிரி சிறுகலம் 2500 ஆண்டு எடுத்த சோதனை முப்பரிமாண குறும்படங்கள்/ நிழற்படங்கள் ஆகியவற்றை அவர்களுக்குப் போட்டுக் காட்டினார்.  இதையெல்லாம் பொறுமையாகப் பார்த்த ஜூனோ, "அப்போ, கலம் முடிந்துவிட்டது என்கிறீர்களா  உலகப் பெருமவைச் செயலர் என்னுடன் பணிபுரியும் தோழிக்கு   நெருக்கமானர் தான்.  எப்படியாவது மேல்மட்டத்தில் சொல்லி, சிண்ட்ரெல்லாவுக்குப் போக, அங்கே ஓய்விடம் பெறத் தேவையான அளவு கிரிடிட் கொடுக்க பரிந்துரை செய்யச் சொல்கிறேன்.  ஆராய்ச்சியின் ஆணைத் தொடர்களை உலகப் பெருமவைக்குக் கொடுத்து விடலாம்!  இந்த தொற்றி, நுண்ணுயிர், ஒட்டுண்ணி, விலங்குகள், கொசு, எறும்பு, காற்றின் மாசு என்கிற விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாமே! எது எப்படியாயினும் சரி, எங்களுக்கு முடிவெடுக்க அவகாசம் தேவை," என்றாள்.

உடனே ஆக்டா, "ஜூனோ, இந்தப் பைத்தியக்காரத்தனம் செய்வாயென்றுதான் முதலிலேயே உன்னிடம் எதுவுமே சொல்லவில்லை.  காலங்கடந்து குடியேறுவதென்பது இன்னும் சோதனைக்கட்ட, எழுத்துவடிவ, அணுகுமுறையில் தானிருக்கிறது.  ஏனெனில் டெம்போரல் சேஞ்சஸ்/ பேரடாக்ஸ் என்கிற காலப் பயணத்தின் எதிர்மறை விளைவுகளையும், மாறுபாடுகளையும் இன்னும் உன்னிப்பாக ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் இங்கிருக்கும் அதிகாரவர்க்க மனிதர்களில் ஒரு குழு காலங்கடந்து குடிபெயர/ சிற்றுலா செல்ல முடிவெடுக்கும் வேளையில், அந்தக் காலகட்டத்தின் குடியுரிமை மக்களை, ஒருவேளை கொல்லலாம்;  அப்படி நேர்கையில், அதில் எவரேனும் நம்முடைய மூதாதையராய் இருந்தால், ஏற்படும் விளைவுகள் பயங்கரமானதாய்ப் போகும்," என்றார். 

நோவா கேட்டாள், "அப்படி என்னதான் நடந்துவிடும்?" 

ஜனா அதற்கு விடையாக, "நோவா, இன்னுமா புரியவில்லை? நம் வழிவழி முன்னோர்கள் இல்லாமல் போய், அம்மா, அப்பா இருவரும் இல்லையெனில் நானும், நீயுமே இல்லாமல் போகலாம். நாம் பிறந்ததே துடைக்கப் படலாம்," என்றான். 

அதற்கு நோவா வேடிக்கையாக, "ஒருவேளை ஜுராசிக் யுகத்தில் கலமானது இறங்கி, அங்கே ஒரு கொசுவைக் கொன்றால், மரபணு வகையில் அந்தக் கொசுவே நம்முடைய முன்னோர் என்று கூட சொல்வாய்ப் போலிருக்கிறதே," என்று நக்கலடித்தாள். 

இதனைக் கேட்ட அனைவரும் ஒருசேர வாய்விட்டு சிரித்தனர். இறுக்கமான சூழலகன்று ஓரளவு சுமுகமான நிலை ஏற்பட்டது.  ஜூனோ உணவுக் குழல்களில் இருந்த உணவை ஒரு உணவுக் கலத்திலிட்டு வேதியியல் மாற்றம் செய்யப் புறப்பட்டாள்.  நோவாவும் முப்பரிமான கணினியுலக வேட்டை விளையாட்டில் குதிக்க ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தாள். தனித்து விடப்பட்ட ஜனாவும், ஆக்டாவும் ஆராய்ச்சி உடையணிந்து ஆய்வகத்தில் நுழைந்தனர். ஆய்வகத்தில், முறைப்படி இணைப்புகளையும், மின்னியல் தொடர்புகளையும், மின்னளவுக் கட்டுப்பாட்டுக் எந்திரங்களையும் வரிசையாக சோதித்துக் கொண்டே தங்கை நோவாவின், கொசு முன்னோர் நகைச்சுவையை சிந்தனையில் அசைபோட்ட ஜனாவின் மூளையிலொரு மின்னலடித்தது.  உடனே எல்லாவற்றையும் அப்படியப்படியே போட்டுவிட்டு, ஆய்வகத்தின் மறுகோடியிலிருந்த ஆக்டாவிடம் ஓடினான்.  இறைக்க இறைக்க வந்தவனைப் பார்த்து ஆக்டா, "என்னவாச்சு ஜனா? எதற்காக இப்படி அதைக்க பதைக்க ஓடிவந்தாய்? கலந்துரையாட வேண்டுமெனில் தொலைநோக்கழைப்பு அனுப்பி இருக்கலாமே," என்றார்.  

அதற்கு ஜனா, "நோவா வேடிக்கையாகக் கொசு முன்னோர் பற்றி சொன்ன கருத்தைப் பற்றி சிந்தித்த போது, என்னுடைய உள்ளத்திலேற்பட்ட விபரீதமான கருத்தைப் பற்றிய எண்ணங்களே என்னை இப்படி அலறியடித்துக் கொண்டு வரவழைத்தது.  நோவாவின் கூற்றின்படி, நாம் ஒருவேளை ஜுராசிக் (அ) கார்பானிஃபரஸ் யுகத்திற்குப் போக, நம்முடைய காலக்கலத்தால் முடியுமா?" என்று வினவினான்.

ஆக்டா, "கி.பி. 2500-ஆம் ஆண்டுக்குப் போவது சாத்தியமெனில், கிமு. 150 மில்லியன் ஆண்டுக்கு முந்திய கார்பானிஃபெரசு(Carboniferous), டிரையாசிக்கு(Triassic), ஜுராசிக்கு(Jurassic), கிரட்டேசியசு(Cretaceous) ஆண்டுகளும் சாத்தியமே. இதிலென்ன ஐயம் உனக்கு? என்னைப் போன்றதொரு அறிவியலாளனான உனக்கு இந்த ஐயம் வரலாமா?"  

"அப்பா, சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.  உங்கள் காலக்கலத்தின் ஆணைத் தொடர்கள் உலகப் பெருமவைக்குப் பொறுப்பாகி, மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக உருவெடுக்கும் வேளையில், இன்று ஒளியாண்டு விண்கலப் பயணம் போல, காலப்பயணமும் மிகவெளிதான ஒன்றாய் ஆகுமென்று வைத்துக் கொண்டால், ஒருவேளை ஜுராசிக் யுகத்தில் இன்றைய மனிதர்கள்  நுழைந்து, அங்கிருக்கும் உயிரொன்றை, அதாவது வண்ணத்துப் பூச்சி, கொசு, எறும்பு இவற்றில் ஒன்றை அவர்களறியாமல் காலால் நசுக்கிக் கொன்றால், அதன் காரணத்தால் பின்னாளின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும் பாதிக்கப்படுமே!"

இதைக் கேட்டு கடகடவென்று வாய்விட்டுச் சிரித்த ஆக்டா, "என்ன ஜனா, என்ன உளறுகிறாய்? டார்வினின் பரிணாம தத்துவத்தை சரியாக அறியவில்லையே நீ!  அந்த வகை உயிரினங்கள் மரிக்கும் போது, அதனதன் வருங்கால சந்ததி தானே பாதிக்கப்படும்!  மற்ற உயிரினங்கள் அல்லவே! எதற்கிந்த மனக்கிலேசம்?"  என்று வினவினார்.

"அப்பா, நான் சொன்னதை நீங்கள் சரியாக உணரவில்லை.  150 மில்லியன் ஆண்டுகளென்பது மிக மிக பரந்த காலம்.  இதில் எல்லா உயிரினங்களும் சாகாமல், நோயின்றி வாழும் காலமென்பது மிகவும் குறுகிய விழுக்காடு என்பதால், ஜுராசிக் காலத்திலொரு சிறு ஓணானொத்த விலங்கு கொல்லப்படும் போதில், அவ்வினத்தின் ஒரேயொரு தொடர்ச்சங்கிலி அறுபடுவது மெய்யென்றாலும், இன்னொரு இன்றியமையாத விவரத்தை நீங்கள் மறந்துவீட்டீர்கள்.  அந்த விலங்கினத்தின் வழிவழி வாரிசுகள் மற்றேனைய விலங்கினங்களின் உணவாய் இருப்பதும் தடைபடுகிறதே!  ஆகையால், மேலும் சில விலங்குகளின் பரிணாம வளர்ச்சில் மாற்றமடைவதும் நடக்குமல்லவா?  150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இயற்கைக்கு மாறுபாடாக, வலிந்து நாம் ஏற்படுத்தும், ஒரேயொரு கொசுவின் மரணம் கூட, பரிணாம வளர்ச்சியில், மிகப்பெரிய, யாரும் எண்ணிப்  பார்க்கவே முடியாத மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமல்லவா?  டார்வினின் பரிணாம வளர்ச்சியில், மனித இனத்தின் வளர்ச்சியென்பது உள்ளடக்கம் என்பதால், நாமும் பாதிக்கப்படலாம் தானே?"

ஜனாவின் இந்தக் கோட்பாட்டைக் கேட்டதும், ஆக்டாவின் உள்ளத்திலும் நெருப்பை வாரியடித்தது போல உணர்ந்தார்.  ஜனாவின் கூற்று நூற்றுக்கு நூறு மெய்யென்பது அவருக்கும் புலப்பட்டது. அதற்கு அவர், "ஜனா நீ சொல்வது மிகச் சரியே!  நான் தான் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டேன். ஆனால் காலத்தைக் கடந்து இடம் பெயரப்போவது நாம் நால்வர் மட்டுமே!  அதுவும் கிபி. 2500ஆம் ஆண்டுக்கு மட்டும். அதன்பின் தேவைப்படும் போது, நம்முடைய வாரிசுகள், அவ்வப்போது காலத்தில் தகவான  ஆண்டுக்கு மாறுவார்கள்.  இல்லையென்றால், இந்த இரகசியம் நம்முடனே புதைக்கப்படும். இதனை நான் உலகப் பெருமவைக்குத் தரவே போவதில்லை.  இப்போது உன்னுடைய ஐயம் தீர்ந்திருக்குமே!' என்றார். இருவருமே ஒருசேர நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.  காலக் கலத்தின் எல்லா வகை கணக்கீடுகளையும், இணைப்புகளையும்  ஒருங்கே சரிபார்த்தப் பின்னரே, இருவரும் உணவருந்த பொது அறையில் நுழைந்தனர்.  அங்கே ஜூனோவைக் காணாத ஆக்டா, " ஏம்மா நோவா, அம்மா எங்கே போனாள்? எல்லாரும் சேர்ந்து தானே உணவருந்த நினைத்தோம்,"

"அம்மா, தன்னுடையப் பணித் தோழியை அவசரமாகக் காணச் செல்வதாய்ச் சொல்லிவிட்டுப் போனார்கள்."

ஆக்டாவும் எதுவும் சொல்லாமல், அப்படியா என்று தலையசைத்து விட்டு, உணவுத் தட்டையும், நீர் குப்பியையும் எடுத்துக் கொண்டு அவருடைய தனியறைக்குப் புறப்பட்டார்.  ஆனால், ஜனா மட்டும் நோவாவிடம், "உலகப் பெருமவையின் தலைவருடன் நெருக்கமான தோழியென்று அம்மா சொன்னார்களே அவருடைய வீட்டுக்கா?" என்று துருவித்துருவி கேட்டான். இரவு உணவை ஏற்கனவே முடித்திருந்த நோவா, "போடா, எனக்குத் தெரியாது.  அம்மாவைக் காட்சிபேழையில் அழைத்துத் தெரிந்து கொள்," என்று அலட்சியமாய் சலிப்புடன் பதிலளித்துவிட்டு, மீண்டும் கணினியுலக வேட்டையுலா ஆட்டத்தில் மூழ்கினாள். ஜனாவுக்குத் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.  உணவைத் தொடாமல், நேராக ஆக்டாவிடம் ஓடினான்.

"என்ன ஜனா, இப்போது புதிதாக என்னத்தைக் கிளப்ப வந்திருக்கிறாய்?"

"அம்மா பார்க்கப் போயிருப்பது ஒருவேளை உலகப் பெருமவையின் தலைவருடன் நெருக்கமான தன்னுடைய சக பணித்தோழி என்றால், இரண்டும் இரண்டும் நான்கென்பது உங்களுக்குப் புரியவில்லையா? காலக் கலத்தின் உண்மையை உலகப் பெருமவை அறிந்தால், என்னால் எண்ணிப் பார்க்கவே பயமாய் இருக்கிறது."

"போடா, போய் வேறு வேலையிருந்தால் பார். ஜுனோ உலகப் பெருமவையில் பணியாளி என்பதை விட, உங்களிருவருக்கும் அன்னை என்பதை விட, என்னுடைய அன்பான துணைவியென்பதை மறந்து விட்டாயா?  யாரை ஐயப்படுவது என்பதில் ஒரு வரைமுறை வேண்டாமா?  போய் உணவருந்திவிட்டு, ஓய்வறையில் ஒரு அணுத் தூக்கம் போடு. எல்லாம் சரியாகிவிடும்.  சற்றே ஓய்வெடுத்த பின், எனக்கு ஆய்வகத்தில் சில பணிகள் உள்ளன."

எல்லா ஐயங்களையும் மூட்டை கட்டிவைத்த ஜனா, வேண்டா வெறுப்பாக உணவருந்துதல் என்று எதோ கொறித்துவிட்டு, ஓய்வறையில் அணுத் தூக்கம் போட்டான். தூக்கத்திலிருந்த ஜனாவை திடீரென்று, பெரும் களேபர சத்தமும், பெரிய கூச்சல்களும் உலுக்கி எழுப்பின.  தள்ளாடிக் கொண்டு வெளியே வந்தவனை, அறைமுழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, நீட்டிக் கொண்டிருந்த லேசர் படைக்கலங்கள் முறைப்பதைக் கண்டு அப்படியே பயத்தில் உறைந்து போனான்.  கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தால், அம்மா, நோவாவின் பக்கத்தில் குறுந்தாடியுடன் வெள்ளுடை அணிந்த மனிதர் ஒருவர் நிற்பதைக் கண்டான். விளக்கத்திற்காக, அம்மாவின் முகத்தை ஏறிட்ட ஜனா, "அம்மா, யாரிவர்கள்? என்ன நடக்கிறது இங்கே? எதற்காக இப்படி ஆயுதங்களை ஏந்திக் கொண்டு நம்முடைய ஓய்விடத்தில் நிற்கிறார்கள்?" வினாக்களை அடுக்கினான். அம்மாவின் முகம் கல்லாகவே மாறியிருந்தது. 

அம்மாவுக்கு பதிலாக அந்தக் குறுந்தாடி, "32312414ஜன்! காலப்பயணமென்பது இப்போது அவையுடமை ஆக்கப்பட்டு விட்டது.  உலகப் பெருமவைக்கு அறிவிக்காமல், காலப்பயண ஆராய்ச்சியை மேற்கொண்டதாலும், கைது செய்ய வரும்போது காவலர் ஒருவரைத் தாக்கியதாலும், உங்கள் குடும்ப உள்தலைவரான 24147987ஆக்ட், துடைக்கப்படுவதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஆராய்ச்சி ஆணைத் தொடர்கள், ஆய்வகக் கருவிகள், அனைத்தையும் பெருமவைக் கைப்பற்றி இருக்கிறது. குடும்ப வெளித்தலைவரான 32316566ஜுன் உலகப் பெருமவைக்கு இதுபற்றிய சேதியளித்ததால், அவரும், மற்ற உறுப்பினரான நீங்கள் இருவரும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப் படுகிறீர்கள்," என்றான்.  இதைக் கேட்டதும் ஜனா, " அம்மா, நீங்கள் செய்த காரியத்தின் பலனைப் பார்த்தீர்களா? அப்பா துடைக்கபடப் போகிறார். அவரில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?" என்று அலறிக் கொண்டே ஜூனோவை நோக்கிப் பாய்ந்தான். குறுந்தாடியின் இடுப்பிலிருந்த குறுலேசர் படைக்கலன் பளிச்சென்று சீற, கரிக்கடையாய் சரிந்த ஜனாவின் உடலைப் பார்த்து, பாறையாய் உறைந்தார்கள் ஜூனோவும் நோவாவும்.

அடுத்து நடந்தவை அனைத்தும் ஒரு கதையாய்ப் போனது.  ஜூனோவும், நோவாவும் சிண்ட்ரெல்லாவுக்கு உலகப் பெருமவையின் செலவில் குடியேற்றப்பட்டு, வசதியான ஓய்விடமும் வழங்கப்பட்டது. பெருமவையின் அறிவியலார்கள் ஆக்டாவின் ஆணைத் தொடர்களையும், கருவிகளையும், ஆய்வுக் கூறுகளையும் பரிசீலித்து, காலந்தாண்டி அனைவரும் பயணம் செய்ய தேவையான காலக்கலங்களை உருவாக்கினர். ஆனால் காலப்பயணம் என்பது உரிய உயர்தொகை செலுத்தினால் மட்டுமே அனைவர்க்கும் சாத்தியமென்றானது. ஆனால் ஜனாவின் "பரிணாம மாறுபாட்டுக் கொள்கையை" அறிவுறுத்த எவருமே இல்லை.  ஐந்தாண்டுகள் கடந்தபின்னர், ஒருநாள் ஜூனோ, நோவா இருவரும், சிண்ட்ரெல்லாவில் இருந்து ஜுராசிக் யுகத்திற்கு ஒரு காலச் சுற்றுலா போக, பெருமவையில் விண்ணப்பித்து பயணச்சீட்டு எடுத்தனர்.  ஜுராசிக் யுகத்திற்குக் கலம் வந்தபின்னர், பயணிகளுக்குக் கலத்தின் தலைவர், ஒலிபெருக்கியில் விதிகளை வரிசையாக எடுத்துரைத்தார். "எவரும் கலத்திலிருந்து இறங்கக்கூடாது; பூ/ செடி/ இலைகளைத் தொடக்கூடாது. கலத்தின் வாசலில் இருக்கும் கண்ணாடிக் கதவுகள் வழியாக மட்டுமே வெளிக்காட்சிகளைக் காண வேண்டும். மீறுபவர்கள் உடனே துடைக்கப்படுவார்கள்"

ஜூனோவில் உள்ளத்தில், நிலவில் முதல் மனிதன் கால்பதித்தைப் போல, தானும் ஜுராசிக் யுக பூமியில் தானும் முதல் கால்பதிக்க வேண்டும் என்று பேராசை எழுந்தது. நோவாவுக்கு இந்த யோசனை அறவே பிடிக்கவில்லை. தான் ஜுராசிக் கால மண்ணில் கால் பதிக்க வரவே மாட்டேன் என்று கூறிவிட்டாள்.  ஜூனோ தன்னுடைய உடலழகாலும், தன்னிடமிருந்த கிரிடிட்டாலும் உலகப் பெருமவையின் தலைவருடனான நெருக்கத்தாலும், காலக்கலத்தின் தலைவரைத் தாஜா செய்து, இரகசியமாக ஜுராசிக் மண்ணில் காலடி பதிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டாள். ஆனால் காலம் விதித்த கட்டளை என்பது வேறாக இருக்கப் போவதை அவள் அறிவாளா? இதைத்தான் விதி என்பார்களோ? 

எவருடைய துணையுமின்றி, இரகசியமாக ஜூனோ மட்டும், கலத்தின் தலைவர் அளித்த விசேடமான உடை, கையுறை, காலணி இவற்றுடன், எவரும் அறியாமல் முதன்முதலாய் ஜுராசிக் யுகத்து மண்ணில் காலடி பதித்தாள். காணுமிடமெல்லாம் பசுமை, விசித்திரமான தாவரங்கள், விநோதமான குரலொலிகள், கூச்சல்கள், ஓசைகள் அவளுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. மெல்ல முன்னோகி நகர்கையில், காலடியில் முறுக்முறுக்கென ஏதோ நொறுங்கிய உணர்வு.  குனிந்து காலைத் தூக்கிப் பார்த்தாள்.  ஒரு ஓட்டுடலி நத்தையின் நசுங்கிய உடல் அவளுடைய காலணியில் ஒட்டிக் கொண்டிருந்தது. கீழே கிடந்த குச்சியால் அதனை வழித்து வீசிவிட்டு, சற்று நேரத்துக்குபின் வந்த வழியே இரகசியமாகக் கலத்திற்குத் திரும்பினாள். தீவிர நோயெதிர்ப்பு கதிர்வீச்சுச் சோதனைக்குட்பட்ட பின்னர், குளித்து முடித்து அவளிருக்கைக்குத் திரும்பினாள்.  காலக்கலம் அவர்கள் காலத்துக்கே திரும்பத் தொடங்கியது. அருகிலிருந்த நோவாவிடம் வழிநெடுக, தான் கண்ட காட்சிகளை ஜூனோ அளந்து கொண்டே வந்ததால், காலக்கலத்தின் குலுங்கல்களும், ஏற்ற, இறக்கங்களும் அவளுக்கு உறைக்கவே இல்லை.

காலக்கலம் கீழிறங்கியதும், நோவா போட்ட அலறலால், திசை திரும்பிய ஜூனொவின் கண்களில் ஒரு மின்னல் பளீரிட்டது.  காலக்கலம் இறங்கிய இடம், நோவா, பயணிகள், கலத்தின் தலைவர், பணியாளிகள் அனைவருமே இருந்த இடமின்றி காணாமற் போயிருந்தனர்.  தன்மீது இடிபோன்ற சாட்டையடி ஒன்று விழுந்ததை உணர்ந்தாள்.  யாரென்று அண்ணாந்து பார்த்தால், ஊர்வன இனத்தின் ஓணான் முகமும் வாலும் கொண்ட ஒரு விசித்திரமான கோர உருவம், கையிலிருந்த சாட்டையை மீண்டும் இடிபோல சொடுக்கியது. ஐயோ என்று அலறியவளின் வாயிலிருந்து சொற்கள் வரவில்லை, "ஙொ .. ஙொ.. ஙொ" என்ற பெருங்குரல் மட்டுமே எழுத்தது. குனிந்து தன்னைப் பார்க்கையில், தனக்குப் பூரானைப் போல பல கால்கள், வாயிலே குதிரைக்குக் கட்டியது போல, கடிவாளமும், நுரையும்.   தான் யாரென்ற நினைவுகள் கூட சறுக்கிக் தேய்ந்து கொண்டே........
தெய்வம் நின்று கொல்லுமோ??????

முற்றும்.................   
=====================
இராச. தியாகராசன்


வெள்ளி, 15 ஏப்ரல், 2022

கவிதை வேட்டு (கலிவெண்பா)...

 எது கவிதையென எவரே அறிவார்.....
========================












========================
கவிதை வேட்டு..
========================
குதப்பிக் குழப்புதல் கோதுகவி யென்றால்,
புதுநிறம் போர்த்தல் புதுமையென் றாமோ?
சிதைத்து மடக்கல் செறுகவிதை என்றால்,
செதுக்கிச் சிதைப்பதும் சிற்பமென் றாகுமோ?

யாப்பும் அணியும் இருப்பதே பாவென்றால்,
பாப்பாக்கை யேந்தும் பதுமையும் மெய்யுருவோ?
கோப்ப ழகாய்ச்சொல் குவிப்பதே பாவென்றால்,
தீப்பொறி வண்ணஞ் செறிந்ததும் ஓவியமோ?

விக்கி வெடித்திடும் வித்தார வித்தையெனச் 
சிக்கிப் பிடித்திடும் சித்திரப்பூப் பின்னலதாய், 
முக்கி முயன்றிடும் மோனக் கரகாட்டம்; 
சொக்கி மயக்கிடும் சொல்லின் சிலம்பாட்டம்! 

துஞ்சுதலைக் கண்கள் தொலைத்துக் குமுறுகின்ற, 
நெஞ்சவெளி தன்னில் நினைவே பயிராக, 
மஞ்சுதமிழ்ச் சொல்லாங்கு மங்கையெனச் சூழ்ந்தாடும் 
வெஞ்சினந் தான்கவிதை வேட்டு!
==================================
இராச. தியாகராசன். 

பிகு:
====
கோதுகவி - நேரான கவிதை (முடியை நேராக்கும் சீப்புக்கு மற்றொரு பெயர் கோதுகலம்), கோப்பழகு - கோத்திருக்கும் எழில், துஞ்சுதல் - துயிலுதல்,
மஞ்சுதமிழ் - முகிலைய தமிழ்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

சத்ய விரதனே; தர்ம பாலகா....

என்னில் உறைந்தெனை என்றும் வளந்தரும் என்னய்யனே...
============================================













============================================
சத்ய விரதனே; தர்ம பாலகா; சரணம் ஐயனே!
நித்ய நிர்மலா; நிஷாத வீரியா; சரணம் ஐயனே!
============================================
                                                             (நித்ய) (சத்ய) 
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வீரையனே;
தண்கரங் காட்டியே கட்டி யிழுத்திடுந் தர்மையனே; 
மண்ணில் பொழிந்திடு கொண்ட லனையநல் மாதையனே;
கண்ணி லுறைந்தெனை யென்றுங் கவர்த்த கமலையனே! 
                                                             (கண்ணி) (சத்ய)

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு(ம்) அன்பையனே;
கன்னற் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கன்னையனே;
பொன்னின் நிறத்துடன் நித்த மொளிர்ந்திடும் பூதையனே;
மின்னல் வடிவினில் என்னில் புகுந்திடும் வேதையனே; 
                                                             (மின்னல்) (சத்ய)

சின்னக் குழல்தருந் மென்மை யிசையெனுஞ் சீரையனே;
இன்னல் துயர்களை யென்றும் அறுத்திடும் ஏறையனே; 
தன்னைத் தருமுயர் தாய்மை யெனுமருந் தங்கையனே;
என்னில் நிறைந்தெனை யென்றும் வளந்தரும் என்னையனே! 
                                                             (என்னில்) (சத்ய)
==============================================
இராச. தியாகராசன் 

குலங்காக்க வாராரே ஐயனாரு.....

ஒரு ஐயப்ப பஜனையில் ஒரு ஐயப்பன் பக்தர் பாடிய ஐயனார் பாடலின் நான்கு வரி மெட்டின்  தாக்கத்தால் முழுவதும் என்னுளத்தில் முகிழ்ந்து, நானெழுதிய  வரிகளிவை.  முதல் அடியான "வெள்ளைக் குதிரையிலே ஐயனாரு" என்று அவர் பாடிய வரியைச் சற்றே மாற்றி "வெள்ளக் குருதையிலே ஐயனாரு" என்று தொடங்கி, முழுதும் நாட்டுபுற வரிகளாக எழுதினேன். 
=======================================













குலங்காக்க வாராரே ஐயனாரு
=======================================
ஐயனாரு ஐயனாரு ஐயனாரு ஐயனாரு
எங்ககுலங் காக்கவரார் ஐயனாரு....
=======================================
வெள்ளக் குருதையிலே ஐயனாரு
வெரசாத்தான் வாராரே ஐயனாரு
துள்ளுங் குருதையிலே ஐயனாரு
துடிப்பாத்தான் வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு) 

அள்ளு மழகுடனே ஐயனாரு
ஆடித்தான் வாராரே ஐயனாரு;
பொள்ளுகின்ற புல்லரையே ஐயானாரு
பொசுக்கத்தான் வாராரே ஐயனாரு!                 (ஐயனாரு) 

சின்னக் குருதையிலே ஐயனாரு
சீறித்தான் வாராரே ஐயனாரு
மின்னுங் குருதையிலே ஐயனாரு
வீரமாத்தான் வாராரே ஐயனாரு!                       (ஐயனாரு)

பண்ணக் குருதையிலே ஐயனாரு
பாய்ஞ்சுதான் வாராரே ஐயனாரு;
வண்ணக் குருதையிலே ஐயனாரு
மாயமாத்தான் வாராரே ஐயனாரு!                   (ஐயனாரு)

காட்டுக் குருதையிலே ஐயனாரு
கருக்காதான் வாராரே ஐயனாரு
நாட்டுக் குருதையிலே ஐயனாரு
நலுங்காம வாராரே ஐயனாரு!                            (ஐயனாரு)

மாயக் குருதையிலே ஐயனாரு
மலைபோல வாராரே ஐயனாரு
சூரக் குருதையிலே ஐயனாரு
சோக்காத்தான் வாராரே ஐயனாரு!                 (ஐயனாரு)

பாலக் குருதையிலே ஐயனாரு
பாடித்தான் வாராரே ஐயனாரு
கோலக் குருதையிலே ஐயனாரு
குதிச்சேதான் வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு)

செருவக் குருதையிலே ஐயனாரு
சிட்டாத்தான் வாராரே ஐயனாரு
கருத்த குருதையிலே ஐயனாரு
காத்தாத்தான் வாராரே ஐயனாரு!                   (ஐயனாரு)

பாசக் குருதையிலே ஐயனாரு
பறந்துதான் வாராரே ஐயனாரு
ஆசைக் குருதையிலே ஐயனாரு
அழகாத்தான் வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு)

தங்கக் குருதையிலே ஐயனாரு
தாவித்தான் வாராரே ஐயனாரு
சிங்கக் குருதையிலே ஐயனாரு
சிலுப்பிகிட்டு வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு)
====================================
இராச. தியாகராசன்.