என்றோ எழுதியவோர் அறிவியற் புனைவு நெடுங்கதையிது. இன்று எதையோ தேடுகையில் கிடைத்தது. நண்பர்களுக்காகப் பகிர்கிறேன்.
======================================
என்ன செய்வது....
ஒளிவீசும் நம்முடைய பரிதியானது, எரிந்தழியும் சூப்பர் நோவா (Super-nova) எனப்படும் வெடிப்பொளியின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், புதன், வெள்ளி முதலான முதற்கோள்கள் பொசுங்கிப் போயிருந்தன. பூமிக் கோள் முழுவதும் நிலமும், நீருமற்ற, உயிரினம் வாழவே முடியாத, சுட்டெரிக்கும் மேக்மா (magma) எனப்படும் தீக்குழம்பாய் தகித்துப் போனதும், செவ்வாய்க் கோள் பாலைநிலமும், மேக்மாவும் கலந்த கோர வடிவமாய் ஆனதும் அன்றைய மெய்ம்மை. சோலார் ஃபேமிலி (solar family) எனப்படும் பரிதிக் குடும்பத்தில் மீதமிருந்த ஜோவியன் எனப்படும் வியாழன், சனி, நெப்டியூன், முதலான மற்றேனைய கோள்களும், மற்றேனைய துணைக் கோள்களும், பிழம்பானப் பரிதியின் சூட்டினை உணரத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆயிரமாண்டுகளில் பரிதிக் குடும்பமே எரிந்தழியும் நிலை. வியாழன், அதற்கப்பாலிரும் கோள்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் மனித வாசனை. ஏறக்குறைய வாழ்வியல் வசதியுள்ளவர் மட்டுமே ஒளியாண்டு விண்கலங்களில் (faster than light space ship) பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு, பன்னிரெண்டு ஓளியாண்டுக்கு (12 light-year) அப்பாலிருக்கும், நம்முடைய பரிதியை ஒத்த, டா செட்டி (Tau Ceti) என்ற பெயர் கொண்ட விண்மீனைச் சுற்றிவரும் சிண்ட்ரெல்லா கோளுக்குப் பயணப்பட்டு விட்டனர். பரிதிக் குடும்பக் கோள்களில் மீதமிருந்தவர்கள், பயணத்திற்காக மும்முரமாய் வசதி சேர்த்துக் கொண்டிருக்கும் ஜனா போன்ற நடுத்தர வர்க்கத்தினரும், எதுவுமே செய்ய முடியாத ஏழைகளும் தாம். நிலை விளக்கத்தைத் தாண்டி, இனி கதைக்கு வருகிறேன்.
அப்பா கேட்டச் செப்புக் கம்பிகளையும், உணவுக்குழல்களையும் வாங்கிக் கொண்டு, ஓய்விடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான் ஜனா. அடடே.... ஜனா யாரென்று சொல்லவில்லையே! ஆணான 24147987ஆக்ட்(2414787OCT)-க்கும், பெண்ணான 32316566ஜூன்(32316566JUN)-க்கும் முதல் உறுப்பினனாய் வந்த ஆண் வாரிசு தான் ஜனா. அவனுடைய அடையாளம் அல்லது ஐ.டி. 32312414ஜன்(32312414JAN). அவனுடைய குடும்பத்தில், அவர்கள் மூவருடன், அடுத்த உறுப்பினராய், நான்காவதாக வந்த அடுத்த வாரிசுப் பெண்ணின் அடையாளம் 24143231நோவ் (24143231நோவ்). அடையாள எண்ணைச் சொல்லாமல் வேறு பெயர்கள் வைத்து அழைப்பது உலகப் பெருமவையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆனால் அவர்கள் குடும்பத்தில், குடும்பத் தலைவர்களின் நினைவாற்றல் வறட்சியால், அவர்களுக்குள்ளாகவே ஒரு இரகசிய முறையேற்படுத்திக் கொண்டனர். ஓய்விடத்தில் இருக்கும்போது மட்டும் பழங்கால முறைப்படி, வீட்டு உள்தலைவரான ஆண் - அப்பா (அ) ஆக்டா என்றும், வீட்டு வெளித்தலைவரான பெண் - அம்மா (அ) ஜூனோ என்றும், முதலுறுப்பின ஆண் ஜனா என்றும், கடைசியுறுப்பினப் பெண் நோவா என்றும் அழைத்துக் கொண்டார்கள்.
நமக்குக் கூட இந்த எண்களும் அடையாளமும் தலைச் சுற்றுவது போலிருக்குமென்பதால், நாமும் ஆக்டா/ ஜூனோ/ ஜனா/ நோவா என்று அழைப்போமே! அம்மாவான ஜூனோ உலகப் பெருமவையில், ஏதோவொரு மூலையில், குப்பை அலுவலகத்தில், கணினி எழுத்தர். மகள் நோவா இன்னும் அரசாங்கப் படிப்புக் குடும்பத்தில் இருந்தாள். பட்டம் வாங்கி வெளி வந்ததும் அவளுக்கும் குடும்ப ஓய்விடத்தில் வசிக்க பாஸ்போர்ட்டைப் பெருமவை அளிக்கும். அப்பா ஆக்டா குடும்ப ஓய்விடத்தின் தலைமைப் பொறுப்பாளர். அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட அறையில், அவர் கூடுதலாகத் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிகளை, பெருமவையின் அனுமதியுடன் மேற்கொண்டிருந்தார். படித்து முடித்த ஜனா ஆக்டாவின ஆராய்ச்சிகளுக்கு உதவுவதுடன், குடும்ப ஓய்விடத்தின் மேற்பார்வையாளனாகவும் இருந்தான். உலகப் பெருமவை அவனுக்கு இணை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் குடும்பத்தைப் போலவே அவனும் தனக்காக ஒதுக்கப்படும் ஓய்விடத்தின் தலைமைப் பொறுப்பாளனாய் இருப்பான். வாரிசுகள் எனும் போது, அறிவியலால் தீர்மானிக்கப்பட்டு, குறை உடற்காரணிகள், ஜீன் கோளாறுகள், நோய்கள் இவையாவும் வடிகட்டப்பட்ட பெண் கருமுட்டை, ஆண் உயிர்விந்து இவையொன்று சேர்க்கப்பட்டு, எதிர்காலத்தில் குழந்தை என்கிற உறுப்பினர் உருவாகங்கள், சோதனைச் சாலையில் நடைபெற்றன.
குடும்பத்தின் பொதுநிதிக் கணக்கை முறையாக மேம்படுத்தியிருந்தால், உலகப் பெருமவையின் முறைமை விதிப்படி, அவர்கள் நால்வரும் முன்னர் புறப்பட்ட ஒளியாண்டு விண்கலங்கள் ஏதேனுமொன்றில் இடம் கிடைத்து, இந்நேரம் சிண்ட்ரெல்லாவில் குடியேறியிருப்பார்கள். ஆனால் ஆக்டாவின் தொடர்ச்சியான ஆராய்ச்சிச் செலவுகள், அவர்களின் குடும்ப நிதிநிலையை சீராக இருக்கவே விடவில்லை. இதனால் ஜூனோவுக்கும், நோவாவுக்கும் ஆக்டா மீது சரியான எரிச்சல். ஆனால் ஓய்விடத் தலைவரென்பதைத் தாண்டி, அறிவியலாளர் என்பதால், ஜனாவுக்கு மட்டும் அவர்மீது அளவுகடந்த பெருமை. அவருடனே இருக்கும் அவனுக்கல்லவா தெரியும், அவருடைய தற்போதைய ஆராய்ச்சியின் இன்றியமையாத்தன்மை.
அதுவென்ன ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா? டெம்போரல் லீனியர் வோர்ட்டெக்ஸ் (Temporal Linear Vortex) என்கிற காலத்தின் நீளவாட்டுத் தன்மை பற்றிய அவருடைய ஆராய்ச்சி மட்டும் வெற்றியடைந்தால், இப்படி ஒட்டுமொத்தமாக விண்மீன்/ கோள் மாறி, இடம்பெயர்ந்து அலையாமல், காலத்தின் முன்னோக்கியோ (அ) பின்னோக்கியோ சென்று, ஒரு தகவான ஆண்டில், அலுங்காமல் தன்னுடைய குடும்பத்துடன் குடிபெயர்ந்து விடலாம் என்பது ஆக்டாவின் கணிப்பு. ஜனா தான்வாங்கி வந்த உணவுக் குழல்களை குளிர்ச்சுவர்ப் பேழையில் அடுக்கினான். உலகப் பெருமவை அளித்த விடுமுறையை ஓய்விடத்தில் கழிக்க வந்த நோவாவும், பணியிலிருந்து திரும்பிய ஜூனோவும், ஏறிவந்த காற்றுக்கலம், ஓய்விடத்தில் நுழைந்தது.
இருவரும் ஒருசேர உள்ளே நுழைகையில், ஜனா செப்புக் கம்பிகளை ஆக்டாவிடம் தருவதைக் கண்டுவிட்ட ஜூனோ, ஆக்டாவைப் பார்த்துச் சீறினாள்;
"மறுபடியும் வீணத்த ஆராய்ச்சிக்காக தண்டச் செலவா? இப்போதுதான் நிதிக்கணக்கு 800 கிரிடிட் வந்திருக்கு. மறுபடியும் வெற்றுச் செலவுக்கு எவ்வளவு எடுத்தீங்க?"
அதற்கு ஆக்டா, "25 கிரிடிட்தான் ஜூனோ. அதில்கூட வார உணவுக்கு 15. செப்புக் கம்பிக்கு வெறும் 10." என்று தலை குனிந்தபடி முனகினார்.
"போன பத்தாவது பகலில், ஆராய்ச்சிக்கு 15 எடுத்தீங்க. அதை என்ன பண்ணீங்க? நம்ம வீட்டு துஸ்குவாச்சு ரோபாவாட்டம் கம்பியெல்லாம் தின்னா போடறீங்க?" பின்னர் ஜனாவிடம் திரும்பி, "உன்னைச் சொல்லணும். எத்தன வாட்டி சொல்லிட்டேன்; பொதுக் கணக்கிலேந்து எடுக்காதேன்னு. கால் கிரிடிட் பெறாத வேலைக்கு, பத்தும் பதினஞ்சுமா போகணுமா?" என்று கத்தினாள்.
உடனே ஜனா, "ஏம்மா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க? ஐன்ஸ்டைனின் ஈ=எம்.சி ஸ்கொயர் (E=MC2) என்பதன் அடிப்படையான ஒளிவேகப் பயணம்; கலத்தின் வேகத்திற்கேற்ப பயணம் செய்பவரின் காலத்தை நீட்டிக்கும் தேற்றம், இதையெல்லாம் கண்கூடாகவே காட்டும் இந்த ஒளியாண்டு விண்கலப் பயண காலத்தில், காலத்தைக் கண்சிமிட்டில் கடக்கும் முதல் அற்புத கலத்தை நிறுவப் போகும் மிகப்பெரிய அறிவாளியின் சக குடும்பத் தலைவரென்பது உங்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை?"
"உன்னோட பெருமையைக் கொண்டுபோய் அணுவுலையில் போடு. இதுவரைக்கும் காலப்பயண ஆராய்ச்சியில் பைத்தியம் பிடிச்சு மண்ணாய்ப் போன அறிவாளிகள் பல்லாயிரத்துக்கும் மேல். இதெல்லாம் சரிப்பட்டு வராது. 1500 கிரிடிட் சேர்ந்துவிட்டால், ஒளியாண்டு விண்கலத்தில் இடங்கிடைத்து, சிண்ட்ரெல்லாவில் ஒய்விடம் ஒன்றை வாங்கி, நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினேன். ஓட்டைக்குழலில் போடும் மண்ணைப் போல, கிரிடிட் எல்லாம் போய்க்கிட்டே இருக்கு. இன்னொரு தடவை கம்பி, குச்சின்னு பொதுக்கணக்கில் இருந்து எடுத்தீங்க, நான் பொல்லாதவளாயிடுவேன். அப்புறம் பன்னாட்டு அறமன்றத்தில் தாவா தான். நீங்க ரெண்டு பேரும் நெப்டியூன்ல மண் அள்ளத்தான் போகணும். சொல்லிட்டேன்."
இதைக் கேட்ட ஆக்டா, "ஜூனோ, நீ அறிவியல் படித்தவள் தானே? எல்லாம் முடிந்து, காரியம் கைகூடி வரும்போது, இப்படிப் பண்ணுவது சரியே இல்லை. மற்ற அறிவியலார் எல்லாம் காலமென்பது நீளவாட்டில் பயணப்படுகிறது என்றே முடிவுகட்டி, ஆராய்ந்தார்கள்; அதனால் தோற்றார்கள். பொதுவாகப் பார்த்தால் சரியாகவே தோன்றக் கூடும். ஆனால் என்னுடைய ஆராய்ச்சிகளின் படி காலமென்பது முடிவற்ற ஒரு சுழலில் பயணம் செய்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறேன். இதோ இந்த இருப்புக் கம்பிச் சுழலைப் (Iron Spring) பார். அடிக்கும் நுனிக்கும் தூரமிருக்கலாம். ஆனால் முதற்புரியில் ஓரிடம் அடுத்த புரியின் ஒரிடத்துக்கு மிக அருகில் இருப்பதைப் போல, 88500 ஆண்டுக்கு பக்கத்தில் 87500-ஆம் ஆண்டின் புரி (அ) இழை மிக அருகில் தானிருக்க வேண்டுமென்பதைப் போன்றது என்னுடைய உறுதியான கணிப்பு. அதாவது ஆயிரமாயிரம் ஆண்டு ஆண்டுகளாகத் தாவுவது மிக எளிதென்று கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் 10 பகலுக்குள் என்னுடைய முதல் காலக்கலம் தயாராகிவிடும்," என்றார்.
அதற்கு ஜூனோ, "எது எப்படியோ, இனி பொதுக் கணக்கிலிருந்து எடுக்கக் கூடாது. வேண்டுமானால், உங்கள் தனி படியிலிருந்து 5 விழுக்காடு செலவு செய்து கொள்ளுங்கள். இந்தக் கலத்தால் நமக்கென்ன பயன், உலகப் பெருமவையைக் கூட்டி, சுண்டைக்காய் அளவு பிளாட்டின மெடல் குத்துவாங்க. அதை விற்றால் கால் கிரிடிட் கூடக் கிடைக்காது," என்றாள்.
"நீ தப்புக்கணக்கு போடுகிறாய் ஜூனோ. இன்னும் உலகப் பெருமவைக்கு நானிதைச் சொல்லவில்லை. வெள்ளோட்டப் பயணத்துக்குப் பின்னர், எல்லாம் வெற்றிகரமாக முடிந்தால், நீ, நான், ஜூனோ, நோவா எல்லோரும் அனைத்து வசதிகரமான விஷயங்களுடன், சிண்ட்ரெல்லாவுக்குப் போகத் தேவையே இல்லை. இன்றைக்கு சீந்துவாரற்ற தங்கத்தைக் கிலோ கணக்கில் ஏற்றிக் கொண்டு, எவருமறியாமல் 2500-ஆம் ஆண்டுக்குப் போனால் போதும் ஆனந்தமாக வாழலாம்."
இதுவரை பேசாமலிருந்த நோவா, "ஐய்யய்யோ.... அந்தக் கற்காலத்துக்கா? கோடிக்கணக்கில் தொற்றிகள் (Virus), நுண்ணுயிரிகள் (Bacteria), ஒட்டுண்ணிகள் (Parasite), வயிற்றில் குழந்தை வளர்த்தெடுக்கும் ஆதி மனிதர்கள், கொசு/குளவி/ஓணான்/ எறும்புக் கூட்டம், காற்றின் மாசு, கொடிய காட்டு விலங்குகள். இதென்ன பைத்தியக்காரத்தனம்," என்றலறினாள்.
அதற்கு ஜனா, "நோவா, கலத்தை உருவாக்கும் அப்பா, இதெல்லாம் யோசிக்காமலா இருப்பார்? தேவையான அனைத்து வித மருந்துகள், தடுப்பூசிகள், பண்ட பரிமாற்றத்திற்கு வேண்டிய தங்கம், மின்னேற்றப்பட்ட சூரிய மின்கலன்கள் (Charged Solar Batteries), ஆயத்தநிலை லேசர் படைகலங்கள் (Ready Laser Guns), மின்காந்தக் காப்புடைகள், இன்னும் பல முன்னேற்பாடான விஷயங்களுடன் தான் நாம் கலத்திலேறப் போகிறோம்," என்றான்.
"ஆக நீங்கள் முன்னரே பேசி வைத்துவிட்டீர்கள், காலக்கலம் இனிமேல்தான் உருவாகப் போகிறதா, இல்லை வெள்ளோட்டம் எல்லாம் பார்த்தாயிற்றா?" என்று வினவிய ஜூனோவைத் தோளணைத்த ஆக்டா, காற்றணையில் அவளை அமர்த்தி, கலத்தின் முப்பரிமாண பிம்பத்தை முன்னே இருந்த மின்முக்காலியில் கைச்சொடுக்கில் வரவழைத்தார். வெள்ளோட்டத்தின் போது மாதிரி சிறுகலம் 2500 ஆண்டு எடுத்த சோதனை முப்பரிமாண குறும்படங்கள்/ நிழற்படங்கள் ஆகியவற்றை அவர்களுக்குப் போட்டுக் காட்டினார். இதையெல்லாம் பொறுமையாகப் பார்த்த ஜூனோ, "அப்போ, கலம் முடிந்துவிட்டது என்கிறீர்களா உலகப் பெருமவைச் செயலர் என்னுடன் பணிபுரியும் தோழிக்கு நெருக்கமானர் தான். எப்படியாவது மேல்மட்டத்தில் சொல்லி, சிண்ட்ரெல்லாவுக்குப் போக, அங்கே ஓய்விடம் பெறத் தேவையான அளவு கிரிடிட் கொடுக்க பரிந்துரை செய்யச் சொல்கிறேன். ஆராய்ச்சியின் ஆணைத் தொடர்களை உலகப் பெருமவைக்குக் கொடுத்து விடலாம்! இந்த தொற்றி, நுண்ணுயிர், ஒட்டுண்ணி, விலங்குகள், கொசு, எறும்பு, காற்றின் மாசு என்கிற விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாமே! எது எப்படியாயினும் சரி, எங்களுக்கு முடிவெடுக்க அவகாசம் தேவை," என்றாள்.
உடனே ஆக்டா, "ஜூனோ, இந்தப் பைத்தியக்காரத்தனம் செய்வாயென்றுதான் முதலிலேயே உன்னிடம் எதுவுமே சொல்லவில்லை. காலங்கடந்து குடியேறுவதென்பது இன்னும் சோதனைக்கட்ட, எழுத்துவடிவ, அணுகுமுறையில் தானிருக்கிறது. ஏனெனில் டெம்போரல் சேஞ்சஸ்/ பேரடாக்ஸ் என்கிற காலப் பயணத்தின் எதிர்மறை விளைவுகளையும், மாறுபாடுகளையும் இன்னும் உன்னிப்பாக ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் இங்கிருக்கும் அதிகாரவர்க்க மனிதர்களில் ஒரு குழு காலங்கடந்து குடிபெயர/ சிற்றுலா செல்ல முடிவெடுக்கும் வேளையில், அந்தக் காலகட்டத்தின் குடியுரிமை மக்களை, ஒருவேளை கொல்லலாம்; அப்படி நேர்கையில், அதில் எவரேனும் நம்முடைய மூதாதையராய் இருந்தால், ஏற்படும் விளைவுகள் பயங்கரமானதாய்ப் போகும்," என்றார்.
நோவா கேட்டாள், "அப்படி என்னதான் நடந்துவிடும்?"
ஜனா அதற்கு விடையாக, "நோவா, இன்னுமா புரியவில்லை? நம் வழிவழி முன்னோர்கள் இல்லாமல் போய், அம்மா, அப்பா இருவரும் இல்லையெனில் நானும், நீயுமே இல்லாமல் போகலாம். நாம் பிறந்ததே துடைக்கப் படலாம்," என்றான்.
அதற்கு நோவா வேடிக்கையாக, "ஒருவேளை ஜுராசிக் யுகத்தில் கலமானது இறங்கி, அங்கே ஒரு கொசுவைக் கொன்றால், மரபணு வகையில் அந்தக் கொசுவே நம்முடைய முன்னோர் என்று கூட சொல்வாய்ப் போலிருக்கிறதே," என்று நக்கலடித்தாள்.
இதனைக் கேட்ட அனைவரும் ஒருசேர வாய்விட்டு சிரித்தனர். இறுக்கமான சூழலகன்று ஓரளவு சுமுகமான நிலை ஏற்பட்டது. ஜூனோ உணவுக் குழல்களில் இருந்த உணவை ஒரு உணவுக் கலத்திலிட்டு வேதியியல் மாற்றம் செய்யப் புறப்பட்டாள். நோவாவும் முப்பரிமான கணினியுலக வேட்டை விளையாட்டில் குதிக்க ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தாள். தனித்து விடப்பட்ட ஜனாவும், ஆக்டாவும் ஆராய்ச்சி உடையணிந்து ஆய்வகத்தில் நுழைந்தனர். ஆய்வகத்தில், முறைப்படி இணைப்புகளையும், மின்னியல் தொடர்புகளையும், மின்னளவுக் கட்டுப்பாட்டுக் எந்திரங்களையும் வரிசையாக சோதித்துக் கொண்டே தங்கை நோவாவின், கொசு முன்னோர் நகைச்சுவையை சிந்தனையில் அசைபோட்ட ஜனாவின் மூளையிலொரு மின்னலடித்தது. உடனே எல்லாவற்றையும் அப்படியப்படியே போட்டுவிட்டு, ஆய்வகத்தின் மறுகோடியிலிருந்த ஆக்டாவிடம் ஓடினான். இறைக்க இறைக்க வந்தவனைப் பார்த்து ஆக்டா, "என்னவாச்சு ஜனா? எதற்காக இப்படி அதைக்க பதைக்க ஓடிவந்தாய்? கலந்துரையாட வேண்டுமெனில் தொலைநோக்கழைப்பு அனுப்பி இருக்கலாமே," என்றார்.
அதற்கு ஜனா, "நோவா வேடிக்கையாகக் கொசு முன்னோர் பற்றி சொன்ன கருத்தைப் பற்றி சிந்தித்த போது, என்னுடைய உள்ளத்திலேற்பட்ட விபரீதமான கருத்தைப் பற்றிய எண்ணங்களே என்னை இப்படி அலறியடித்துக் கொண்டு வரவழைத்தது. நோவாவின் கூற்றின்படி, நாம் ஒருவேளை ஜுராசிக் (அ) கார்பானிஃபரஸ் யுகத்திற்குப் போக, நம்முடைய காலக்கலத்தால் முடியுமா?" என்று வினவினான்.
ஆக்டா, "கி.பி. 2500-ஆம் ஆண்டுக்குப் போவது சாத்தியமெனில், கிமு. 150 மில்லியன் ஆண்டுக்கு முந்திய கார்பானிஃபெரசு(Carboniferous), டிரையாசிக்கு(Triassic), ஜுராசிக்கு(Jurassic), கிரட்டேசியசு(Cretaceous) ஆண்டுகளும் சாத்தியமே. இதிலென்ன ஐயம் உனக்கு? என்னைப் போன்றதொரு அறிவியலாளனான உனக்கு இந்த ஐயம் வரலாமா?"
"அப்பா, சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். உங்கள் காலக்கலத்தின் ஆணைத் தொடர்கள் உலகப் பெருமவைக்குப் பொறுப்பாகி, மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக உருவெடுக்கும் வேளையில், இன்று ஒளியாண்டு விண்கலப் பயணம் போல, காலப்பயணமும் மிகவெளிதான ஒன்றாய் ஆகுமென்று வைத்துக் கொண்டால், ஒருவேளை ஜுராசிக் யுகத்தில் இன்றைய மனிதர்கள் நுழைந்து, அங்கிருக்கும் உயிரொன்றை, அதாவது வண்ணத்துப் பூச்சி, கொசு, எறும்பு இவற்றில் ஒன்றை அவர்களறியாமல் காலால் நசுக்கிக் கொன்றால், அதன் காரணத்தால் பின்னாளின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும் பாதிக்கப்படுமே!"
இதைக் கேட்டு கடகடவென்று வாய்விட்டுச் சிரித்த ஆக்டா, "என்ன ஜனா, என்ன உளறுகிறாய்? டார்வினின் பரிணாம தத்துவத்தை சரியாக அறியவில்லையே நீ! அந்த வகை உயிரினங்கள் மரிக்கும் போது, அதனதன் வருங்கால சந்ததி தானே பாதிக்கப்படும்! மற்ற உயிரினங்கள் அல்லவே! எதற்கிந்த மனக்கிலேசம்?" என்று வினவினார்.
"அப்பா, நான் சொன்னதை நீங்கள் சரியாக உணரவில்லை. 150 மில்லியன் ஆண்டுகளென்பது மிக மிக பரந்த காலம். இதில் எல்லா உயிரினங்களும் சாகாமல், நோயின்றி வாழும் காலமென்பது மிகவும் குறுகிய விழுக்காடு என்பதால், ஜுராசிக் காலத்திலொரு சிறு ஓணானொத்த விலங்கு கொல்லப்படும் போதில், அவ்வினத்தின் ஒரேயொரு தொடர்ச்சங்கிலி அறுபடுவது மெய்யென்றாலும், இன்னொரு இன்றியமையாத விவரத்தை நீங்கள் மறந்துவீட்டீர்கள். அந்த விலங்கினத்தின் வழிவழி வாரிசுகள் மற்றேனைய விலங்கினங்களின் உணவாய் இருப்பதும் தடைபடுகிறதே! ஆகையால், மேலும் சில விலங்குகளின் பரிணாம வளர்ச்சில் மாற்றமடைவதும் நடக்குமல்லவா? 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இயற்கைக்கு மாறுபாடாக, வலிந்து நாம் ஏற்படுத்தும், ஒரேயொரு கொசுவின் மரணம் கூட, பரிணாம வளர்ச்சியில், மிகப்பெரிய, யாரும் எண்ணிப் பார்க்கவே முடியாத மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமல்லவா? டார்வினின் பரிணாம வளர்ச்சியில், மனித இனத்தின் வளர்ச்சியென்பது உள்ளடக்கம் என்பதால், நாமும் பாதிக்கப்படலாம் தானே?"
ஜனாவின் இந்தக் கோட்பாட்டைக் கேட்டதும், ஆக்டாவின் உள்ளத்திலும் நெருப்பை வாரியடித்தது போல உணர்ந்தார். ஜனாவின் கூற்று நூற்றுக்கு நூறு மெய்யென்பது அவருக்கும் புலப்பட்டது. அதற்கு அவர், "ஜனா நீ சொல்வது மிகச் சரியே! நான் தான் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டேன். ஆனால் காலத்தைக் கடந்து இடம் பெயரப்போவது நாம் நால்வர் மட்டுமே! அதுவும் கிபி. 2500ஆம் ஆண்டுக்கு மட்டும். அதன்பின் தேவைப்படும் போது, நம்முடைய வாரிசுகள், அவ்வப்போது காலத்தில் தகவான ஆண்டுக்கு மாறுவார்கள். இல்லையென்றால், இந்த இரகசியம் நம்முடனே புதைக்கப்படும். இதனை நான் உலகப் பெருமவைக்குத் தரவே போவதில்லை. இப்போது உன்னுடைய ஐயம் தீர்ந்திருக்குமே!' என்றார். இருவருமே ஒருசேர நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். காலக் கலத்தின் எல்லா வகை கணக்கீடுகளையும், இணைப்புகளையும் ஒருங்கே சரிபார்த்தப் பின்னரே, இருவரும் உணவருந்த பொது அறையில் நுழைந்தனர். அங்கே ஜூனோவைக் காணாத ஆக்டா, " ஏம்மா நோவா, அம்மா எங்கே போனாள்? எல்லாரும் சேர்ந்து தானே உணவருந்த நினைத்தோம்,"
"அம்மா, தன்னுடையப் பணித் தோழியை அவசரமாகக் காணச் செல்வதாய்ச் சொல்லிவிட்டுப் போனார்கள்."
ஆக்டாவும் எதுவும் சொல்லாமல், அப்படியா என்று தலையசைத்து விட்டு, உணவுத் தட்டையும், நீர் குப்பியையும் எடுத்துக் கொண்டு அவருடைய தனியறைக்குப் புறப்பட்டார். ஆனால், ஜனா மட்டும் நோவாவிடம், "உலகப் பெருமவையின் தலைவருடன் நெருக்கமான தோழியென்று அம்மா சொன்னார்களே அவருடைய வீட்டுக்கா?" என்று துருவித்துருவி கேட்டான். இரவு உணவை ஏற்கனவே முடித்திருந்த நோவா, "போடா, எனக்குத் தெரியாது. அம்மாவைக் காட்சிபேழையில் அழைத்துத் தெரிந்து கொள்," என்று அலட்சியமாய் சலிப்புடன் பதிலளித்துவிட்டு, மீண்டும் கணினியுலக வேட்டையுலா ஆட்டத்தில் மூழ்கினாள். ஜனாவுக்குத் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. உணவைத் தொடாமல், நேராக ஆக்டாவிடம் ஓடினான்.
"என்ன ஜனா, இப்போது புதிதாக என்னத்தைக் கிளப்ப வந்திருக்கிறாய்?"
"அம்மா பார்க்கப் போயிருப்பது ஒருவேளை உலகப் பெருமவையின் தலைவருடன் நெருக்கமான தன்னுடைய சக பணித்தோழி என்றால், இரண்டும் இரண்டும் நான்கென்பது உங்களுக்குப் புரியவில்லையா? காலக் கலத்தின் உண்மையை உலகப் பெருமவை அறிந்தால், என்னால் எண்ணிப் பார்க்கவே பயமாய் இருக்கிறது."
"போடா, போய் வேறு வேலையிருந்தால் பார். ஜுனோ உலகப் பெருமவையில் பணியாளி என்பதை விட, உங்களிருவருக்கும் அன்னை என்பதை விட, என்னுடைய அன்பான துணைவியென்பதை மறந்து விட்டாயா? யாரை ஐயப்படுவது என்பதில் ஒரு வரைமுறை வேண்டாமா? போய் உணவருந்திவிட்டு, ஓய்வறையில் ஒரு அணுத் தூக்கம் போடு. எல்லாம் சரியாகிவிடும். சற்றே ஓய்வெடுத்த பின், எனக்கு ஆய்வகத்தில் சில பணிகள் உள்ளன."
எல்லா ஐயங்களையும் மூட்டை கட்டிவைத்த ஜனா, வேண்டா வெறுப்பாக உணவருந்துதல் என்று எதோ கொறித்துவிட்டு, ஓய்வறையில் அணுத் தூக்கம் போட்டான். தூக்கத்திலிருந்த ஜனாவை திடீரென்று, பெரும் களேபர சத்தமும், பெரிய கூச்சல்களும் உலுக்கி எழுப்பின. தள்ளாடிக் கொண்டு வெளியே வந்தவனை, அறைமுழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, நீட்டிக் கொண்டிருந்த லேசர் படைக்கலங்கள் முறைப்பதைக் கண்டு அப்படியே பயத்தில் உறைந்து போனான். கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தால், அம்மா, நோவாவின் பக்கத்தில் குறுந்தாடியுடன் வெள்ளுடை அணிந்த மனிதர் ஒருவர் நிற்பதைக் கண்டான். விளக்கத்திற்காக, அம்மாவின் முகத்தை ஏறிட்ட ஜனா, "அம்மா, யாரிவர்கள்? என்ன நடக்கிறது இங்கே? எதற்காக இப்படி ஆயுதங்களை ஏந்திக் கொண்டு நம்முடைய ஓய்விடத்தில் நிற்கிறார்கள்?" வினாக்களை அடுக்கினான். அம்மாவின் முகம் கல்லாகவே மாறியிருந்தது.
அம்மாவுக்கு பதிலாக அந்தக் குறுந்தாடி, "32312414ஜன்! காலப்பயணமென்பது இப்போது அவையுடமை ஆக்கப்பட்டு விட்டது. உலகப் பெருமவைக்கு அறிவிக்காமல், காலப்பயண ஆராய்ச்சியை மேற்கொண்டதாலும், கைது செய்ய வரும்போது காவலர் ஒருவரைத் தாக்கியதாலும், உங்கள் குடும்ப உள்தலைவரான 24147987ஆக்ட், துடைக்கப்படுவதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஆராய்ச்சி ஆணைத் தொடர்கள், ஆய்வகக் கருவிகள், அனைத்தையும் பெருமவைக் கைப்பற்றி இருக்கிறது. குடும்ப வெளித்தலைவரான 32316566ஜுன் உலகப் பெருமவைக்கு இதுபற்றிய சேதியளித்ததால், அவரும், மற்ற உறுப்பினரான நீங்கள் இருவரும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப் படுகிறீர்கள்," என்றான். இதைக் கேட்டதும் ஜனா, " அம்மா, நீங்கள் செய்த காரியத்தின் பலனைப் பார்த்தீர்களா? அப்பா துடைக்கபடப் போகிறார். அவரில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?" என்று அலறிக் கொண்டே ஜூனோவை நோக்கிப் பாய்ந்தான். குறுந்தாடியின் இடுப்பிலிருந்த குறுலேசர் படைக்கலன் பளிச்சென்று சீற, கரிக்கடையாய் சரிந்த ஜனாவின் உடலைப் பார்த்து, பாறையாய் உறைந்தார்கள் ஜூனோவும் நோவாவும்.
அடுத்து நடந்தவை அனைத்தும் ஒரு கதையாய்ப் போனது. ஜூனோவும், நோவாவும் சிண்ட்ரெல்லாவுக்கு உலகப் பெருமவையின் செலவில் குடியேற்றப்பட்டு, வசதியான ஓய்விடமும் வழங்கப்பட்டது. பெருமவையின் அறிவியலார்கள் ஆக்டாவின் ஆணைத் தொடர்களையும், கருவிகளையும், ஆய்வுக் கூறுகளையும் பரிசீலித்து, காலந்தாண்டி அனைவரும் பயணம் செய்ய தேவையான காலக்கலங்களை உருவாக்கினர். ஆனால் காலப்பயணம் என்பது உரிய உயர்தொகை செலுத்தினால் மட்டுமே அனைவர்க்கும் சாத்தியமென்றானது. ஆனால் ஜனாவின் "பரிணாம மாறுபாட்டுக் கொள்கையை" அறிவுறுத்த எவருமே இல்லை. ஐந்தாண்டுகள் கடந்தபின்னர், ஒருநாள் ஜூனோ, நோவா இருவரும், சிண்ட்ரெல்லாவில் இருந்து ஜுராசிக் யுகத்திற்கு ஒரு காலச் சுற்றுலா போக, பெருமவையில் விண்ணப்பித்து பயணச்சீட்டு எடுத்தனர். ஜுராசிக் யுகத்திற்குக் கலம் வந்தபின்னர், பயணிகளுக்குக் கலத்தின் தலைவர், ஒலிபெருக்கியில் விதிகளை வரிசையாக எடுத்துரைத்தார். "எவரும் கலத்திலிருந்து இறங்கக்கூடாது; பூ/ செடி/ இலைகளைத் தொடக்கூடாது. கலத்தின் வாசலில் இருக்கும் கண்ணாடிக் கதவுகள் வழியாக மட்டுமே வெளிக்காட்சிகளைக் காண வேண்டும். மீறுபவர்கள் உடனே துடைக்கப்படுவார்கள்"
ஜூனோவில் உள்ளத்தில், நிலவில் முதல் மனிதன் கால்பதித்தைப் போல, தானும் ஜுராசிக் யுக பூமியில் தானும் முதல் கால்பதிக்க வேண்டும் என்று பேராசை எழுந்தது. நோவாவுக்கு இந்த யோசனை அறவே பிடிக்கவில்லை. தான் ஜுராசிக் கால மண்ணில் கால் பதிக்க வரவே மாட்டேன் என்று கூறிவிட்டாள். ஜூனோ தன்னுடைய உடலழகாலும், தன்னிடமிருந்த கிரிடிட்டாலும் உலகப் பெருமவையின் தலைவருடனான நெருக்கத்தாலும், காலக்கலத்தின் தலைவரைத் தாஜா செய்து, இரகசியமாக ஜுராசிக் மண்ணில் காலடி பதிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டாள். ஆனால் காலம் விதித்த கட்டளை என்பது வேறாக இருக்கப் போவதை அவள் அறிவாளா? இதைத்தான் விதி என்பார்களோ?
எவருடைய துணையுமின்றி, இரகசியமாக ஜூனோ மட்டும், கலத்தின் தலைவர் அளித்த விசேடமான உடை, கையுறை, காலணி இவற்றுடன், எவரும் அறியாமல் முதன்முதலாய் ஜுராசிக் யுகத்து மண்ணில் காலடி பதித்தாள். காணுமிடமெல்லாம் பசுமை, விசித்திரமான தாவரங்கள், விநோதமான குரலொலிகள், கூச்சல்கள், ஓசைகள் அவளுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. மெல்ல முன்னோகி நகர்கையில், காலடியில் முறுக்முறுக்கென ஏதோ நொறுங்கிய உணர்வு. குனிந்து காலைத் தூக்கிப் பார்த்தாள். ஒரு ஓட்டுடலி நத்தையின் நசுங்கிய உடல் அவளுடைய காலணியில் ஒட்டிக் கொண்டிருந்தது. கீழே கிடந்த குச்சியால் அதனை வழித்து வீசிவிட்டு, சற்று நேரத்துக்குபின் வந்த வழியே இரகசியமாகக் கலத்திற்குத் திரும்பினாள். தீவிர நோயெதிர்ப்பு கதிர்வீச்சுச் சோதனைக்குட்பட்ட பின்னர், குளித்து முடித்து அவளிருக்கைக்குத் திரும்பினாள். காலக்கலம் அவர்கள் காலத்துக்கே திரும்பத் தொடங்கியது. அருகிலிருந்த நோவாவிடம் வழிநெடுக, தான் கண்ட காட்சிகளை ஜூனோ அளந்து கொண்டே வந்ததால், காலக்கலத்தின் குலுங்கல்களும், ஏற்ற, இறக்கங்களும் அவளுக்கு உறைக்கவே இல்லை.
காலக்கலம் கீழிறங்கியதும், நோவா போட்ட அலறலால், திசை திரும்பிய ஜூனொவின் கண்களில் ஒரு மின்னல் பளீரிட்டது. காலக்கலம் இறங்கிய இடம், நோவா, பயணிகள், கலத்தின் தலைவர், பணியாளிகள் அனைவருமே இருந்த இடமின்றி காணாமற் போயிருந்தனர். தன்மீது இடிபோன்ற சாட்டையடி ஒன்று விழுந்ததை உணர்ந்தாள். யாரென்று அண்ணாந்து பார்த்தால், ஊர்வன இனத்தின் ஓணான் முகமும் வாலும் கொண்ட ஒரு விசித்திரமான கோர உருவம், கையிலிருந்த சாட்டையை மீண்டும் இடிபோல சொடுக்கியது. ஐயோ என்று அலறியவளின் வாயிலிருந்து சொற்கள் வரவில்லை, "ஙொ .. ஙொ.. ஙொ" என்ற பெருங்குரல் மட்டுமே எழுத்தது. குனிந்து தன்னைப் பார்க்கையில், தனக்குப் பூரானைப் போல பல கால்கள், வாயிலே குதிரைக்குக் கட்டியது போல, கடிவாளமும், நுரையும். தான் யாரென்ற நினைவுகள் கூட சறுக்கிக் தேய்ந்து கொண்டே........
தெய்வம் நின்று கொல்லுமோ??????
முற்றும்.................
=====================
இராச. தியாகராசன்