ஞாயிறு, 26 மே, 2024

திசை மாற்றிய திருப்பங்கள்...

என்னுடைய அருமை நண்பர், பொதுமையார்வலர், இனிய பாவலர், இன்சொல்லாளர், அமரர் திரு இரா. நாகசுந்தரத்தின் தலைமையில், அறிவியல் தொழில்நுட்பத் துறை-புதுதில்லி அறிவியல் இயக்கமும், புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து 09/04/2005இல் நடத்திய, 2004ஆம் ஆண்டுக்கான அறிவியல் விழிப்புணர்வுப் பாவரங்கில், நான் பங்கேற்று வாசித்தளித்தப் பாடலிது. பாடலுக்கான தலைப்பு, " உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்." தலைப்பைச் சற்றே மாற்றி, "திசை மாற்றிய திருப்பங்கள்," என்று இங்கே பதிகிறேன். இணைத்திருக்கும் படம், பாடலளித்தமைக்காக எனக்களிக்கப்பட்ட சான்றிதழ். ====================================

====================================
தமிழ் வணக்கம்
=============== பாரதியும் பகர்ந்த பறப்புமுணர் வண்டியொடு தூரவெளி இயக்கத் தொலைகலம் - பாரதமும் அண்டவெளி தாண்டி அனுப்புங் கனவுகண்ட வண்டமிழன் சொல்லுக்கே வாழ்த்து! அவை வணக்கம் ================ ஒளிர்ந்திடும் இலக்கியம் ஓங்கிடத்தான் .....ஒண்டமிழ் இலக்கணம் தாங்கிடத்தான் தளர்வறத் தனித்துவம் கொண்டிலங்கும், .....தகவிலாக் பாவரங்க மேடையில், பளிக்கெனப் பளிச்சொளி வீச்சுடனே .....பைந்தமிழ் அணங்கவள் வாழ்த்துடனே வளங்களை வழங்கிடும் வள்ளலைப்போல் .....வளர்ந்திடப் பொலிந்திட வாழ்த்துதுமே! தலைவர் வணக்கம் =================== நாவலர் நண்பராம் நாகசுந்த ரப்பாவல, பூவாசம் தூவிடும் பொன்தமிழ் மொழியிலே, தேவாரப் பாக்களாய் தித்திக்கக் கவிபேசி, ஆவேசம் பொங்கிடும் பொதுமை ஆர்வல, பாவூறும் பாவரங்கை பக்குவமாய் ஆள்வதுடன், நாவூறும் நற்றமிழை நாளெல்லாம் காப்பீரே! திசை மாற்றிய திருப்பங்கள்
(நிலைமண்டில அகவற்பா)
===========================
திசையதை மாற்றிய திருப்பம் எதுவென அசையுடன் சீரிழை அகவலின் வரிகளில் திருநிகர்க் கவிஞரின் தீந்தமிழ் மன்றிலே அருளதன் அரசனும் அன்புடன் தருகிறேன்! உலகில் அனைவரும் உய்த்தே உணரவே, பலப்பல மாந்தரும் பன்னரும் வழிகளில் விதவித மாகவே விந்தை அறிவியல் புதுப்புதுப் புனைவுகள் பாங்குறப் படைத்தார்! மாடியி லமர்ந்து மண்டை குலுக்கி தாடியைத் தடவித் தேடினேன் நினைவில்; உலகின் திசையை உடனே மாற்றிய கலக்கும் படைப்புக் கருவெது வென்றே! சட்டென நினைவிற் தட்டிய பொறிகளைப் பட்டெனப் பகர்வேன் பாங்காய் இங்கே! முன்னிலை வகித்தது மூண்டெழு நெருப்பு; பின்னர் வரிசையில் பற்பலக் கருவிகள்! கண்ணைக் கட்டும் காட்சிப் பெட்டியில், எண்ணங் கவரும் எழிலார் விழியங்கள்; சுண்ண வண்ணமாய்த் துவைக்கும் எந்திரம்; விண்ணைக் கிழிக்கும் விண்வெளி ஊர்தி; தண்ணீ ரிலோடும் தரமிகு நாவாய்; வண்ணத் தாளிலே வழுக்குமின் அச்சு; எண்ணும் போதிலே எழுதும் தூவல்; மண்ணைப் பிளக்கும் மாபெருந் துரப்பணம்; எண்ணெய்த் திரியே இல்லா விளக்கு; கண்ணி மைப்பில் காரியம் ஆற்றும் நுண்ணலைச் சமையல் மின்விசை அடுப்பு; எண்ணிம ஒளிபடம் எடுக்கும் பேசிகள்; அகமகிழ் தனைவரும் அகிலம் சுற்ற, புகையிலாப் புதுமைப் பொலியும் வண்டிகள்; முத்தமிழ்ச் சொல்லால் மொழிய இயலா அத்தனை அறிவியல் அற்புதப் படைப்புகள்! ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வகையில் இவ்வுல கின்திசை ஈதெனச் சொல்லிய உன்னதப் படைப்பு; உண்மை உண்மை! ஒன்று குறைவோ? இன்னொன் றுயர்வோ? பறக்கும் பறவையாய்ப் பாமரர் வானில் சிறகை விரித்துச் சிந்தனை சிலிர்க்க இருபதாம் நூற்றின் இன்றையத் திசையை விரைவாய் வென்ற மின்னணுத் திருப்பம்! எழுத்தும், படமும் இன்னிசைப் பாடலும், குழுவில் பேசிடும் கூட்டு மடலிலே எழிலுறக் காட்டும் இலக்கிய இலக்கணம், முழுதும் விரிக்கும் முடிவிலாத் திருப்பம்! பாரதி கனவாய்ப் பார்த்த வரிகளைத் தாரக மொழியாய்த் தரணியி லேற்றே சொற்களின் அடுக்குச் சுருக்கில் உலகைச் சுற்றிடும் விந்தையாம் சுந்தரத் திருப்பம்! நாட்டின் நடப்பும் நாமே நம்மின் வீட்டில் இருந்தே விரைவாய்க் காண, கவிதை வனைய; கதைகள் புனைய; சிவிகை ஏற்றியே செல்லும் திருப்பம்! அகர முதலியில் அனைத்தும் எளிதில், சகலரும் தேடிச் சட்டென கிடைக்கக் கற்பகத் தருவாய்க் கணத்தில் கொடுக்கும் சொற்பதப் படைப்பின் அற்புதத் திருப்பம்! உண்மை காணீர் உலகி லின்றே; திண்ணம் சொல்வேன்; திரும்பச் சொல்வேன்; இன்பந் தந்திடும் இணைய வலைதான் இன்றைய உலகின் இணையிலாத் திருப்பம் கூடெழிற் குழுமடல் கோதறு தமிழிலே; தேடலும் கூடச் செந்தமிழ் மொழியிலே! வலையின் பதிவுகள்; வண்ண இதழ்கள்; வலையக நூல்கள்; ஒருங்குறித் தளத்திலே! இணைய மென்னும் எழில்மிகுப் பின்னல் துணையது கொண்டு சொற்றமிழ் அறிஞர் மின்னியற் பாடமும் மேலும் கற்றே அன்னிய நாட்டிலும் அவர்க்கே சொல்கிறார்! நறுக்கி வெட்டி நல்லாணி யதனால் கிறுக்கிக் கட்டிக் கீறிய பனையை வெள்ளெறும் பரிக்க, மீதியும் தொலைத்த, வள்ளல் பாரியின் வாரிசும் நாம்தான்! பத்தொன் பதிலிரு குண்டல கேசி, செத்தொழிந் திட்ட சீர்வளை யாபதி, சிங்க தமிழன் சிறப்பை யுரைத்தவை; எங்கே போயின? எத்தனை இழப்பு! எங்கள் குமரி எந்தமிழ்க் கிழவி வங்கக் கடலில் வாரியே கொடுத்த தங்கத் தமிழின் தரமுயர் இலக்கியம் எங்கே கிடைக்கும்? எவர்தாம் தருவார்? இன்றி ருக்கும் இலக்கிய மீதியை, இன்றையக் கணினி இளையோர் முனைந்தே, மின்னிதழ் வடிவில் மின்தள மேற்றியே, பொன்னாய் நயம்படப் போற்றிடல் வேண்டுமே! ==================================== இராச தியாகராசன். பிகு: ==== பறப்புமுணர் வண்டி = ஆட்டோ பைலட்டு வண்டிகள், கனவுகண்ட வண்டமிழன் = அப்துல் கலாம், பளிக்கென = பளிங்குக் கல்லென, அருளதன் அரசன் = தியாகராசன், நாவாய் = கப்பல், காட்சிப் பெட்டி = தொலைகாட்சிப் பெட்டி, விண்வெளியூர்தி = விண்ணூர்தி, தூவல் = பேனா, துரப்பணம் = துளையிடுங் கருவி, எண்ணெய் இல்லா விளக்கு = மின்விளக்கு, நுண்ணலை மின்விசை அடுப்பு = மைக்ரோவேவ் அவன், எண்ணிம படப்பேசிகள் = டிஜிடல் கேமரா போன், புகையிலா வண்டி = மேக்னடிக் இருப்பூர்தி, கூட்டுமடல் = மடற்குழுமங்கள், இணையவலை/ இணையப் பின்னல் = இன்டர்நெட்டு, மின்னிதழ் = எலக்ட்ரானிக் மேகசின், மின்தளம் = வலைதளம்.