ஆழியின் சீற்றம் வந்தநாள் காலையில், ஒரு பாவரங்கில் இருந்தோம். புதுச்சேரி ஆழிநீர் உள்வாங்கியதைக் கேள்வியுற்றதும், உடனே கடற்கரைக்கு ஓடிச் சென்று, ஆழியது நீள உள்வாங்கி இருந்ததையும், சேற்று மண்ணில் சேல்கள் துடிப்பதையும் கண்டோம். இறங்கி நடக்கலாம் என்று தோழர்கள் சொன்னதை நானேற்கவில்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக என்னுளம் பதறியது. உள்வாங்கிய நீர் மீண்டும் திரும்பும் என்று கூட தோன்றியது. அன்று மாலையில் நான் நினைத்தது மெய்யானது. ஆனால் அதைவிடப் பேரிடர் சேதியாக இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை நாடுகளில் ஏற்பட்ட பேரழிவும், நாகையின் சின்னாபின்னமும் வந்து உலுக்கியது. அன்று நானெழுதிய பாடலிது.
===================================
===================================
ஆழியே கேளாய்....
==================
வங்கக் கடற்கரை வாழும் எம்மின;
மங்காப் புகழ்சேர் மறவர் தமிழினச்
சங்காய் முழக்கிய தமிழர் மாநகர்!
எங்கு மோடிய நாவாய் நிறைந்தே
அலைகட லோரம் அழகின் உருவென
கலைகளும் புதுக்கியக் காவிரிப் பட்டினம்!
எத்தனை முறைதான் எழுந்தே பொங்கி,
முத்தாம் தமிழின் மேன்மை ஏடுகளுன்,
பானை வயிறே புடைக்க எடுத்தே,
ஆனைப் பசியற அள்ளித் தின்றாய்?
முன்னம் முடியா இலக்கியந் தேடியா,
இன்ப வாழ்விலுங் குளிர்ந்த சாவிலும்,
விரிகடல் நோக்கி விழியினைப் பதிக்கும்,
பரதவ மக்களும் புதைந்து போகவே,
சுடர்விழி மழலைகள் சிதைந்து போகவே,
விடியலில் மீண்டும் வெடித்தே எழுந்தாய்?
தாழாத் தமிழின் மேன்மை மறந்த,
சூழும் இருளாய்ச் சிந்தனை நிறைந்த,
கட்டும் அறுந்த கட்டு மரமென,
கெட்டே அழியும் குணமில் தமிழர்
வாழக் கண்டோ வெகுண்டே எழுந்தாய்?
கோழைக் கடலே தவறு செய்தாய்;
நெடித்தே எழுந்துன் நெடுந்தி ரையாலே
கடிதில் கொன்றது குற்ற மற்ற
பிஞ்சுகள்; பெண்டிர்; உன்றன் மக்கள்!
கெஞ்சி உனையே வேண்டு கின்றேன்!
தெண்டிரை சூழ்ந்த புவிய கத்தையே,
வண்டமிழ் வாழும் தென்ன கத்தையே,
வென்றே அழிக்க எழுந்தே சீறிநீ
என்றுமே தொடாதே! என்றுமே தொடாதே!
=================================
இராச தியாகராசன்
பிகு:
====
நாவாய் - கப்பல், புதுக்கிய - புதுப் புனைவாக்கிய
மன்பதை - உலகு, குணமில் - பண்பில்லா,
நெடுந்திரை - நெடிய அலை, கடிதில் - விரைவில்,
தெண்டிரை - தெள்ளிய அலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக