புதன், 19 ஜூன், 2024

என்றன் பேராசை....

பிறந்தவர் யாவரும் ஒருநாள் வந்த இடத்துக்கே செல்ல வேண்டுமென்பது எல்லாம் வல்ல வித்தகி விதித்துவிட்ட நீதி! நானும் செய்ய வேண்டிய கடமைகளை இயன்றவரை செய்துவிட்டேன்; அந்தகனின் அழைப்புக்காய்க் காத்திருக்கிறேன்; ஆசையும், ஆவலுமில்லாத மனிதரெவர்? இற்றைக்கென்றன் ஒரே ஆசை எந்தை போலவே எவருக்கும் துன்பமில்லாத, எவர் கையையும் எதிர்பாராத, எவர் தயவையும் நாடாத, தன்னிறைவான இறப்பு மட்டுமே. நேற்றும், இன்றும் அவர், இன்றோ நாளையோ நான்!  என்றன் எந்தை திருமிகு இராஜகோபால சர்மா வாழும்போதில் கூட ஒரில்லறத் துறவியென வாழ்ந்து, 1987ஆம் ஆண்டு, அவருடைய 69ஆவது அகவையில் எவருக்கும் துன்பந் தராத வகையில், இறையடி நீழலில் இளைப்பாரச் சென்றார்.  அப்படியொரு முடிவை வேண்டுகின்ற இந்தச் சிறு பாவலனின் பேராசை, ஒரு கவிதையாய் உருவெடுத்தது.
=======================================













=======================================
என்றன் பேராசை....
(கொச்சகக் கலிப்பா)
====================
சின்னஞ்சிறு அகவையில்நான் சிந்தையும் சிலிர்த்திடவே
என்தந்தை கைக்கோத்து எங்குமே சென்றதில்லை;
கன்னத்தைக் கிள்ளுமந்தக் கட்டிமுத்தம் பெற்றதில்லை;
தன்கரத்தால் கட்டிலிட்டந் தாலாட்டும் உற்றதில்லை!

அவரென்னை அணைத்தென்றும் அறிவுறுத்தும் நூல்படித்து, 
நவரசமாய் நற்கதைகள் நாளெல்லாம் சொன்னதில்லை;
தவறிழைத்தால் தடிகொண்டு தண்டித்தும் பார்த்ததில்லை;
கவலையதால் கண்சிவந்து, கசப்பிழியச் சோர்ந்ததில்லை;

சிவன்மால், சக்தியென்றும், திருவிழாத் தேரென்றும்,
அருங்கவிதை, அண்டவெளி, ஆகாயம், ஆன்மிகம்,
வருங்காலம் என்றுநான், வானத்தை ஆளுமந்தக்
குருகெனவே பறக்கமனக் கோபுரங்கள் காட்டவில்லை;
 
கண்களிலே வைத்தென்றுங் காக்கின்ற அன்புணர்வால்,
எண்ணமதில் என்றென்று மிலங்குகின்ற நேர்மையதால், 
உண்மையுடன் ஓர்ந்துளமே உணர்கின்ற இறையுணர்வால்,
மண்ணகத்தில் தம்மைந்தன் வளம்வாழ நின்றுழைத்தார்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்ந்திங்கே, 
நாவினிக்கும் அறுசுவையை, நல்லதிரைப் படங்களையும்,
பூவுலகின் இன்பநிலைப் பொருள்களையும் புறந்தள்ளித் 
தேவியவள் சேவடியைச் சீந்தியவர் வாழ்ந்திருந்தார்!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள், 
கோலத்தைத் தான்வணங்கிக் காலமெலாம் நானிங்கே, 
ஞாலத்தில் மெய்மையெனும் ஞானத்தைப் பெற்றுவிட
சீலமுடன் சிந்தித்தே சிறப்புடனே எனைவளர்த்தார்!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தழிக்கும், 
இயல்பினையே எரிக்கின்ற எண்ணமதை வேரறுக்க, 
வியனுலகைக் காக்கின்ற வித்தகியைத் தான்வணங்கி, 
நயந்தொழுகும் நேர்வழியில் நாடோறும் நடந்திறந்தார்!

வருமிறுதி காலத்தில் மற்றவரின் துணையின்றி, 
கருக்காக மருத்துவக் களம்கண்டே சாய்ந்துவிட்ட, 
நெருப்புநிகர் உளவுறுதி நேசரவர்; அன்றாங்கே
மருத்துவரும் வியந்துவிட்ட மாவுறுதி மறவரிவர்!

ஒன்றுமட்டும் நானறிவேன் உண்மையென இப்புவியில்;
இன்றுவரை மெய்யதுவா யெண்ணுகிறேன் என்னுளத்தில்;
தன்னிருப்பைத் தன்பணியைத் தன்முடிவை என்னுளத்தில்
என்முடிவாய் ஏற்றிவிட என்றுமவர் நினைத்ததில்லை;

கையூட்டுக் காசுபணம் கறைபடியா வாழ்வினிலே, 
செய்தவற்றை என்வாழ்விற் றிருத்தமாய்ச் செய்துவைத்து, 
வையகத்தில் வாழ்கையிலே மலரிலைபோல் வாழ்தவென்றன், 
ஐயனைப்போ லென்முடிவும் அமைந்திடத்தான் பேராசை!
==========================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக