சனி, 13 ஜூலை, 2024

பெண்ணும் பேனாவும்...

2013ஆம் ஆண்டளவில், என்றெண்ணுகிறேன்; கவிஞர்திரு பஃருதீன் இப்னு ஹம்துன் (Fakhrudeen Ibnu Hamdun), தம்மிழையில் "பேனாவும் பெண்ணாமென் பேன்," என்கிற சிலேடையைப் பகிர்ந்தார். அவ்விழையில் நானும் "பெண்ணென்றும் பேனா புகல்," என்கிற ஈற்றடியில் சிலேடை வெண்பாவொன்று பகிர்ந்தேன்.
====================================








====================================
பெண்ணென்றும் பேனா புகல்.
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
=========================
கையடங்கும் அன்பதுவால், காண்பவற்றில் தோன்றியே
மெய்யுருவாய் என்னைநீ வெல்வதனால் - மைந்தனுக்காய்ப் 
பண்ணெழுதிக் காக்கவைக்கும் பாவலன்தீந் தூவலன்பே!
பெண்ணென்றும் பேனா புகல்.
========================
இராச தியாகராசன்.

பிகு:
====
பெண்ணும்/ பேனாவும் அன்பினால் கையங்கும்; காணும் காட்சிகளில் மெய்யுருவாய்த் தோன்றியே என்னைக் காதலால்/ கவிதையால் வெற்றி கொள்ளும்; பெண்ணுடன் பேசுகையில்/பண்ணெழுதுகையில் மைந்தனையும் காக்க வைக்கும்; தூவும் மெல்லன்பால்/ எழுதும் மசித்தூவலால் உளங்கவரும். (தீந்தூவல் = தீந்தா+தூவல் = மசி+பேனா)

கவிஞர் ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் எழுதிய சிலேடை வெண்பா...
=============================================================
மையிட்டுக் கொள்ளுதலால் மெய்த்தோற்றம் காட்டுதலால் 
கைப்பிடித்த தன்னவரின் காரியத்தை ஆற்றுதலால்
காணா உலகினை காட்டித் தருதலால்
பேனாவும் பெண்ணாமென் பேன்!
                             - ஃபக்ருதீன் இப்னு ஹம்துன்
எப்போதோ ஒருமுறை பேரா பசுபதி (தொரந்தோ) (Pas Pasupathy), "செய்யுளும் சிசுவும்" என்ற தலைப்பில் சிலேடை வெண்பாட்டொன்றைப் பகிர்ந்தார்;  அவரது அடியொற்றி இந்தச் சின்னவன் வனைந்த வெண்பாயிது.
=================================







வண்ணப்பாவும் மழலையும்....
(இருவிகற்ப நேரிசை சிலேடை வெண்பா)
=================================
அன்னமெனச் சின்னஅசை யாருஞ்சீர் நன்னடையால், 
புன்மையிலா மெய்யொளிரும் புத்தழகால் - கன்னலனை
ஒண்மைமிகு மென்மழலை ஒண்டமிழின் ஓசையதால், 
வண்ணாப்பா நேராம் மகவு.
=======================
இராச. தியாகராசன்

பிகு:
====
அன்னம் போல சின்னதாய் அசைவதால், அருமை சீர்நடைப் புத்தழகின்  கவர்ச்சியால், கன்னற்சுவை இன்மழலை ஒண்டமிழ் ஓசையால், வண்ணப் பாட்டும் மகவும் ஒன்றெனக் கொள்வீர். வண்ணப்பா - செய்யுளோத்தின் ஒரு வகை. மகவு - மழலை.
வாள்முனையை விடப் பேனாவின் கூர்மை வல்லமையானது என்கிற சொலவடைக்கேற்ப, கவிதை வரிகளென்பது வாள்முனையை விட வல்லமையானது என்கிற பொருளில், ஒரு விகற்ப சிலேடை வெண்பாட்டொன்றை எப்போதோ எழுதினேன். மழலையும் மடிக்கணினியும், பெண்ணென்றும் பேனா, என்று கூட சில பாடல்கள் வனைந்தேன்.  இயன்றால் தேடியெடுத்துப் பகிர்கிறேன்.
===================================
===================================
வாளும், பாட்டும்......
(ஒரு விகற்ப சிலேடை இன்னிசை வெண்பா)
===================================
வார்ப்பால் உருவாகி, மாழையின் ஒண்மையுடன், 
கூர்ப்பால் உயிரெடுத்துக்* கோதுகளைத் தீய்த்துநிதம்,
பார்ப்போ ருளமதிரப் பாதகத்தைச் சாய்த்துவிடுஞ் 
சீர்ப்பாட்டும் வாளெனச் செப்பு.
==============================
இராச. தியாகராசன்

பிகு:  
=====
மாழை = உலோகம், வார்த்தல் = வடிவமைத்தல், 
ஒண்மை = பளபளக்கும் ஒளிர்மை.
கோது = குற்றம், செப்பு = சொல்.
*அறப்பாட்டு அழிக்கவும் செய்யும்.

கோழிக் குஞ்சு

 நான் ஒருமுறை கவிஞர் வத்திராயிருப்பு கவுதமனின் கவிதையொன்றில் ஒன்றி, அதன் விளைவாக சிலேடை வெண்பாட்டொன்றை நவம்பர், 2015ஆம் ஆண்டு வனைந்தேன். இன்னும், மடிக்கணினியும் மழலையும், பெண்ணென்றும் பேனா, வாளும் பாட்டும்.  இப்படிச்  சில சிலேடை வெண்பாக்களும்  எழுதியிருக்கிறேன்.  தேடியெடுத்துப் பகிர்கிறேன்.  இந்த மீள்பதிவு என்றன் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த தோழமைகட்காக.  கவிஞர் கௌதமனின் கவிதையை விரைவில் பகிர முயலுகிறேன்.
=======================================








=======================================
கைபேசியும் கோழிக் குஞ்சு...
(இரு விகற்ப நேரிசை சிலேடை வெண்பா.
=================================
தாய்போல் விரணைக்கச் சார்ந்திருப்பால், தேடிக்கை
பாய்ந்தெடுக்கக் கையடங்கும் பாங்கதுவால் - சேய்போல
நய்நய்யென் றன்புடனே நச்சரிக்கும் கொக்கரிப்பால் 
கைபேசி யுங்கோழிக் குஞ்சு.
======================
இராச தியாகராசன்

மேலிருக்கும் என்றன் சிலேடை வெண்பாட்டுக்கு அடிப்படையான 
கவிஞர் கௌதமனின் பாடல்....
==============================
இருள் கவ்வும் பொழுதில்
விரட்டி வந்த பெருமழைக்குப் பயந்தோடி
சிதறிக் காணாதுபோன கோழிக் குஞ்சொன்றை
காதுகள் தீட்டி, உதடுகள் குவித்து
பேக் பேக் பேக்கென
தாய்க் கோழியாக உருமாறியழைத்தபடி
கோழியின் கால்பட்ட திசையெங்கும் பயணித்து
எங்கோ ஓர் திசையில் மெலிதாய்
நடுக்கத்தில் நழுவும் கேவலாய்
அடர்ந்த முட்புதரினுள் குஞ்சின் குரல் கேட்க
மெல்லக் கரம் விட்டு துழாவி
கையில் சிக்கிய ஈர இறகு பட்டு
உள்ளமெங்கும் மகிழ்ச்சி மின்னலிட
லாவகமாய் முள் கிழித்திடாமல் தூக்கி
தலை கோதி தாயிடம் சேர்த்த நினைப்பு...
கைமறந்த செல்பேசி தேடிக் கிடைக்கையில்!
====================================
- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
===================================

வாராகியே வாராயோ....

அருள்மிகு வாராகியம்மையைப் பற்றியொரு பாடலியற்ற வேண்டுமென்பது என்றன் நெடுநாள் ஆவல்.  இன்று அஃது நிறைவேறியது.  வாராகியம்மையே வேதனையில் வாடுமெங்களை விரைந்தணைத்து, சழக்குகளை/தீமைகளை/ கயமைகளைக் கனன்றெரிக்க, எடுத்தெரிக்க, நெருப்பேந்தி, எமைக்காக்க வாருமம்மே!
=======================  

==================================
வாராகியம்மே காக்க வாராயோ?
==================================
இழந்துவிட்ட காலத்தை ஈங்குதினந் தேடியலைந்தே, 
அழுதரற்றி அகந்தையிலே அறமதனை மறந்துவிட்டு, 

வழங்கிவந்த வாழ்விதனை வாழ்கின்ற வேதனையைக் 
கழலொலிக்க வாராகி கனன்றெரிக்க வாருமம்மே!

நட்புறவை நல்லவரை நற்பண்பை மறந்துவிட்டுக் 
கெட்டமனக் கோட்டைகட்டிக் கேடதனில் முங்குகின்ற, 
வெட்டவெளி வீணரவர் வெறும்பேச்சை மிதித்தழிக்க, 
நெட்டுயிர்த்தே வாராகி நெருப்பேந்தி வாருமம்மே!

குற்றமதும் கோணலதும் குளவியெனக் குடைந்தெடுக்க,
மற்றவர்கள் வெறுப்புடனே மறுத்தொதுக்கும் எம்வாழ்வில், 
பற்றுடனும், பரிவுடனும், பாசத்தின் நிழலுடனும், 
இற்றைக்கு வாராகி எமைக்காக்க வாருமம்மே! 

வாழ்க்கையது வலிந்தெமக்கு வாழுகின்ற போதினிலே, 
சூழ்துன்பஞ் சுழன்றடிக்குஞ் சூறையெனச் சோதனையால், 
தாழ்வுகளால் நைந்துருகித் தளர்ந்துடலுஞ் சழக்குகளால் 
வீழ்கையிலே, வாராகி விரைந்தணைக்க வாருமம்மே!

தன்னறியாப் பித்ததனாற் சத்தியத்தை உணராமல், 
பின்னலனை பிறப்பென்னும் பேராழி நுளைந்திருக்கும் 
மன்னுயிரும் வாழ்ந்திடத்தான் வாஞ்சையுடன் கையணைத்தே 
இன்னலதை வாராகி எடுத்தெரிக்க வாருமம்மே!
==========================+
இராச தியாகராசன்

பிகு:
====
அகந்தை = செறுக்கு, கனன்றெரித்தல் = நீறாக்குதல்,
நுளைதல் = ஆழ்ந்தாழி நீராடல் (நுளையர்= முத்துக் குளிப்பவர்)