சனி, 13 ஜூலை, 2024

வாள்முனையை விடப் பேனாவின் கூர்மை வல்லமையானது என்கிற சொலவடைக்கேற்ப, கவிதை வரிகளென்பது வாள்முனையை விட வல்லமையானது என்கிற பொருளில், ஒரு விகற்ப சிலேடை வெண்பாட்டொன்றை எப்போதோ எழுதினேன். மழலையும் மடிக்கணினியும், பெண்ணென்றும் பேனா, என்று கூட சில பாடல்கள் வனைந்தேன்.  இயன்றால் தேடியெடுத்துப் பகிர்கிறேன்.
===================================
===================================
வாளும், பாட்டும்......
(ஒரு விகற்ப சிலேடை இன்னிசை வெண்பா)
===================================
வார்ப்பால் உருவாகி, மாழையின் ஒண்மையுடன், 
கூர்ப்பால் உயிரெடுத்துக்* கோதுகளைத் தீய்த்துநிதம்,
பார்ப்போ ருளமதிரப் பாதகத்தைச் சாய்த்துவிடுஞ் 
சீர்ப்பாட்டும் வாளெனச் செப்பு.
==============================
இராச. தியாகராசன்

பிகு:  
=====
மாழை = உலோகம், வார்த்தல் = வடிவமைத்தல், 
ஒண்மை = பளபளக்கும் ஒளிர்மை.
கோது = குற்றம், செப்பு = சொல்.
*அறப்பாட்டு அழிக்கவும் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக