சனி, 13 ஜூலை, 2024

கோழிக் குஞ்சு

 நான் ஒருமுறை கவிஞர் வத்திராயிருப்பு கவுதமனின் கவிதையொன்றில் ஒன்றி, அதன் விளைவாக சிலேடை வெண்பாட்டொன்றை நவம்பர், 2015ஆம் ஆண்டு வனைந்தேன். இன்னும், மடிக்கணினியும் மழலையும், பெண்ணென்றும் பேனா, வாளும் பாட்டும்.  இப்படிச்  சில சிலேடை வெண்பாக்களும்  எழுதியிருக்கிறேன்.  தேடியெடுத்துப் பகிர்கிறேன்.  இந்த மீள்பதிவு என்றன் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த தோழமைகட்காக.  கவிஞர் கௌதமனின் கவிதையை விரைவில் பகிர முயலுகிறேன்.
=======================================








=======================================
கைபேசியும் கோழிக் குஞ்சு...
(இரு விகற்ப நேரிசை சிலேடை வெண்பா.
=================================
தாய்போல் விரணைக்கச் சார்ந்திருப்பால், தேடிக்கை
பாய்ந்தெடுக்கக் கையடங்கும் பாங்கதுவால் - சேய்போல
நய்நய்யென் றன்புடனே நச்சரிக்கும் கொக்கரிப்பால் 
கைபேசி யுங்கோழிக் குஞ்சு.
======================
இராச தியாகராசன்

மேலிருக்கும் என்றன் சிலேடை வெண்பாட்டுக்கு அடிப்படையான 
கவிஞர் கௌதமனின் பாடல்....
==============================
இருள் கவ்வும் பொழுதில்
விரட்டி வந்த பெருமழைக்குப் பயந்தோடி
சிதறிக் காணாதுபோன கோழிக் குஞ்சொன்றை
காதுகள் தீட்டி, உதடுகள் குவித்து
பேக் பேக் பேக்கென
தாய்க் கோழியாக உருமாறியழைத்தபடி
கோழியின் கால்பட்ட திசையெங்கும் பயணித்து
எங்கோ ஓர் திசையில் மெலிதாய்
நடுக்கத்தில் நழுவும் கேவலாய்
அடர்ந்த முட்புதரினுள் குஞ்சின் குரல் கேட்க
மெல்லக் கரம் விட்டு துழாவி
கையில் சிக்கிய ஈர இறகு பட்டு
உள்ளமெங்கும் மகிழ்ச்சி மின்னலிட
லாவகமாய் முள் கிழித்திடாமல் தூக்கி
தலை கோதி தாயிடம் சேர்த்த நினைப்பு...
கைமறந்த செல்பேசி தேடிக் கிடைக்கையில்!
====================================
- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
===================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக