சனி, 13 ஜூலை, 2024

வாராகியே வாராயோ....

அருள்மிகு வாராகியம்மையைப் பற்றியொரு பாடலியற்ற வேண்டுமென்பது என்றன் நெடுநாள் ஆவல்.  இன்று அஃது நிறைவேறியது.  வாராகியம்மையே வேதனையில் வாடுமெங்களை விரைந்தணைத்து, சழக்குகளை/தீமைகளை/ கயமைகளைக் கனன்றெரிக்க, எடுத்தெரிக்க, நெருப்பேந்தி, எமைக்காக்க வாருமம்மே!
=======================  

==================================
வாராகியம்மே காக்க வாராயோ?
==================================
இழந்துவிட்ட காலத்தை ஈங்குதினந் தேடியலைந்தே, 
அழுதரற்றி அகந்தையிலே அறமதனை மறந்துவிட்டு, 

வழங்கிவந்த வாழ்விதனை வாழ்கின்ற வேதனையைக் 
கழலொலிக்க வாராகி கனன்றெரிக்க வாருமம்மே!

நட்புறவை நல்லவரை நற்பண்பை மறந்துவிட்டுக் 
கெட்டமனக் கோட்டைகட்டிக் கேடதனில் முங்குகின்ற, 
வெட்டவெளி வீணரவர் வெறும்பேச்சை மிதித்தழிக்க, 
நெட்டுயிர்த்தே வாராகி நெருப்பேந்தி வாருமம்மே!

குற்றமதும் கோணலதும் குளவியெனக் குடைந்தெடுக்க,
மற்றவர்கள் வெறுப்புடனே மறுத்தொதுக்கும் எம்வாழ்வில், 
பற்றுடனும், பரிவுடனும், பாசத்தின் நிழலுடனும், 
இற்றைக்கு வாராகி எமைக்காக்க வாருமம்மே! 

வாழ்க்கையது வலிந்தெமக்கு வாழுகின்ற போதினிலே, 
சூழ்துன்பஞ் சுழன்றடிக்குஞ் சூறையெனச் சோதனையால், 
தாழ்வுகளால் நைந்துருகித் தளர்ந்துடலுஞ் சழக்குகளால் 
வீழ்கையிலே, வாராகி விரைந்தணைக்க வாருமம்மே!

தன்னறியாப் பித்ததனாற் சத்தியத்தை உணராமல், 
பின்னலனை பிறப்பென்னும் பேராழி நுளைந்திருக்கும் 
மன்னுயிரும் வாழ்ந்திடத்தான் வாஞ்சையுடன் கையணைத்தே 
இன்னலதை வாராகி எடுத்தெரிக்க வாருமம்மே!
==========================+
இராச தியாகராசன்

பிகு:
====
அகந்தை = செறுக்கு, கனன்றெரித்தல் = நீறாக்குதல்,
நுளைதல் = ஆழ்ந்தாழி நீராடல் (நுளையர்= முத்துக் குளிப்பவர்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக