சனி, 10 டிசம்பர், 2022

பாட்டன் மறுபடியும் வரவேண்டும்....

சிந்துவேந்தனுக்குப் பிறந்தநாள் (டிசம்பர், 11ஆம் நாள்).   மக்கள்கவி, மாந்தநேயன், நாட்டுப்பற்றாளன், விடுதலைப் போராட்ட வீரன், சமுதாயச் சீர்திருத்தவாதி,  என்றெல்லாம் ஊரெங்கும் போற்றப்பட்ட மகாகவியின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் வெறும் 14 பேர்கள் மட்டுமே!  இருக்கும் போது ஒருவரின் மதிப்பைப் போற்றாது விட்டுவிட்டு, இல்லாமல் போன பின்னர், நம்நாட்டு அரசியலார் செய்கின்ற மரியாதை என்ன; சூட்டுகின்ற கணக்கிலடங்கா மாலையென்ன; நடத்துகின்ற நாடகமென்ன?

கம்பன், புகழேந்தி, ஔவை, ஒட்டக்கூத்தர், காளமேகம், தாகூர், பாவேந்தர், கவியரசு, சேக்சுபியர், காஃப்கா, யீட்சு, கீட்சு, வேட்சுவர்த்து, நெருடா, எசுரா பவுண்டு, பைரன் இப்படிப் பலரின் (இன்னும் பல கவிஞர்கள்) பாடற்   படைப்புகளில் மூழ்கித் திளைத்தே அகங்குளிரச்  சுவைத்திருந்தாலும்,  நம்முடைய சிந்து வேந்தனின் கவிதைகளே என்றன் முதல் காதலி; அவனே என்றன் கவிதைகளின் தோணி.  இந்தப் பிறந்தநாளில் அவனுடைய மொழியாற்றலை, கவித்திறனை, நாட்டுப்பற்றை, சமத்துவ அறத்தை, குமுகாயச் சிந்தனையை எண்ணி நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.  

=========================================
தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்  
காணிநிலம் காளியிடம் கேட்டவனின் பாக்களிலே 
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
=============================













=============================
பாட்டன் வரவேண்டும் இன்று!
=============================
மொழியென்னும் தமிழ்புரவித் தேரைப் பூட்டி,
.....மோடுமுட்டிச் சழக்ககலப் பாட்டுந் தீட்டி,
வழக்கென்றும் மன்றென்றும் அலைந்தே சோர்ந்த, 
.....மாகவிக்கின் றூரெல்லாம் முழங்கும் வாழ்த்து!
செழுமையுடன் சுற்றமதோ வாழ்த்த வில்லை;
.....செருக்கர்கள் நீபிழைக்க விடவு மில்லை;
இழுத்திழுத்தே ஊரெங்கும் ஓட விட்டே,
.....இளைப்பார இடமுமின்றி மாய்ந்தா யன்றே!

துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை பூச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பேச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்! 
நடிக்கின்ற அரசியலார் செய்யும் கேட்டை 
.....நயபுடைக்கும் நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

மற்றவரின் தாய்மொழியை அழித்தே இங்கு, 
....மயக்குமொழி பேசிநிதம் ஏய்த்தே வாழும், 
குற்றமன உணர்வுநிலை ஏது மில்லாக் 
.....கொக்கரிக்கும் மேட்டிமையின் திட்டம் மாய, 
முற்றிவிட்ட பைத்தியஞ்செய் சட்டஞ் சாய, 
.....முத்தமிழால் சொல்லடுக்கும் பாட்டுத் தீயால், 
வற்றிவிட்ட வண்டமிழை காக்க வென்றே, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

கரிமிதித்தோ காலனவன் கவர்ந்தா னும்மை? 
.....கால்வருடிக் கயவருனைக் காட்டித் தந்தே, 
சிரித்தபடி சிலுவையிலே அறைந்தாற் போலச் 
.....தீயுளத்தோர் வஞ்சகமாய்ச் சாய்த்து விட்டார்; 
எரித்தழிக்க முடியாத காற்றின் வீச்சாய், 
.....எத்தரையே பொசுக்கிவிடும் கவிதை மூச்சாய், 
மரிக்கொழுந்தின் மயக்குமந்த மணத்தை போல, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 
==================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 29 நவம்பர், 2022

கயல்விழியும் கூருகிரோ.....

காதலெனும் கடல்............

இரைகின்ற பெருந்நாகமோ இல்லை பின்னலெனும் வெறுங்கூந்தலோ? சீறிவரும் கூருகிரோ இல்லை சீராரும் கயல்விழியோ?

=========================================








========================================= 
அவனுக்கோ...
===========
சேர்த்துக் கட்டி வரிந்தாலும், 
பார்த்தால் உளம்கொய்திட,
ஆர்ப்ப ரித்தே இரையுமொரு, 
பெருந்நாகம் என்றானால்:

அவளுக்கோ...
===========
நீள்விரலால் வாகொதுக்கத்
தோள்சரிந்தே காதோரங்
காற்றலைவிற் கதைபேசும், 
பின்னலெனும் வெறுங்கூந்தல்...

அவனுக்கோ...
===========
உளங்கிழிக்கச் சட்டென்றே, 
மின்னலதன் வடிவதுவாய், 
உயிர்குடிக்கச் சீறிவருங்  
கூருகிர்கள் என்றானால்;

அவளுக்கோ...
===========
அவனெழிலை அமிழ்தெனவே 
அன்பதனால் அன்றாடம்
தான்குடிக்க ஏங்குகின்ற, 
சீராருங் கயல்விழியோ?
====================
இராச. தியாகராசன்

பிகு:
கூருகிர் = கூரிய நகம்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாயக் குதிரை......

என்னுடைய மைந்தர் வைகறைச்செல்வன், 2015ஆம் ஆண்டென்னை ஒரு குதிரைப் பாட்டு எழுது என்று பணித்ததால், வந்த வரிகளிவை!  பாயுங்குதிரை,  மாயக்குதிரை, பாட்டுக் குதிரை, வேட்டுக் குதிரை, காட்டுக் குதிரை, நெருப்புக் குதிரை, நேசக்குதிரை, மந்திரக்குதிரை;  இஃதொரு தந்திரக் குதிரை.

==========================================













===========================================|
மாயக்குதிரை....
===================
சிட்டாப் பறக்குது சின்னக் குதிரை;
.....சீறிப் பறக்குது செல்லக் குதிரை;
பட்டாப் பறக்குது பஞ்சுக் குதிரை;
....பரிவாப் பறக்குது பருவக் குதிரை;

கருக்காப் பறக்குது காட்டுக் குதிரை;
....காத்தாப் பறக்குது கருப்புக் குதிரை;
செருக்காப் பறக்குது சீலக் குதிரை;
....தெறிக்கப் பறக்குது சீமைக் குதிரை;

காராப் பறக்குது கர்வக் குதிரை;
....கழுகாப் பறக்குது கனவுக் குதிரை;
சோராப் பறக்குது சூரக் குதிரை;
....சோக்காப் பறக்குது துப்புக் குதிரை;

பாடிப் பறக்குது பாசக் குதிரை;
....பழகிப் பறக்குது பாலக் குதிரை;
ஆடிப் பறக்குது ஆசைக் குதிரை;
....அழகாப் பறக்குது ஆக்கக் குதிரை

விண்ணில் பறக்குது மின்னல் குதிரை:
....விரைந்தே பறக்குது வெள்ளைக் குதிரை;
மண்ணில் பறக்குது மட்டக் குதிரை;
....மயக்கப் பறக்குது மாயக் குதிரை;

பாய்ந்தே பறக்குது பழுப்புக் குதிரை;
....பதுங்கிப் பறக்குது பருந்துக் குதிரை;
மாய்ந்தே பறக்குது மஞ்சுக் குதிரை;
....வசமாப் பறக்குது வண்ணக் குதிரை;

தழலாப் பறக்குது சந்தக் குதிரை;
....தணலாப் பறக்குது தங்கக் குதிரை;
அழலாப் பறக்குது அன்புக் குதிரை;
....அறிவாப் பறக்குது அருமைக் குதிரை;

செழிவாப் பறக்குது செவத்தக் குதிரை; 
....தீயாப் பறக்குது செருவக் குதிரை
நிழலாப் பறக்குது நேசக் குதிரை;
....நெருப்பாப் பறக்குது நெஞ்சக் குதிரை;

பொறியாப் பறக்குது பொள்ளுக் குதிரை;
....பூவாப் பறக்குத்து பொங்கு குதிரை;
அறமாப் பறக்குது ஆவல் குதிரை;
....அழிக்கப் பறக்குது ஆட்டக் குதிரை;

இடியா பறக்குது இரும்புக் குதிரை;
....எடுப்பாப் பறக்குது எரியுங் குதிரை;
முடுக்காப் பறக்குது மோக குதிரை;
....முறுக்காப் பறக்குது மோனக் குதிரை!

எழிலாப் பறக்குது இன்பக் குதிரை;
....எமனாப் பறக்குது எண்ணக் குதிரை;
பொழிவாப் பறக்குது போட்டிக் குதிரை;
....பொலிவாப் பறக்குது போத்துக் குதிரை!

பாட்டாப் பறக்குது பளிங்குக் குதிரை;
....பதமாப் பறக்குது பண்ணுக் குதிரை;
வேட்டாப் பறக்குது வெளிச்சக் குதிரை;
....விரசாப் பறக்குது விந்தைக் குதிரை!
==================================
இராச. தியாகராசன்

பிகு:
====
துப்பு = வலிய
செருவம் = போர்
மட்டக்குதிரை = உயர்ந்த இனக்குதிரை
மஞ்சு = முகில்
பொள்ளுதல் = தீச்சூடு
அழல் = நெருப்பு, தீச்சுவாலை
முடுக்கு = மிடுக்கு
போத்து = சிற்றகவை

புதன், 23 நவம்பர், 2022

இல்லத்தரசியின் கதை...

இயல்பு வாழ்வியலில் அன்பு செய்வதன்றி, துணைவர் துணைவியை அடிப்பதோ, துணைவி துணைவரை அடிப்பதோ என்றும் சரியில்லை;  எந்தக் கருத்து வேற்றுமையையும், ஆர, அமர்ந்தே, ஆழ்ந்து, விவாதித்துத் தீர்வு காண்பதுதான் முறையான வழி. 

இது நகைச்சுவை இழையோடுமொரு கவிதை அவ்வளவே!  படியுங்கள்;  சுவையுங்கள்;  சிரியுங்கள்! 

(நான்கைந்து தமிழ்ச் சொற்களையும் பெய்திருக்கிறேன்: பொருள்களின் பெயரை மாற்றுவது கொலைக் குற்றம் என்போர், தயைகூர்ந்து கடந்து போகவும்.  விவாதத்திற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை/ நேரமும் இல்லை!) 
============================================


============================================
ஒர் இல்லத்தரசியின் கதை....
==========================
நான்செய்யும் நாவூறும் நற்புழுக்குத் தட்டம் பிடிக்கவில்லை;
தேன்போன் றினிக்குமென் சுவையார் கடினி பிடிக்கவில்லை;
வான்வாழுந் தேவர் மயங்குமாச் சில்லும் பிடிக்கவில்லை;
கோன்மக்கள், குவலயம் கொண்டாடுங் குளம்பி பிடிக்கவில்லை;

தேன்சுவை ஊறவே நான்கலக்கித் தருகும் தேநீரும் பிடிக்கவில்லை;
ஊன்சுவை யார்க்குமென் மாட்டூன் வறுவல் பிடிக்கவில்லை;
நான்தோய்த் தடுக்கும் காலுறை, துணிகளும் பிடிக்கவில்லை;
என்றும்நான் செய்கின்ற இல்லப்பணி எதுவுமே பிடிக்கவில்லை;

என்தவறே தென்றுநான் இடிந்தமர்ந்து நினைத்தே நைந்தபோது,
என்னுளத்தில் பளிச்சென்ற மின்னலாய் வெட்டிய எண்ணமொன்று;
அன்றவனின் அன்னைபோல் கன்னத்தில் விட்டேன் ஓரறை;
இன்றவனுக்கு என்செயல் எல்லாமும் இயல்பாய்ப் பிடிக்கிறது!
======================================
இராச. தியாகராசன்.

பிகு:
======
புழுக்குத் தட்டம் = கேசரோல் (Casserole)
கடினி = கேக்கு (Cake) 
மாச்சில்லு = பிசுக்கோத்து (Biscuit) 
குளம்பி = காப்பி (Coffee)
தேநீர் = சாயா (Tea -  என்ன செய்ய, இதையும் சொல்ல  வேண்டிய காலம்!)
மாட்டூன் வறுவல் = மாட்டிறைச்சி வறுவல் (Beef Stew)
காலுறை = சாக்சு (Socks)

ஞாயிறு, 6 நவம்பர், 2022

கவியெனச் சாற்றினனே.....

தளிர்த்தே அழிந்த கனவுக் கவிதை, 
பொலிந்தே அழிந்த கவிதைக் கனவு......

==================================











==================================
கவியெனச் சாற்றினனே.
(கட்டளைக் கலித்துறை)
=======================
வளமும் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே; 
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடும் தெண்டிரையே; 
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே; 
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!

மலர்ந்து மணந்தே மனத்தை கவர்ந்திடும் மல்லிகையே;
சிலிர்த்து நிதமும் சிந்தையை அள்ளிடுமச் செம்மலரே;
மலிந்த பரிவால் என்னை அணைத்திடும் மதிமுகமே; 
பொலிந்தே அழிந்த கனவைக் கவியெனப் போற்றினனே!
======================================================
இராச. தியாகராசன்.

எயிட்சு இல்லா இனிய உலகம்....

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி,  புதுவையரசில் எனக்கொரு பரிசிலும் பெற்றுத் தந்த எண்சீர் அகவல் விருத்தமிது.  "மாந்தரினமே முன்னெடுப்பீர் (LET COMMUNITIES LEAD)."  பன்னாட்டு ஆட்கொல்லி ஆட்கொல்லி நோய்க்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும், போதை ஊசிப் பழக்கத்தை வேரறுப்பீர்; ஓரினச் சேர்க்கையை புறந்தள்ளுவீர்;  பிறன்மனை வேண்டாத பேராண்மையே பேரறம் என்று வாழ்வீர்; சமூகத்தில் ஆண்/பெண் என்று பேதமில்லாமல்  கலந்துறையும் பணிகளில் இருக்கும் பேர்களும், நீண்ட தூரம் சரக்குந்து ஓட்டுகின்ற பேர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்/பெண் இரு சாராரும், மனவுறுதியுடன் வேற்றாளிடம்  உடலுறவில்லாமல் இருக்க உறுதி கொள்வீர்;  (அப்படி உறவில்லாமல் இருக்க ஏலாதென்னும் குறைந்த விழுக்காடு பேர்கள் உடலுறவின் போதாவது உறையைப் பயன்படுத்துவீர்!).

புதுவையில் இற்றைக்கு 100க்கு 95 விழுக்காடு பேர்கள் மணமுடித்ததும் மணவினையை முறையாகப் பதிவு செய்கிறார்கள்.  ஆகவே திருமணத்தைப் பதிவு செய்கையில், மணமக்கள் இருவர்க்கும் ஆட்கொல்லி நோயில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கக் கட்டாயமாக்கப் படுத்தப்பட  வேண்டும் என்று நான் பேசுமிடமெல்லாம்  வலியுறுத்துகிறேன்.  இன்னும் வேளைதான் வரவில்லை.
=============================================








============================================
எயிட்ஸ் இல்லா இனிய உலகம் 
============================================
(இதனை ஆதாஹ சந்துமா அல்லது உலகிலுள்ள 
பெரியோரே என்ற மெட்டில் பாடலாம்)
============================================
திருநிலவாய்ப் பூத்துநிற்கும் அமுதாம் பெண்ணே!
.....தித்திக்கும் வாழ்க்கையெனுங் கடலில் உன்னை, 
அருமையுடன் அனுப்பிடவே உன்றன் பெற்றோர்
.....அலைந்தலைந்து மணமகனைத் தேர்வுஞ் செய்தார்!
விருந்தின்று போட்டதுபோல் காணே னென்றே, 
.....விருந்துண்டு திருமணத்தை ஊரார் போற்ற, 
கரும்பினியாள் கழுத்தினிலே தாலி யிட்டு, 
.....கனவுகளும் நனவாக மாலை யிட்டான்!         (திருநிலவாய்)

மணமுடித்து திங்களைந்து போக வில்லை;
.....மயக்கமென மருமகனும் நாளுஞ் சொல்லித்
தணலெரிவாய்த் பெண்ணவளின் அன்புந் தீய,
....தளர்ந்துடலும் குறுகிநிதம் என்புந் தேய,
மணமகனி னுடலினுள்ளே உயிரைக் கொல்லும்,
....மாவரக்கன் புதுந்துவிட்ட சேதி கேட்டுக் 
கணக்கின்றிச் சீர்களெல்லாம் சேர்த்த தந்தை,
.....கட்டிவைத்த கோட்டைகளுஞ் சரிய நின்றார்! (திருநிலவாய்)

கோனோடு பெண்ணவளும் உறவில் சேர்ந்தே,
....குறைவில்லா இல்லறத்தின் இன்பம் தேர்ந்தே,
வானோடு வாழ்ந்திருக்கும் நிலவைப் போல, 
.....வன்சுடராய் வீசுஞ்செங் கதிரைப் போல, 
தேனோடு வானமிழ்தம் கலந்தாற் போல,
.....தேர்ந்தொருவ ரொருத்தியென வாழும் வாழ்வில், 
ஊனோடு கலந்திருக்கும் உயிரைக் கெல்லி, 
.....உறவறுக்கு முயிர்கொல்லிக் கிடமு மேது?    (திருநிலவாய்)

திருமணத்தின் முன்பேயே வீணில் தீய்ந்தே, 
.....சிதைந்தழியும் வழிகளிலே நடந்தே வீழ்ந்த, 
பெருந்துயரே கரணியமா யறிந்த போதில்,
.....பேர்துலங்கச் செய்திட்ட செலவில் சேர்த்தே,\
ஒருசெலவாய் மருத்துவரின் குருதிச் சான்றை, 
.....ஓர்ந்திடாத அறிவின்மை; உறுதி கொள்வோம்!
மருத்துவரின் சான்றதனை மணத்தின் முன்பே, 
.....மணமக்கள் இருவர்க்கும் கேட்போ மென்றே! (திருநிலவாய்)
==================================
இராச. தியாகராசன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

அரைக காசும் உன்னுடன் வருமோ???

வாழ்வது சிலநாள், சிலரை விரும்புவதேன்?  சிலரை வெறுப்பதுமேன்?  அனைவரையும் நேசியுங்கள்;  தாழ்வுற்றவர்க்காய் உதவுங்கள்.  வரும்போது எதையும் கொண்டுவரவில்லை: போகும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை.  இறங்கி, இருந்து, இறக்கும் வரையில் இருப்பிற்கொரு காவல் நாம் என்றுணர்ந்து வாழுங்கள்;  அடுத்தவர்க்காய் வாழுங்கள்; அடுத்தவரின் அவலநிலையில் அடுப்பெரிக்காமல் வாழுங்கள்!  

என்காலம் முடியும் போது, 100 (அ) 200 பேர் இரங்கற் சேதி தெரிவித்துவிட்டு, ஓரிரு வாரம் கழித்து, அவரவர் பணியைப்  பார்க்கப்  போகிறார்கள்; நெருங்கிய சொந்தங்கள் இன்னும் கூடுதலாய் ஓராண்டோ/ ஈராண்டோ நினைந்துருகப் போகிறார்கள்;  இதுதான் வாழ்வியல் நீதி.  நானிங்கு சொன்னவற்றில் இருக்கும் அறமென்பது என்றும் மாறாதது.  அறத்தின்பாற்பட்டு வாழ்வோரின் வாழ்வும்;  அவர்கள் சுற்றத்தின் சுகமும்;  பிள்ளைகளின் நலமும் என்றென்றைக்கும் உயர்ந்தே தானிருக்கும்.
===============================================








===============================================
அரை காசும் உன்னுடன் வருமோ.....
===============================================
பெற்றவரை அன்பதனால் தாங்குகின்ற, 
பிள்ளைகளோ பெருமைகளைச் சேர்த்துவிடும்;
கற்றவரின் உள்ளத்திலே ஓங்குகின்ற,
கல்வியெனும் செல்வமதை வாங்கிவிடும்!

தன்னாட்டின் மக்களையே மாக்களெனத்
தானெண்ணித் தருக்குடனே ஆண்டவரின்,
முன்நிகழ்ந்த வரலாறு சொல்லுகின்ற,
முகவரியை அறியாமல் தினந்தோறும்,

கைந்நிறைய காசென்றும் மணிக்கணக்கிற் 
காத்திருந்து கூவுகின்ற மக்களென்றும்,
வையகத்தின் புகழ்போதை தலைக்கேற
வசதியொடு மன்னரென வாழ்வோரும், 

மொத்தசுகம் பெரிதென்றே அலைந்தாலும்,
முற்றியிங்கு சருகிலையாய் உதிர்கையிலே
அத்தனவன் கயிற்றாட்டம் நிற்கையிலே,
அரைகாசும் அவருடனே வருமாமோ?
================================
இராச. தியாகராசன்

காப்பதுன்றன் பாரமே....

கருப்பையா, கருப்பையா காப்பதுன்றன் பாரமே! அருள்மிகு ஐயப்பன் பஜனையில் நான் பாடும் பாட்டின் மெட்டு.  

===================================


===================================
கருப்பையா, கருப்பையா
==========================
கருப்பையா, கருப்பையா 
குலதெய்வக் கருப்பையா;
கருப்பையா, கருப்பையா, 
கருணைசெய்வாய் கருப்பையா                     (கருப்பையா)

காட்டின் நடுவில் கனசோராய்
கருப்பன் என்ற பேரினிலே,
தபசில் அமர்ந்தச் சாமியை,
தளபதி கருப்பா காக்கின்றாய்!      (தளபதி) (கருப்பையா)

அவல்பொரி கடலைவைத்து
அன்பாய்ப் பூசை செய்குவேன்;
கருப்பட்டிஎள் வைத்தேநான்
கருப்பனுன்னைப் பாடுவேன்!         (கருப்ப)   (கருப்பையா)

புனுகுதனை வாங்குவேன்;
புருவங்களில் சாத்துவேன்;
கண்மலரும் சாத்துவேன்
காப்பதுன்றன் பாரமே!                       (காப்ப)  (கருப்பையா)

பதினெட்டு படிகளிலே
வாழுமென்றன் கருப்பனே;
கதியின்றே அலையுமெனை
காப்பதுன்றன் பாரமே!                        (காப்ப)   (கருப்பையா)
=================================
இராச. தியாகராசன்.

பாப்புதுவை வாழியவே....

 நற்புதுவை வாழியவே; கவிப்புதுவை வாழியவே; பாப்புதுவை வாழியவே!

=====================================









=====================================
எம்புதுவை வாழியவே....
=======================
திரையொலிக் கடல்போற் றிகழ்ந்திடுந் தமிழிலே
வரைந்திடும் வண்ணமாய், வள்ளையாய்ச் சிந்துமாய்,
நரையறா இலக்கணஞ்சேர் நற்கவிதை நான்வனைய,
கரையிலா இலக்கியக் கவிப்புதுவை வாழியவே!

நிறைவான இலக்கியமும், நேர்த்திமிகு இலக்கணமும்,
நறுந்தேனாய்ப் பொலிகின்ற நாவினிக்கும் பாட்டியலும்,
அறம்பொருள் இன்பவியல் அத்தனையும் நானெழுதச் 
சிறப்புடனே மின்னுகின்றச் சீர்புதுவை வாழியவே!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழிற் சொல்லெடுக்கித் 
தூவானச் சாரலென தொல்தமிழில் பன்னூறாய்
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனைய
பாவானம் போலொளிரும் பாப்புதுவை வாழியவே! 
======================
இராச. தியாகராசன்

வருவானே நிச்சயம் வருவானே....

மழலையரோ, இளையவரோ, முதியவரோ, மகளிரோ, ஆடவரோ, கல்வி கற்றவரோ, கற்காதவரோ,பாவலரோ, படித்தவரோ, பண்பாளரோ, பற்றுள்ளவரோ, பற்றறுத்தவரோ, மந்தையுளம் கொண்டவரோ, அரசியலாரோ, ஆத்திகரோ, நாத்திகரோ எவராயினும் சரி அவன் வரும்போது எவரும்/ எதுவும் தடுக்க ஏலுமோ?
===================================









===================================
வருவானே நிச்சயமாய் வருவானே...
===================================

(எடுப்பு)
========
நாட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும்
வீட்டுக்குள்ளும், உறவுக்குள்ளும் 
காட்டுக்குள்ளும், கொட்டிமுழக்கி....                    (வருவானே)
வருவானே நிச்சயமாய் வருவானே!

(தொடுப்பு)
===========
அவனிங்கே உன்வாழ்வில் வருவானே;
தவறாமல் உனைத்தேடி வருவானே!    
அறுந்தாடும் வாலெனவே ஊழ்வினையால், 
இறுமாப்பில் நானென்றே அலைந்தாலும்,         (வருவானே)

(முடிப்பு)
=========
தடுத்தாலும் அரண்டிங்கே அழுதாலும், 
சொடுக்கினிலே தாள்பற்றி தொழுதாலும், 
வெடுக்கென்று மிரண்டிங்கே ஒளிந்தாலும்,
அடுக்கிச்சேர் செல்வத்தை அளித்தாலும்,           (வருவானே)

நடித்தாலும் தரைநோகத் துதித்தாலும், 
துடித்தாலும் சுள்ளென்றே மிதித்தாலும், 
கொடுத்தாலும் வேதனையில் கொதித்தாலும், 
வெடித்தாலும் கோடிதந்தே மதித்தாலும்,             (வருவானே)

கறும்பணத்தின் ஊழலிலே களிப்பவரின் 
அறமில்லா ஆட்டங்கள் சாய்த்துவிட,
திறனில்லா ஆட்சியரும் மீளாமல்  
உறங்கிவிழும் வேளையிலே உயிர்பறிக்க,          (வருவானே)

என்படத்தை என்பெயரை எழுதென்று,
மன்னரென ஆடுவோர்க்கும், தலைபொறித்தச்
சின்னத்தின் சிற்றெழுத்துக் கட்டளையால்,
மன்பதையில் உனைத்தேடி உயிரெடுக்க,          (வருவானே)

மழலைகளோ, முதியவரோ, கவிஞர்களோ, 
எழில்பூத்த நங்கையரோ, இளையவரோ,
பழந்தின்று கொட்டையிட்டத் தீயவரோ, 
கொழுப்பெடுத்தக் கொடுங்கோல ரானாலும்,  (வருவானே)

கருகருத்தக் கொம்புமிளிர் அணிநடை
எருமையதன் மீதேறி ஒருகரத்தில் 
திரிசூலம், மறுகரத்தில் உயிர்பறிக்கும்
பிரிபோன்ற பாசமதைச் சுழற்றியிங்கு                (வருவானே)
==============================================
இராச. தியாகராசன்

பிகு: 
அணிநடை எருமை = சங்கத்தமிழ் சொல்லாட்சி.
எமனின் பாசம் = உயிர்பறிக்கும் கயிறு.

திங்கள், 17 அக்டோபர், 2022

லிங்க பைரவியே.....

2022ஆம் ஆண்டு நவராத்திரித் தொடக்கத்துக்காக எழுதிய வரிகள்...
===============================================










===============================================
லிங்க பைரவியே (கலித்தாழிசை)....
===================================
அன்றலர்ந்த ஆம்பல்போல் அன்றாடம் புன்சிரிக்குந் 
தென்றலிழை பூங்காவின் சீர்மகளே! தேனமுதே! 
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கற்பகமே! 
மின்னொளி போலிங்கே வீசுமொளிர் வித்தகியே! 
....வெண்ணிலவின் தண்மையென வீசுமொளிர் வித்தகியே!

தேடுவதைத் தேடித் தளர்ந்துநான் நிற்கையிலே, 
நாடுகின்ற மெய்யை நலுங்காமல் கொண்டிடத்தான் 
வாடுகின்ற என்னுளமும் மாரியவள் பேரருளைப்  
பாடியே நித்தம் பரவசமாய் ஆடுகின்றேன்! 
....பைரவியை எண்ணிப் பரவசமாய் ஆடுகின்றேன்!

பித்தனவன் ஊழாழி பற்றியெனை ஆட்டிவைக்கச் 
சித்தினியுன் பாசமெனும் தேன்மாரி காத்துநிற்க, 
அத்தனை ஆயிரமாய் ஆட்டத்தை தானடக்கி, 
மத்தியிலச் சக்தி மனங்குளிரச் செய்வாளோ? 
....மாநிலமே போற்ற மனங்குளிரச் செய்வாளோ?

கள்ளதனின் போதையெனக் கார்முகிலின் தூரலெனத்
துள்ளிவரும் குற்றாலத் தூய்மையதன் சாரலென, 
வெள்ளமென நானும் வெடிக்கின்ற பாப்புனைய, 
அள்ளிவரம் தந்தருளும் ஆரமுதே! அம்பிகையே!
....அன்பதனால் என்னிலுறை ஆரமுதே அம்பிகையே!

உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்தளிப்பாள் காளி;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்தவென் லிங்க பயிரவியே!
....எழிலாம் வடிவேயென் லிங்க பயிரவியே!
=====================================
இராச. தியாகராசன்

அறப்பாட்டு....

நம் தாய்நாட்டு மண்மீதிலே இற்றைக்குத் தாண்டவமாடும் கோர நிகழ்வுகள், சாதி/ மத/ பதவி/ பண-பிணச் சழக்குகள், ஊழல் தலைவிரித்தாடும் துயரம்/ அறத்தையே காலிலிட்டு மிதிக்கும் வாக்கு வங்கி அரசியல், வெறும் TRPக்காக, குற்றம் செய்துவிட்டு தண்டனையும் பெற்றவரையு விடுதலை வீரராகப் போற்றி, வரிந்து வரிந்து சேதிகளில் திரும்பத் திரும்பக் காட்டுகின்ற மனச்சான்றே இல்லாத கோணல் ஊடகங்கள், கலியுகத்தின் கோரமுகம், காணுமிடமெல்லாம் சுயநலத்தின் பெருங்களியாட்டம், அறச்சீற்றமே இல்லாமல் நடைபிணமாய் மக்கள் வாழும் வாழ்க்கை (எனையும் சேர்த்தே!)

வேளாண்மை செய்பவர் படும் துன்பங்கள், சிறார்/ மகளிர் மேல் பாலியல் வன்மங்கள், வன்முறையாளரின் வாதங்கள்/ தீவினைகள்/மூளைச்சலவை செய்யப்பட்ட கோமாளிகளின் கூப்பாடு, அடிப்படைவாதிகளின் வரம்பில்லாக் குற்றங்கள்/ கொடுஞ் செயல்கள்,  அவர்களையும் தலைமேலே தூக்கியாடும் மாந்தர்கள்;  எதைச் சொல்ல எதை விட? 

ஆழிப் பேரலையென/ முள்முடி நுண்தொற்றென இவை அனைத்தையும் ஒரு நொடியில், ஒரே ஒரு அறப்பாட்டால் அழிக்க ஏலாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பாடல்....
===============================================

===============================================
அறப்பாட்டு அரற்றியதே நெஞ்சம்......
===============================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க,
வியன்கவி யத்தனை விண்டேனிங் காயின் 
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசு மென்னுள்ளே பொங்குந் துயரம்!

மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தே,
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்!
விதியென் றிதையே உரைத்தாலு மென்றன்
கொதிக்கு முளமெனைக் கொல்கிறதே! உண்மை!

நெறித்தே பிழையென நீதியும் கேட்கும்
வெறுத்த நினைவுகள்; வேதனை கொண்டே
பிறக்கு  முயிரும் புவியில் நிலையா
தறுக்கு  மறப்பாட் டரற்றியதே உள்ளம்!

முற்றுமொரு பாடம்; முதலுமொரு பாடம்!
சுற்றமொரு பாடம்; சுமத்த  லொருபாடம்!
நிற்றலொரு பாடம்; நிகழ்வு மொருபாடம்!
கற்றலொரு பாடம்; கருவு மொருபாடம்!

வெற்றுமொரு பாடம்; விசன மொருபாடம்!
பற்றுமொரு பாடம்; பரிவு மொருபாடம்!
குற்றமொரு பாடம்; குறையு மொருபாடம்!
உற்றதொரு பாடம்; உறவுகளும் பாடம்!

கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்க,
அரிக்குந் துயரத்திற் காளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி னியல்பற, எண்ணம்
வரித்த தமிழே மருந்து!
===============================================
இராச. தியாகராசன்.

வாழ்வதுதான் செறிவு...

வாழ்வதுதான் செறிவு.   மதிப்பெண்ணுக்கும், தேர்வுக்கும், காதலுக்கும், வேறு எதையும் எதிர்கொள்ளத் துணியாமல் சாவை ஏற்பதா நிறைவு?  எல்லீரும் வாழ்வீரே!  விதிக்கப்பட்ட நாள்வரை வாழ்வதுதான் இயல்பென்றே வாழ்வீரே!  நொடிப் போதில் எடுக்கும் முடிவால் எல்லாம் முடிந்து விடும்;  ஆனால் பெற்றவரும், உற்றவரும், தோழமையும் இந்தப் பிரிவாற்றாமையால், எத்தனை துயரடைவர் என்பதை ஒரு நொடி சிந்தித்தால், இப்பாழ் முடிவைப் பலரும்  எடுத்திருக்கவே மாட்டார் என்பது திண்ணம்.
==========================================









==========================================
வாழ்வதுதான் செறிவு....
=========================
சுழலெனவே சுற்றுகின்றச் சோதனையில் சோர்ந்துநிதந் 
தழலெனவே எரிந்துமனந் தளர்ந்துவிழும் நேரமதில்,
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் எண்ணமதால், 
விழலெனவே மண்டுகின்ற வெறுங்கனவுக் கற்பனைகள்!

ஏதுமற்ற இருள்நினைவில் இதயத்தைத் தான்தொலைத்தே, 
உதயமாகும் உணர்வுகளில் உருகிநிதம் உறவாடி,
சிதிலமென சிதறிவிட்டச் செங்கல்லாய் நினைவெரிக்கப் 
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி, 
அலைந்தலைந்தே அதன்மீதில் அடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்;
உலைநெருப்பில் உழல்வதுபோல் உலகாய உணர்வின்றி, 
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் அறமாமோ? 

தளர்ந்துவிட்ட வாழ்வியலில் தனிமையிலே தடுமாறி, 
துளித்துளியாய் யுள்ளத்தில் சூழ்கின்ற துயரமதால், 
களிபொங்கச் சாவினையே கரங்கோக்கத் துடிதுடிக்கும், 
ஒளிர்வெளியி னிளையோர்உம் உயிரழிக்க ஏதுரிமை?

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு 
கந்தமென மணக்கின்ற கவிதையிலோ இல்லையெனுஞ் 
சிந்தனையைத் தேர்ந்திருக்கும் தெளிவான உளங்களிலே
வந்துதிக்கும் வளந்தருகும் வாழ்வறந்தான் அறிவன்றோ?
=====================================================
அன்பன் 
இராச. தியாகராசன்

தோற்பேனோ காதலிலே.....

நீர்க்குமிழி போன்றவனை நீர் வெல்லலாகுமோ!  நடவாது....... நாணலென வாழ்வேன் நான், என்றன் வரிகளிலே!
======================================







======================================
தோற்பேனோ காதலிலே....
=========================
அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேசமெனும்  நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றுஞ் 
சிலையழகே! செம்புலத்து நீரெனநாம்  என்றிணைவோம்?

வானகத்தி லுலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனையைத் தான்தந்தே,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்வதுமேன்?

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகுமோ? 
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன்நான்; தோற்பேனோ  காதலிலே?
==========================
இராச. தியாகராசன்

கவிபுனைந்தேன் காற்றினிலே...

காற்றலைத் தூதுவன் உன்றன் காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலை சற்றசைத்துத் தூது சொல்வதும் உனக்குக் கேட்கவில்லையோ???

====================================================













====================================================
கவிபுனைந்தேன் காற்றினிலே......
===============================
வழிநிறையும் வெறுந்தனிமை மனமெங்கும் கருநிழல்கள்;
சுழல்கின்ற காற்றினிலும் துயரவொலி கேட்கின்றேன்;
கழிந்துவிட்ட காலமெனுங் கனவுகளில் மூழ்கிநிதம்
பிழிந்துவிட்ட புதுத்துணியாய்ப் பேச்சின்றித் துவள்கின்றேன்!

பொழிலூடு மணந்தூவும் பூந்தென்றல் தழுவலென,
எழிலாரும் இன்பமகள் இழுத்தணைத்தே என்னிதழில்
முழவோசை ஆர்ப்பதுபோல் முத்தங்கள் பொழிந்ததையே 
நிழலாடுந் தனிமையிலே நினைந்துருகி எரிகின்றேன்;

எழுகின்ற தழலெனவே என்னவளும் இதயத்தில், 
நிழலென்றும் நிசியென்றும் நினைவென்றும் பாராமல், 
கழலொலிக்கக் கருத்தேறி, கவிமயிலாய் ஆடுகின்றாள்;
பொழிகின்ற மழைமுகிலாய்ப் பூஞ்சாரல் தூவுகின்றாள்!

இமயமலைக் குளிருறையும் இனியமகள் நினைவுகளால்
சிமிழுள்ளே அடையாத சிந்தனையைச் செதுக்கிநிதம் 
அமுதமென எம்மொழியில் அழகான சொல்லடுக்கிக்
கமழ்கின்றக் காதலுக்காய்க் கவிபுனைந்தேன் காற்றினிலே!
======================================================
இராச. தியாகராசன்

முழுநிலவே முத்தமிழே....

அன்னையொருவர் தன் மழலைக்காய், நந்தமிழிற் பாடுமொரு தாலாட்டுப் பாடல்....
==========================================

==========================================
முழுநிலவே... முத்தமிழே!
==========================
சின்னஞ் சிறுவிரலாற் றீண்டுமின்ப ஓவியமே!
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுக் காவியமே! 
மின்ன லொளிவீசும் மென்மழலைச் சொற்பதமே!
அன்பில் உருவெடுத்த ஆரமுதா மற்புதமே!

முக்கனியுஞ் சேர்ந்த முழுநிலவாம் முத்தமிழே!
சொக்குமெழிற்  றோய்ந்த தொடுவானச் சித்திரமே!  
மன்னுதமிழ் மாண்பாம் மரபென்னுஞ் சத்தழகே! 
பொன்நே ரிலக்கியப் பூந்துகிலாம் புத்தமிழ்தே! 

மடியில் தவழ்தெனை மயக்கிடும் மல்லிகையே! 
செடியில் சிரிக்குமென் தேனமுதச் செண்பகமே! 
கொடியி லாடுகின்ற கொன்றையின் பூமணமே!
பொடியாய்ப் பொலிகின்ற புல்லினிதழ் பூம்பனியே!

என்னிலே விளைந்தநல் லின்பத்தின் சிலையே!
கண்ணையே கவர்ந்திடும் கனவுலகின் கலையே!
தென்றலாம் காற்றிலே தவழ்நீ ரலையே!
பன்னீராய் மணந்திடும்  பழமுதிர் பொழிலே!

மழலைப் பருவத்தின் நித்திலச் சுடரே!
கழறும் விந்தையாம் கிளிமொழிப் பேச்சே!
வண்ணப் பொக்கை வாயிதழ் சிரிப்பிலென்
எண்ணக் கவலையை எரித்திடும் மருந்தே!
===================
இராச. தியாகராசன்.

இருப்பவர் உரையதை ஏத்திடுவோம்...

இறந்தவரின் நல்வரிகளை/ நற்கவிதையைப் போற்றுவது மிக உயர்வான செயலே!  இருப்பினும் இருக்கும் போதே தன் பாடல் வரிகள் போற்றப்படுவதைக் காண்கையிலே பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும், ஒரு கவிஞனுக்கு வேறென்ன சிறந்த மகிழ்வை, எந்த விருது தரமுடியும்?
==========================================

==========================================
இருப்பவர் உரையினை போற்றுவோம்.....
==========================================
மின்னும் பாக்கள் மலரும் மாகடல்
பின்னும் பாவலர் பாடும் பாக்கடல்
சித்தக் கடலிலே சிக்கும் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்கும் முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் தமிழ்மனக்
கரங்களில் கிடைப்பதோ கிளிஞ்சலும் சோழியும்!
ஆழியாம் தமிழின் அலையிற் சிக்கிடும்
சோழியும் சங்கதும் சிறப்பாம்; சேருமக்
கவிதைச் சொல்லின் கிளிஞ்சலு(ம்) அழகாம்;
கவிகளில் எவர்க்கோ கிடைக்கும் புதையல்!

மொழிக்குக் கவிதை பழமைதா(ன்) ஆயினும்
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து!
ஆழ்கடல் செந்தமிழ் அறிஞரும் தமிழினை
மூழ்கியேத் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழி லழகினைச் சொல்கையில்
வாழ்விலே காணுமவ் வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலைச் சொல்கையில்
புவியினை யழித்திடும் போதையைச் சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்
இன்றையப் பெண்சிசு இனக்கொலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைச் சொல்கையில்
நாட்டின் மதம்வெறி நாசமுஞ் சாடுவீர்!
நாணுமத் தமிழ்மொழி நங்கையைச் சொல்கையில்
காணுமச் சமூகக் கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி சொல்கையில்
பண்பறு மாந்தரின் புன்னெறி சாடுவீர்!

பல்சுவை யுணவோ பூந்துகி லுடையோ
நல்லெழில் மனையோ நிறைவு தருமோ?
இருக்கையில் பாக்கள் இன்றே பெற்றிடும்
பெருமை ஒன்றே பாவலர்க் கனவாம்!
இறந்தநற் கவிஞரில் எழுத்தினை யென்றும்
நிறைவுடன் போற்றும் நிலையுட(ன்) இன்று
இருப்பவர் எழுதிய எழில்மிகு கவிதை
உரையதை ஏத்திடு(ம்) உயர்வது(ம்) செய்வமே!
===========================================
இராச. தியாகராசன்

சனி, 25 ஜூன், 2022

காவடியாம் காவடி...

காவடிப் பாட்டொன்றை ஒரு ஐயப்ப பூசையில் 4 வரிகள் ஒருவர் பாடினார். அதன் தாக்கத்தால், நானெழுதிய காவடிப்பாட்டு இது. கூகுளில் காவடி வகைகள் என்று தேடிய போதில், எத்தனைக் காவடிகள் என்று அசந்து போனேன். ==============================
=======================================
காவடியாம் காவடி கதிர்வேலன் காவடி
=======================================
காவடியாம் காவடி கதிர்வேலன் காவடி; கந்தனுக்கும் காவடி; செந்திலுக்கும் காவடி; வேலனுக்கு அரோகரா; வேந்தனுக்கு அரோகரா.. மலையனுக்கு அரோகரா; மருதனுக்கு அரோகரா. (வேலனுக்கு) (காவடி) திருத்தணிகை தீரனுக்குத் திருவேலால் காவடி; சித்திதரும் நந்தனுக்குச் சித்திரத்தால் காவடி; திருச்செந்தூர் தேவனுக்குத் திருநீறால் காவடி; சிங்கார சூரனுக்கு தேங்காயால் காவடி! (காவடி) வள்ளிமண வாளனுக்கு வங்கிவளைக் காவடி; வள்ளியூர் வள்ளலுக்கு வண்ணத்தேர்க் காவடி; புள்ளிசைக்கும் பொம்மனுக்கு புங்கங்பூக் காவடி புவனகிரி வேலனுக்குப் பூந்துகிலால் காவடி; (காவடி) மாலவனின் மருகனுக்கு மஞ்சளிலே காவடி; மதுரவயல் முருகனுக்கு மருக்கொழுந்துக் காவடி; சேலையூரின் சேயனுக்குத் செங்கமலக் காவடி; செந்தமிழின் செல்வனுக்குச் செந்தூரக் காவடி! (காவடி) குறவள்ளி காந்தனுக்கு குங்குமத்தால் காவடி; குன்றிலாடு குமரனுக்குக் கூடையாலே காவடி;
மறத்தமிழர் மாரனுக்கு மாம்பழத்தால் காவடி; மருதமலை மாயனுக்கு மாவிலையில் காவடி! (காவடி)
விராலிமலை வினயனுக்கு விளாம்பழக் காவடி; வேங்கையின் மார்பனுக்கு வேப்பிலையால் காவடி சிராவண சிங்கனுக்குச் சில்லறையால் காவடி; சிங்கபுரி தேயனுக்குத் தீச்சுடரால் காவடி! (காவடி) சங்ககிரி நாதனுக்கு சர்ப்பத்தால் காவடி; சதுரகிரி சாந்தனுக்கு சலங்கையில் காவடி; தங்கமயில் நேயனுக்கும் சல்லடையில் காவடி; சம்புவன சாந்தனுக்கு தங்கரளிக் காவடி! (காவடி) கண்ணழகு காந்தனுக்குக் கர்ப்பூரக் காவடி; கதிர்காமக் கோலனுக்குக் கற்கண்டால் காவடி; எண்ணமுற்ற ஏந்தலுக்கு இளநீரால் காவடி; ஏலகிரி எழிலனுக்கு ஏலக்காய் காவடி! (காவடி) வேல்கொண்ட வேந்தனுக்கு விளாமிச்சைக் காவடி; வெள்ளிமலை வாசனுக்கு வெல்லத்தால் காவடி; பால்போன்ற பாலனுக்குப் பன்னீரால் காவடி; பழநிமலை வீரனுக்குப் பால்பழத்தால் காவடி! (காவடி) அள்ளுமெழில் அன்பனுக்கு அன்னத்தால் காவடி; அரனுடைய மைந்தனுக்கு அரக்கினால் காவடி; கள்ளமிலாக் கந்தனுக்குக் கருகமணிக் காவடி; கந்தமலை கொற்றனுக்கு கதிர்நெல்லால் காவடி! (காவடி) குடவாசல் கொம்பனுக்குக் கொஞ்சுதமிழ்க் காவடி; விருதுநகர் வள்ளலுக்கு வெங்காயக் காவடி; வடபழனி வம்பனுக்கு மயிற்பீலிக் காவடி; மயில்கொண்ட மலையனுக்கு மகிழம்பூக் காவடி! (காவடி) ====================================== இராச. தியாகராசன்.

புதன், 27 ஏப்ரல், 2022

உண்மையின் ஒளி...

 நானே அவனா?  அவனே நானா? உள்ளத்தின் குரல்.
================================================












================================================
உண்மையின் ஒளி...
===================
நானென்ற அவனும் நேற்றென் 
கனவில் வம்புக்கிழுத்தான்;
அவனிடம் எனக்கென்ன பேச்சென்றே  
மோனத்திலாழ்து மல்லாந்தே,
விட்டத்து வாரைகளை
எண்ணத் தொடங்கினேன்; 
நானென்ற அவனுக்குக் பீறிடும்  
சிப்பாணி! அடக்க முடியாமல்
சிரித்தபடி கேட்டான்; அந்த 
நூலாம்படையை எண்ணி முடித்து.....

    அவசியக் கவிதையை விடுப்பாயா?- இல்லை
    அவசரக் கவிதையை முடிப்பாயா? - இல்லை
    அரசியல் கவிதையைத் தொடுப்பாயா?

விட்டத்தில் வெளிச்சம் தேடிய
நானும் அவனை அடித்துவிரட்ட 
வேறுவழியின்றி வாய் திறந்தேன்,
"இன்று நேற்றாகவும் இல்லை;
நேற்று இன்றாகவும் இல்லை;
நாளை என்றாக இருக்குமோ அறியேன்!
இதில் நீயும்வந்து கெக்கலிக்கிறாய்;
போடா! ஊரில் அத்தனைபேர்
இருக்கிறார்களே அவர்களின் 
கனவிற்போய் கருத்துமழை பொழி! 
எனக்குக் கவிதை நேரமாவது மிஞ்சும்!"
இன்னும் பெரிதாக, வயிற்றைப் 
பிடித்து, உருண்டு புரண்ட 
சிரிப்போ சிரிப்பு அவனுக்கு!  
நானான நீயே, உன்னைப் பெரிய 
பிரபலமென்று கற்பனையில்
கவிதை சொல்லி நாளுமிங்கே  
கருத்துக் கந்தசாமியாய் 
கோணங்கி செய்கிறாய்;
போகும் வயதாகிறது; உனக்கே
இது இன்னும் புரியவில்லை; 
உண்மையும் தெரியவில்லை
இதிலே ஊரார் கனவிலே
உபதேசமா? 
உன்னைத்தான்
எனக்குப் பிடிக்கிறது!
நான் தானே நீயானாய்!
நீதானே நானாவேன்! 
நீயாரென் றுன்னுள்ளே நீயாக
நினைத்தாலும் நீயில்லை;
நானாரென் றுன்னுள்ளே 
நானாக நினைத்தாலும் - அது
நானில்லை அறிவாயோ?
பெரிய டமடமா சத்தம்; 
இடியின் முழவோசை: 
மழையின் இன்னிசை!
கனவு கலைந்தெழுந்தேன்;
போய்விட்டான்! .....
போய்விட்டானா?
பார்க்கலாம் நாளையும் வருவான்;
நானிருக்கும் வரையிலும் 
வந்து கொண்டே இருப்பான்!
===============================================
இராச. தியாகராசன்

முள்முடித் தொற்று...

முள்முடி நுண்மித் தொற்று கற்றுத் தந்த பாடங்கள்...
==========================================

=========================================
எச்சரிக்கை எச்சரிக்கை...
========================================= 
ஓங்கலெலாம் எனதென்று கொக்க ரித்தே,
.....உள்ளதெலாம் என்வசமென் றூளை யிட்டு,
ஆங்கொளிரும் அறிவியலின் ஆற்றல் கொண்டே,
.....அடவிகளை அழித்தழித்தே ஏற்றம் கண்டு,
தீங்கிழைக்கும் அணுகுண்டின் சீற்றம் ஆர்க்க,
.....தீய்த்துவிடும் ஏவுகணை பலவும் சேர்த்து,
பாங்கெழிலாய் அண்டவெளிக் கோல மிட்டு,
.....பார்போற்றும் நிலவுக்கும் பாலம் செய்தாய்!

ஒருகணத்தில் மறைந்துவிடும் குமிழைப் போல,
.....உயிர்க்குருவிக் கூட்டைவிட்டே பறந்து நாளும்
எரிந்துவிழும் பிணக்குவியல் சொல்லு கின்ற 
....இன்றுலக நுண்தொற்றின் பாடம் என்ன?
கரியமனக் காலனென கண்ட தையும்
.....கருக்கிவிடும் மாந்தர்க்கு மெச்ச ரிக்கை;
நரம்பின்றி நாடோறும் பேசி ஏய்க்கும்,
....நயங்கெட்ட அரசியலார்க் குமெச்ச ரிக்கை!

பெருந்தாதா போல்சின்ன நாட்டை தீய்க்கும் 
.....பேர்கொண்ட நாடுகட்கும் எச்ச ரிக்கை:
தெரிந்துநிதம் இறைவனையே நம்பும் பேரை,
.....சிந்தனையின் றிமதத்தால் ஆள எண்ணும்,
விரிந்துபரந்த வன்முறையே விதியாய்க் கொண்ட,
.....மதவாதத் தருக்கருக்கு மெச்ச ரிக்கை;
தரமுயர்ந்த பாரதத்தில் சாதி யென்று
....தாழ்ந்தவரை மிதிப்பவர்க்கு மெச்ச ரிக்கை!
=========================================
இராச. தியாகராசன்