காதலர் நாளுக்காய் இன்னொரு பாட்டு...
நியதிகளும் நெக்குவிட ஆடுகின்றேன்;
நித்தமுன்றன் நன்னலமே நாடுகின்றேன்;
மயிலொத்த நங்கையுனைத் தேடுகின்றேன்;
மயக்குருவ மாயத்தால் வாடுகின்றேன்!
இன்றைக்குன் வண்ணமெனும் பூச்சால்,
என்றென்றும் உன்நினைவென் மூச்சு;
கன்னலனைக் கண்ணசைவின் வீச்சால்,
கவிதையெனப் பொங்கிவரும் பேச்சு!
வாடையின் குளிரால் முகிழ்கனைவை,
கோடையில் கொளுத்தி டும்நினைவை,
ஊடலும் பிரித்த நம்உறவைப்
பாடலாய்ப் பதியவைத்த பாவையே!
காதலின்பக் காரிகையே இன்றுமுன்றன்
கயல்விழியாந் தூண்டிலிலே சிக்கவைக்கும்
நாதமுறை நாயகியே, என்றுமுன்றன்
நயனமொழி வலைவீச்சே என்கோலம்!
நாட்டியம் சொல்கிறாய் ஆடலால்,
பாட்டியல் சொல்கிறாய்ப் பாடலால்,
காட்டுதல் செய்தெனை தினந்தினம்
வாட்டுதல் செய்கிறாய் வனிதையே!
ஓடையில் சலசலக்குந் தென்றலாய்,
உன்னெழில் வருகையைக் காண்கையில்,
ஆடகப் பொன்னென மின்னுமுன்றன்
அயில்வேல் விழியெனைக் கொல்லுதே!
சின்னஞ் சிறிய காற்சரத்தில்,
சிதறிச் சிரிக்கும் சிறுவொலியில்,
என்னில் பதிந்த முழுநிலவுன்
கன்னற் சுவைமொழி கேட்டதனால்,
காலையின் கதிரிலே காலமுழுதும்,
காட்சியாய்க் கவிந்திடுங் கனவினையே
வாலைக் குமரியுன் மதிமுகத்தை
மறக்கவே முயல்கிறேன், முடியவில்லை!
காற்றிலாடு மலரின் ஒயிலதே
காதற்பெண் ணுன்றன் சிற்றிடையா?
சேற்றுவயல் மேவிய நெல்லசைவே
செப்புச் சிலையுன்றன் மெல்லியலா?
மலரில் தோன்றும் மங்கையுருவை,
மனத்தில் நிறையும் நங்கையழகை,
நிலவின் நிழலும், திரையலைவும்,
நீர்க்கவில்லை மறைக்கவில்லை!
கண்ணைத் திறவாப் பொற்சிலையா
கண்ணே உன்றன் இன்னுருவம்?
வெண்மை யொளிரும் நித்திலமா
விண்ணின் நிலவுப் பெண்ணுருவம்?
கண்களை மூடினால் கன்னியுன்
காட்சியாய்க் காணுமென் நிலையை
எண்ணியே ஏங்குமென் கனவை
எடுத்தே இயம்பிட ஆருண்டு?
என்னிதயச் சிறகென்னும் சிந்தனையை
இன்பந்தரும் உன்சொல்லால் ஒடித்தாயே;
அன்றுமுதல் அன்றாடம் அலைந்துதிரிந்து,
அனைத்துமே மறந்துலகில் சடமெனக்கு
உண்ணுகின்ற உணவும் சுவைக்காமல்,
உலகாய உணர்வதும் இனிக்காமல்,
கண்ணிமைகள் முத்தமிடும் என்துயிலும்
காலமெலாம் காணாமற் போனதுவே!
காட்சிகளில் தோன்றும் வடிவெழிலைக்
காணுகின்ற வஞ்சியுன் கோலமதை,
சாட்சியாய்ச் சொல்லும் தண்மதியும்
சார்ந்தே உரைப்பதை அறிவாயா?
ஒவ்வொரு முறையும் காண்கையிலே
உள்ளத்தில் கத்தியால் குத்துவதேன்?
கவ்வியே பற்றிடும் கனலொளிர்க்
கண்ணெனும் தீயினால் எரிப்பதுமேன்?
காதருகுக் குழலசைத்துக் கனிவுடனே
காற்றலைத் தூதுவன் கதைபேசும்
நாதத்தை நித்தம்நீ கேட்கையிலே
நலம்கேட்கும் நானென்றே புரியாதா?
துன்பத்தைத் தொலைத்தே எறிந்திட,
துயர்களும் சுருங்கியே மறைந்திட,
கன்மங்கள் கரிந்தே கரைந்திட,
கனசோராய் நித்தமும் தோழியே;
சிரமமின்றி சிந்தையில் ஒன்றிணைந்து,
தேடுதலை நாடுதலை தான்மறந்து
விரும்பியுளம் சேர்ந்தே கனிந்துருகி
வேண்டாத வற்றையே வெறுத்துவிட்டு,
வானம்பாடி போலவே நாமென்றும்
வலிகளைத் தான்மறந்தே இன்றிங்கு
கானம்பாடிக் களிப்புடனே கவலைமறந்து
காற்றிலே சிறகடிப்போம் வாராயோ?
============================
இராச. தியாகராசன்
பிகு:
====
ஆடகம் = சிறந்த பொன்
அயில்வேல் = கூர்மையான வேல்