வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாரதியோர் அறிவியற் கவிஞன்...

கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் "பாரதியில் அறிவியல்" என்ற நூலில், அவர் மகாகவி பாரதியின் அற்புத அறிவியல் எண்ணங்கள் பற்றிய கருத்துகளை கூறி இருக்கிறார். அவ்வெண்ணங்களின் தாக்கத்தால் நானியற்றி, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில், பாவேந்தரின் மைந்தர் மன்னர் மன்னன் முன்னர் வாசித்தளித்த பாடலிது! (11.12.2012 பாரதியின் பிறந்த நாளுக்காக)

=======================================================


=======================================================
பாரதியோர் அறிவியற் கவிஞன் (எண்சீர் அகவல் விருத்தம்)
=======================================================


இருந்தொருநாள் மனையாட்டி யவளுங் கேட்டாள்;

.....இன்றிருக்கு(ம்) அறிவியலை யழகாய்ப் பாட்டில்,
கரும்பினிய தமிழ்மொழியில் வடித்தா ருண்டோ;
.....கவின்மொழியில் கவியாலே கழல்வீ ரென்றே!
அரியதொரு அண்டவெளி மண்ட லத்தை
.....அணுவணுவாய்ப் பிளந்துவரும் யோச னையே
பிரிந்தியங்கு(ம்) அண்டவெளித் தூர மென்னும்
.....பெருநினைவைப் பாரதியில் காண்பாய் என்றேன்!

சுறுசுறுப்பாய்ப் பலகோடி கோள்க(ள்) எங்கும்

.....சோர்வின்றிச் சுழலுவதை உரைத்த விந்தை;
அறைகின்ற ஆணிகளை இங்கே செய்யும்
.....அமைப்புகளைக் காட்டுகின்ற தொழிலின் மேன்மை;
பறப்புமுணர் வண்டிகளும் பறந்த வானை;
.....படர்ந்தொளிரும் அண்டமிதில் கோடி யென்று,
முறைப்படியே இயங்குகின்ற விண்மீன் காட்டை,
.....முகிழ்த்திட்ட பாரதிப்பா உணர்வாய் என்றேன்!

மேலிருக்குங் காசிநகர் புலவோர்ப் பேச்சை,

....வீரமிகு நந்தமிழில் உடனே கேட்க,
சீலமொழி பெயர்த்திடுமோர் கருவி தன்னை,
.....சித்திரப்பா வடிவினிலே உரைத்த நேர்த்தி;
நீலவந்தி, விண்ணந்தி, கடலிற் றோன்றும்
.....நீரந்தி யத்தனையு(ம்) ஒன்றாய்க் கொண்ட,
கோலமதை சக்தியென உருவ கித்துக்,
.....கூறிடுமே பாரதிப்பா தெரிவாய் என்றேன்!

எண்ணறியா அளவினையே பரப்பாய்க் கொண்டு,

....எழுந்திடுமவ் வால்மீனின் வாலைக் கூட
நுண்ணியமாய்ப் படித்திருந்த தாலே பாட்டில்
.....நுவன்றிற்டா னதுவெற்றுக் காற்றே என்றே!
உண்மைகளை உரைத்திடுமவ் வானின் கல்வி,
.....ஓர்ந்துநம் மிளையோரும் கற்கச் சொன்னான்;
கண்ணெதிரில் அன்றிருந்து ஒளிரும் பொய்யைக்
.....கானலெனும் பாரதிப்பா புரிவாய் என்றேன்!

அயல்மொழியின் நல்லறிவு நூல்கள் எல்லாம்,

.....பெயர்த்திடுவோம் தீந்தமிழில் என்றே கூறி, 
பயமின்றி எண்டிசையும் பயணப் பட்டே,
.....பலகலையின் செல்வமெலாம் சேர்க்கச் சொன்னான்;
வியந்துனக்குச் சொல்கின்றேன்; கடலில் காணும்
.....வெந்நீரி(ன்) ஓட்டமதை, நிலவுந் தண்மை,

நயங்களையும் பாட்டினிலே செறிவாய்ச் சொல்லி,
.....நறுங்கவிதை நாட்டினுக்கே புனைந்தான் என்றேன்!

தெருக்களுள்ள நகரமைப்பின் முறைமைக் கல்வி,

.....செம்மையுறச் சாத்திரமாய்ப் பழகு என்றான்;
திரவுபதிச் சபதமெனும் அழகுப் பாட்டில்,
.....தடம்புரண்டு பயனின்றிக் கடலில் பாயும்
திருமகளாம் கங்கையவள்  கதையைச் சொல்லிச்
.....சிந்தையதே உருகிமனங் கனிந்த தாலே,
இருக்கின்ற நதிகளையே இணைத்து நாளும் 
.....இலகுபயிர் செய்யப்பாட் டிசைத்தா(ன்) என்றேன்!

வாணுதலின் நங்கையரும் இந்நா(டு) ஓங்க,

.....மனங்குவிந்து கடல்கடந்தே உழைக்கச் சொன்னான்;
காணுமொன்றை வேறொன்றா(ய்) ஆக்கும் வித்தை;
.....கல்லதனை மணியெனவே மாற்றும் சித்தை;
வீணானக் கற்பனையாய் நமக்குத் தோன்ற,
.....மிளிர்ந்திடுமோர் அழகுப்பா; ஆழ்ந்து பார்த்தால், 
நீணிலத்தில் இன்றைய அறிவி யல்தான்
.....நிகழ்த்திவிட்ட குளோனிங்காம்  அறிவாய் என்றேன்!


கணிப்பொறியும் மெல்லியமும் மேலை நாட்டுக்

.....கருவிகளென் றிருப்பதனால், ஆங்கி லத்தில்
பணிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை,
.....பாரதிரப் புடைக்குவன் கட்டு ரையில்;
பிணிபிடித்த கண்களிலே மருந்து(ம்) இட்டு,
.....பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்,
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டு மென்ற
.....கோணலறி வாளரெனத் தூற்று கின்றான்!

தேமதுரச் செழுந்தமிழில் கணினிச் சொற்கள்,

.....தேடுகின்ற நிலையறவே முயன்றி ளையோர், 
நாமினிமேல் புதுப்புனைவாய்ப் பலவும் சேர்த்து,
.....நந்தமிழைப் பள்ளிகளில் உயர்த்தச் செய்வோம்!
தாமதித்தால் தமிழ்மொழியை அறிந்தி டாத,
.....தமிழர்கள் வாழுகின்ற நாடீ தென்ற,
நாமமதை நாமடைந்தே நாடோர் தூற்ற,
.....நரம்பறுந்த வீணையென வாழ்வோ(ம்) அன்றோ!
====================================================== 
இராச. தியாகராசன்