புதன், 24 ஜனவரி, 2024

எம்புதுவை வாருங்கள்...

நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள்.  1977இல் இருந்தெனையொரு  பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக),  குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட,  போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!

என்றுமே எம்புதுவை பாவானம் தான்.  எத்தனை மரபியற் கவிகள்;  எத்தனைப் புதுக்கவிகள்;  எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்;  எத்தனைக் கலைமாமணிகள்;  எத்தனைத் தமிழ்மாமணிகள்.

==============================













==============================
பா - வானம் எம்புதுவை
=======================
மன்னவரை, மாடதனை, மாண்பெனவே கொள்ளாமல்,
மன்பதைக்கே வாழ்ந்திட்ட மாகவியின் பாச்சுவையே
என்புரட்சிப் பாவலனின் ஏற்றமிகு பாச்சொடுக்கே
இன்பமெனக்(கு) என்றிருக்கும் இன்னூராம் என்புதுவை!

பாருலகைப் பாடியநம் பாரதியாம் நாவரசைப் 
பாரதியின் தாசனவன் பாசமிகு பாவரசை, 
வேருடனே தாங்கிநின்று மேதினியோர் ஏத்துபுகழ்ப் 
பேரதனை எந்நாளும் போற்றிநிற்கும் என்புதுவை!

தெண்டிரை ஆழிசூழ் செம்புலத்து மண்ணிலே, 
வண்டமிழ் வண்ணமும், வள்ளையும் சிந்துமாய்த் 
தண்ணிலவுச் சொல்லடுக்கிச் சந்தமணப் பாப்புனைய, 
விண்முட்டுச் சங்கொலியாய் வீற்றிருக்கும் என்புதுவை! 
  
பண்ணொடு பாங்கெழிற் பாட்டியலின் சாற்றுடனே, 
எண்ணமுகிழ் எந்தமிழின் இன்பத்தேன் ஊற்றெனவே, 
வண்ணஞ்சேர் பாவொளிரும் மன்னுதமிழ் நாற்றெனவே, 
எண்ணிலாப் பாவரங்கம் ஏந்திநிற்கும் எம்புதுவை!

கண்ணிமைப்பில் கன்னற்பா கட்டுகின்றார் பாரய்யா;
மண்ணகத்து மாந்தரெலாம் வாழ்த்துகின்ற சீரய்யா;
தண்டமிழைத் தாழாது தாங்கிநிற்கும் பேரய்யா;
ஒண்டமிழர் வேங்கையென ஓங்கிநிற்கும் ஊரய்யா!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழின் சொல்லெடுத்துத்
தூவானந் தூவுகின்ற தூறலெனப் பன்னூறாய்,
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனையும்
பாவானம் என்புதுவை பார்!
=======================================
இராச. தியாகராசன்

பிகு:
====
மாடதனை - செல்வத்தை, மன்பதை - மண்ணுலகு, இன்னூர் - இனிய ஊர், தெண்டிரை - தெள்ளிய அலை, ஆழிசூழ் - கடல்சூழ், வண்டமிழ் - வளமைத் தமிழ், தண்ணிலவு - குளிர்நிலவு, தண்டமிழ் - தண்மை+தமிழ், கன்னற்பா - கரும்பனைய பாட்டு,  ஒண்டமிழர் - ஒளிர்கின்ற தமிழர், பா-வானம் - பாக்கள் நிறைந்த வானம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

வேய்குழல் மாயவா...

"என்னையா ஒரே சிவன் பாட்டாப் பாடியறுக்கிறாயே, உனக்கு இராமனையும்/ விஷ்ணுவையும் பாடவே தெரியாதா," என்று வலதுசாரி அன்பரொருவர் "அன்பாகவும் அறிவாகவும்" எனைப்பாடி வறுத்ததால், "அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு," என்று சொல்லி, இப்பாட்டை எழுதினேன். இனி வரும்நாளில், அந்தப் பாலாழி ஶ்ரீபத்மநாபனே நம்மையும், நம்மக்களையும், நம்நாட்டையும் காத்திடவே வேண்டுகிறேன்.
=========================================












=========================================
பாலாழி பத்மநாபா...
====================
சூதனும் பொற்கதிர்த் தூரிகை ஏந்தியே சோதியாய்க் காட்டிடுஞ் சுந்தர நந்தனே; நாதமாய் வேணுவும் நளினமாய் ஒலித்திடக் கோதுளம் காக்குமெம் குழலிசை விந்தனே! கமலினி பற்றிடும் கனிந்தகார் வண்ணனே; எமதுளம் உற்றிடும் எழிமிகு கண்ணனே; திமிரிலே உழல்நிலை தீய்க்குநர சிம்மனே; சமரிலே வென்றயெம் கோகுல மன்னனே! யாதவர் ஏத்திடும் இன்முகத் தூயனே; பூதலம் போற்றிடும் பூமகள் நேயனே; சீதளத் திருமகள் சீந்திடும் மாலனே; மேதினி காக்குமெம் வேய்குழற் கோலனே!
===============================
இராச தியாகராசன்

பிகு:
====
சூதன் - சூரியன், கோதுளம் - வெற்றுப்பதரான உளம், கார்வண்னன் - நீல மேக சியாமளன், சீந்திடும் - போற்றிடும்/ ஏற்றிடும், வேய்குழல் - மூங்கிற் புல்லாங்குழல்.  

திங்கள், 22 ஜனவரி, 2024

மகத்தான மானிடரே பாருங்கள்...

 தோன்றியதை எழுதுகின்ற இறைவனை நம்புகின்ற  பாவலன் நான்.  கள்ளங் கசடறவே, ஊதுவுலைத் தீயிலிட்டு, கவிநெய்யும் தூயமனப் பாவலன் நான். நட்பிலிருக்க வேண்டுமென்போர் இருந்து சுவையுங்கள்;  தேவையில்லை என்போர் போய்க்கொண்டே இருங்கள்!  என்னுடைய உடலில் உயிரிருக்கும் வரை, எவரென்னைத் ஏற்றினாலும், தூற்றினாலும் நிற்காதென் கவிமுரசம்;  என்றென்றும் அறத்தையும், மனித நேயத்தையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னுடைய சுற்றத்தவரே எனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; என்கவிதைகளைப் படிப்பதுமில்லை. என்றென்றும் அந்தச் சீர்காசியத்தன் ஒருவனின் அருளெனக்கு போதும்.
======================================
======================================
மகத்தான மானிடரே பாருங்கள்...
================================
செழிப்புடனே நம்மக்கள் சிறந்துலகில் எழுச்சியுற,
அழலெடுக்கும் கொடியோரின் அறமழிக்கும் ஆணவத்தை, 
குழிபறிக்கும் கோணலையே கூத்துவல்யன் சீரருளால், 
விழிப்புடனே வீரபத்ரன் மிதிதொறுப்பான் பாருங்கள்!

எம்மகளிர் எரிநெருப்பில் எக்கலிக்கும் எத்தரவர், 
வெம்பிவிழ வெறுங்கனவில் விம்முகின்ற ஏதிலியோர்
செம்மையுறச் செங்கோலும் சிறந்தோங்க சீறிச்சினந்தே
அம்பலத்தில் ஆடரசன் அனலெடுப்பான் பாருங்கள்!

மரித்துவிட்ட மாதரவர் மகத்தான பிடிசாம்பல், 
இருக்கின்ற மங்கையரை எருவாகித் தாங்கிடவே,
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிதழலை ஈசான்யன் ஏந்திடுவான் பாருங்கள்!

வாளெடுத்தே வீசுகின்ற மன்னவனோ நானில்லை;
தாளெடுத்துத் தூவலினால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு;
ஊளையிடும் நரிக்கூட்டம் ஒடுங்கிவிழ வேயுறு 
தோளிபங்கன் சூலத்தால் துளைத்தெடுப்பான் பாருங்கள்!

தங்கமலர்த் தங்கையரை சதிசெய்தே அழித்தோரை,
மங்கையரின் மானத்தை மாய்தெரித்தே சிரித்தோரை, 
நங்கையரை துய்த்தழித்தே நாசமும் செய்தோரை, 
சங்கரியின் சிவநேசன் சங்கறுப்பான் பாருங்கள்!
=====================================
இராச தியாகராசன்.

பிகு:
====
கூத்துவல்யன் - கூத்தன், எக்கலித்தல் - கெக்கலித்தல், 
ஈசானியன் - ஈசான மூலையின் தலைவன்(ஈசன்), தூவல் - மசி பேனா, 
வேயுறு தோளிபங்கன் - மூங்கிலொத்த தோளுடை மாதொரு பாகன்.
சங்கறுப்பான் - அழித்தொழிப்பான்.

திங்கள், 15 ஜனவரி, 2024

விளைகின்ற மாறா வினை....

நெருங்கிய ஒருவரின் ஈருந்து விபத்தினைப் பற்றி அறிந்த தாக்கத்தால் வனைந்த வரிகளிவை.  எவ்வளவு சொன்னால் என்ன? எவ்வளவு செய்தால் என்ன? மீண்டும் மீண்டும், தலைக்காப்பணிய இளையோர் தவறுகின்றனரே! 
======================================











======================================
விளைகின்ற மாறா வினை...
(கலிவெண்பா)
======================================
வாழ்வென்ப தார்வமொடு வாகாகத் தானமர்ந்தே
சூழ்நிலையைச் சுற்றமதைச் சோர்வகலத் தான்மறந்தே
மூழ்கியெழத் தித்திக்கும் மோகவலை காட்சியன்று: 
வாழ்ந்திருக்க வந்தவொரு மாண்புமிகு வாய்ப்பன்றோ?

சென்றதையே நீரெண்ணிச் சிந்தித்தே மீள்பதிவாய்
இன்றுளத்தில் கண்டிடலாம்! எந்நாளும் உண்மையிது!
அன்றங்கே சென்றிடவே ஆராலும் ஆகாதே
என்றவொரு மெய்யதனை எல்லீரும் தானுணர்வீர்!

மன்பதையில் வந்துவிட்ட மாந்தர்கள் வாழ்வினிலே
சென்றதெலாம் மீளாமல் சீக்கிரமே சென்றதுவே!
தன்கணினி மீட்டிரும்பத் தட்டுவிசை என்றிங்கே,
உன்வாழ்வில் ஏதுமிங்கே உண்டோமோ சொல்வீர்!

களிப்புடனே இன்றுதலைக் காப்பின்றிச் செல்லும் 
இளையோரே; எல்லா மெனக்கென்னு மிந்த  
வளையாத ஆணவத்தால் மாயந்தழித லென்றும்
விளைகின்ற மாறா வினை.
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மோகவலைக் காட்சி =  இனிய இணையக் காட்சி
எல்லீரும் = எல்லாரும்
மீட்டிரும்பு விசை = மீள்திரும்பு விசை (back space)

வாழ்த்து தரும் நாளிதுவே...

அனைவர்க்கும் இனிய உழவர்த் திருநாள், தமிழர்த் திருநாள், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் வாழ்த்துரைக்கிறேன்.  வாழிய வளத்துடன் பல்லாண்டு.
=========================================













=========================================
வாழ்த்துதரும் நாளிதுவே....
==================================================
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
கள்ளமிலா தன்புமிளிர் கனித்தமிழின் நாளிதுவே; 
பள்ளுடனே பாடிமகிழ் பைந்தமிழின் நாளிதுவே; 
தெள்ளுறுதித் தூயமனத் தென்தமிழின் நாளிதுவே! 

கண்மயங்கக் காதலரும் களிக்கின்ற நாளிதுவே; 
வெண்ணிலவு நங்கையரும் விழைகின்ற நாளிதுவே; 
பண்ணிலங்கக் காளையரும் பாடுகின்ற நாளிதுவே; 
எண்ணமுறை தீந்தமிழில் இசைக்கின்ற நாளிதுவே! 

மண்ணுலகின் மருவில்லா வண்டமிழின் நாளிதுவே; 
தண்ணிலவாய் ஒளிவீசும் தண்டமிழின் நாளிதுவே; 
நண்ணுகின்ற நல்லறத்து நற்றமிழின் நாளிதுவே; 
உண்மையொளிர் ஆற்றலுறை ஒண்டமிழின் நாளிதுவே! 

துள்ளிவருங் காளையுடந் தூதுவிடும் நாளிதுவே: 
அள்ளிவளர் அன்னைமகிழ் ஆர்தமிழின் நாளிதுவே; 
புள்ளியிடுங் கோலமெழிற் பொங்கலிடும் நாளிதுவே; 
வள்ளையொடு கும்மியுடன் வாழ்த்துதரும் நாளிதுவே! 
====================================================
இராச. தியாகராசன்

பிகு:
====
பள்ளு - ஆனந்தப் பாட்டு, பைந்தமிழ் - பசுமை+தமிழ், வண்டமிழ் - வளமை+தமிழ், தண்டமிழ் - தண்மை+தமிழ், நற்றமிழ் - நல்ல+தமிழ், 
ஒண்டமிழ் - ஓண்மை+தமிழ், தெள்ளுறுதி - தெளிந்த உறுதி, நண்ணுகின்ற - பொருந்துகின்ற, (வள்ளை/பள்ளு/கும்மி/தெம்மாங்கு - சிந்துப்பா வகையின).