செவ்வாய், 26 டிசம்பர், 2023

ஆழியே கேளாய்...

ஆழியின் சீற்றம் வந்தநாள் காலையில், ஒரு பாவரங்கில் இருந்தோம்.  புதுச்சேரி ஆழிநீர் உள்வாங்கியதைக் கேள்வியுற்றதும், உடனே கடற்கரைக்கு ஓடிச் சென்று, ஆழியது நீள உள்வாங்கி இருந்ததையும், சேற்று மண்ணில் சேல்கள் துடிப்பதையும் கண்டோம்.  இறங்கி நடக்கலாம் என்று தோழர்கள் சொன்னதை நானேற்கவில்லை.  ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக என்னுளம் பதறியது.  உள்வாங்கிய நீர் மீண்டும் திரும்பும் என்று கூட தோன்றியது.  அன்று மாலையில் நான் நினைத்தது மெய்யானது.  ஆனால் அதைவிடப் பேரிடர் சேதியாக இந்தோனேசியா, தாய்லாந்து,  இலங்கை நாடுகளில் ஏற்பட்ட பேரழிவும், நாகையின் சின்னாபின்னமும் வந்து உலுக்கியது.  அன்று நானெழுதிய பாடலிது.
===================================












===================================
ஆழியே கேளாய்....
==================
வங்கக் கடற்கரை வாழும் எம்மின;
மங்காப் புகழ்சேர் மறவர் தமிழினச்
சங்காய் முழக்கிய தமிழர் மாநகர்!
எங்கு மோடிய நாவாய் நிறைந்தே 
அலைகட லோரம் அழகின் உருவென
கலைகளும் புதுக்கியக் காவிரிப் பட்டினம்!
எத்தனை முறைதான் எழுந்தே பொங்கி,
முத்தாம் தமிழின் மேன்மை ஏடுகளுன்,
பானை வயிறே புடைக்க எடுத்தே,
ஆனைப் பசியற அள்ளித் தின்றாய்?

முன்னம் முடியா இலக்கியந் தேடியா,
இன்ப வாழ்விலுங் குளிர்ந்த சாவிலும்,
விரிகடல் நோக்கி விழியினைப் பதிக்கும்,
பரதவ மக்களும் புதைந்து போகவே,
சுடர்விழி மழலைகள் சிதைந்து போகவே,
விடியலில் மீண்டும் வெடித்தே எழுந்தாய்?
தாழாத் தமிழின் மேன்மை மறந்த,
சூழும் இருளாய்ச் சிந்தனை நிறைந்த,
கட்டும் அறுந்த கட்டு மரமென,
கெட்டே அழியும் குணமில் தமிழர்

வாழக் கண்டோ வெகுண்டே எழுந்தாய்?
கோழைக் கடலே தவறு செய்தாய்;
நெடித்தே எழுந்துன் நெடுந்தி ரையாலே
கடிதில் கொன்றது குற்ற மற்ற
பிஞ்சுகள்; பெண்டிர்; உன்றன் மக்கள்!
கெஞ்சி உனையே வேண்டு கின்றேன்!
தெண்டிரை சூழ்ந்த புவிய கத்தையே,
வண்டமிழ் வாழும் தென்ன கத்தையே,
வென்றே அழிக்க எழுந்தே சீறிநீ 
என்றுமே தொடாதே! என்றுமே தொடாதே!
=================================
இராச தியாகராசன்

பிகு:
====
நாவாய் - கப்பல், புதுக்கிய - புதுப் புனைவாக்கிய
மன்பதை - உலகு, குணமில் - பண்பில்லா,
நெடுந்திரை - நெடிய அலை, கடிதில் - விரைவில், 
தெண்டிரை - தெள்ளிய அலை.

நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...

இன்றைக்கு, ஏழைகளின் ஏந்தல், பொதுமையார்வலர், அன்பின் திரு இரா. நல்லக்கண்ணு புவியில் உதித்த நாள்.  சொத்து/ பதவி/ பட்டம்/ எதற்கும் மயங்காமல், காந்தியண்ணலைப் போலவே எளிமையுடன் வாழ்த்திருக்கும் அந்நல்லவரின் பிறந்தநாளில், இந்தச் சிறிய  பாவலன் வாழ்த்துரைக்கிறேன்.
=====================================












=====================================
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...
=====================================
குன்றிலிட்ட விளக்கெனவே கொள்கைக்காய் எந்நாளும்,
இன்றுலகில் வாழுமெங்கள் ஏந்தலே! - என்றும்உம்
பண்பதுவால் நீவிரிங்கு பாரதத்தை ஆள்கவென, 
ஒண்மைமிகு வண்ணஞ்சேர் ஒண்டமிழில் வாழ்த்துகிறேன்.

பற்றில்லா(து) இன்றேழை பாழைகட்காய் முன்நிற்கும்
பொற்பின் பொதுவுடமைப் போர்வேந்தே! - வற்றா
வளங்களுடன் என்று முயர்கவென இற்றைக்(கு)
இளமையொடு நின்றிலங்கும் எந்தமிழில் வாழ்த்துகிறேன்.

செந்தமிழிற் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கிச் 
சிந்துகவி நான்செய்தல் சீரெனினும் - நொந்தவர்க்காய்ச் 
சுற்றிச் சுழன்றிங்கே தொண்டாற்றுந் தூயவரே;
குற்றமிலா நும்பொதுமைக் கொள்கைக்காய் வாழ்த்துகிறேன்.

பீடுறையும் கொள்கையின் பேரிலங்கும் ஆர்வலரே;
பாடுறும் ஏழைகட்காய் பங்கெடுத்தோய்! - நீடுபுகழ்
யாவையுமே உம்மிடத்தில் ஈண்டுலகில் சேர்ந்திடத்தான்  
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்.
===========================================
இராச தியாகராசன்

பிகு:
===
ஏந்தல் - புகழுக்குரியோர், ஒண்மை - ஒளிர்வு, 
ஏழைபாழை - ஏழ்மையிலுழலும் தாழ்வுற்றோர்,
பொற்பு - சிறப்பு, இலங்குதல் - தனிப்பட நிற்றல்,
பீடு - புகழ், பாடுறும் - துன்பமுறும். 


செவ்வாய், 19 டிசம்பர், 2023

தேடுங்கள் மானிடரே தேடுங்கள்..

சாதிமதச் சழக்குகளைப் புறந்தள்ளி, பேர்புகழைப் பாராமல், புகழ்/பதவியொன்றே குறிக்கோளாய் வாழாமல், அறவழியே மேன்மையெனக் கொண்டு, மாசுகளில் உழலாமல், மமதையிலே வீழாமல், வித்தகியின் திருவடியைத் தேடுங்கள் உலகீரே!
====================================













====================================
தேடுங்கள் மானிடரே தேடுங்கள்.....
====================================
அறிவென்னு மற்புதத்தை ஆழ்ந்துணர வகையின்றி,
வெறுப்புவளர் சாதிமத  வேற்றுமையே மெய்யென்று,
முறிக்கின்ற மோகத்தில் மூங்கையென உழன்றுநிதம்,
அறமென்னு(ம்) ஆடகத்தை அழிப்பாரே தேடுங்கள்!

சேரிடமு மறியாமல், தேர்ந்தெடுக்கத் தெரியாமல்,
ஆரென்ன சொன்னாலு(ம்) அகமயக்கந் தலைக்கேறப்
பாரினிலே விருதுகளைப் பதவியினை வேட்டையிட்டு,
பேரன்பை மிதிக்கின்ற பேதைகளே தேடுங்கள்!

வரிக்கின்ற நட்புமெது; வாய்த்திருக்குஞ் சுற்றமெது?
எரிக்கின்ற ஏக்கழுத்த இறுமாப்பின் விளையாட்டால்,
அரிக்கின்ற வினையறவே, அழிவில்லா மோனத்தில்
சிரிக்கின்ற சீரணங்கின் திருவெழிலைத் தேடுங்கள்!

கூட்டமாய்க் கூடியே குற்றத்தில் முக்குளித்து,
வாட்டியே வேரறுக்கும் மமதையின் விளையாட்டால், 
மூட்டிவிட்டச் செந்தழலாம் முடிவென்னும் பாசத்தால்
ஆட்டுகின்ற காளியவள் அருளமுதைத் தேடுங்கள்!

பாதையதை மறந்திங்கு பாழ்வெளியாம் மயக்கமெனும்
போதையிலே குளியலிடும் பூவுலகின் மானிடரே;
சாதலெனும் மெய்யென்றே சத்திய மென்றுணர்ந்தே
ஆதியவள் நேரன்பை அன்றாடந் தேடுங்கள்!

குத்துக் காலிட்டக் குழலெழிலைத் தேடுங்கள்;
அத்தன் மயங்குகின்ற அன்புருவைத் தேடுங்கள்:
நத்தும் புல்லாக்கு(ம்) ஒளிரெழிலைத் தேடுங்கள்;
சித்துகள் புரிகின்ற சீருருவைத் தேடுங்கள்!

வித்தைகள் காட்டுகின்ற வித்தகியைத் தேடுங்கள்;
சித்தம் சிலிர்க்கின்றச் சித்தினியைத் தேடுங்கள்;
தத்தை தோள்சேர்ந்தச் சங்கினியைத் தேடுங்கள்;
நித்தம் நிறைவுதரும் நேரிழையைத் தேடுங்கள்!

பித்தம் அறுக்கின்ற பேரெழிலைத் தேடுங்கள்:
கத்தும் கடல்நோக்கும் கன்னிகையைத் தேடுங்கள்;
நித்தில மாலையணி நிரந்தரியைத் தேடுங்கள்:
புத்தம் புரியிலுறை பூவிழியைத் தேடுங்கள்! 

செறிவான வாழ்வுதருந் தேனம்மை தேடுங்கள்;
அறம்வளர் அன்புருவ அழகம்மை தேடுங்கள்;
கறையில்லாக் காலனுறை கண்ணம்மை தேடுங்கள்;
மறைவடிவி லாள்கின்ற மங்கம்மை தேடுங்கள்;

கோதில்லாச் சீரிலங்குங் கொற்றவையைத் தேடுங்கள்;
காதலொடு மாகாலன் காப்பவளைத் தேடுங்கள்;
மாதொரு பாகனவன் மாதவளைத் தேடுங்கள்;
ஆதியெனும் ஆனந்த ஆரமுதைத் தேடுங்கள்!

ஈசனவன் இல்லாளை இடையறாது தேடுங்கள்; 
மாசில்லாச் சோமனுறை வஞ்சியினைத் தேடுங்கள்;
ஊசிமுனை தவம்செய்யு(ம்) உலகம்மை தேடுங்கள்;
சாசுவத தெய்வமாஞ் சக்தியைத் தேடுங்கள்!

சிரிக்கின்ற சங்கரியிஞ் செங்கழலைத் தேடுங்கள்;
கருணையுடன் காக்கின்ற கருமாரி தேடுங்கள்;
வரமருளும் மாரியெங்கள் வாரிதியைத் தேடுங்கள் 
திருவளர் செல்வியின் திருவடியைத் தேடுங்கள்!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
அத்தன் - சீர்காழி அத்தன்
நத்து/ புல்லாக்கு - பழந்தமிழ் மகளிரின் அணிகலன்.
தத்தை - கிளிப்பறவை
புத்தம்புரி இல் - புதுமையான வீடு
ஏக்கழுத்தம் - தானெனும் அகந்தை (ஈகோ)
இறுமாப்பு - தற்பெருமை
பேதை - அறிவிலி
ஆடகம் - பொன்
பாசத்தால் - பாசக் கயிற்றால்
மூங்கை - ஊமை
கோது - குற்றம்