செவ்வாய், 28 நவம்பர், 2023

வளஞ்சொரியும் பாப்புனைய வாரீர்...

நந்தமிழரே!  வளஞ்சொரிகின்ற பாப்புனைய வாரீர்.
=================================================




=====================================
வளஞ்சொரியும் பாப்புனைய வா!
============================================
துள்ளிவருங் குற்றாலத் தூயமலைச் சாரலதாய், 
வெள்ளியிழைப் போல்மின்னும் விண்முகிலின் தூரலதாய், 
வெள்ளைநிறத் தெண்டிரையின் மீனிலங்கு வாரிதியாய், 
அள்ளியிட்ட நித்திலத்துப் பொன்வண்ணத் தாரகையாய், 

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தை வார்த்தே, 
அடிவானஞ் சொட்டும் அடரழகைச் சேர்த்தே, 
விடிவெள்ளி போல்நித்தம் பொன்னெழிலும் பூக்க, 
முடிபுனைந்த மூவேந்தர் முத்தமிழைக் காத்ததுபோல்,

பொற்றமிழைக் காக்கவிங்கு பொற்பனைத்தும் பெற்றிலங்கி, 
வெற்றித் தமிழோங்க வேங்கையென முன்னெழுந்தே, 
வற்றாத சீரிளமை வாய்த்திருக்குந் தாய்மொழியாம், 
நற்றமிழை நந்தமிழர் நாளுமிங்கே போற்றி, 

நெளிவில்லா நேர்மையொடு நெஞ்சகத்தால் ஏந்தி,
தெளிவாகச் சிந்தித்தே செந்தமிழில் நீந்தி, 
அளிக்கின்ற அன்னையவள் அன்பினையே சீந்தி, 
வளஞ்சொரியும் பாப்புனைய வா.
============================================
இராச தியாகராசன்

பிகு:
=====
நித்திலம் - ஆணிமுத்து
தெண்டிரை - தெள்ளிந்த அலை
அடரழகு - நிறைந்த எழில்
பொற்றமிழ் - பொன்+தமிழ்
பொற்பு - சிறப்பு
சீந்தி - போற்றி.

செவ்வாய், 21 நவம்பர், 2023

தீக்கவியோ இவன்....

சிந்துவேந்தனின் நினைவு நாள் (செப்தெம்பர் 11ஆம் நாள்). 
====================================













====================================
தீக்கவியோ இவன்
(கட்டளைக் கலித்துறை)
=======================
வேந்தர் களின்புகழ் வீச்செ னவேதமிழ் மேகமென,
பூந்த ளிரும்நிறை பூம்பொ ழிலாய்ப்பாப் பொழிந்திடவே 
தீந்த மிழுந்தருந் தேன முதாய்ப்பலர் சீந்துகின்ற 
ஏந்த லெனுமுயர் ஏழு லகப்புகழ் ஏந்திவிட்டாய்! 

ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் போற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவி சாற்றிவிட்டாய்!

மாத வமாய்வளர் ஆற்ற லுடந்தமிழ் மாந்தியதால்
காத லனாயுயர் கண்ண னிடம்மையல் காட்டியதால்,
வீதி யுலாவரும் தேர தனைநிகர் வேந்தனென, 
மேதி னியேபுகழ் கோகி லமாயிசை மீட்டிவிட்டாய்!

சூது களையனற் சூரி யனாய்நிதஞ் வேட்டெடுத்தே, 
பூத லமுமுனை போற்றி டவேதமிழ் பெய்துநிதம், 
ஏதி லியாயழு மேழை களின்பகை சுட்டெரிக்க, 
நீதி யதைச்சொலும் நேர்மை யெனுங்கவி நெய்துவிட்டாய்!

தேய முயர்ந்திடச் சீர்க ளியற்றிய தேன்கவியே!
தூய மனம்பெறச் சோர்வை யகற்றிடுந் தூண்கவியே!
சீய மெனமதச் சீக்கை எரித்திடுந் தீக்கவியே! 
நீயி னிதுஞ்சிட நேர மிலையெனும் நேர்க்கவியே!

தீமை யெரிந்திடத் தீர்வு மெழுதியத் தேர்க்கவியே! 
பூமி யதன்கொடுங் கோல முரைத்திடும் போர்க்கவியே!
சீமைய ளந்திட வேண்டிய நூதனச் சீர்க்கவியே! 
ஆமினி வெஞ்சினக் கால மிதுவென ஆர்க்கவியே!
======================================
இராச தியாகராசன்.

பிகு: 
சீந்துகின்ற = போற்றுகின்ற, கோகிலம் = குயில்

வியாழன், 16 நவம்பர், 2023

சலிக்காது உழைத்த சங்கரையா..

நானிங்கே பேசுவது திராவிட அரசியலில்லை; தமிழ் தேசிய அரசியலில்லை; எதிர்க்கட்சியான பேராயாயர் கட்சியின் குற்றச்சாட்டில்லை; பொதுவுடைமை கட்சியின் கோரிக்கையுமில்லை.  நான் பேசுவது அறம்.  இதற்கும் முட்டுக் கொடுக்க மூளைச் சலவை செய்யப்பட்டவர் ஆயிரம் பேர் வரலாம்.  என்ன செய்வது நாட்டின் நிலை அப்படி இருக்கிறது.  

விடுதலைப்போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற வீரரென்றாலும் சரி, நாளும் மக்களுக்குழைத்த மாமனிதர் ஆனாலும் சரி, வெறும் வெள்ளைத்தாள் முனைவர் பட்டக் கோப்பில் கூடக் கையெழுத்திட மாட்டேன் என்னும் அரசின் ஆளுநர்க் கொள்கை.  மேதகு ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமை இருக்கலாம்.  ஆனால் ஒரு ஈகியருக்கு வெள்ளைத்தாள் பட்டமளிப்பது அவ்வளவு துன்பந் தரும் செயலா?  உள்ளம் மிக வருந்துகிறது.  தகைசால் அறிஞர்திருமிகு சங்கரையா இறந்த சேதி கேட்டு என்னுளத்தில் முளைத்த ஒரே வினா இது.  நீங்கள் எந்த கொள்கை, எந்த கட்சி, என்றாலும், ஒரேயொரு நொடி சிந்தியுங்கள், இது சரியாவென்று. 

இஃதென்னுடைய பக்கம் எனக்கு அறமெனப்பட்டதை எழுதுகிறேன்.  உள்ளம் வருத்தும் இரங்கல் சேதியில், ஒரு செயலின் அறமற்ற தன்மையை, கட்சி கட்டிக் கொண்டு, முட்டுக் கொடுக்கவரும் தோழமை/சுற்றத்தவர் அவரவர் பக்கத்தில் செய்து கொள்ளுங்கள்.  என்ன சொல்லுவீர்கள் நானொரு திராவிடன்/ கொம்மி/ நக்சலைட்டு/ டம்ளர்/காங்கி கசுமாலம் என்றுதானே.  சொல்லிக் கொள்ளுங்கள்:
===================================
"நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவன்நான்;
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் எனக்கென்றும்!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியெனை யடித்தாலும்
அவனியிலே எனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநிதம் 
உவகையுடன் வாழுமெனக்(கு) ஓங்கலதும்  என்வசந்தான்!"
===================================

அவர்தம் மறைவால் அல்லலுறும் அவரதம் தொண்டர்கள், தோழமை, சுற்றத்தோர் அனைவருக்கும் என்றன் உளம்பற்றிய ஆழ்ந்த இரங்கல்.  இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வல்லமையை எல்லாம் வல்ல வித்தகியே அளித்திட வேண்டுகிறேன்.
===================================













===================================
சலிக்காது உழைத்த சங்கரையா
===================================
நந்தமிழ் விளங்கெழிலாய் நலந்தருகும் இந்நாள், 
எந்நாள், பொன்னாள் என்றெல்லாம் எண்ணாமல் 
இந்நாட்  டேழைகளின் ஏந்தலெனச் சங்கரையா, 
முந்தி முழுநேரம் முகஞ்சலிக்கா துழைத்தீரே!

மமதையுடன் நானென்னும் மந்தமன மேட்டிமையை, 
அமைதியோ டுறுதிமிக அறுத்தெறிந்து வாணாளில், 
நமதிந்திய மாந்தரிங்கே நன்னலமாய் வாழநிதம் 
சமதைமெனும் பொதுமைவழி தத்துவப்போர் புரிந்தீரே!

மேவுநிலா இறைக்கின்ற வெளிச்சவிதை தருகின்ற, 
பாவியத்தைப் பாட்டியலை பாவழங்கும் பாவினிப்பை,  
காவியத்தைக் கனவுலாக் கவிவடிக்கக் கவிஞருண்டு;
பூவுலகின் ஏழைகட்காய்ப் பொங்கயினி எவருண்டு?

ஞாலத்தில் ஏதிலிகள் நெஞ்சகமே நெக்குவிடக் 
கோலவெழிற் குவலயத்தோர் குன்றியே குமைந்துருகக் 
காலமெனுங் கரையான் கரைத்தரித்தே தின்றதுவோ?
சால்பறவே மூப்பதுவும் சாக்காடும் வென்றதுவோ?
 
வனைகின்ற வரிகளிலே வெறுமையதும் சுழன்றுழலப் 
புனைகின்றப் பாக்களிலே பொலிவதுவும் கழன்றுவிழ, 
நினைவுகளில் மங்குமுளம் நெருப்பினிலே துடித்தழுகக் 
கனலொன்றின் சுடரொளியுங் காற்றேறிச் சென்றதுவோ?
===============================
இராச தியாகராசன்

பிகு:
ஏந்தல் = தலைவர்/ சான்றோர்,
ஏதிலி = ஏதுமற்றோர்/ ஆருமில்லார்
நெக்குவிட = விரிசலேற்பட
குமைதல்= உள்ளுக்குள் உருகியழுதல்
குவலயம் = புவியகம்/ புவியகத்தோர்
சால்பு = சிறப்பு/ பெருமை
மூப்பு = முதுமை
சாக்காடு = இறப்பு 

திங்கள், 13 நவம்பர், 2023

தூந்திரத்தில் வாழ்குவரோ...

அனைத்தையும் அழித்துவிட்டு, மக்களையும் மாய்த்துவிட்டு, தூந்திர வெளியில் வாழ்வாரோ..
================================

================================
தூந்திரத்தில் வாழ்குவரோ?
==========================
நாடுகின்ற நியாயங்கள் நான்காயிரம் இருக்கலாம்;
தேடுகின்ற நீதியுனைத் தீயெனவே தகிக்கலாம்;
மூடிவைத்த கேள்விகளும் முன்னெழுந்தே எரிக்கலாம்;
ஆடுகின்ற ஆசதுவும் அனலெனவே அரிக்கலாம்!

அடுத்தவரின் உயிரழித்தே அழவைக்கும் அதிகாரம்
கொடுத்தவர் யாருனக்கு? கூற்றுவனா நீயிங்கு?
காடுகளில் வாழ்கின்ற கானுயிரும் கணக்குடனே
கூடிநிதம் தன்பசிக்குக் கொல்லுகையில் ஐயகோ!

காழ்ப்பதனால் நாடழித்தே காடாக்கி அழிப்போரும், 
பாழ்குணத்தால் பாலையெனப் பாரழித்தே பார்ப்போரும், 
வாழ்கின்ற மக்களையே வஞ்சினத்தால் மாய்ப்போரும், 
ஊழ்த்துவிட்ட உலகினிலே ஒற்றுமைக்கும் வழியேது?

வேந்தனென மற்றவரை வீழ்த்தியிங்கே மார்த்தட்டி,
மாந்தரின மத்தியிலே வாழ்கின்ற பேர்மட்டும்
சாந்தியதும் சத்தியமும் செத்துவிட எவருடனே
தூந்திரத்தில் வாழ்குவரோ சொல்லிடுவீர் மானிடரே!
==================================
இராச தியாகராசன்

பிகு:
தூந்திரவெளி = ஆளில்லாப் பனிவெளி.

புதன், 8 நவம்பர், 2023

வாணியின் வரம்...

2012இல் எழுதிப் பகிர்ந்த கலிவெண்பா இந்தப் பாடல்.   எனக்குள் என்னை நானே தேடிய போதில், கலைவாணி தந்த வரம்.  இரண்டு பத்திகள் சேர்ந்திருக்கிறேன். (இன்னமும் தேடுகிறேன் என்பது வேறு!!)
===================================












===================================
வாணியவள் தந்தாள் வரம்...
===========================
இளமையே அள்ளும் எழிலார் தமிழால், 
வளமையே துள்ளும் மணக்கும் வரியால்,   
உளமே கவர்ந்த உரிமைக் கவிகாள்; 
தளராத சொல்லின் தழல்நிகர்ப் பாவலன்நான்!

செந்தமிழின் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கி, 
நந்தமிழில் நாளெல்லாம் நற்றமிழ்ப் பாவெனவே 
சிந்துகவி செய்கின்ற தீந்தமிழின் ஆர்வலரே; 
சந்ததமாய் சிந்துமெழிற் றண்டமிழின் பாவலன்நான்!

உள்ளமே பொங்கும் உணர்வின் வழியிலே, 
வெள்ளமாய் மின்னும் வெளிச்சப் பொறியெனத் 
துள்ளிடுஞ் சொல்லைச் சொடுக்குங் கவிகளே;
பொள்ளிடும் பாட்டாற் பொசுக்கிடும் பாவலன்நான்!

பாணனில்லை பல்கருவிப் பண்ணிசைக்க; மீனவனாய்த்
தோணியுடந் துள்ளுமீன் தூண்டிலிடும் ஆளுமில்லை;
தூணதுவே தூளாகத் தோன்றிவிட்டச் சிங்கனில்லை;
காணுவதில் ஆழ்ந்தே கவிபாடும் பாவலன்நான்!

உள்ளத்தில் தோன்றுவதை ஊதுவுலைத் தீயிலிட்டுக்
கள்ளமெனுங் குற்றங் கருங்கசடு தான்பொசுங்க 
அள்ளும் அழகாரும் ஆசுகவி நெய்திடவே 
துள்ளித் துடிக்கின்ற தூயமனப் பாவலன்நான்!

வெற்றிகளைத் தேடியிங்கு வேட்டையிடும் மன்னனில்லை;
உற்றதெனச் செல்வத்தை; ஊர்மயங்கும் பேரழகைப்;
பெற்றுவிட ஆர்வமில்லை; பேர்புகழில் நாட்டமில்லை;
கற்றதமிழ் ஓங்கிடத்தான் காத்துநிற்கும் பாவலன்நான்!

ஆணிப்பொன் நட்பென்னும் அன்பருவிச் சாரலிலே, 
மாணிக்கச் செந்தமிழில் மாலையென நான்தொடுத்தே, 
நீணிலத்தோர் தான்மயங்க நீள்கவிதை நான்வனைய,
வாணியவள் தந்தாள் வரம்.
========================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 7 நவம்பர், 2023

பொழிலுருவே வாழ்வியலோ...

உளமே மொழியாய், முழவே வழியாய், வளியே இசையாய், சிவமே அறிவாய், எழிலே இதமாய், கரையே மடுவாய், கலையே உறவாய், அழலே அழகாய், பொழிவே அமுதாய், பொழிலே உருவாய் அமைந்த வாழ்க்கை.
=============================













=============================
பொழிலுருவே வாழ்வியலோ...
=============================
ஓளியே விழியாய், விழியே உளமாய், 
உளமே மொழியாய், மொழியே தமிழாய், 
தமிழே உழவாய், உழவே முழவாய், 
முழவே வழியாய், வழியே வெளியாய், 

வெளியே உள்ளாய், உள்ளே வளியாய், 
வளியே இசையாய், இசையே புவியாய்ப் 
புவியே நிறமாய், நிறமே சிவமாய்ச் 
சிவமே அறிவாய், அறிவே தழலாய்த் 

தழலே உணர்வாய், உணர்வே எழிலாய், 
எழிலே இதமாய், இதமே கருவாய்க் 
கருவே கடலாய், கடலே கரையாய்க் 
கரையே மடுவாய், மடுவே மலையாய், 

மலையே உலகாய், உலகே கலையாய்க் 
கலையே உறவாய், உறவே நிழலாய், 
நிழலே நிசமாய் நிசமே அழலாய், 
அழலே அழகாய், அழகே செழிவாய்ச்  

செழிவே செறிவாய் செறிவே பொழிவாய்ப்  
பொழிவே அமுதாய் அமுதே மழையாய், 
மழையே உலகாய், உலகே பொழிலாய்ப் 
பொழிலே உருவாய், உருவே வாழ்வோ!
===================================
இராச. தியாகராசன்.

வியாழன், 2 நவம்பர், 2023

இறையென்னும் மெய்ம்மை...

எங்கும், எதிலும், ஏழையின் சிரிப்பிலும், சிந்தனைத் தெளிவிலும், தனிமையின் இனிப்பிலும் இருப்பவர் இறைவன்....
==============================










===============================
இறையென்னும் மெய்ம்மை....
==============================
இறைவன் என்பவர், 
பாடலில் பிறப்பார்; 
ஆடலில் தெறிப்பார் - அப்படிப் 
பாட்டிலே, கூத்திலே 
பளீரென்றுஞ் சிரிப்பார்!

இறைவன் என்பவர், 
துரும்பிலும் உறைவார்; 
தூணிலும் மறைவார் - இப்படித் 
தூணுக்குப் பின்னிருந்தே 
எட்டியும் பார்ப்பார்! 
=======================
இராச. தியாகராசன்.

கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி...

இயற்கையெழிலால் நாவினில் பண்ணும் துள்ளும்; நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளும்; காதலதை அள்ளியிட்டு என்னுளத்தை அள்ளும்; உள்ளமதும் எத்தனையோ உள்ளும்; அஞ்சுகமுன் நினைவோ உள்ளத்தை பொள்ளும்; பொழிந்திட்ட முத்தங்கள் முள்ளெனவே நுள்ளும்; தேவதையாள் தேன்குரலோ நாவினிக்கும் நாதத்தை விள்ளும்!
========================================












========================================
கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி.....
==================================
பாவினத்தைப் பாட்டியலைப் பாவையரைப் 
பூவினத்தைப் பூம்பொழிலைப் புள்ளினத்தை 
ஆவினத்தை, ஆதவனைக் காண்கையிலே, 
நாவினிலே பள்ளுந்தான் துள்ளுதடி! 

வித்தகியின் விளையாட்டு வித்தையென, 
முத்தமிழும் நிறைந்திட்ட சித்தமதில், 
சித்திரத்துக் கயல்போலே பளிச்சென்று 
நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளுதடி! 

புள்ளியிடத் தோன்றுமெழிற் கோலமதாய், 
வெள்ளிநிறப் பொன்நிலவோ பூமியிலே, 
கள்ளதனின் போதைநிகர் காதலதை 
அள்ளியிட்டே என்னினைவை அள்ளுதடி!  

சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல், 
பித்தன்புத் தூரிகையாய்த் தீட்டுகின்றப் 
புத்தமுதக் காரிகையே உன்னெழிலால், 
எத்தனையோ உள்ளமதும் உள்ளுதடி! 

கொஞ்சியவள் விஞ்சியதால் காதலது 
மிஞ்சியநான் கெஞ்சியதும் எண்ணமெலாம்,
தஞ்சமென அந்நினைவுத் துயரமதும், 
அஞ்சுகமே என்னுளத்தைப் பொள்ளுதடி! 

பித்தனென நான்மயங்கிக் காய்கையிலே, 
நித்தமுமென் நெஞ்சகமே நெக்குவிட, 
சித்தினிநீ அன்றுதந்த செவ்விதழின் 
முத்தமெனை முள்ளெனவே நுள்ளுதடி! 

பாவனமாய்ப் பூத்தொளிரும் பாவையெனுந் 
தேவதையாள் தேன்குரலில் பாட்டிசைத்தப் 
பூவிதழே என்னுளத்தில் நாள்முழுதும்
நாவினிக்கும் நாதமதை விள்ளுதடி!  
===================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் = பறவையினம் 
நித்திலம்= ஆணிமுத்து
நுள்ளுதல் = கிள்ளுதல்
உள்ளுதல் = என்றும் நினைந்துருகல்
அஞ்சுகம் = தத்தை
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பொள்ளுதல் = தழலாய்ப் பொசுக்குதல்