புதுச்சேரி

வரலாற்றுக்கு  முந்தைய புதுச்சேரி....
===================================
அகழ்வாய்வுச் சின்னங்கள்

கடலில் மூழ்கியிருந்ததாக ஆய்வாளர்களால் கருதப்படும் புதுச்சேரிப் பகுதியில் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதயினம் வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. அண்மையில் புதுவையிலுள்ள பொம்மையர்பாளையத்தில் கிடைத்த தொல் மனிதக் கூட்டை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தபோது அதன் காலம் ஒன்றரை இலட்சம் ஆண்டுகளெனக் கண்டறியப்பட்டது. எனவே, அதற்கு முன்பிருந்தே மனித இனமிங்கு வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் உலகில் மனிதன் முதன்முதலில் வாழத் துவங்கிய இடங்களில் ஒன்றாகப் புதுச்சேரிப் பகுதியையும் குறிப்பிடலாம்.

புதுச்சேரிப் பகுதிகளில் அவன் விட்டுச் சென்றுள்ள புதைகுழி, கல் வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், மணிகள், மட்பாண்ட ஓடுகள், சுடுமண் பொருட்கள் ஆகியவை வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனித வாழ்க்கை நிலையைக் காட்டுகின்றன. புதுச்செரியைச் சேர்ந்த ஊர்களில் மனிதன் குடும்பமாக வாழ்ந்ததற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. இவற்றில் சுத்துக்கேணியில் கிடைத்த புதைகுழிகள் பெருங்கற்காலத்தைச்
(Megalithic Period) சேர்ந்தவையென வரலாற்றறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுத்துக்கேணிக்கு மிக அருகிலுள்ள தமிழகப் பகுதியான திருவக்கரை பழைமையிலும் பழைமை வாய்ந்த ஊராகும். இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்கள் "படிவப் பாறை மரங்களாகிக்" (fossilized trees) கிடக்கின்றன. அங்குள்ள செங்கமேடு, கடகம்பட்டு ஆகிய ஊர்களும் பழைமை உடையவையாகும். இதே போன்ற கல்மரங்கள் புதுச்சேரிப் பகுதியின் வடக்கிலுள்ள காலாப்பட்டிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அதிலொரு கல்மரம் 2.8 மீட்டர் நீளமும் 0.75
மீட்டர் விட்டமும் கொண்டதாகும்.

திருவக்கரையில் பெருங்கற்கால மனிதனின் சவக்குழியில் கருங்கற்களை வட்டமாக அடுக்கி வைத்து அடையாளப் படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கற்களை வட்டமாக அடுக்கி வைத்துள்ளதைக் கல்வட்டை அல்லது திட்டை என்றும் கூறுவர். நீர்வளமும், நிலவளமும் கொண்ட சுத்துக்கேணியில் கிடைத்த நீண்ட ஈமப்பேழை
12 கால்களைக் கொண்டதாகும். தொட்டி போன்ற நீண்ட ஈமப்பேழையில் பிணத்தைப் புதைத்து வைத்துள்ளனர். அங்கு வாழ்ந்த மக்கள் வண்ணந்தீட்டிய, வேலைப்பாடமைந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அழகிய மணிவகைகள் (Agate), வெண்ணிற மணிக்கல் (Chalcedony), பாறைப்பளிங்குக் கல் (Rock crystal)
ஆகியவற்றைக் கொண்டு மணிகள் செய்து அணிந்துள்ளனர். முத்திரைப் பாளையத்தில் ஈமப்பேழைகளையும், முதுமக்கள் தாழிகளையும், மட்பாண்ட ஓடுகளையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அங்கு கிடைத்த ஈமப்பேழைகளில் போர்க்கருவிகள், இரும்புப் பொருட்கள், சுடுமண் மணிகள், சுடுமண் பொருட்கள் பல கிடைத்துள்ளன

தென்னார்க்காடு மாவட்டம் தொழுதூரில் கிடைத்த நீண்ட ஈமப்பேழை
(Trap dykes),
மயிலத்தின் அருகில் கிடைத்த ஈமப்பேழை, செங்கமேட்டுப் பகுதியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் யாவும் புதுச்சேரியில் கிடைத்தவையோடு ஒத்துப் போகின்றன. ஒரே வகையான பண்பாடுள்ள மக்கள் அருகருகே வாழ்ந்துள்ளனர். புதுச்சேரியின் முந்தைய வரலாற்றினை ஆய்வு செய்தவர்கள், "புதுச்சேரியின் தொன்மை நாகரிகம் மைசூர் நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்புடையது" எனக் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் இறந்தவர்களின் உடல்களை கருப்பு நிறம் அல்லது கருப்பும் சிவப்பும் கலந்த நிறங்கொண்ட தாழியில் புதைத்துள்ளனர். கற்கால மக்களின் வழக்கம், பிறகு தாழியில் இடும் பழக்கமாக மாறியது என்கின்றனர். இந்தியத் தொல்லியல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டது அரிக்கமேடு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை வேலியமைத்துப் பாதுகாத்து வருகின்றனர். அவ்விடங்களில் அரிய மட்பாண்ட ஓடுகள், செங்கற்கள், அரிட்டன் ஓடுகள், அம்போரா கூர்முனைச் சாடிகள், மணிகள் சங்கு வளையல்கள் ஆகியவை கிடைத்து வருகின்றன. கருப்பும் சிவப்பும் கலந்த மட்பாண்டங்கள் கைவினைத் திறத்தைக் காட்டுகின்றன.

ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம்
2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads)
செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.

ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள்
(Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads).
கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.
அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி:
புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.
சங்க இலக்கியமும் புதுச்சேரியும்:
புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.
======================================================================================
நன்றி: "புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட வரலாறு"
பள்ளிக் கல்வித் துறை
புதுச்சேரி அரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக