புதன், 8 ஜனவரி, 2020

நில்லாது அழியும் நிழல்....

ஆதிசிவன் நீறென்னும் அற்புதத்தால், நில்லாதழியும் நிழலாம் இப்பிறப்பில், அழலாடும் வேளையிலே, உடன் வருவதச் சோதிசிவன் நாமமெனுஞ் சொல்.  மாறாப் பிறப்பென்னும் செருபிணி சிக்கலை எரித்தழிக்கும் மாதொரு பாகனவன் தூய அருளென்னும் மருந்து. அந்த இறுதி அழலில் வேகும் போது, கூட வருவதும் சோதிசிவன் நாமமெனுந் துணையே! அந்தப் பெருந்துறை வல்லானே நமக்கென்றென்றுங் காப்பு!

ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையொன்று எழுதத் தொடங்கினேன்; முதலில் எட்டு மட்டுமே இயன்றது. பின்னர் மூன்றைச் சேர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.  இதுவரைத் தட்டியே போனது.  (அவன் சொல்லாமல் ஏதென்றன் செயல்?) அந்த வேதபுரி ஈசனருளாள் 10 பாக்களும் இன்று (22/1/2024) முடித்தேன்.
=====================================












=============================================
மாதொரு பாகனுன்றன் மருந்தே துணை...
=============================================
ஆதிசிவன் நீறென்னும் அற்புதமே இங்கிருக்க,
நாதியற்றோர்க்(கு) ஏதும் நலிவாமோ? - மீதிவரு
வேதனையை வேரறுக்கும் வீங்கெழில் மின்னிடை
மாதொரு பாகன் மருந்து. (1)

மருதீசன் கண்ணசைக்க, வாய்த்த பிறப்பாம்
செருபிணிச் சிக்கலுந் தேயும்! - பெருந்துறை
வல்லானப் பித்தனால் மையிருள் நீங்கவிங்கு
நில்லா தழியும் நிழல். (2)

நிழலோ நிஜமோ நிகழ்வோ நினைவோ
அழகோ அணங்கோ அறியேன்! - அழலாடும்
போதுதுணை ஏதோ புகல்வீர்! வருவதென்றும் 
சோதிசிவ நாமம் சுழன்று. (3)

சுழன்றே ஆடுபிறைச் சூடா; கயிலை
எழில்மலை அம்பலத்தி(ன்) ஈசா! - அழிவின் 
புறமழிக்கப் பொள்ளிடும் பொம்மலே! நீதான்
மறமெரித்தே காக்கும் மழு. (4)

மழுவும் அழலும் மானுடன் சூலம் 
வழுவிலா தேந்திடும் மன்னா! - அழுகும்
குழியைக் கடப்பேனே கூத்தா உன்றன்
பழுதிலாப் பாதம் பணிந்து. (5)

பணிந்துனைப் பற்றவே பாசக் கடலை
துணித்திட வைத்திடுஞ் சொக்கா! - மணியெனப்
பாம்பணி மாதொரு பாக னுனதருள்தான் 
ஆம்பல் வனத்தின் அமிழ்து. (6)

அமிழ்தமும் வேண்டா; அரசணை வேண்டா; 
பொழிந்திடு அத்தனருள் போதும்! - அழிக்கின்ற 
பித்தமெரி புன்மையெனும் பேதைமையாம்  எண்ணமற  
நத்துமெனை காப்பாய் நயந்து. (7)

நயத்தகு நாயகனாய் நனவிலுறை நாதா;
வியத்தகு வித்தகியின் வேதா! - செயமெலாம்
பெய்கின்ற வாதவூர் பெம்மானே! போலிமுகப்
பொய்யென்னும் பூசனைப் பொசுக்கு! ( 8 )

பொசுக்கிடு முக்கண்ண பூதா! நமனும் 
வசப்படா ஆரண்ய வாசா! - தசமுகன்
ஏத்திய நீலகண்ட ஏகா! இருளுழலும் 
கூத்தர் கோடகலக் கொளுத்து! (9)  

கொளுத்தித் திரிபுரக் கோட்டை யழித்தே
களிப்பை யளித்த காலா! - வளமளித்து
காக்கவினி யுன்றன் கருணை அருளவே 
ஆக்கமுடன் வந்திடுவா யா?
==============================================
இராச. தியாகராசன்

பிகு:
====
நீறு - சாம்பல், வீங்கெழில் மின்னிடை - மிக்கவெழில்  மின்னுமிடை, மாதொரு பாகன் - உமையொரு பங்கன், முழவு - பறை, மருதீசன் - மருதீச்சுவரன், பிறைசூடா - குறைமதி சூடியவன், புன்மையெனும் - கீழ்மையெனும்,  பேதைமை - அறிவின்மை, மறம் - பாவம்/ தீமை, மானும், மழுவும் - ஈசனின் கரத்தில் இருக்கும் சின்னங்கள், பொம்மலே - அழகே, துணித்திட - துண்டித்திட, ஆம்பல்வனத்தோன் - ஆம்பல்வனத்தின் அரனே, நத்துதல் - விரும்புதல். வித்தகியின் வேதன் - பார்வதி மணாளன், பொய்யெனும் பூசனை - பொய்யான பக்தி.