ஞாயிறு, 28 நவம்பர், 2021

ஆட்டங்கள் தொடங்கட்டும்...

 இணையத்தின் இலக்கியப் பொழில், சந்தவசந்தம் மன்றப் பாவரங்கில், "ஆட்டங்கள் தொடங்கட்டும்" என்கிற தலைப்பில், நான் வாசித்தளித்தப் பாடலிது.

=====================









=====================
அவை வணக்கம்:
=================
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுத் தேன்பாகாய்ப்
பின்னலாம் நல்லெதுகை, பேரெழிலாம் மோனையுடன்,
நன்னூ லுரைக்கின்ற நற்றமிழின் பாக்களையே,
மின்னல் சொடுக்குகளாய் வீசுகின்ற சந்தமவை!

எத்திக்கும் பண்ணார்க்கும் எம்தமிழின் தித்திப்பை,
முத்தமிழின் சத்தான மூன்றுதமிழ்ச் சொல்லெடுத்துச்
சித்திரிக்கும் மோவியமாய்ச் சில்லென்னுஞ் சீதளமாய்,
முத்தாரங் கட்டுகின்ற முத்தமிழின் சந்தமவை! 

கொடிமுல்லைச் சிந்துங் குளிர்மணத்தைக் கூட்டி,
அடிவானந் தீட்டு மழகதனைச் சேர்த்துப்
படிக்கின்ற செம்மரபுப் பாட்டினிசை மன்றம்,
விடிவெள்ளி போல்மிளிர்க வே!
=========================================
ஆட்டங்கள் தொடங்கட்டும்....
============================
தூண்டிவிடும் சொத்தைகளுந் துன்மார்க்கச் சழக்குகளும்,
வேண்டிவிழும் அரசியலை வேரறுக்க மாட்டாமல்,
காண்பதெலாம் கொள்ளுகின்ற, கண்போக்கிற் களிக்கின்ற,
ஆண்மையிலா ஆசறவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

தன்னெறியாய்த் தருக்கர்கள் தணிவின்றித் தாரணியில்,
இன்னெறியாய் மயங்குகின்ற ஏற்றமிலாக் கொடும்பாவப்
புன்னெறியாம் புரையோடு புறம்போக்(கு) அரசியலில்,
அன்னியராம் எத்தரழ ஆட்டங்கள் தொடங்கட்டும்!

சங்கிலியாய்ப் பின்னலிடும் சருகனைய வாழ்வினிலே,
வஞ்சகங்செய் அரசியலில் மந்தையெனப் பிறழ்மதியோர்
முங்குவதைத் தானொறுக்க, முன்னோரின் அறம்வாழ்வில்
அங்கமெனப் பொலிந்திடவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

உள்ளத்தி லுருவாகும் உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதொன்றே இன்பமென்ற,
அள்ளுமனல் அடங்கிடவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

ஏக்கமதே வாழ்வியலாய், ஏதுவழி அறியாமல், 
சாக்கடையின் புழுக்களெனச் சலிப்புடனே எந்நாளும்,
ஓக்கமிலா தூழ்த்துநிதம் ஊத்தையிலே ஊறுகின்ற,
ஆக்கமிலோர் மாறிடவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்க ளாழ்ந்தூன்றி,
முடிப்பதற்கு முன்னின்று முனைப்புடனே களமிறங்கி,
நெடுமரத்துக் கயமைகளை நீக்கிவிடச் சூளுரைதே,
அடுக்களையின் அம்மணிஉம் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

பணிவில்லாப் பகட்டென்றும், பாழ்வெளியாம் வன்மமென்றும்,
தணிவில்லா தெரிகின்ற சாதிமதச் சழக்கென்றும்,
துணிவுடனே சாய்கடையைச் சுகமென்னும் அரசியலின்
அணியடங்க ஆடவரின் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

எளிதாக இந்நாட்டில் இலவசங்கள் பெறுகையிலே,
சுளுவாக நம்கழுத்தில் சுருக்குகளும் வீழ்வதனால்,
தெளிவாக எல்லாரும் சிந்தித்தே தம்வாக்கை,
அளித்திடவே அதிவிரைவில் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

உடலுழைப்பி லுருவாகு முயர்வான ஒற்றுமையே,
உடமையென உலகிலுள்ள உயிர்களெலா முணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறக் கண்ணிமைப்பில் நாடுயர்த்தும்,
அடக்கநெறி அரசியலின் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

தளர்வின்றித் தயக்கமறச் சலிப்பில்லாத் தவிப்புடனே,
களமீதிற் கருத்தூன்றி, கானல்நீர்க் கனவகலத்
தெளிவாக உழைப்பவர்தம் திறன்மிகுந்தத் தாய்நாட்டின்
அளப்பரிய உயர்வுக்காய் ஆட்டங்கள் தொடங்கட்டும்! 
======================================================
இராச.தியாகராசன்.

மணக்கின்ற நினைவுகள்...

நினைவுகள் மனத்தில் என்றும் மணக்கின்றன.....
==============================================





 



=============================================
மணக்கின்ற நினைவுகள்.....
==========================
எரித்துச் சுடுகின்ற இரவினிலே,
சிரித்துப் பொழிகின்ற நிலவினிலே,
விரிந்து படர்கின்ற உறவினிலே,
பரந்தே உறைகின்ற உணர்விதுவோ?

தெறித்துப் பிரிகின்ற தனிமையிலே,
புறுத்தே எரிகின்ற அழகினிலே,
மறைந்து விரிகின்ற வழியினிலே,
அறுந்தே சரிகின்ற கனவிதுவோ?

புலர்ந்து மலர்கின்ற பொழுதினிலே
மலர்ந்து மணக்கின்ற மலர்களிலே,
கலைந்து கிடக்கின்ற இனிமையிலே,
நிறைந்தே வழிகின்ற நினைவிதுவோ?
===========================
இராச. தியாகராசன்.

புதன், 19 மே, 2021

செருக்கோட வந்தாளே....

பல நேரங்களில், நள்ளிரவில் திடுமென ஏதோ கனவுகண்டு வேர்க்க, விறுவிருக்க விழித்துக் கொள்வேன்.  இந்தக் கவிதைக் காதலி இப்படித்தான் என் கனவுகளில் வந்து காட்சிகளைக் காட்டி, கரகாட்டம் ஆடுவாள்; கத்தியே கூப்பாடு போடுவாள்; திரிசூலம் ஏந்தியே கூத்தாடுவாள்!  விழித்தவுடன் பெரும்பாலும் கனவுகள் கலைந்து தான் போகும். ஆனால் சிலநேரம் நினைவுகளில் பதிந்து போகும்.  அப்படிப் பதிந்ததை வரிகளில் வனைந்தேன்.

==========================================











===========================================
செருக்கோட வந்தாளே.....
==========================
திக்கில்லா தலையும் செக்காடு முயிரின்
சக்கார எண்ணம் சங்காரஞ் செய்ய,
எக்காலங் கடந்தே, எக்காள மொலிக்க,
முக்கால மில்லா, முக்காரி வந்தாளே!

நிழலாக வந்தாள்; நினைவாகி வந்தாள்;
அழலாக வந்தாள் அரனோடு வந்தாள்;
தழலாக வந்தாள்; சதிராடி வந்தாள்;
கழலாட வந்தாள்; கனவோடு வந்தாளே!

கருத்தாகி வந்தாள்; கருவாகி வந்தாள்;
விரித்தாடி வந்தாள் விரைந்தோடி வந்தாள்;
நெருப்பான செம்மை நிறமாகி வந்தாள்;
சிரித்தாடி வந்தாள்; செருக்கோட வந்தாளே!

காடதிர வந்தாள்; கருக்காக வந்தாள்;
மேடதிர வந்தாள்: மெலுக்காக வந்தாள்;
நாடதிர வந்தாள்; நலத்தோடு வந்தாள்;
வீடதிர வந்தாள்; மிடுக்கோடு வந்தாளே!

மலராக வந்தாள்;  மடலாக வந்தாள்;
நிலமாக வந்தாள்;  நீராக வந்தாள்;
கலமாக வந்தாள்: கடலாக வந்தாள்;
தலமாக வந்தாள்; சழக்கோட வந்தாளே!

சுழலாக வந்தாள்; துடுப்பாக வந்தாள்;
மழுவாக வந்தாள்; மணமாக வந்தாள்;
பொழிவாக வந்தாள்; புதிதாக வந்தாள்;
அழிவாக வந்தாள்; அன்பாக வந்தாளே!
===========================================
இராச. தியாகராசன்

பிகு: சக்காரம்- சருக்கரம்/ சக்கரை
           முக்காரி - முக்காலமுணர்ந்தவள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உழைப்போர் உயர்வு.

உழைப்போர் நாளுக்காய் என்றன் வரிகள். (அதிகரிணி வகையிலான கலிவிருத்தம் - அமைப்பு: புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி புளிமா)

================================================

================================================
உழைப்போர் உயர்வு...
(அதிகரிணி வகையிலான கலிவிருத்தம்.  அமைப்பு: புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமா.)

===============================================================
மலையும்பசுஞ் செடியும்நறு மலரும்கனி மரமும்,
சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்ப்பல கலையும்,
உலகிற்பெரு முயர்வும்விட உயர்வேயது நெருப்பின்,
உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே!

உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே,
பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;
வயிற்றுக்கரை யுணவுக்கிவர் மயக்கத்துடன் பணிந்தே,
வியர்த்தேயுடல் நனையத்தினம் வெயிலில்கிடந் தெரிவார்!

சமமாய்ப்பல ரருந்துங்கடை தனிலேயிவர் நுழைந்தால்,
குமுகத்தினி குறைவேயென  குரங்காயவர் குதிப்பார்;
இமையாவிழி யலைபோன்றினி எழவேயிவர் முனைந்தால்,
அமைதிக்கினி யழிவேயென அலறிக்குரல் கொடுப்பார்!

மரமேயுதிர் சருகாயிவர் வழியின்றனு தினமும்,
உரமேறிய உடலுந்தளர்ந் துழைத்தேயுளஞ் சலித்தால்,
புரட்சிப்புயர் குமுறப்பெரும் பொறியாய்வெடித் தெழுந்தால்,
சரிகைத்துகி லணிந்தப்புவி சழக்கர்செறுக் கழிவார்!

சடமாயினித் துயிலோமென தழைந்தோரவ ரெழுந்தால்,
இடக்காயினி வயற்சேற்றினி லிறங்கோமென நிமிர்ந்தால்,
அடுக்கில்நகர் வசிக்குந்நம தருமைச்சக மனிதர்,
படகும்நிகர் மகிழுந்திலே பவனித்தலும் நிலையோ?

கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம தெதிரில்,
தினமும்நமை யழிக்குங்கடுஞ் சினமாய்நம துணர்வில்,
அனலாய்க்கலந் துறையும்நினை விதுவேயென அறிவோம்;
மனிதம்வளர் நலமேதரும் வழிகள்தனில் வளர்வோம்!
===================================================\
இராச. தியாகராசன். 

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

பூக்கள் முட்களானால்....

 பூக்கள் பூக்களாகவே இல்லாமல், முட்களாகும் நிகழ்வும் நடப்பதுண்டு....
=========================================













=========================================
பூக்களின் நியதி பூவாய் மலர்ந்து,
ஊக்க மளித்திட உறுமணந் தருவதே!
முட்களின் கடமையோ முகிழ்ந்த மலர்களைக்
கட்டிக் காக்கும் காவல் வேலை!
தமிழின் தொன்மை; செம்மொழி வளமை;
அமிழ்தாம் இனிமை; எல்லாம் சரிதான்!

காக்க வேண்டியக் கன்னற் றமிழர்,
சாக்குப் போக்காய் சில்லரைத் தனமாய்,
செந்தமிழ் மொழியில் சிறந்த அறிவியல்,
விந்தைகள் சொல்லும் மின்னியல் நூல்கள்
இல்லையதனால் அயல்மொழி படிக்கச்
சொல்லும் கூற்றைத் தகர்த்திட வேண்டியே,

பாரதி வழியில் பன்னாட் டியலையும்,
வீரத் தமிழில் விளங்கப் பெயர்ப்போம்;
இறவாப் புகழுடை எளிய கணினிச்
சிறப்பைச் செந்தமிழ் மொழியிற் சொல்வோம்;
நமக்கு நாமே நற்றமிழ் மேன்மைச்
சுமக்கச் சுமக்கச் சொல்வதை விட்டு,

உலக மொழிகளில் அழகுறப் பெயர்த்து,
பலநாட் டறிஞரும் விரும்பிப் படிக்கக்
களித்தமிழ் நூல்களை ஒளித்தக டாக்கி,
உலக மெங்கும் ஊர்வலம் விடுவோம்;
மலர்ந்த தமிழை வாகாய் நாளுமே,
வலம்வருந் தமிழரும் வளர்க்க மறந்தால், 

முகிழ்ந்த தமிழும் முள்ளாய் மாறும்;
மகிழ்வாம் வாழ்வும் மண்ணில் புதையும்;
இருப்பைக் காட்டும் என்றமிழ் அழிந்தால்,
இருக்க இடமும் இன்றியே வீழ்வோம்;
காக்கும் முள்ளும் கடமை மறந்தால்,
பூக்கள் முள்ளாய்ப் போவதும் சரியே!
==========================================
இராச. தியாகராசன்

கதை கேளு, கதை கேளு....

கதை கேளு,  கதை கேளு,  மங்கையின் வாழ்வியற் கதை கேளு.  

============================================








============================================
வானக மெழுந்தே வையகம் எங்கும்
மோனத் தீயென முடிவிலா தியங்கும்
கூனற் பிறையின் கோதறு சோதியாம்
வாணுதல் நங்கையின் வாழ்வியற் கதையிது!

சொந்தமும் நட்பும் சேர்ந்தே நாற்புறம்
பந்தமாய் அலசியே நாளும் கோளும்
குறைவறப் பார்த்து, குவலயம் போற்ற,
நிறைவாய்ச் செய்த நல்லதோர்த் திருமணம்!

மணமகன் என்னவோ மயக்கும் அழகனே;
குணமகள்  அவளும் குறைவிலா அழகியே!
கணத்திலே கரைந்தது காலச் செல்வமும்;
குணவதி ஈன்றாள் கொஞ்சுங் குழந்தை!

ஆணுக் கியற்கை ஆழமாய்ப் பொதித்த,
கோணல் மரபணு குரங்கெனக் குதிக்க,
வண்டென வேறோர் வளையல் தேடினான்;
சண்டைகள் நாளுமே சட்டமாய் ஆனது!

உடுத்தும் உடையென ஒவ்வொரு நாளும்,
குடும்ப மென்பதில் கூடலும் ஊடலும்
மாறியே வருவது வழக்கமே எனினும்
வேறோர் மங்கையும் விதியை எண்ணியே,

தேறா திதுவென தயங்கியே கிடப்பார்;
ஆறா தடங்கா ஆண்மகன் அடத்தினை
பாரதி சொன்னவென் பாட்டுத் தலைவியோ
தேரா திதுவெனச் சீறியே எழுந்தாள்!

சூழ்ந்திடு மிருளாந் துயரெண் ணாது,
வாழ்வியல் மன்றிலே வழக்குந் தொடர்ந்தாள்;
கைவிரல் நெறித்துக் காலங் கடக்க,
மைவிழி மங்கை வாடும் நிலைபோய்,

கூர்மை வாணுதல் கொஞ்சும் பூவையர்,
ஆர்க்கும் புலியென அனலென எழுகையில்,
புரண்டிப் புவியகம் பொலிவுடன் பொய்த்துயில்
விரட்டிப் பூக்களை விரிக்குமே அவர்வழி!
==============================================
இராச. தியாகராசன்.

பிகு: கோணல் மரபணு என்று நான் குறித்ததன் கரணியம்.  உலகம் தொடங்கி இன்றுவரை தனக்கோர் வாரிசு வேண்டுமென்ற இயல்பூக்கமே ஆண் உயிரினம் பெண்ணைத் தேடச் சொல்கிறது.  அதுவே அந்த மரபணுதான், தக்கது வாழும் (survival of the fittest)  என்கிற டார்வினின் கோட்பாட்டுக்கு அடிப்படை.

திங்கள், 29 மார்ச், 2021

ஓங்கலும் உன் வசந்தான்....

ஓங்கலும் உன் வசமே...
===============================================================





===============================================================

பார்முழுதும் பட்டுபோல் பருத்தியில்லை; ஆனாலும்
வேர்க்கின்ற வேக்காட்டு வேனலுக்குச் சுகமதுவே!
ஆர்க்கின்ற காகமது அவனியிலே மயிலாமோ?
தேர்வாய்நீ தோகைக்காய் தொல்லைகள் மயிலுக்கே!

தங்கமும் தகரமும் சரிசமமாய் ஆவதில்லை;
அங்கத்தில் தங்கத்தை அன்புடனே அணிந்தாலும்
இங்கின்று தகரத்தின் எத்தனையோ பணிகளுக்கு
தங்கந்தான் ஆகுமோ? சரியாக அறிவாயே!

பொதிசுமக்கும் கழுதையும் போர்க்கலிமா ஆவதில்லை;
நதியருகில் சலவைக்கு நன்றாக உதவுகின்ற
எதிர்ப்பில்லா கழுதையது எந்நாளும் செய்வதையே
அதிவீரக் கலிமாவும் அன்றாடம் செய்வதில்லை!

இல்லமெங்கும் குடிக்கின்ற இன்னீர் யாங்ஙணுமே
துல்லியமாய்த்  தூய்மையுடன் சொரிந்தே வழிந்தாலும்
எல்லீரும் அடுக்களையில் இருக்கின்ற குழாயில்தான்
நல்லதென்று பிடித்திங்கு நாடோறும் குடிக்கின்றார்.

அதற்காக குளியலறை அமைந்திருக்கும் குழாய்களையே
மதியின்றி அகற்றிவிடும் வன்செயலைச் செய்யாமல்
இதந்தரும் அந்நீரை  இன்றுலகில்  தினந்தோறும்  
விதவிதமாய் பயன்படுத்த மேதினியோர் மறுப்பாரோ!

நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவர்க்கே
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் காண்பாய்நீ!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியுனை யடித்தாலும்
அவனியிலே உனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநீ
உவகையுடன் பணிசெய்தால் ஓங்கலும் உன்வசந்தான்!
===================================================
போர்க்கலிமா = போர்க்குதிரை
ஓங்கல் = குன்று

இராச. தியாகராசன்


சனி, 20 மார்ச், 2021

என்னுள்ளே ஏகன் எழில்....

ஏகம்பனின் உருவந்தான் என்னுள்ளே சுழன்றாட,  என்றென்றும் என்னுள்ளே ஏகன் எழில்......
=========================

========================
என்னுள்ளே ஏகன் எழில்...
========================
கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்,
பின்னல்களின் சிக்கலெனப் பீடிக்கும் ஆசைகள்
இன்றிங்கே தானடங்க என்றிங்கே  நானறிவேன்
என்னுள்ளே ஏகன் எழில்?

புன்மையெனுந் தீயதனில் புத்தழகுப் பொய்யதனில்,
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்தெரிய,
முன்னவரின் நற்செயலால், முன்வினைகள் பற்றறவோ 
என்னுள்ளே ஏகன் எழில்?

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இக்கடலில் நானுந்தான்
அன்றாடந் தீர்வின்றி ஆடுகிறேன் நாவாயாய்,
உன்மத்த வெறும்பிறப்பை உய்விக்க வந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே,
அன்னவனை ஆண்டவனை அங்கெங்கோ தேடுகையில்,
தன்னறிவாய் சாந்தமனச் சத்தியத்தைத் தந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?
=============================================
இராச. தியாகராசன் 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

நேதாஜி போலே நிமிர்ந்து....

நேதாஜி போலே நிமிர்ந்து.....
================================================















================================================
சிங்கத்தின் சீறலெனச் செந்தீயின் சாரலென
வங்கத்தில் வந்துதித்த மாமனிதர்! - மங்கிவிழும்
சாதாப் பிறப்பெனத் தாழாமல் நாமெழுவோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

தூய்மையின் பேருருவாய் சூட்டெரிக்கும் சூரியனாய்
ஓய்வின்றி கொக்கரித்த ஓங்கலிவர்! - தாய்மண்ணாம்
மாதாவை, மங்கையரின் மானத்தை நாம்காப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

பெரும்பொறியாய்ப் பற்றிப் பிழம்பெனவே நாமும்
கருக்கினிலே மாறவழி கண்டார்! - உருக்குலைத்தே
பாதாளம் வீழ்த்திவிடும் பாழதனை நாமெரிப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

பொய்யின்றி நாட்டின் புகழுக்கே எந்நாளும்
மெய்யாய் உழைத்தபெரும் வீரரிவர்! - நைவின்றி
சூதாட்டம், சோதனைகள் சூழ்ச்சிகளை வேரறுப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து

சென்றிடு நாடெல்லாம் சீர்த்தி சிறப்புகளை
வென்ற பெரும்புரட்சி விந்தையிவர்! - இன்றிங்கே 
சேதாரம் செய்கின்ற தீவினையோர் கோதறுபோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

போர்க்களத்தில் நெஞ்சுயர்த்திப் புன்மைகளைத் தீய்ப்பதற்கே
கூர்வாளை ஏந்திநின்ற கோட்டையிவர்! -தூர்த்தரையே
மோதா(து) அடங்கும் முடக்கத்தை நாமழிப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

கொல்லும் பகைமாய்க்கக் கூற்றுவனாய்த் தோளுயர்த்தி
வெல்லும் படைகொண்ட வேந்தரிவர்! - புல்லர்கள்
வாதாடும் நாவடக்க மாமலையாய் நாமுயர்வோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.
=================================================
 இராச. தியாகராசன்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

பொடியேதும் உண்டோ?

வாழ்வியல், உலகியல், நிகழ்வுகள் ஒரு படைப்பாளியின் நெஞ்சகத்தையோர் வாளியாய் உட்போந்து உறுத்துவதால், அவனின் எண்ணங்கள் கடையப்பட்டு, கவிதையென்றும், கதையென்றும் எதையோ வனைகிறான். கவிஞர்க்கு வேறு வேலையே இல்லை!  சாவுக்கும் எழுதுவார்;  வாழ்வுக்கும் எழுதுவார்; என்பார்க்கு என்னுடைய விடை.....  

பொடியேதும் உண்டோ.....
(கட்டளைக் கலித்துறை)
=========================










======================================================
கனவை விதைக்குங் குயில்களைத் தீய்க்கும் கயமைகளே!
சினத்தில் மனிதம் சிதைத்தே சிரிக்கும் சழக்குகளே!
மனத்தில் உறவும் உணர்வும் இலையோ மனிதருக்கு?
மனிதம் மறைந்தால் மதமும் உயர்ந்து வளர்ந்திடுமோ?

எளிதில் கிடைக்கும் பொருளே எவர்க்கு மினிப்பதில்லை;
சுளுவி லமையும் பெருமை யதுவே சுவைப்பதில்லை;
தெளிந்த வெளுப்பி னுடையா லுளமே தெரிவதில்லை;
நெளிந்த நினைவே உரைக்கும் நிழல்கள் நிலைப்பதில்லை;

கரிக்கும் கசடும், கருப்பும் கழுவக் கரைந்துவிடும்;
எரிக்கு மழலி னனலும் அவிந்தே அணைந்துவிடும்;
மரிக்கும் நிசத்தை மறந்தே அலையும் மனிதரிடை 
சிரித்தே மலரைச் சிதைக்கும் சழக்கர் திருந்தவிலை!

அணியு முடைகள் கருப்பென வாகி யழுக்கடைந்தால்;
துணிகள் வெளுக்கும் பொடியது கொண்டே துவைத்திடலாம்!
பிணியென நெஞ்சம் கறுப்பென வாகிப் பிழைநிறைந்தால்
புனிதப் படுத்தப் பொடியே துமுண்டோ புவியினிலே?
=========================================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

அறம்வளர்ந் தார்க்குமே அன்பு

திருவாதிரைத் திருநாளில், அச்சீர்காழி அத்தன் மீதில் நான் வனைந்த ஒரு பஃது வெண்பா அந்தாதி
============================== 

          











=============================
அறம்வளர்ந் தார்க்குமே அன்பு
=============================
வீணர்தம் வெற்றுச்சொல் வீச்சறவே வல்லவரும்
நீணிலத்தில் நாடோறும் நேர்மையினை! - தூணிற்
பிறந்தவெம் சீயமால் போன்றிங்கே காக்க,
அறம்வளர்ந் தார்க்குமே யன்பு.1

அன்பெனும் அற்புத ஆடகம் நாடாது
வன்மமும் தேடுதல் வாழ்வாமோ? - கன்னலாய்
வாக்குரைக்க வைக்குமென் வாதவூர் ஈசனே
ஆக்கும் அருளுருவில் ஆள்.2

ஆளும் சிலபேர்க் கடுத்தவரின் வாழ்வினையே 
மாளத் தீய்த்தல் மகிழ்வென்றால் -  நாளும்
தடுத்தவரை காக்குமெங்கள் சாம்பசிவா; தீயவரின்
இடிப்பொடியச் செய்வாய் இனி!3

இனிக்குஞ் சுவையிருக்க இல்லா இலவங்
கனியை விழைவதுவோ காதல்? - மனிதருக்
கிந்நாளில் ஆறறி வேய்க்கு மினக்கவர்ச்சி
எந்நாளும் வீணென் றியம்பு.4

இயம்புகிறார் இல்லையென்(று) எத்தனையோ ஏட்டில்:
மயங்குமுளம் நிச்சயமாய் மாறிச் -  சுயம்புவென
அன்னவனை காணும் அற்புதத்தைப் பெற்றவர்கள்  
புன்மைகளை மாய்ப்பார் பொருது.5

பொருதல் பிழைத்தல் பொறுத்தல் பெறுதல்
உரைத்தல் உறுத்தல் உறைதல் - உறங்கல்
பழித்தலிவை தாண்டி, பனிச்சிவமே நம்மை
எழுச்சியுறத் தூண்டும் இசை.6

இசையை, ஏழிலார் இயற்கை வனப்பை,
புசியும் அற்புதப் பொருளாய் - புசிக்கும்
உள்ளமே ஊத்தையை, ஊழ்க்கும் ஊழலை
விள்ளுதல் என்னே வியப்பு.7

வியக்கப் பழகி, விரும்பி வெறுத்து,
மயக்கம் தெளிந்த மனத்தில் - தயக்கம்
அகழ்ந்து தன்னை அறியும் உணர்வில்
மகிழ்தல் இறைநிலை மாண்பு.8

மாண்புகள் ஈதென மாந்தர்கள் நாளுமே
பூண்டவை நூறாம் புந்தியில் - ஆண்டவன்
உண்டென  உன்னில் உணர்தலே மெய்யெனும்
எண்ணக் கருத்தில் இரு. 9

இருந்திறக்கு முன்றன்  இலையுதிர் வாழ்வில்
மருந்தென மாந்தர்க்கு மகிழ்ச்சி - தருவதன்றி
கூடிப்போ தழிக்கவே கூட்டமாய்ச் சுற்றிடும்
வேடிக்கை யாவுமே வீண்.10
============================================
இராச. தியாகராசன்

வேறு:
======
எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா 
....லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து 
....பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும் 
....பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின் 
....செங்கண் ணருளாலே!

ஆரடிச்சா அஞ்சனமே.........

நாட்டுப்புறத் தாலாட்டின்பம்....









ஆரடிச்சா அஞ்சனமே? 

======================
ஆரடிச்சா அஞ்சனமே? 
அழலாமோ ஆரமுதே?
===================
அலரிப்பூ ராசாத்தி;
அரும்புன ரோசாப்பூ;
அப்பாவும் வருவாரு;
அச்சுப்பூப் பொட்டோட!                          (ஆரடிச்சா)

சங்குப்பூ ராசாத்தி;
தங்கரளிப் பூவாயி;  
தாத்தனும் வருவாரு;
தாமரைப்பூ மொட்டோட!                       (ஆரடிச்சா)

பவளமல்லி ராசாத்தி; 
பளபளங்கும் பவுனாயி; 
பாட்டியும் வந்திருவா;
பைநெறைய துட்டோட!                          (ஆரடிச்சா)

சரக்கொன்ன ராசாத்தி; 
சலிக்காத சந்தனமே; 
சின்னம்மா வந்திருவா; 
செங்கரும்புக் கட்டோட!                         (ஆரடிச்சா)

பிச்சிப்பூ ராசாத்தி; 
பேரழகுச் சீமாட்டி; 
பெரியம்மா வந்திருவா; 
பெருமேளக் கொட்டோட!                        (ஆரடிச்சா)

அடுக்குப்பூ ராசாத்தி; 
அரமண அஞ்சுகமே; 
அத்தையும் வந்திருவா; 
அதிரச வட்டோட!                                       (ஆரடிச்சா)

மருக்கொழுந்து ராசாத்தி; 
மருதாணிச் செம்பூவே; 
மாமியும் வந்திருவா; 
மரப்பாச்சிச் செட்டோட!                           (ஆரடிச்சா)

மஞ்சப்பூ ராசாத்தி; 
மருதமல மாமயிலே; 
மாமனும் வருவாரு; 
மலையாளப் புட்டோட!                             (ஆரடிச்சா)

செவ்வரத்த ராசாத்தி; 
சேலத்து மாம்பழமே; 
சின்னக்கா வந்திருவா; 
சீனிமுட்டாய் லட்டோட!                           (ஆரடிச்சா)

மல்லிகப்பூ ராசாத்தி; 
மாந்தோப்பு மைனாவே; 
மச்சானும் வருவாரு; 
வரிசப்பைத் தட்டோட!                             (ஆரடிச்சா)

செங்கமல ராசாத்தி; 
சிரிச்சாடுஞ் சிங்காரி; 
சின்னண்ணா வந்திருவான்; 
சிங்கப்பூர் பட்டோட!                                 (ஆரடிச்சா)
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
அஞ்சனம் - கண்-மை, அச்சுப்பூ பொட்டு - பொட்டச்சு, 
பைநிறைய துட்டு - சுருக்குப்பை துட்டு, வட்டு - தட்டு, 
மரப்பாச்சிச் செட்டு - மரப்பதுமை செட்டு,