புதன், 5 நவம்பர், 2014

பெருந்தலைவர்....

என்னுடைய முகநூல் நண்பர் திரு இரவி சாரங்கனின் நிலைச்சேதியை கண்டதும் நானெழுதிய வரிகள் இவை! இமைகள் கனக்கின்றன.  நெஞ்சகம் விம்முகிறது.  இவரைப் போன்றதோர் நல்லவர் வந்து தமிழரைக் காக்க மாட்டாரா என்று.
======================================================













======================================================
பெருந்தலைவர் (கொச்சகக் கலிப்பா)
======================================================

நேர்மையினை எளிமையினை நீதியென உரைத்திடுமுன்
கூர்ந்தாய்ந்தே தம்வாழ்வில் கொள்கையெனக் கொண்டதனால்
ஆர்த்தெழுந்தே அன்றிளையோர் அப்பெருந் தீரரையே
பார்முழங்கத் தம்தலையாய்ப் பாங்குடனே ஏற்றனரே!


கொள்ளியென எரிக்குமந்த கொடும்பசி யடங்குமெனில்
வெள்ளியாய் ஒளிர்கின்ற வியன்கல்வி விளங்குமென்று
பள்ளியிலே பாலகர்க்குப் பகலுணவு தந்தவரின்
உள்ளன்பை எவரிங்கே உண்மையாக உணர்ந்திடுவார்?


உன்னருகில் அன்றொருநாள் உணவருந்தி நின்றதையே
என்னிதயம் எண்ணியிங்கே எந்நாளும் விம்முவதை,
அன்பிழிய நீயன்றே அளித்திட்ட அரவணைப்பை,
இன்றிளையோர் உணர்ந்திடவே எடுத்தியம்ப இயலவில்லை!


கல்வியிலாக் கர்மவீரன்; கருணைமிகு தர்மசீலன்;
தில்லிவாழ் அரசியலுந் தேடிவந்தே வேண்டிநின்ற
நல்லவரே நீரிங்கே நலமுடனே இருந்திருந்தால்
புல்லருமித் தமிழினத்தைப் பொசுக்கிவிட ஏலுமோ?
======================================================

பாவேந்தர் பாட்டைப் படி....

08.08.2012 அன்று நிகழ்ந்தேறிய, புதுவை தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவிற்கான பாவரங்கில் பங்கு பற்றி, நான் வாசித்த பாடலிது:

பாவேந்தர் பாட்டைப் படி (நேரிசை வெண்பாக்கள்)
========================================















========================================

திருக்கோயிற் றேரனைய தீந்தமிழா லன்று
விருந்தெனவே பாட்டிசைத்த வேந்தர்! -  வரும்நாளில்
தீவாழும் தீமைகளின் தீங்ககல நீயின்று
பாவேந்தர் பாட்டைப் படி.

தூயதமிழ்ச் சொல்லைச் சொடுக்கிச் செழுந்தமிழில்
ஓயாமல் கொக்கரித்த ஓங்கலவர்!  -  தீயவழி
மேவாம லெந்நாளும் வென்றிடவே இந்நாள்நீ
பாவேந்தர் பாட்டைப் படி.

அய்ய னுரைத்த அழகுதமி ழோங்கிடவே
மெய்யா யுழைத்தபெரும் விந்தையிவர்! - நைவின்றி
மாவான் தமிழ்துலங்க வையகமே இன்றிங்கு
பாவேந்தர் பாட்டைப் படி.

சென்ற வழியெலாம் செந்தமிழே சீலமுற
வென்ற பெரும்புரட்சி வீரரிவர்! - இன்றிங்கே
நாவார என்றும் நறுந்தமிழே தான்முழங்கப்
பாவேந்தர் பாட்டைப் படி.

போர்க்களத்தில் நின்றுதமிழ்ப் புன்மைகளைத் தீய்ப்பதற்கே
கூர்வாளை ஏந்திநின்ற கோட்டையிவர்! - சீர்மலிந்த
நாவேந்தும் நற்றமிழை நாளும்நீ காத்திடத்தான்
பாவேந்தர் பாட்டைப் படி.

வெல்லத் தமிழ்வெல்ல வேட்டைப் புலியெனவே
தொல்தமிழில் பாட்டெடுத்தச் சொல்மறவர்! - பல்கலையாம்
பாவாணர்த் தோன்றல்நீ பைந்தமிழைத் தாங்கிடவே
பாவேந்தர் பாட்டைப் படி.   

திங்கள், 3 நவம்பர், 2014

வீரத்தாயின் வித்துகளே.....

16.05.2012 அன்று இரவு உள்ளத்தில் பொங்கிய எண்ணவலைகளை எழுத்தில் கொணர முயன்றிருக்கிறேன். முழுவதும் இயலவில்லை என்றே உணர்கிறேன்.

=========================================
வீரத்தாயின் வித்துகளே (கொச்சகக் கலிப்பா)
=========================================











=========================================

இன்றெதிரே காணுகின்ற ஈனத்தைக் கருக்கிவிட
என்னினமே எழுச்சியுடன் எந்நாளும் இருக்கட்டும்;
துன்பத்தைத் துயரத்தைச் சோர்வின்றித் துடிப்புடனே
முன்னின்று முடிப்பதற்கு முனைப்புடனே முழங்கட்டும்!
 
அழிக்கின்றார்; அறுக்கின்றார்; அடியோடு அருந்தமிழைக்
குழிபறித்துக் கொல்கின்றார் கொடியவரின் கூட்டத்தார்!
செழிப்புடனே செந்தமிழும் செகத்தினிலே சிறந்திருக்க
விழிப்புடனே வெல்லுங்கள் வீரத்தாய் வித்துகளே!
 
மரிக்கின்ற எம்மினத்தின் மகத்தான பிடிசாம்பல்
இருக்கின்ற எந்தமிழை எருவாகித் தாங்கட்டும்;
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிக்கின்ற எரிதழலை எம்மிளையர் ஏந்தட்டும்!
 
வாளெடுக்கும் மன்னனில்லை; வேலெடுக்கும் வேந்தனில்லை;
தாளெடுத்துத் தீந்தாவால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு,
நாளுனக்கு குறிக்கின்ற நரிக்கூட்டம் தானோட,
தோளெடுத்துத் துடிப்புடனே துவளாமல் எழுகவென்றே!

=========================================

தீந்தா = எழுதுமசி