திங்கள், 25 நவம்பர், 2019

ஏது......

ஏது, ஏது, ஏதென்று வெடிக்கும் வினாக்கள் ஆயிரமாய் எழுந்தென்னில் குளத்தின் மீதூரும் நீரலை வட்டங்களாய், சிறார் ஊதி மகிழ்கின்ற வழலைக் குமிழ்களாய் அலைபாயும் கணங்கள்....
=================================


=================================

தூக்க மில்லாமல் கனவு மேது?
ஏக்க மில்லாமல் நினைவு மேது?
ஊக்க மில்லாமல் உயர்வு மேது?
வாக்கு மில்லாமல் வரியு மேது?

முகிலு மில்லாமல் விசும்பு மேது?
சிகர மில்லாமல் மலையு மேது?
பகலு மில்லாம லிரவு மேது?
நகுத லில்லாமல் மகிழ்வு மேது?

தென்ற லில்லாமல் காவு மேது?
அன்பு மில்லாமல் தாயு மேது?
உணர்வு மில்லாமல் கவிதை யேது?
உணவு மில்லாம லுலக மேது?

கூட லில்லாம லூட லேது?
ஊட லில்லாமல் காத லேது?
தேட லில்லாமல் தேச மேது?
வாட லில்லாமல் வாச மேது?

தூசு மில்லாமல் மண்ணு மேது?
ஆசை யில்லாம லெண்ண மேது?
பண்ணு மில்லாமல் பாட்டு மேது?
வண்ண மில்லாமல் காட்சி யேது?

ஆவ லில்லாம லவனி யேது?
கூவ லில்லாமல் குயிலு மேது?
சாவு மில்லாமல் வாழ்வு மேது?
தூவ லில்லாமல் தூர லேது?

தறியு மில்லாமல் நெசவு மேது?
சிறகு மில்லாமல் குருகு மேது?
நறவு மில்லாமல் மலரு மேது?
உறவு மில்லாமல் பருவ மேது?

கர்வ மில்லாமல் கவியு மேது?
தர்ம மில்லாமல் புவியு மேது?
சர்வ மில்லாமல் சக்தி யேது?
மர்ம மில்லாமல் புத்தி யேது?

கற்ற லில்லாமல் கல்வி யேது?
பற்று மில்லாமல் பாச மேது?
இறையு மில்லாம லறித லேது?
அறித லில்லாம லகில மேது?
==============================
இராச. தியாகராசன்.

வியாழன், 21 நவம்பர், 2019

வேதனை போகும்... தெளிவாகும்...

20.11.2015 அன்று, புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறையில் கலைமாமணி, தமிழ்மாமணி, திரு கல்லாடனார், கலைமாமணி, தமிழ்மாமணி திரு இலக்கியனார் ஆகியோர் முன்பாகப் படிக்க வேண்டுமென நினைத்து வனைந்த காவடிச் சிந்து வரிகள் இவை. என்னவோ தெரியவில்லை; எனக்கு நிறைவில்லை என்பதால், வேறு ஒரு பாடலைப் படித்தேன் அன்றைக்கு.
=============================










================================
வேதனை போகும், தெளிவாகும்...
================================
உள்ள மெழுந்திடுஞ் சந்தம் - அறந்
துள்ளு மழல்வரி பந்தம் - உளம்
.....படர்ந்தேகவி புனைந்தேதர பொழிந்தேவரு தமிழ்மீதொரு
..........பாசம்
..........அதன்
..........நேசம்.

வெள்ளை யணிந்துரு கொள்ளுங் - கறுங்
கள்ளை யருந்துயிர் துள்ளும் - பிழை
.....யழிந்திக்கண மெழுந்தப்பழி விழுந்திப்புவி யமிழ்தச்சுவை
..........யாகும்
..........சினம்
..........போகும்.

துள்ளும் பெருங்கடல் மேவி - கரும்
புள்ளுந் தருந்துயர் தாவி - வருஞ்
.....சுழலென்னுளக் கருவில்முளைத் தெழுகுஞ்சுடர்ப் பெருகும்வெளித்
...........தோற்றம்
...........அவள்
...........சீற்றம்.

வண்ணத் தமிழ்தருஞ் சிந்தை - தின
மெண்ணப் பிறந்திடும் விந்தை - வள
.....மிழிந்தேயுளங் கவர்ந்தேவளர் நறவேநிகர் தமிழ்தானொரு
..........யின்னல்
..........தகர்
..........மின்னல்.

கொள்ளத் தருமொரு மோகம் - கர
மள்ளப் புகுமொரு தாகம் - துளி
.....திறந்தேவரு மறிவேயதி லறிந்தேயுரு கலதேகிடுஞ்
..........சித்தம்
..........பெரும்
..........பித்தம்.

குற்றங் குறையது தேய - நிதஞ்
சுற்றுங் கறையது சாய - பெரும்
.....புவிமீதினில் சுழலாயெனை யெழுவாதுயிர் தருவேதனை
..........போகும்
..........தெளி
...........வாகும்.
==============================================
இராச. தியாகராசன்.


வியாழன், 14 நவம்பர், 2019

ஜவகருன்னைப் போற்றுவனே.....

2019ஆம் ஆண்டு மழலையர் நாளுக்கென்றன் வரிகள்...

===========================================



===========================================

விந்தைமிகு தாய்நாட்டின் உயர்வே நாளும்
.....மேன்மையுறு உழவர்தம் வாழ்வே என்று,
சிந்தையிலே உணர்ந்ததனால் தானே அன்று
.....தெளிவான விதியதற்கே வகுத்து யர்ந்தாய்;
முந்தியிங்கு வேளாண்மை செய்வோர் வாழ்ந்தால்
.....முறைசார்ந்த தொழில்துறையும் உயரும் என்றாய்;
அந்திமத்துத் துயர்களையும் விரட்டு தற்கே
....அகவைசென்ற முதியோர்க்கும் சட்டந் தந்தாய்!

மாட்சிமையாய் வையகத்தில் வாழ்வ தற்கே
.....வாழ்வியலின் ஐந்தென்னும் அறத்தை யிங்கே
ஆட்சிமுறைத் தத்துவமாய் புவிக்க ளித்தே
.....ஆளுகின்ற போதவனி போற்ற வாழ்ந்தாய்;
கூட்டுறவும் கல்வியதும் கொள்கை யென்றே
.....குறைவில்லா ஐந்தாண்டுத் திட்டந் தீட்டி,
நாட்டுயர்வே உனதுளத்து நாத மென்னும்
.....நல்லறத்தால் நல்லவரின் உள்ளம் வென்றாய்!

உள்ளாரும் ஒண்டமிழில் உள்ளம் தோய்ந்தே,
.....உயர்தழகாய் மின்னுகின்ற உணர்வை ஆய்ந்தே,
துள்ளாட்டம் போடுகின்ற எண்ணம் மீட்டி,
.....சுகந்தமலர் சிந்துகின்ற வண்ணங் கூட்டி,
தெள்ளுதமிழ்க் கன்னலதன் வரிகள் பெய்து,
.....சித்திரம்போல் அலங்கலெனக் கவிதை நெய்து,
கள்ளாரும் செம்மலரை விரும்பி யேற்ற,
.....கனியுளத்து சவகருன்னைப் போற்று வேனே!
=========================================
இராச. தியாகராசன்.