செவ்வாய், 18 அக்டோபர், 2022

அரைக காசும் உன்னுடன் வருமோ???

வாழ்வது சிலநாள், சிலரை விரும்புவதேன்?  சிலரை வெறுப்பதுமேன்?  அனைவரையும் நேசியுங்கள்;  தாழ்வுற்றவர்க்காய் உதவுங்கள்.  வரும்போது எதையும் கொண்டுவரவில்லை: போகும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை.  இறங்கி, இருந்து, இறக்கும் வரையில் இருப்பிற்கொரு காவல் நாம் என்றுணர்ந்து வாழுங்கள்;  அடுத்தவர்க்காய் வாழுங்கள்; அடுத்தவரின் அவலநிலையில் அடுப்பெரிக்காமல் வாழுங்கள்!  

என்காலம் முடியும் போது, 100 (அ) 200 பேர் இரங்கற் சேதி தெரிவித்துவிட்டு, ஓரிரு வாரம் கழித்து, அவரவர் பணியைப்  பார்க்கப்  போகிறார்கள்; நெருங்கிய சொந்தங்கள் இன்னும் கூடுதலாய் ஓராண்டோ/ ஈராண்டோ நினைந்துருகப் போகிறார்கள்;  இதுதான் வாழ்வியல் நீதி.  நானிங்கு சொன்னவற்றில் இருக்கும் அறமென்பது என்றும் மாறாதது.  அறத்தின்பாற்பட்டு வாழ்வோரின் வாழ்வும்;  அவர்கள் சுற்றத்தின் சுகமும்;  பிள்ளைகளின் நலமும் என்றென்றைக்கும் உயர்ந்தே தானிருக்கும்.
===============================================








===============================================
அரை காசும் உன்னுடன் வருமோ.....
===============================================
பெற்றவரை அன்பதனால் தாங்குகின்ற, 
பிள்ளைகளோ பெருமைகளைச் சேர்த்துவிடும்;
கற்றவரின் உள்ளத்திலே ஓங்குகின்ற,
கல்வியெனும் செல்வமதை வாங்கிவிடும்!

தன்னாட்டின் மக்களையே மாக்களெனத்
தானெண்ணித் தருக்குடனே ஆண்டவரின்,
முன்நிகழ்ந்த வரலாறு சொல்லுகின்ற,
முகவரியை அறியாமல் தினந்தோறும்,

கைந்நிறைய காசென்றும் மணிக்கணக்கிற் 
காத்திருந்து கூவுகின்ற மக்களென்றும்,
வையகத்தின் புகழ்போதை தலைக்கேற
வசதியொடு மன்னரென வாழ்வோரும், 

மொத்தசுகம் பெரிதென்றே அலைந்தாலும்,
முற்றியிங்கு சருகிலையாய் உதிர்கையிலே
அத்தனவன் கயிற்றாட்டம் நிற்கையிலே,
அரைகாசும் அவருடனே வருமாமோ?
================================
இராச. தியாகராசன்

காப்பதுன்றன் பாரமே....

கருப்பையா, கருப்பையா காப்பதுன்றன் பாரமே! அருள்மிகு ஐயப்பன் பஜனையில் நான் பாடும் பாட்டின் மெட்டு.  

===================================


===================================
கருப்பையா, கருப்பையா
==========================
கருப்பையா, கருப்பையா 
குலதெய்வக் கருப்பையா;
கருப்பையா, கருப்பையா, 
கருணைசெய்வாய் கருப்பையா                     (கருப்பையா)

காட்டின் நடுவில் கனசோராய்
கருப்பன் என்ற பேரினிலே,
தபசில் அமர்ந்தச் சாமியை,
தளபதி கருப்பா காக்கின்றாய்!      (தளபதி) (கருப்பையா)

அவல்பொரி கடலைவைத்து
அன்பாய்ப் பூசை செய்குவேன்;
கருப்பட்டிஎள் வைத்தேநான்
கருப்பனுன்னைப் பாடுவேன்!         (கருப்ப)   (கருப்பையா)

புனுகுதனை வாங்குவேன்;
புருவங்களில் சாத்துவேன்;
கண்மலரும் சாத்துவேன்
காப்பதுன்றன் பாரமே!                       (காப்ப)  (கருப்பையா)

பதினெட்டு படிகளிலே
வாழுமென்றன் கருப்பனே;
கதியின்றே அலையுமெனை
காப்பதுன்றன் பாரமே!                        (காப்ப)   (கருப்பையா)
=================================
இராச. தியாகராசன்.

பாப்புதுவை வாழியவே....

 நற்புதுவை வாழியவே; கவிப்புதுவை வாழியவே; பாப்புதுவை வாழியவே!

=====================================









=====================================
எம்புதுவை வாழியவே....
=======================
திரையொலிக் கடல்போற் றிகழ்ந்திடுந் தமிழிலே
வரைந்திடும் வண்ணமாய், வள்ளையாய்ச் சிந்துமாய்,
நரையறா இலக்கணஞ்சேர் நற்கவிதை நான்வனைய,
கரையிலா இலக்கியக் கவிப்புதுவை வாழியவே!

நிறைவான இலக்கியமும், நேர்த்திமிகு இலக்கணமும்,
நறுந்தேனாய்ப் பொலிகின்ற நாவினிக்கும் பாட்டியலும்,
அறம்பொருள் இன்பவியல் அத்தனையும் நானெழுதச் 
சிறப்புடனே மின்னுகின்றச் சீர்புதுவை வாழியவே!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழிற் சொல்லெடுக்கித் 
தூவானச் சாரலென தொல்தமிழில் பன்னூறாய்
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனைய
பாவானம் போலொளிரும் பாப்புதுவை வாழியவே! 
======================
இராச. தியாகராசன்

வருவானே நிச்சயம் வருவானே....

மழலையரோ, இளையவரோ, முதியவரோ, மகளிரோ, ஆடவரோ, கல்வி கற்றவரோ, கற்காதவரோ,பாவலரோ, படித்தவரோ, பண்பாளரோ, பற்றுள்ளவரோ, பற்றறுத்தவரோ, மந்தையுளம் கொண்டவரோ, அரசியலாரோ, ஆத்திகரோ, நாத்திகரோ எவராயினும் சரி அவன் வரும்போது எவரும்/ எதுவும் தடுக்க ஏலுமோ?
===================================









===================================
வருவானே நிச்சயமாய் வருவானே...
===================================

(எடுப்பு)
========
நாட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும்
வீட்டுக்குள்ளும், உறவுக்குள்ளும் 
காட்டுக்குள்ளும், கொட்டிமுழக்கி....                    (வருவானே)
வருவானே நிச்சயமாய் வருவானே!

(தொடுப்பு)
===========
அவனிங்கே உன்வாழ்வில் வருவானே;
தவறாமல் உனைத்தேடி வருவானே!    
அறுந்தாடும் வாலெனவே ஊழ்வினையால், 
இறுமாப்பில் நானென்றே அலைந்தாலும்,         (வருவானே)

(முடிப்பு)
=========
தடுத்தாலும் அரண்டிங்கே அழுதாலும், 
சொடுக்கினிலே தாள்பற்றி தொழுதாலும், 
வெடுக்கென்று மிரண்டிங்கே ஒளிந்தாலும்,
அடுக்கிச்சேர் செல்வத்தை அளித்தாலும்,           (வருவானே)

நடித்தாலும் தரைநோகத் துதித்தாலும், 
துடித்தாலும் சுள்ளென்றே மிதித்தாலும், 
கொடுத்தாலும் வேதனையில் கொதித்தாலும், 
வெடித்தாலும் கோடிதந்தே மதித்தாலும்,             (வருவானே)

கறும்பணத்தின் ஊழலிலே களிப்பவரின் 
அறமில்லா ஆட்டங்கள் சாய்த்துவிட,
திறனில்லா ஆட்சியரும் மீளாமல்  
உறங்கிவிழும் வேளையிலே உயிர்பறிக்க,          (வருவானே)

என்படத்தை என்பெயரை எழுதென்று,
மன்னரென ஆடுவோர்க்கும், தலைபொறித்தச்
சின்னத்தின் சிற்றெழுத்துக் கட்டளையால்,
மன்பதையில் உனைத்தேடி உயிரெடுக்க,          (வருவானே)

மழலைகளோ, முதியவரோ, கவிஞர்களோ, 
எழில்பூத்த நங்கையரோ, இளையவரோ,
பழந்தின்று கொட்டையிட்டத் தீயவரோ, 
கொழுப்பெடுத்தக் கொடுங்கோல ரானாலும்,  (வருவானே)

கருகருத்தக் கொம்புமிளிர் அணிநடை
எருமையதன் மீதேறி ஒருகரத்தில் 
திரிசூலம், மறுகரத்தில் உயிர்பறிக்கும்
பிரிபோன்ற பாசமதைச் சுழற்றியிங்கு                (வருவானே)
==============================================
இராச. தியாகராசன்

பிகு: 
அணிநடை எருமை = சங்கத்தமிழ் சொல்லாட்சி.
எமனின் பாசம் = உயிர்பறிக்கும் கயிறு.

திங்கள், 17 அக்டோபர், 2022

லிங்க பைரவியே.....

2022ஆம் ஆண்டு நவராத்திரித் தொடக்கத்துக்காக எழுதிய வரிகள்...
===============================================










===============================================
லிங்க பைரவியே (கலித்தாழிசை)....
===================================
அன்றலர்ந்த ஆம்பல்போல் அன்றாடம் புன்சிரிக்குந் 
தென்றலிழை பூங்காவின் சீர்மகளே! தேனமுதே! 
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கற்பகமே! 
மின்னொளி போலிங்கே வீசுமொளிர் வித்தகியே! 
....வெண்ணிலவின் தண்மையென வீசுமொளிர் வித்தகியே!

தேடுவதைத் தேடித் தளர்ந்துநான் நிற்கையிலே, 
நாடுகின்ற மெய்யை நலுங்காமல் கொண்டிடத்தான் 
வாடுகின்ற என்னுளமும் மாரியவள் பேரருளைப்  
பாடியே நித்தம் பரவசமாய் ஆடுகின்றேன்! 
....பைரவியை எண்ணிப் பரவசமாய் ஆடுகின்றேன்!

பித்தனவன் ஊழாழி பற்றியெனை ஆட்டிவைக்கச் 
சித்தினியுன் பாசமெனும் தேன்மாரி காத்துநிற்க, 
அத்தனை ஆயிரமாய் ஆட்டத்தை தானடக்கி, 
மத்தியிலச் சக்தி மனங்குளிரச் செய்வாளோ? 
....மாநிலமே போற்ற மனங்குளிரச் செய்வாளோ?

கள்ளதனின் போதையெனக் கார்முகிலின் தூரலெனத்
துள்ளிவரும் குற்றாலத் தூய்மையதன் சாரலென, 
வெள்ளமென நானும் வெடிக்கின்ற பாப்புனைய, 
அள்ளிவரம் தந்தருளும் ஆரமுதே! அம்பிகையே!
....அன்பதனால் என்னிலுறை ஆரமுதே அம்பிகையே!

உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்தளிப்பாள் காளி;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்தவென் லிங்க பயிரவியே!
....எழிலாம் வடிவேயென் லிங்க பயிரவியே!
=====================================
இராச. தியாகராசன்

அறப்பாட்டு....

நம் தாய்நாட்டு மண்மீதிலே இற்றைக்குத் தாண்டவமாடும் கோர நிகழ்வுகள், சாதி/ மத/ பதவி/ பண-பிணச் சழக்குகள், ஊழல் தலைவிரித்தாடும் துயரம்/ அறத்தையே காலிலிட்டு மிதிக்கும் வாக்கு வங்கி அரசியல், வெறும் TRPக்காக, குற்றம் செய்துவிட்டு தண்டனையும் பெற்றவரையு விடுதலை வீரராகப் போற்றி, வரிந்து வரிந்து சேதிகளில் திரும்பத் திரும்பக் காட்டுகின்ற மனச்சான்றே இல்லாத கோணல் ஊடகங்கள், கலியுகத்தின் கோரமுகம், காணுமிடமெல்லாம் சுயநலத்தின் பெருங்களியாட்டம், அறச்சீற்றமே இல்லாமல் நடைபிணமாய் மக்கள் வாழும் வாழ்க்கை (எனையும் சேர்த்தே!)

வேளாண்மை செய்பவர் படும் துன்பங்கள், சிறார்/ மகளிர் மேல் பாலியல் வன்மங்கள், வன்முறையாளரின் வாதங்கள்/ தீவினைகள்/மூளைச்சலவை செய்யப்பட்ட கோமாளிகளின் கூப்பாடு, அடிப்படைவாதிகளின் வரம்பில்லாக் குற்றங்கள்/ கொடுஞ் செயல்கள்,  அவர்களையும் தலைமேலே தூக்கியாடும் மாந்தர்கள்;  எதைச் சொல்ல எதை விட? 

ஆழிப் பேரலையென/ முள்முடி நுண்தொற்றென இவை அனைத்தையும் ஒரு நொடியில், ஒரே ஒரு அறப்பாட்டால் அழிக்க ஏலாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பாடல்....
===============================================

===============================================
அறப்பாட்டு அரற்றியதே நெஞ்சம்......
===============================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க,
வியன்கவி யத்தனை விண்டேனிங் காயின் 
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசு மென்னுள்ளே பொங்குந் துயரம்!

மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தே,
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்!
விதியென் றிதையே உரைத்தாலு மென்றன்
கொதிக்கு முளமெனைக் கொல்கிறதே! உண்மை!

நெறித்தே பிழையென நீதியும் கேட்கும்
வெறுத்த நினைவுகள்; வேதனை கொண்டே
பிறக்கு  முயிரும் புவியில் நிலையா
தறுக்கு  மறப்பாட் டரற்றியதே உள்ளம்!

முற்றுமொரு பாடம்; முதலுமொரு பாடம்!
சுற்றமொரு பாடம்; சுமத்த  லொருபாடம்!
நிற்றலொரு பாடம்; நிகழ்வு மொருபாடம்!
கற்றலொரு பாடம்; கருவு மொருபாடம்!

வெற்றுமொரு பாடம்; விசன மொருபாடம்!
பற்றுமொரு பாடம்; பரிவு மொருபாடம்!
குற்றமொரு பாடம்; குறையு மொருபாடம்!
உற்றதொரு பாடம்; உறவுகளும் பாடம்!

கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்க,
அரிக்குந் துயரத்திற் காளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி னியல்பற, எண்ணம்
வரித்த தமிழே மருந்து!
===============================================
இராச. தியாகராசன்.

வாழ்வதுதான் செறிவு...

வாழ்வதுதான் செறிவு.   மதிப்பெண்ணுக்கும், தேர்வுக்கும், காதலுக்கும், வேறு எதையும் எதிர்கொள்ளத் துணியாமல் சாவை ஏற்பதா நிறைவு?  எல்லீரும் வாழ்வீரே!  விதிக்கப்பட்ட நாள்வரை வாழ்வதுதான் இயல்பென்றே வாழ்வீரே!  நொடிப் போதில் எடுக்கும் முடிவால் எல்லாம் முடிந்து விடும்;  ஆனால் பெற்றவரும், உற்றவரும், தோழமையும் இந்தப் பிரிவாற்றாமையால், எத்தனை துயரடைவர் என்பதை ஒரு நொடி சிந்தித்தால், இப்பாழ் முடிவைப் பலரும்  எடுத்திருக்கவே மாட்டார் என்பது திண்ணம்.
==========================================









==========================================
வாழ்வதுதான் செறிவு....
=========================
சுழலெனவே சுற்றுகின்றச் சோதனையில் சோர்ந்துநிதந் 
தழலெனவே எரிந்துமனந் தளர்ந்துவிழும் நேரமதில்,
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் எண்ணமதால், 
விழலெனவே மண்டுகின்ற வெறுங்கனவுக் கற்பனைகள்!

ஏதுமற்ற இருள்நினைவில் இதயத்தைத் தான்தொலைத்தே, 
உதயமாகும் உணர்வுகளில் உருகிநிதம் உறவாடி,
சிதிலமென சிதறிவிட்டச் செங்கல்லாய் நினைவெரிக்கப் 
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி, 
அலைந்தலைந்தே அதன்மீதில் அடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்;
உலைநெருப்பில் உழல்வதுபோல் உலகாய உணர்வின்றி, 
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் அறமாமோ? 

தளர்ந்துவிட்ட வாழ்வியலில் தனிமையிலே தடுமாறி, 
துளித்துளியாய் யுள்ளத்தில் சூழ்கின்ற துயரமதால், 
களிபொங்கச் சாவினையே கரங்கோக்கத் துடிதுடிக்கும், 
ஒளிர்வெளியி னிளையோர்உம் உயிரழிக்க ஏதுரிமை?

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு 
கந்தமென மணக்கின்ற கவிதையிலோ இல்லையெனுஞ் 
சிந்தனையைத் தேர்ந்திருக்கும் தெளிவான உளங்களிலே
வந்துதிக்கும் வளந்தருகும் வாழ்வறந்தான் அறிவன்றோ?
=====================================================
அன்பன் 
இராச. தியாகராசன்

தோற்பேனோ காதலிலே.....

நீர்க்குமிழி போன்றவனை நீர் வெல்லலாகுமோ!  நடவாது....... நாணலென வாழ்வேன் நான், என்றன் வரிகளிலே!
======================================







======================================
தோற்பேனோ காதலிலே....
=========================
அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேசமெனும்  நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றுஞ் 
சிலையழகே! செம்புலத்து நீரெனநாம்  என்றிணைவோம்?

வானகத்தி லுலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனையைத் தான்தந்தே,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்வதுமேன்?

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகுமோ? 
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன்நான்; தோற்பேனோ  காதலிலே?
==========================
இராச. தியாகராசன்

கவிபுனைந்தேன் காற்றினிலே...

காற்றலைத் தூதுவன் உன்றன் காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலை சற்றசைத்துத் தூது சொல்வதும் உனக்குக் கேட்கவில்லையோ???

====================================================













====================================================
கவிபுனைந்தேன் காற்றினிலே......
===============================
வழிநிறையும் வெறுந்தனிமை மனமெங்கும் கருநிழல்கள்;
சுழல்கின்ற காற்றினிலும் துயரவொலி கேட்கின்றேன்;
கழிந்துவிட்ட காலமெனுங் கனவுகளில் மூழ்கிநிதம்
பிழிந்துவிட்ட புதுத்துணியாய்ப் பேச்சின்றித் துவள்கின்றேன்!

பொழிலூடு மணந்தூவும் பூந்தென்றல் தழுவலென,
எழிலாரும் இன்பமகள் இழுத்தணைத்தே என்னிதழில்
முழவோசை ஆர்ப்பதுபோல் முத்தங்கள் பொழிந்ததையே 
நிழலாடுந் தனிமையிலே நினைந்துருகி எரிகின்றேன்;

எழுகின்ற தழலெனவே என்னவளும் இதயத்தில், 
நிழலென்றும் நிசியென்றும் நினைவென்றும் பாராமல், 
கழலொலிக்கக் கருத்தேறி, கவிமயிலாய் ஆடுகின்றாள்;
பொழிகின்ற மழைமுகிலாய்ப் பூஞ்சாரல் தூவுகின்றாள்!

இமயமலைக் குளிருறையும் இனியமகள் நினைவுகளால்
சிமிழுள்ளே அடையாத சிந்தனையைச் செதுக்கிநிதம் 
அமுதமென எம்மொழியில் அழகான சொல்லடுக்கிக்
கமழ்கின்றக் காதலுக்காய்க் கவிபுனைந்தேன் காற்றினிலே!
======================================================
இராச. தியாகராசன்

முழுநிலவே முத்தமிழே....

அன்னையொருவர் தன் மழலைக்காய், நந்தமிழிற் பாடுமொரு தாலாட்டுப் பாடல்....
==========================================

==========================================
முழுநிலவே... முத்தமிழே!
==========================
சின்னஞ் சிறுவிரலாற் றீண்டுமின்ப ஓவியமே!
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுக் காவியமே! 
மின்ன லொளிவீசும் மென்மழலைச் சொற்பதமே!
அன்பில் உருவெடுத்த ஆரமுதா மற்புதமே!

முக்கனியுஞ் சேர்ந்த முழுநிலவாம் முத்தமிழே!
சொக்குமெழிற்  றோய்ந்த தொடுவானச் சித்திரமே!  
மன்னுதமிழ் மாண்பாம் மரபென்னுஞ் சத்தழகே! 
பொன்நே ரிலக்கியப் பூந்துகிலாம் புத்தமிழ்தே! 

மடியில் தவழ்தெனை மயக்கிடும் மல்லிகையே! 
செடியில் சிரிக்குமென் தேனமுதச் செண்பகமே! 
கொடியி லாடுகின்ற கொன்றையின் பூமணமே!
பொடியாய்ப் பொலிகின்ற புல்லினிதழ் பூம்பனியே!

என்னிலே விளைந்தநல் லின்பத்தின் சிலையே!
கண்ணையே கவர்ந்திடும் கனவுலகின் கலையே!
தென்றலாம் காற்றிலே தவழ்நீ ரலையே!
பன்னீராய் மணந்திடும்  பழமுதிர் பொழிலே!

மழலைப் பருவத்தின் நித்திலச் சுடரே!
கழறும் விந்தையாம் கிளிமொழிப் பேச்சே!
வண்ணப் பொக்கை வாயிதழ் சிரிப்பிலென்
எண்ணக் கவலையை எரித்திடும் மருந்தே!
===================
இராச. தியாகராசன்.

இருப்பவர் உரையதை ஏத்திடுவோம்...

இறந்தவரின் நல்வரிகளை/ நற்கவிதையைப் போற்றுவது மிக உயர்வான செயலே!  இருப்பினும் இருக்கும் போதே தன் பாடல் வரிகள் போற்றப்படுவதைக் காண்கையிலே பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும், ஒரு கவிஞனுக்கு வேறென்ன சிறந்த மகிழ்வை, எந்த விருது தரமுடியும்?
==========================================

==========================================
இருப்பவர் உரையினை போற்றுவோம்.....
==========================================
மின்னும் பாக்கள் மலரும் மாகடல்
பின்னும் பாவலர் பாடும் பாக்கடல்
சித்தக் கடலிலே சிக்கும் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்கும் முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் தமிழ்மனக்
கரங்களில் கிடைப்பதோ கிளிஞ்சலும் சோழியும்!
ஆழியாம் தமிழின் அலையிற் சிக்கிடும்
சோழியும் சங்கதும் சிறப்பாம்; சேருமக்
கவிதைச் சொல்லின் கிளிஞ்சலு(ம்) அழகாம்;
கவிகளில் எவர்க்கோ கிடைக்கும் புதையல்!

மொழிக்குக் கவிதை பழமைதா(ன்) ஆயினும்
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து!
ஆழ்கடல் செந்தமிழ் அறிஞரும் தமிழினை
மூழ்கியேத் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழி லழகினைச் சொல்கையில்
வாழ்விலே காணுமவ் வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலைச் சொல்கையில்
புவியினை யழித்திடும் போதையைச் சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்
இன்றையப் பெண்சிசு இனக்கொலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைச் சொல்கையில்
நாட்டின் மதம்வெறி நாசமுஞ் சாடுவீர்!
நாணுமத் தமிழ்மொழி நங்கையைச் சொல்கையில்
காணுமச் சமூகக் கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி சொல்கையில்
பண்பறு மாந்தரின் புன்னெறி சாடுவீர்!

பல்சுவை யுணவோ பூந்துகி லுடையோ
நல்லெழில் மனையோ நிறைவு தருமோ?
இருக்கையில் பாக்கள் இன்றே பெற்றிடும்
பெருமை ஒன்றே பாவலர்க் கனவாம்!
இறந்தநற் கவிஞரில் எழுத்தினை யென்றும்
நிறைவுடன் போற்றும் நிலையுட(ன்) இன்று
இருப்பவர் எழுதிய எழில்மிகு கவிதை
உரையதை ஏத்திடு(ம்) உயர்வது(ம்) செய்வமே!
===========================================
இராச. தியாகராசன்