புதன், 30 அக்டோபர், 2019

சங்கரியோ வாராயோ......

பாவலர், தமிழார்வலர் திரு மகுடேசுவரன் கோவிந்தராஜன் அவர்களின் காலம் பற்றிய முகநூல் நிலைச்சேதியில் பின்னூட்டமாக ஒரு பாடலும்,  கவிப்பெருஞ்சுடர் திரு ஹரிகிருஷ்ணனின் எந்நிரற் குழுவில் "வாவெழுந்து வாகண் மலர்ந்து"  என்கிற ஈற்றடிக்கு ஒரு வெண்பாவும் எழுதினேன். இரண்டுமே அந்த ஶ்ரீதேவி உமையாளை என்னுளமறிய எனக்குத் தோன்றியவை என்பதால், இன்னோரு பத்தி சேர்த்து, கலிவெண்பாட்டாக என்னுடைய வலைப்பூவில் பகிர்கிறேன் இப்போது.

==================================


==================================
சங்கரியே வாராயோ....
==================================
சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமுன்றன்
கோலத்தைக் கண்டிடவே கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானந்தான் வாய்த்திடுமோ?       (ஞாலத்தின்)

வித்தகியுன் பின்னலெனும் வல்லூழாம் ஆழியிலே
நித்தமுமே நான்விழுந்து நீந்திடும் வேளையிலே
சித்தமதை மத்தெனவே சீய்த்தே சிலுப்புகின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறெனக்கு வாய்த்திடுமோ?      (பித்தமதை)

நாவெழவே நாதியின்றி நாளெல்லாம் போகயிலே
சாவெழுதி வாழ்வெழுதும் சங்கரியிப் பூவுலகில்
பாவெழுதும் பாவலனென் பாமலரை ஏற்றிங்கே
வாவெழுந்து வாகண் மலர்ந்து.
===================================
இராச. தியாகராசன்.

சனி, 26 அக்டோபர், 2019

வெங்கதிராய் ஒளிவீசும்......

அனைவரையும் அருந்தமிழால் உயர்வு செய்வோம்; 
அன்புடனே அரவணைப்போம்.
================================


================================

தழலெனவே எரிந்துள்ளந் தளர்ந்துவிட்ட தோழியரின், 
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் தோழர்களின்,
விழலெனவே விளைந்திங்கு வீணான பித்தத்தால், 
சுழலெனவே சுற்றிநிதம் சுக்கான சுற்றங்கள்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறிவிட்ட நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்,
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் தான்துளைத்தே,
உதயமாகு முணர்வுகளை உருக்கிநித முறவாடும்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி,
அலைந்தலைந்தே அதன்மீதி லடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்,
உலைநெருப்பி லுழல்வதுபோல் உலகாய உணர்வுமின்றி,
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் வாழ்வாகும்!

துளித்துளியா(ய்) உள்ளத்தில் துயர்சேர்க்குஞ் சூதுகளைத்,
தளிர்க்கின்ற சழக்குகளைச் சடுதியிலே விலக்கிவிட்டுக்,
களிபொங்கக் கைப்பினையே கருக்கிவிடும் நெஞ்சகத்தில்,
வெளிச்சத்தின் வைகறையே வெங்கதிரா(ய்) ஒளிவீசும்!

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு
சந்தமணச் சொல்லுரைக்குஞ் சடங்கினிலோ இல்லையெனுஞ்
சிந்தனையின் வளஞ்செறிந்த தெளிவான மனங்களிலே
வந்துதுதிக்கும் பேரன்பே மகத்தான சிவமாகும்!

========================================================
இராச. தியாகராசன்.


திங்கள், 21 அக்டோபர், 2019

எது கவிதை........

எது கவிதையென்று எங்கெல்லாமோ தேடுகிறேன்;  எது கவிதையென்று எதையெல்லாமோ கிறுக்குகிறேன்...

=====================================



=====================================
கவிதை என்னும் அழகுப்பூ.....
============================
துள்ளிவரும் வண்ணத்துப் பூச்சி போலே
.....தோன்றியுள்ளே ஆடுமென்றன் எண்ணச் சீரோ?
வெள்ளிமலை மேல்விளைந்தே வீழு மந்த,
.....விண்ணருவிச் சாரல்தான் தமிழாம் தேரோ?
அள்ளிமனங் கொள்ளையிடப் பொழியும் இன்ப
.....அமுதமழை வெள்ளந்தான் பாட்டாம் ஆறோ?
புள்ளியிட வந்தொளிரும் கோலம் போலே
.....பொலிந்தாடும் ஓவியந்தான் கவிதைச் சாறோ?

காதலிதன் கடைக்கண்ணைக் காட்டும் போதில்,
.....கார்முகிலும் கனவெழிலை ஊட்டும் போதில்,
சோதனையாய்க் காதலதும் கருகும் போதில்,
.....துயர்நீங்க மீண்டுமது தளிர்க்கும் போதில்,
ஆதவனும் தூரிகையாம் கதிரைக் கொண்டு,
.....அடிவான சீலையிலே எழுதும் போதில்,
சீதளமாய்ச் சிதறிவிடும் சொல்ல டுக்குச்
.....சித்திரந்தான் கவிதையெனும் கனவுக் கூறோ!

வானகத்தி(ல்) இடியிடிக்க விரித்தே யாடும்,
.....வண்ணமயில் போலிங்கே எண்ண வானில்,
தானிடிக்கப் பூத்துவிடும் நறும்பூக் காடாய்,
.....தாரணியி(ல்) எத்தனைபே(ர்) இடித்திட் டாலும்,
நானிலத்தி(ல்) அயராமல் தினமு(ம்) என்றன்,
.....நன்னெஞ்சத் தறிநெய்யும் பட்டுச் சீலை;
கானகத்துக் கருங்குயிலின் கனவுக் கூவல்;
.....கவிதையெனு(ம்) அற்புதமா(ம்) அழகுப் பூவோ!
====================================
இராச. தியாகராசன்.

கொடுமைகளும் வந்ததேனோ?....

அறமில்லா அறிவிலிகள் நிறைந்த உலகமோயிது?  😩

===================================













===================================

கருத்தமனக் கொடியவர்கள் சின்னப் பூவைக்
.....கசக்கிநுகர் கயமைகளும் வளர்ந்த தேனோ?
குருத்துநிகர் மழலைதன்னைச் சிதைப்போர் கூட
....கொழுந்தினிலே அன்னைமடி யிருந்தோர் தாமே?
அரக்கரென அடுக்கடுக்காய்ப் பிழைகள் தம்மை
....அனுதினமும் அளவின்றிச் செய்வோர் கூட
சிரித்தபடி தாயவளும் அன்பாய் ஊட்டும்
....சிறப்பமுதை அருந்திநிதம் வளர்ந்தோர் தாமே?

ஊழ்த்துவரும் உயிர்கட்கே உலகின் தாய்மை
.....உதிரத்தால் வழங்குகின்ற சின்ன மிங்கே
ஆழ்ந்துருகித் தாயவளே வழங்கும் அன்பின்
.....அகண்டவெளித் தத்துவமாம் உண்மை யிங்கே
தாழ்த்தலிலா தாய்மையுள்ளம் மொழிகள் தாண்டி,
.....தனதுதிரம் கடைந்தருளும் அமுத மிங்கே,
வாழ்க்கையிலே தலைமுறையை வளர்த்தே என்றும்
.....மங்கைநலம் காத்திடவே வேண்டு மம்மே!
=====================================
இராச. தியாகராசன்.

 

சனி, 19 அக்டோபர், 2019

என்னையே தந்தேன்.....

ஒரு சந்தப் பாடல் மாறுதலுக்காய்....

(கீழிருக்கும் ஓவியம் ஓவியர் திரு இளையராஜா அவர்களின் அற்புதக் கைவண்ணம்.)

================================














================================
என்னையே தந்தேனடி.....
========================

எடுப்பு:
=======
கண்ணாலே உனைக்கண் ட துமே! - பெண்ணே
எண்ணாம லென்னையே தந்தேன்!

தொடுப்பு:
==========
கண்ணிலே கண்டேனக் கயலென்னும் குமுதம்;
நெஞ்சிலே உண்டேனவ் வெழிலென்னும் அமுதம்!

முடிப்பு:
=======
வானத்து மாமழை யாலே - தோகை
மயிலிங்கே ஆடுதல் போலே
கானத்தைத் தேன்குர லாலே - கூவிக்
களித்திடுங் கருங்குயில் போலே;  (கூவிக்) (கண்ணாலே)

பேசிடுங் கண்ணொ ளியாலே - என்றன்
சித்தமுங் கலங்கிட நாளும் 
ஆசையைத் தூண்டுகின் றாயே! - உன்றன்
அசைந்தா டுமிடை யதனாலே!   (உன்றன்) (கண்ணாலே)

நீரெல்லைத் தொடுவது போலே - கண
நேரத்தில் மறைவது மேனோ?
வேரிலா மரமது போலே - மனம்
வீழ்வதைப் புரியாத தேனோ?   (மனம்) (கண்ணாலே)

கார்பொழி பின்னலை நீயும் - சுற்றிக்
கடந்திடும் வேளையில் நானோ;
பார்வையின் வீச்சதா லேயே - வெற்றுப்
பதுமைபோல் ஆவது மேனோ?  (வெற்று) (கண்ணாலே)

விண்ணிலே லூர்ந்திடு நிலவாய் - நீயும்
மென்மையாய்ச் சிரித்திடு வேளை,
கண்ணெனும் வலையிலே மீனாய் - நானும்
கருக்கிலே ஆழ்வது மேனோ? (நானும்) (கண்ணாலே)
===================================
இராச. தியாகராசன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

மல்கோவா மாம்பழமே........

மல்கோவா மாம்பழமே, நீகொடுத்த உப்புமுத்த நெனப்புகூட நெருப்பள்ளிக் கொட்டுதடி.... 
(கீழிருப்பது ஓவிய இளையராஜா அவர்களைன் கைவண்ணம்.

==============================













==============================
மல்கோவா மாம்பழமே;
மருதம ருக்கொழுந்தே!
காதோரம் ஓஞ்சிமிக்கி,
காத்துலதான் கண்சிமிட்ட,
நீளசடைப் பின்னலிலே
நிலாமல்லிச் சரமாட
செஞ்சாந்துச் சந்தனமாய்த்
தெம்மாங்குத் தேவதயாய்ச் 
சீனத்துச் சிலுக்கெனவே
சிலுசிலுக்க நிக்கியேடி!

வெண்டக்காப் பிஞ்சுபோல,
மருதாணி வெச்சவெரல்
செந்தூரப் பொட்டெனவே,
செவப்பாத்தான் சொலிக்குதடி!
தங்கநெறத் தாவணியும், 
பளபளக்கும் பவுனோட
கண்ணாடி வளகூட, 
கலகலன்னு கதபேசச் 
சஞ்சலத்தால் எம்மனசும்
சருகாத்தான் எரியுதடி!

கட்டிவெச்ச மல்லிபோலப் 
பொங்கிவெச்சச் சோறுபோல,
வரிசயிலே பல்லுமின்னச் 
செதறவிட்ட சோழியாட்டம்,
ஜலுஜலுன்னு சிரிச்சுகிட்டே,
முன்னாடி வந்துநின்னு,
இறுக்கியென்ன ஒதட்டோட
நீகொடுத்த உப்புமுத்த
நெனப்புகூட நெஞ்சத்திலே,
நெருப்பள்ளிக் கொட்டுதடி!

கருப்பஞ்சா றினிப்பாட்டம்,
கண்ணே ஒங்கண்ணுகூட
கல்கண்டா யினிக்குதடி!
வாக்கெடுத்த ஒம்பின்னல்
பாம்பாத்தாங் கொத்துதடி!
தெனந்தெனமும் சீவன்நான்
செத்துத்தான் பொழக்கெறண்டி!
ஒருசொல்லு சொன்னாலே
ஓனக்காக ஓலகத்தை
ஓம்மடியில் வைக்கறண்டி!
===============================
இராச. தியாகராசன்.

வியாழன், 3 அக்டோபர், 2019

பாதகத்தைக் காணீரோ!!!

எத்தனையெத்தனையோ காணுகின்றோம் இப்புவியில்.  ஆனால் சில நியதி மாறாட்டங்கள் மாறவே மாறாதா என்றேங்குகிறது உள்ளம்....

=============================================



=============================================

மதமேற்றும் மதுவென்னும் மயக்கத்தைத் தருவோரும்,
நிதமிங்கே நிறைவான நிதியதனில் புரண்டிருக்கப்
புதிதெனவே பேசிகளைப் புதுப்புனைவாய்ச் செய்வோரும்,
சதமெனமே செல்வத்தில் தடையின்றி உருண்டிருக்க;

வெண்சுருட்டாம் வேதனையை விற்கின்ற பேர்களுமே
எண்ணரிய பணத்தினிலே எந்நாளும் இழைந்திருக்க,
வண்ணமயக் குளிர்ச்சாற்றை வழங்குகின்ற நிறுவனமும்,
கொண்டலெனக் கொட்டுகின்ற கோடியிலே உழன்றிருக்க;

அடுக்கிவிட்ட அருந்தமிழில் அம்புலியைப் பிடிப்பதுபோல்,
மிடுக்குடனே வெள்ளுடையில் மெருகாகப் பேசுவோரும்,
சொடுக்கினிலே ஏவலர்கள்; சொகுசான வண்டியென,
முடியணியாக் கொற்றவராய், முழுச்சுகத்தில் நுளைந்திருக்க;

அணிவதற்கே உடையின்றி அடுக்களையி நெருப்புமின்றி,
பிணிபிடித்தே நைந்தவர்போல் பெருந்துயரில் வாடுகின்ற,
உணவணிக்கும் உழவர்களோ ஒருவேளைச் சோற்றுக்காய்ப்
பணமின்றி பதைபதைக்கும் பாதகத்தைக் காணீரோ!

எண்ணுமுளக் கருத்தாக இயம்புகிறேன் இன்றிங்கே;
வெண்சுருட்டு, கைபேசி, வீரமொழி, குளிர்ச்சாறு,
தண்மதுவோ ஏதுமின்றி தரணியிலே வாழ்ந்திடலாம்;
உண்பதற்கு உணவின்றி உய்ந்திடத்தான் ஆவதுண்டோ?

======================================================
இராச. தியாகராசன்

நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல்.  பரதவர் என்பவர் மீனவரென்றால்,
நுளையர் = முத்துக் குளிப்பவர்.