திங்கள், 30 செப்டம்பர், 2019

எதை நீயிங்கே பார்க்கின்றாய்??

எங்கேயோ பார்வை,  எதையோ தேடுதல்
======================================


=====================================
எதனை நீயிங்கே பார்க்கின்றாய்?
=======================
எதனை நானிங்கே இவ்வாறாய் வியப்பினிலே
சதமாய்த் தானெண்ணி சத்தியமாய்ப் பார்க்கின்றேன்?
புதுமையெனப் புகழ்போதை புந்தியிலே புகுந்தாடச்
சிதைமேவும் பொய்யுடலை திண்ணமெனக் கொண்டிங்கு,

சுதைபூசு மாயவலை சுகந்தன்னில் அகம்மயங்கி,
நிதமாடும் நாடகத்து நடிப்பதனைத் கண்டுருகி,
மதியின்றி மதபோதை மண்டையிலே குடைவதனால், 
புதுமைதா னீதென்று பொய்யாகப் புரிந்தங்கே,

அதிசயம் போலுணர்ந்தா அப்படிநான் பார்க்கின்றேன்?
சதிராடும் பொய்முகத்துத் தருக்கழலைச் சேர்க்கின்றேன்?
இதிலிங்கே எண்ணமெது? இதயவெளி இன்பமெது?
பதியுமென்றன் தடங்காட்டும் பாதவலித் துன்பமெது?

நேற்றவர், இன்றிவர்; நிசமில்லா நாளையெவர்?
போற்றுகின்ற பதவிதரும் பொய்யான வாழ்வினிலே,
கூற்றுவன்தன் பாசத்தைச் சுழற்றிவிடும் வேளைவரை,
சோற்றுடலால் சேர்க்கின்ற செல்வத்தின் காவலன்நான்!

நான்நானென் றாடுகின்ற நாற்றமிழிச் சடலங்கள்;
தான்தானென் றோடுகின்ற சாய்க்கடை உடலங்கள்;
கோன்நானென் றகந்தையிலே கொக்கரிக்கும் மடமைகள்;
வான்முட்டும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகள்!

சாண்வயிற்றுப் பாட்டுக்காய் தவிக்கின்ற வாழ்வியலில்,
காண்கின்ற எழிலுமெது? கற்றுவைத்த கல்வியெது?
பூண்கின்ற அணியுமெது? புன்மையெனும் பொய்ம்மையெது?
மூண்டெரிக்கும் மயக்கவலை மோகமுள்ளி னுறுத்தலெது?
=========================
இராச தியாகராசன்

பிகு:
====
புந்தியிலே = உள்ளத்தில், தருக்கழலை = தருக்கு+அழல் (இறுமாப்பெனும் அழல்), பாசத்தை = பாசக் கயிற்றை, நாற்றாமிழி = நாற்றம் + இழி (கெட்ட மணம் வழிகின்ற), சாய்க்கடை = சாக்கடை, மூண்டெரிக்கும் = மூண்டு+எரிக்கும் (பற்றியெரிக்கின்ற), 
மோகமுள் = மோகம்+முள் (முள்ளாய் உறுத்தும் ஆசை)

வியாழன், 26 செப்டம்பர், 2019

மாயமென மாற்றுவளோ?.....

(பிகு: கீழிருக்கும் ஓவியம், தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜாவின் கை வண்ணம்)

=======================================

=======================================
மாயமென மாற்றுவளோ....
=======================================
மதமதக்கும் மனச்சோர்வை மாற்றிவிடும் மந்திரக்காரி;
சுதியேற்றிச் சுழலவைக்கும் சுகந்தமணச் சுந்தரக்காரி;
சதமாயென் நெஞ்சகத்தில் தகதகக்கும் தந்திரக்காரி;
இதந்தருகும்  இன்பமதை ஏற்றிவிடும் இங்கிதக்காரி;

கதகதக்கும் கங்கனையக் கனல்மொழியின் கந்தகக்காரி;
விதவிதமாய் அணைத்தென்னை விழுங்குகின்ற வித்தகக்காரி;
செதில்செதிலாய் என்னுளத்தைச் செதுக்கின்ற சித்திரக்காரி;
புதுமையெனும் புத்தமிழ்தாய்ப் பொலிகின்ற புன்னகைக்காரி;

உதயத்தின் ஒண்மையென உணர்வூட்டும் ஓவியக்காரி;
கதலியதன் தேன்நிகர்த்த கனிச்சுவையின் காவியக்காரி;
வதம்செய்யும் வார்த்தைகளால் வாட்டுகின்ற வாக்கியக்காரி;
நுதலென்னும் பெருமீனால் நுழுகின்ற  நூதனக்காரி!

அன்பின்றி எதற்கிந்த அவலமென்றே அழுகையிலே,
என்வாழ்வில் நான்தளர்ந்(து) இடிந்தோய்ந்து விழுகையிலே,
உன்மத்தம் பிடித்தவன்போ(ல்) ஓடித்தேய்ந்(து) எரிகையிலே,
பின்னல்க(ள்) என்வாழ்வில் பேதமையாய்ச் சிரிக்கையிலே,

அவலத்தில் நானிங்கே அடுக்களையி(ல்) எரிவதுபோல்,
கவலைக(ள்) அடுக்கடுக்காய்க் கவிந்தெரிக்க என்னிதயம்,
சவலையெனச் சத்தில்லாச் சருகெனவே பறக்கையிலே,
இவளிங்கே ஏந்தியெனை இன்பத்தேன் ஊற்றுவளோ?

பொள்ளுகின்ற வாழ்வியலில் போக்கற்ற தருணத்தில்,
கள்ளமற இயல்பெழிலாய்க் கைக்கோத்து வருகுவளோ?
வெள்ளமென வெறுப்புநிலை வெளிப்போந்து வெடிக்கின்ற,
உள்ளமதே உடையாம(ல்) உடனிருந்தே ஆற்றுவளோ?

ககனத்தின் கடுவிசையாய்க் காற்றுவெளிக் காட்சியென,
சிகரத்தின் சீதளமாய்ச் சில்லித்த நெஞ்சகத்தில்,
தகவின்றி அலைகின்ற தத்தாரிச் சிந்தனையை,
அகமலர்ந் தன்புடனே அருகிருந்து தேற்றுவளோ?

தனிமையெரி வேளையிலுந் தன்மடியி(ல்) எனையிருத்தி,
பனித்துகளின் சாரலெனப் பற்றியெனைக் காதலுடன்,
கனிச்சுவையா(ய்) இனிக்கின்ற கற்கண்டுக் களிப்பூட்டி,
மனச்சோர்வைக் கணப்போதில் மாயமென மாற்றுவளோ?

======================================
இராச. தியாகராசன்.

பிகு:  நுதல் = புருவம் / நெற்றி
            நுழுதல் = விழுங்குதல்

முகநூல் வெண்பாக்கள்....

நந்தமிழை வளர்ப்பதனால், சமூக வலைதளத்தையும் இலக்கியமென்பேன் நான்.

==============================


==============================

குற்றமிலாச் செந்தமிழைக் கோதில்லாத் தோழமையைப்
பெற்றுதரு(ம்) இவ்விணையம் பேறென்றால் - சுற்றும்
முகநூலில் நாமிணைவோம் முத்தமிழால் என்று
பகர்தலே பைந்தமிழர் பண்பு.

தேடியுள(ம்) ஆய்ந்தழகாய்ச் சேர்ந்திடவே நம்மிளையோர்
நாடுவதோ நல்லிணைய நட்பன்றோ!  - வாடலில்லா
முத்தமிழும் அன்பும் முகநூற்(கு) அழகென்றே
சித்தமதில் கொள்வார் சிலிர்ப்பு.

அன்பு(ம்) அணிகலனாய் நட்பும் இருப்பதனா(ல்),
என்றும் முகநூல் இனிப்பென்றால் - இன்றிங்கே
சிந்தை சிலிர்க்கச்செய் செப்படி வித்தையென,
விந்தை முகநூல் வியப்பு.

தகவோர் தமையே சளைக்கா(து) இணைக்கும்
முகநூல் உலகின் மொழியென்றால் - அகவாழ்வில்
சூழ்மனிதர் பண்பினைச் சொல்லிடும் இந்நூலும்
ஆழ்ந்துணர்த்தும் ஆசான் அறி.

சிந்திக்க ஏலாத சிந்தனைச் சிற்பிகளும்,
முந்திவந்து மேயும் முகநூலில் - வந்தனைசெய்
நேர்மையொடு நீதிவழி நிற்பவர்க்கே எந்நாளும்
சீர்த்திகளும் சேர்தல் சிறப்பு.

================================================

இராச. தியாகராசன்

கள்ளமாய்ப் பறையுமோ?

2010இல் எழுதிய வரிகளிவை.  பறையும் என்னும் சொல் தூயதமிழ்ச் சொல்.  பறைதல் என்றால் மறைபொருளை ஊரறிய முழவொலித்துக் கூறுதல் என்று பொருள்.
======================================
======================================
கள்ளமாய்ப் பறையுமோ...
======================================
சேற்றிலே மலர்ந்தநற் செந்தா மரையெனத் 
தோற்ற மளித்திடுஞ் சொப்பனத் தோகையே!
பாற்குட வெண்மையாய்ப் பாங்கெழில் மேனியில்,
ஊற்றெனப் பொங்கிடு மோவிய மங்கையே!
போற்றுமிவ் வேழையின் பூமனக் காதலை,
ஏற்றிட வேண்டியே ஏங்குமென் வேதனை
நாற்றிசை மேவியே நங்கையுன் காதினில்,
சாற்றியே சிந்தையிற் சந்தமாய் பதிந்திடக்
காற்றலைத் தூதுவன் கள்ளமாய்ப்  பறையுமோ?
=======================================
இராச. தியாகராசன்.

பிகு:
====
கள்ளமாய்ப் பறைதல் - கிசுகிசுப்பாக காதருகில் சொல்லுதல்.

கண்ணுறங்காய்....

இளையோருக்காய் ஒரு தாலாட்டு.  2002இல் எழுதி 2015இல் முகநூலில் பகிர்ந்ததாய் நினைவு.  இன்று இன்னொரு பத்தி சேர்த்து இங்கு பகிர்கிறேன்.  ஒரு தமிழ்த்தாய் தன் மகவிடம் கடமையைச் செய்யக் காலம் வருமெனச் சொல்லி, கண்ணுறங்கத் தாலாட்டிசைக்கிறாள்.
========================================
========================================
கண்ணே நீ கண்ணுறங்கு...
========================================
நேர்மைச் சீயெமெனத் தீதகற்றச் சீறுவைநீ - இன்று
.....நித்திலமே நறுந்தேனே கண்ணுறங்காய்;
சோர்வி லாதுவருஞ் சூழ்துயரம் மீறுவைநீ - இன்று
.....துங்கமணிப் பெட்டகமே கண்ணுறங்காய்;
கூர்மை நெடுவேலாய்ப் புன்னெறியைச் சாடுவைநீ - இன்று
.....கோதிழையே குஞ்சரமே கண்ணுறங்காய்;
ஆர்க்குந் தேன்சிட்டாய் நன்னெறியை நாடுவைநீ - இன்று
....ஆரமுதே அம்புலியே கண்ணுறங்காய்!

ஓர்மைப் பூங்குயிலாய்ப் பைந்தமிழைப் பாடுவைநீ - இன்று
....ஓங்கலனை ஒண்டமிழே கண்ணுறங்காய்;
சீர்மைத் தென்றலென மணம்பரப்பி யாடுவைநீ - இன்று
.....சித்திரமே செழுங்கனியே கண்ணுறங்காய்;
கார்போல் நந்தமிழைக் கையணைத்துத் தாங்குவைநீ - இன்று
.....கற்கண்டே கனியமுதே கண்ணுறங்காய்;
வேர்போல் நம்மொழியைக் காத்துநிதம் ஏந்துவைநீ - இன்று
....வெள்ளிநிலா வித்தகமே கண்ணுறங்காய்!
==========================================
இராச. தியாகராசன்.

பிகு:
====
சீயம் = சிங்கம், நித்திலம் = ஆணிமுத்து, துங்கமணி = ஒளிவீசும் மணி,
புன்னெறி = தீயநெறி, கோதிழை = நேர்த்தியான இழை, குஞ்சரம் = ஆனை,
ஓர்மை = தனிமை, ஒண்டமிழ் = ஒளிர்கின்ற தமிழ்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

வாழ்வியல் விதி....

உங்களின் உன்னதமான மன்னிக்கும் பண்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.  ஏனென்றால் உங்களின் உள்ளத்தைத் துன்புறுத்தும் நினைவுகளுக்குரியவர், இன்னமும் இடைவிடாதுங்களை உளமார நேசித்துக் கொண்டிருக்கலாம். (இப்பண்பைத் தொலைத்ததனாற்றான், பிரிவென்று வரும் போதில், ஆண்களும்/ பெண்களும், தாம் நேசித்தவர்/ தமை நேசித்தவர் மீதில் வன்மமும், வெறுப்புமுற்று, வேண்டத்தகாதனவற்றை மேற்கொள்கின்றனர்!)

====================================



====================================

விரைந்தும் போகலாம் - உனை
வெறுத்தும் போகலாம்;
விளம்பியும் போகலாம் - தனை
விளக்கியும் போகலாம்!

மரத்தும் போகலாம் - மெய்
மறந்தும் போகலாம்;
தெரிந்தும் போகலாம் - பொய்
சொரிந்தும் போகலாம்!

வருந்தியும் போகலாம் - வளம்
விரும்பியும் போகலாம்;
அறிந்தும் போகலாம் - உளம்
அழுதும் போகலாம்!

கரித்தும் போகலாம் - மனம்
கலங்கியும் போகலாம்;
பறந்தும் போகலாம் - தினம்
பழகியும் போகலாம்!

புரிந்தும் போகலாம் - பழி
புனைந்தும் போகலாம்;
சிரித்தும் போகலாம் - வழி
சிதைத்தும் போகலாம்!

அறிந்தும் போகலாம் - நினை(வு)
அழித்தும் போகலாம்;
கடிந்தும் போகலாம் - கரை
கடந்தும் போகலாம்!

===================================
இராச. தியாகராசன்.

என்னிலுறைபவளே....

கீழிருக்கும் ஓவியத்தை வரைந்தவர், தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்கள் (இசையமைப்பாளர் அல்லர்).

=============================================



=============================================

எண்ணக் கடலது என்று மிரைந்திட,
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்,
கண்ணன் குழலினில், கன்னற் சுவையினில்
விண்ணுங் கிறுக்கிடும் மின்னற் கொடியினில்,
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்,
பண்ணாய்ப் புனைந்திட, பாட்டின் "இசையென",
முன்னம் எழுதிய முத்த வரிகளை,
கன்னம் வருடிய காதற் சுவையினை,
இன்பக் கவிதையை, இன்றும் வனைந்திட,
மண்ணில் கவியென என்னைச் செதுக்கியே
என்னி லுறைபவ ளே!

=============================================
இராச. தியாகராசன்.

கவிதை செதுக்குகிறேன்..

கீழிருக்கும் படம் தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்களின் கைவண்ணம் (இசையமைப்பாளர் அல்லர்)

காதலின் இயல்பே கலையாக உருவெடுக்கிறது; 
கல்லாக இருந்தது சிலையாக உருவெடுக்கிறது!
சொல்லாக நின்றது சுவையாக உருவெடுக்கிறது.
=====================================
=====================================
கவிதைச் செதுக்கிறேன்...
=====================================
என்னி(ல்) உணர்ந்த எழிலாம் திருவெனவே,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
முன்னு(ம்) உணர்வில் முகிழ்ந்த உறவெனவே,
என்னில் கவிதை எழுதிட வைப்பவளே!

கனவில் உனதுருவே காண்பது போலவிங்கு
நினைவில் நெருஞ்சியாய் நின்றே உறுத்தல்போல்
மனத்தில் வஞ்சியுன் வடிவான தீயெழிலில்
தினந்தினம் தீராத தீக்குளியல் செய்கின்றேன்

அல்லியின் செவ்வாய் அமிழ்தச் சொல்லழகோ
புல்லிதழ் மீதானப் பூம்பனியாய்ப் போனதால்,
கல்லிலும் காட்சியாய்க் கன்னியுன் தோற்றமே
சில்லித்த வாளியாய் சிந்தையிலே குத்துதடி!

பொன்னி(ன்) ஒளியாய் பொலிந்த கருவெனவே,
எண்ண முழுதும் எழுகுமுன் நினைவினிலே,
மின்னு(ம்) அழகாய் விரிந்த ஒளியெனவே,
சின்னக் கவிதை செதுக்கி யுரைக்கின்றேன்.
=========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
திரு = செல்வம், 

தோற்பேனோ காதலிலே......

நீர்க்குமிழி போன்ற கவிஞனை நீர் வெல்லலாகுமோ?

=================================================



=================================================

அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேச(ம்)உறை நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றும்,
சிலையழகே! செம்புலத்துச் செந்நீராய் என்றிணைவோம்?

வானகத்தி(ல்) உலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனைகள் பலதந்து,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்கின்றாய்!

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகாதே!
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன் நான்; தோற்பேனோ காதலிலே?
=================================================
இராச. தியாகராசன்

சனி, 21 செப்டம்பர், 2019

வேண்டுதல்கள்.....

என்னுளத்தின் வேண்டுதல்கள்.....
==========================
==========================
ஆவி விட வேண்டுமடி...
==========================
இற்றைக்கு ஒருகனவாய்,  இனம்புரியா உணர்வாய், 
முற்றுபெற நெஞ்சகத்தில் முளைத்தெழுகும் நினைவு; 
சுற்றமும் இங்கில்லை; குற்றமும் இங்கில்லை;
உற்றவர் எவருமில்லை? கற்றவரும் எவருமில்லை!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தென்றன்
இயல்பினையே பறித்தழிக்கும் எண்ணமதை எரித்தழிக்க
வியனுலகைக் காக்குமந்த வித்தகியைத் தானிறைஞ்சி
நயந்தொழுகும் நறுங்கவிதை நவில்கின்றேன் நானிங்கு!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள் 
கோலத்தைக் கண்டுமனக் கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானத்தை வேண்டுகிறேன்!

அத்தனவன் பின்னலெனும் அகன்றபெரு மாழியிலே, 
நித்தமும்நான் விழுந்தே நீந்திடும் வேளையிலே, 
சித்தமதைச் சிலந்தியெனச் செரித்தே அரிக்கின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறதனை வேண்டுகிறேன்!

கண்களிலே வைத்தென்றும் காக்கின்ற இறையுணர்வும்,
எண்ணமதை என்றென்றும் இயக்குகின்ற எந்தமிழும்,
உண்மையொளிர் உயிர்நட்பாம் உன்னதமும்;  ஆழ்துயிலில்
விண்ணகரப் பேரின்ப விடுதலையும் வேண்டுகிறேன்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்கையிலே,
நாவினிக்கும் பாரதியாய் நற்றமிழில் பாவெழுதி,
தேவியவள் சேவடியைச் சீந்துகின்ற நினைவுடனே
பூவிதழ்கள் அவிழ்வதுபோல் ஆவிவிட வேண்டுகிறேன்!
===============================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புந்தி - புத்தி, நவிலுதல் - உரைத்தல், சூக்குமம் - சூட்சுமம், அத்தன் - ஆதியோகி, 
ஆழி - கடல், விண்ணகரம் - வீடுபேறு, சேவடி - சேவிக்கும் திருவடி, 
சீந்தும் - போற்றும்,  

என்னைக் கவர்ந்த தமிழேறு...

பாவேந்தரின் புதல்வர், தமிழ்மாமணி, திரு மன்னர்மன்னன் அவர்கட்காக, அவருடைய 75 ஆண்டு கால தமிழ்த் தொண்டைப் போற்றி,  நான் வனைந்த பாடலிது.

=======================================





=======================================

மென்மைச் சிரிப்பினில் வென்றிடு மன்னவ!
கன்னற் றமிழில் கவிமொழி - மின்னிடும்

மன்னு(ம்) உரைகளால் வண்டமிழ்ச் சொற்களால்
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

பாவேந்த(ர்) உள்ளமே பாட்டுப் பறவையாய்,

மூவேந்தர் முத்தமிழ் முன்னெடுத்தாய்! - நாவேந்து(ம்)
அன்னைத் தமிழில் அரசர்க்(கு) அரசநீ
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

நெஞ்சக் கதவில், நிமிரும் நினைவுகள்;
கொஞ்சு தமிழிற் கொடுத்தவான் - மஞ்சு!

பனியா(ய்) இலக்கியப் பாங்கின் படைப்பா(ல்),
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

கறுப்புக் குயிலின் குரலாம் நெருப்பைச்

சிறக்கச் செதுக்கிய சிற்பி! - தெறிக்குந்
தனித்தமிழ்க் கொண்டலுன் சங்கத் தமிழால்
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

இயற்கையைப் பாடி, இயற்றமிழ்ப் பாடி,

நயத்தகு பெண்கல்வி நாடி - உயர்ந்தாய்!
வனையும் வரியால், வளர்தமிழ் பொங்க,
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

முரசாய் ஒலிக்கும் முதுபெரு(ம்) அறிஞ,

தரிசாய் விரிந்த சழக்கே - எரிய
முனைந்தே எழுப்பிய முத்தமிழ்ச் சுவர்கள்*
உனைநிதம் போற்றுமே ஓர்ந்து.
=======================================
இராச. தியாகராசன்
=======================================
கீழ் வரும் சொல்லாட்சிகள் பெரியவரின் படைப்புகளில் சில.

கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்

நெஞ்சக் கதவுகள்
நிமிரும் நினைவுகள்
பாவேந்தர் உள்ளம்
பாட்டுப் பறவைகள்
பாவேந்தர் இலக்கியப் பாங்கு.
*இவர் தலைவராய் இருக்கும் போதில், புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் கட்டடம் எழுந்தது.

மைந்தனுக்கொரு வாழ்த்து...

மைந்தன் வைகறைச்செல்வனின் 15ஆம் பிறந்தநாளில் அவனுக்களித்த வாழ்த்துரை.......
=====================================



=====================================

ஆர்ப்பரிக்கும் அலைகடலின் முழக்கம் போல,
....அடுக்கடுக்காய்த் தரைமோதும் முயற்சி போல,
சீர்பரப்பும் செந்தமிழின் செழுமை போல,
....தேர்ந்திலங்கு சந்தனத்தின் மணத்தைப் போல,
கூர்ந்தறியும் குறைவில்லா அறிவும் பெற்று,
....கொடுஞ்செயலை வேரறுக்கும் உணர்வு முற்று,
சார்தலில்லாத் தனித்துவமாய் செல்வா நீயும்,
....சழக்குகளும் தான்விலக வாழ்வாய் நன்றே!

=====================================

இராச.தியாகராசன்.

எழுவின் மழவரே! எழுமின் எழுமின்...

ஒரு ழகரக் கவிதை வாழ்த்து....

=============================



=============================

அழுகுங் கழிவின் குழியைத் தொழுது,
நழுவி யுழல விழுந்து, பழியைத்
தழுவ விழையும் எழுவின் மழவரே!
அழிவின் சுழலில் நுழைந்து பழகி,
அழலி(ல்) ஒழுகி யழிந்து விழுமுன்
வழமை மொழியும் செழித்து தழைக்க,
உழவுத் தொழிலு(ம்) எழுந்து கொழிக்க,
மழலை கழறும் குழலின் பிழிவாய்,
அழகு(ம்) இழியும் பொழிலின் நிழலாய்,
விழிகள் தழுவ விழையு(ம்) எழிலாய்,
செழிவு வழிய வழங்கு பொழிவாய்,
பழைய சழக்கு முழுது(ம்) அழிய,
மழுவைத் தொழுகு(ம்) உழவுஞ் செழிக்க,
உழவின் மொழியா(ய்) எழுகும் மழையாய்,
பழியும் கழிய எழுமி(ன்) எழுமி(ன்)
பழன விழுவின் முழவும் முழங்கவே!

==============================
இராச. தியாகராசன்
==============================
பிகு:
கழறுதல் = கிள்ளை மொழி
சழக்கு = கயமை
மழு = கலப்பையின் கொழு
எழுவின் மழவர் = தூணொத்த இளையோர்
அழலில் ஒழுகி = நெருப்பொடு இணைந்து
பழன விழு = வயலின் சிறப்பு
முழவு = முரசம்.

அருந்தமிழே வாழி நீயே......

தமிழை வாழ்த்துவதில் என்ன சிக்கனம்.   தினம் ஒரு பாட்டெழுதிப் பதிந்தாலும் போதாதுதான்....

தமிழே வாழி...
========================================



========================================

மனந்தனிலே மலர்கின்ற கவிதை போல,
....வானுலவுங் குளிர்நிலவின் ஒளியைப் போல,
பனிபடர்ந்த வயல்வெளியின் பசுமை போல,
....பல்லுயிரை வளர்க்கின்ற கதிரைப் போல,
வனமடர்ந்த வழிநிறையும் தனிமை போல,
....வசந்தமன நினைவென்னும் இனிமை போல,
எனதுயிரில் கலந்துறையும் "இசை"யைப் போல,
....எனையாளும் எந்தமிழே வாழி நீயே!

தென்னையதன் ஆடுகின்ற கீற்றைப் போல,
....தேன்கசியுஞ் செங்கனியின் சாற்றைப் போல,
தென்முகத்துத் தென்றலெனுங் காற்றைப் போல,
....தேர்ந்தநறுஞ் செங்கழனி நாற்றைப் போல,
பொன்வண்ணச் செங்கதிரின் ஆற்றல் போல,
....புத்தமிழ்தப் பைந்தமிழின் மாற்றம் போல,
அன்னையெனும் அன்புருவின் தோற்றம் போல,
....அன்றலர்ந்த அருந்தமிழே வாழி நீயே!

============================================
இராச. தியாகராசன் 

விடியலே வாராதோ?.....

சில நேரங்களில் சந்தோஷம், சில நேரங்களில் சிந்தனை, சில நேரங்களில் உன்மத்தம், இன்னும் சில நேரங்களிலோ அறமென்னும் சீற்றம்;  வெறுங்கனவே வாழ்வாமோ;  விடியல்களே வாராதோ?
============================================
============================================
விடியலே வாராதோ...
============================================
ஆர்ப்பரிக்கும் ஆசையென அடித்தளத்தின் ஓசைகள்;
சேர்க்கின்ற சிக்கலெனச் சீற்றமுணர் சிந்தனையால்,
பார்க்கின்ற காட்சியெனும் பாலைவன வெக்கையிலே
நீர்க்கின்ற நியாயங்கள்; நிலையில்லா நினைவுகள்;

கேட்கின்ற கேள்விகளால் கிளர்ந்தெழுகும் கோணலதை,
ஆட்கொள்ளும் அவலநிலை; ஆரிங்கே நீதிசொல்வார்?
சிறகுகளும் சிதைந்தபின்னே சிகரங்களைத் தொடுவேனா?
செவியழிந்து போனபின்னே சங்கீதம் படிப்பேனோ?

கால்மடங்கி உடைந்தபின்னே கனசோராய் நடப்பேனா?
சால்பழிந்த சாய்க்கடையில் சான்றின்றி மறைவேனா?
கண்களின்றி கலைகளையே கருக்காக வளர்ப்பேனா?
விண்ணரகப் பேரின்ப விடுதலையைப் பெறுவேனா?

இத்தனைப் பேரிருந்தும் வழிநிறையுந் தனிமையிலே
சத்தில்லாச் சருகெனவே செரித்துவிழும் நினைவலைகள்;
சுழன்றாடும் இதயத்தில் சூழிருளாம் கருக்கலிலே
கழன்றோடும் காலங்கள்; கானல்நீர்க் கோலங்கள்!

நிழலெனவே நிதமலையும் நெஞ்சகமும் நினைவின்றி
கழன்றொருநாள் ககனத்தில் காற்றாகக் கலந்துவிடும்;
பழகுசுகம் படித்திடவே பறக்கின்ற பாழ்மனமும்,
உழலுகின்ற உலகமிதை உதறிவிடும் நாள்வருகும்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில்
மனத்துள்ளே மங்கையவள் மாயங்கள் மருகிநிதம்,
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காரிருளில்
கனவுகளே கார்காலக் கவிதையென கருவுறுமோ?

தினந்தினமும் தீக்குளியல்; தீராத மூச்சடைப்பு;
இனம்புரியா நெஞ்செரிச்சல்;  ஏனிந்த விளையாட்டு?
அறுந்தநூல் கையிலெனும் முடிவுகளே வாழ்வாமோ?
வெறுங்கனவாய் வாழ்விருக்க, விடியல்களே வாராதோ?
===========================================
இராச. தியாகராசன்.

எனக்கான ஆசைகள்...

ஆசையிலா மாந்தரெவர்?  ஆசையின்றி வாடுதலில்லை; வாடுதலின்றித் தேடுதலில்லை; தேடுதலின்றி நாடுதலில்லை; நாடுதலின்றிக் கூடுதலில்லை; கூடுதலின்றிக் குவலயமே இல்லை!
===================================


==================================
எனக்கான ஆசைகள்....
===================================
எந்நாளும் எழிற்கவிதை நானும் யாத்தே
....எத்திக்கும் எந்தமிழை வளர்க்க வேண்டும்;
கந்தமெனக் கமழும்பா வெழுதி நாளும்
....கயமைகளைக் கவித்தீயில் பொசுக்க வேண்டும்;
நொந்தலையும் நாதியிலாப் பேர்க ளிங்கே,
....நோதலற வாழப்பாப் புனைய வேண்டும்;
புந்தியிலே புகுந்தென்னைக் காக்கும் வாணி
....புகழ்நானும் பைந்தமிழில் வனைய வேண்டும்!

எழிலாரும் இயற்கவிதை பாட வேண்டும்;
....இனிமைதரு(ம்) ஏழிசையும் கூட வேண்டும்;
அழகாரும் அருங்கவிதை பாட வேண்டும்;
....அன்பென்னும் அற்புதத்தைத் தேட வேண்டும்;
பழகுதமிழ் சொல்லெடுத்தே பாட வேண்டும்;
....பன்னூறாய்ப் பண்ணலங்கல் சூட வேண்டும்;
விழைகின்ற காதலையும் பாட வேண்டும்;
....மேதினியோர் என்கவிதை நாட வேண்டும்!
=========================================
இராச. தியாகராசன்.

வைகறை...

வைகறை போதென்னும் மங்கையவள் என்னெஞ்சில் ஏற்றி வைத்த நினைவுகள் என்றென்றும் மாறுவதில்லை....

=============================================


=============================================
வைகறை...
===========
முழுநிலவும் விண்ணில் தூங்க,
....முத்தனைய மீன்கள் ஏங்க,
எழிலரும்பும் பூக்கள் மேவி,
....இன்பமெனும் வாசம் தூவ,
வழிந்தலையு(ம்) ஆற்றி லோடி,
....மாருதமாம் மங்கை யாட,
எழுந்திழையும் வண்டும் பாட,
....என்னுளமும் கொள்ளை யாக;

தேனடையின் தித்திப் பாகச்,
....செந்தமிழில் பாட்டுங் கேட்க,
வானிடையே மேகங் கண்டு,
....மாமயிலு(ம்) ஆட்டம் போட,
தானணிந்த காரின் வண்ணச்
....சட்டைகழன் றோடிப் போக,
வானகமே செம்மை யாக,
....வந்தனளே வைக றைதான்!
===============================
இராச. தியாகராசன்.

சூழ்பகையும் தூள்....

நங்கையர் நாளுக்காய் நானெழுதிய வரிகளிவை...
================================================
================================================
சூழ்பகையும் தூள்....
================================================
வெங்கரத்தால் செம்பரிதி வெள்ளிமலை பற்றுதல்போல்,
செங்கமலக் கன்னியரே சீறுகின்றச் - சிங்கமென,
ஞாலத்தின் நீதிக்கிஞ் ஞாட்பென்றே கூவிநின்றால்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

ஆலறுகாய் வாழ்ந்திங்கே ஆற்றலுடன் ஆட்சிசெய்து,
காலனென நம்மினத்தைக் காத்துநின்றே  - வேல்கொண்ட
வேலம்மை நாச்சியென வேல்விழியர் வீறுகொண்டால்,
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

செம்புலத்தின் சீர்மையெனத் தீச்சுடரா(ய்) ஆர்க்கின்ற
எம்மினத்து நங்கையெனும் இன்முகமே! - அம்பலத்தில்
வாலெழிலார் மங்கைநீ வாளெடுத்தால் காமுகத்தின்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.
=================================================
இராச. தியாகராசன்.

பிகு:  ஞாட்பு = போர்க்களம்

இன்பங் கொள்ளல் ஏனடா?.....

வாழ்க்கையே ஒரு நிழற்படமோ?....
==================================
==================================
இன்பங் கொள்ளல் ஏனடா...
==================================
முட்டி மோது(ம்) உள்ளமே
....மோக(ம்) என்ன போதையா?
வெட்டிப் பேச்சுக் கள்ளமே
....வெற்று மோசப் பாதையா?
கட்டித் தங்கம் காட்டிலே
....காய்ப்ப துண்டோ பாரடா?
எட்டிக் காயி(ல்) என்றுமே
....இன்பங் கொள்ள(ல்) ஏனடா?

விட்டுச் சென்ற நாளையே
....வேண்டி வேண்டித் தேடியும்,
துட்டு மட்டும் வாழ்வெனச்
....சொக்கி யிங்கே ஆடியும்,
அட்டி யின்றித் தீமையை,
....ஆசை யோடு கூடியும்,
முட்டி மோதும் வாழ்விலே
....மோகங் கொள்ள(ல்) ஏனடா?
==============================
இராச. தியாகராசன்

பிகு: அட்டியின்றி - தடங்கலின்றி

வியாழன், 19 செப்டம்பர், 2019

மழலையெனும் மலர்....

ஆம்... வடிவெழில் வாகை மலர், மடியில் முகிழ்ந்த ரோசா, இன்னமிழ்த ஊற்று, பொக்கையிதழ்க் கவிதை,  நம் கவலைகளையெல்லாம் எரிக்கும் மருந்து.
===================================
======================
மழலையெனும் மலர்....
======================
அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற நன்மழலைக்
கொஞ்சுமொழிக் கோலம்! கொடுமை யறியாத
பிஞ்சுமலர் பொக்கையிதழ் புன்சிரிப்பா லென்நெஞ்சில்
வஞ்சமிலா இன்னமிழ்தா(ம்) ஊற்று!

கொடியிற் சிரித்திடும் கொன்றையின் பூவாய்,
மடியில் முகிழ்ந்த மலரின் மணமாய்,
நொடியில் நமையே நுகர்ந்திட வைக்கும்
வடிவெழில் வாகை மலர்.

அன்னையர் தீட்டும் அழகொளிர் ஓவியமாய்க் 
கன்னற் சுவைசேர் கனிமொழிக் காவியமாய், 
விண்முகிற் கூட்டுநல் வேய்குழற் பாவெனக் 
கண்ணையே கட்டுங் கனவு.
==========================================
இராச. தியாகராசன்

பிகு:  வேய்குழல் = மூங்கிற் புல்லாங்குழல்

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே!...

முகநூலில் முதன்முதலாக நான் பகிர்ந்த பாடலிது. ஒருபஃது வெண்பா அந்தாதி மாலை....
=======================================


=======================================

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே... =====================================
இனிக்கின்ற பாட்டா மிழிகின்ற தேனாம்,
தனிந்தநறு முக்கனியின் சாறாம்! - பனித்துகளைப்
பெய்திடுமுன் பால்நிலவுப் பேச்சினிலே அன்றாடம்
பைங்கிளியே நான்பட்டேன் பாடு! (1)

பாடுகின்ற பாட்டினிலும் பச்சைமரக் காட்டினிலும்
தேடுகின்ற என்மனமுந் தேய்கிறதே! - ஆடும்
மயிலழகே! கூவுகின்ற மாங்குயிலே! சொல்வீர்
துயிலின்றி தேடுந் துடிப்பு! (2)

துடிக்கின்ற உள்ளத்தில் தோகையுனை யெண்ணி
அடிவானத் தீக்கனலா யாசை! - வடிக்கின்ற
கண்ணீர்த் துயரமெனுங் காட்டி லெனைப்புதைக்கும்
வெண்மணலாம் காதல் வெளி! (3)

வெளிர்நீல வான்முகிலும் வெந்தெரியப் பற்றும்
ஒளிரந்திப் போதே உரைப்பாய்! - கிளியவளின்
நேச மெனுந்தீயால் நீறாகிப் போனவென்
ஆசை மனத்தேடு தல்! (4)

அல்லியுன்றன் செவ்வாயின் அற்புதமாம் சொல்லமிழ்தோ
புல்லினிதழ்ப் பூம்பனியாய்ப் போனதடி! - சொல்வேன்நான்
காணுகின்ற காட்சிகளில் காலமெல்லாம் நீயென்னை
வாணுதலால் வாட்டும் வனப்பு! (5)

வனப்பென்னும் வாளால்நான் மாய்ந்த கதையை
வனைந்தேனே பாட்டின் வடிவில்! - மனமே
இரும்பாய் இருந்தாலே இன்பம் இசைவாய்
வருமோ இயம்பிடு வாய்? (6)

வாயா லொருசொல் வழங்கிடு வாயெனக்
காயாக் கனிக்கென காத்திருந்தேன்! - தீயால்
எனையே எரித்திட ஏனோ துடிக்கும்
உனையே விரும்பு முளம்! (7)

உளமயக்கப் பூச்சூடு மொண்டொடியே! என்னைத்
துளைக்கின்ற மோனமெனுஞ் சொல்லே! - பளிக்குச்
சிலையுனது கண்கள் சிலிர்த்தநொடி யுண்டேன்
நிலைவாழ்வுத் தேனமுத நீர்! (8)

நீரெல்லைத் தோற்றமாம் நீரந்திப் போன்றொளிரும்
வார்குழ லோவிய மங்கையே! - பேரெழில்
கொஞ்சிடும் கோதையுன் கோலமிவ் வேழையின்
நெஞ்சிலே பற்றும் நெருப்பு! (9)

நெருப்பிலே நெய்திட்ட நேரிழையுன் சொல்லில்
விருப்புடனே தீய்ந்தேனே விட்டில்! - சிரித்தெனையே
கொன்றுகுளிர் காய்ந்திடுங் கோதிழையே! என்வாழ்க்கை
இன்பமிலாத் தீயோ இனி? (10)
================================================== வேறு:
===== வளங்கள் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே!
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடுந் தெண்டிரையே!
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே!
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!
இராச தியாகராசன்.


நானறிதல் நானாவேன்....

தன்னை அறிய முயலாத மனிதர்கள் எவருண்டு?  நான் யார்? நான் யாரென்று அலையுந் தேடலில்லாவர் எவர்?  இந்தக் கலித்தாழிசையை 2010இல் எழுதினேன்.
======================================
=====================================
நானறிதல் நானாவேன்..
====================================
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் னுள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

நாடியவர் நாளும் நலுங்காமற் றேடுகையில்,
மூடியதைத் தான்திறந்து முற்று முணர்கையிலே,
தேடுபவ ரீதென்று தேடாத தன்மையிது;
கூடியவர் தேடுங் குவலயத்தி னுண்மையிது!
..........குன்றாப் புகழார் குவலயத்தி னுண்மையிது!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே,
சுண்ணாம்பாய் வெண்சங்குச் சூளையிலே சுட்டதுபோல்,
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்,
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!

தளிர்க்குமோ ருண்மை தரணியிலே சொல்வேன்;
துளிர்ப்பினடி வேரென்னுந் சோதியிலே தோய்ந்து,
களிப்பவர்கள் கண்டு களிக்கின்ற வெள்ளம்,
தெளிந்தநறு மன்பினையே தேடிமனந் துள்ளும்;
..........தெவிட்டாதத் தீஞ்சுவையைத் தேடிமனந் துள்ளும்!
==========================================
இராச. தியாகராசன்

வளந்தரும் எந்தமிழே.............

இந்தப் பாடலின் பத்திகளை ஒவ்வொன்றாக பல பாவரங்கங்களில், தமிழ் வாழ்த்தாகப் பாடியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்று சேர்ந்து தமிழுக்கு வாழ்த்தென செய்ய வேண்டும் என்று பல நாட்கள் எண்ணியதன் விளைவு, இந்தக் கட்டளைக் கலித்துறைப் பாடல்.  இவை அனைத்தையும் இசைப்பாடலாகப் பாடியே அளித்திருக்கிறேன்.  (தத்தகாரம்:  தன்ன தனனன தன்னத் தனனன தன்னனனா).
========================================================




==================================================
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வெண்ணிலவாய்,
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்,
மண்ணில் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்,
எண்ண(ம்) உறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு மற்புதமாய்,
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்,
பொன்னின் நிறத்துடன் நித்த(ம்) எழுந்திடும் பொற்கதிராய்,
என்னில் நிறைந்தெனை யென்று(ம்) அணைத்திடும் எந்தமிழே!

சின்னக் குழல்தருந் தண்மை யிசையெனுஞ் சித்திரமாய்,
மின்னல் வடிவென உள்ளம் புகுந்திடும் வித்தகமாய்,
தன்னைத் தருமுயர் தாய்மை யெனும்பெருந் தத்துவமாய்,
என்னை உயர்த்திட யென்றும் வளந்தரும் எந்தமிழே!
   
துள்ளி யெழுந்திரை கத்துங் கடலது சூழ்வதுபோல்,
அள்ளுந் தனித்தமிழ் ஆற்றல் வளர்ந்திட ஆர்ப்பரித்தே,
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே,
எள்ளல் அறவெனை யென்றும் உயர்த்திடும் எந்தமிழே!

உள்ளந் தனைத்தமிழ்ச் சொல்ல துவால்சிறு ஊசியெனக்
கிள்ளி விடும்மொரு கோல மதாய்மனக் கீறலிடும்
கள்ள மிலாதொளிர் செந்த மிழாம்நறுங் கன்னிகையாய்,
எள்ள லிலாச்சுவை அள்ளி வழங்கிடும் எந்தமிழே! 

தண்கரம் நீட்டியே என்னைத் தழுவிடும் தண்ணிலவின் 
வெண்பனி போலவே சில்லிக்க மேவிடும் மென்கதிராய்,
கண்கள் கிறங்கவே கன்னற் சுவைதருங் காரிகையாய்,
எண்ணம் நிறைந்தெனை என்றுங் கவர்ந்திடும் எந்தமிழே!
=======================================================

இராச. தியாகராசன்.

கரிமுகனே அருள்வாய்....

2019ஆம் ஆண்டு கணேசப் பண்டிகை நாளில், கரிமுகனை நினைத்து நானெழுதிய கட்டளைக் கலித்துறை வரிகளிவை!
==================================


==============================
கரிமுகனே அருள்வாய்.....
(கட்டளைக் கலித்துறை....)
==============================
புத்தி யெனுமெழில் தேவி யணைத்திடும் புத்தமுதே;
சித்தி யெனு(ம்)அகம் தேடி வணங்கிடுஞ் சித்திரமே;
வித்தை களைநிதங் கோடி கொடுத்திடும் மெத்தறிவே;
நித்த மெனதுளம் பாட விரும்பிடும் நித்திலமே!
அல்ல லனைத்தும் நொடியி(ல்) அகற்றிடு(ம்) அற்புதமே;
கல்வி யதன்வழி செல்ல வரந்தருங் கற்பகமே;
சொல்லி லடங்கிட ஏலா நலந்தருஞ் சொற்றிறமே;
பொல்லல் நுவணை யிலையடை ஏற்றிடும் பொற்பதமே!
முல்லை மலரை முனைந்தே யணிந்திடும் முத்தமிழே;
மெல்லும் பெருதுயர் துன்பந் தொலைத்திடு வித்தகமே;
எல்லை யெதுவும் வரையா(து) அருளு(ம்) எழிலுருவே;
கல்லின் சிலையாய்க் கவிதை தருகுங் கரிமுகனே!
================================================
இராச. தியாகராசன்
==========================
நித்திலம் = ஆணி முத்து.
பொல்லல், நுவணை, இலையடை இவையாவும், இன்னும் கொலை, பிட்டு, அப்பம், கொழுக்கட்டை என்பன கூட, தமிழர்கள் செய்து படைத்துண்ட பணியாரங்கள்.

மேலிருக்கும் படம், புதுவையின் அருள்மிகு மணக்குள விநாயகர்.

மதமென்னும் மாயை....

டிசம்பர் 2010 முகநூலில் பதிந்து, மதமென்னும் மாயையென 2017இல் பகிர்ந்த வரிகளிவை. இற்றைக்கும் அதே நிலையில் நாம். உள்ளம் அழுகிறது.


============================================






========================================



முத்தனைய சத்தான முழுமுதலாம் இறைவனையே,
நித்தமும்நாம் நெஞ்சினிலே நெகிழ்ந்துருகி நினைத்திடவே,
தத்துவமாய்த் தாரணியில் தலைமேலே தாங்கிடவே,
எத்தனையே சமயங்கள் எடுத்துரைக்கும் நல்வழிகள்.

நீயுயர்வா நானுயர்வா நியமந்தா னுயர்வாவென்(று)
ஐயமறத் தெளிந்துணர அறியாமை யகன்றுணர
ஆயுதத்தா லாகாதென்(று) அறியாம லலைகின்ற
வையகமே, வண்டமிழர் வாழ்வியலை ஆய்ந்துணர்ந்தால்!

செம்மையுற மாந்தரினம் சீர்த்திகளைப் பெற்றிடவே,
எம்மதமாய் இருந்தாலும் எவ்வினமாய் பிறந்தாலும்
தம்மவராய் நினைந்துருகும் தமிழர்த மன்பினையே
சம்மதமாய் தருகின்ற தன்மையினை வாழ்ந்துணர்ந்தால்

இயற்கையினை இன்பமிகு இல்லறத்தை நல்லறமாம்
பயிர்தொழிலை பழகுதமிழ்ப் பாட்டியலை களவியலின்
நயங்களையும் கற்பியலின் நலங்களையும் நாட்டாரின்
உயர்பண்பை எடுத்துரைக்கும் ஒண்டமிழிற் றோய்ந்துணர்ந்தால்

தனிமதமென்(று) ஒன்றில்லாத் தமிழ்ச்சமயத் தத்துவத்தை
மனிதமன நேயமெனும் மகத்தான அற்புதத்தை
இனியிங்கே இயல்பழகாய் ஏற்றுணர்ந்தால் மண்ணுலகம்
கனிவளங்கள் செறிந்தப்பூங் காவெனவே  மாறுமன்றோ!
================================================

இராச. தியாகராசன்

அந்திமகளின் சிலிர்ப்பு....

ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையொன்று எழுத நினைத்தேன். சற்றே நினைவு சறுக்குகிறது துயிலால். எனவே முதலில் ஏழு அப்புறமாக மீதி மூன்று வெண்பாக்கள்! அடிவானப் பேரழகைக் கண்டேன், அதனால் எழுந்த நினைவுகளின் தாக்கம் இவை:
======================================





==============================================

கண்மலரும் பூத்திருக்கக் கண்டேனே வைகறையாம்
வெண்பனிப்பூ தூவுகின்ற வேளையிலே - விண்மகளும்
தண்கரத்தால் ஆதவனைத் தானெழுப்பிக் கூடுகின்ற
வண்ணமயக் காட்சியதை யே!
ஏகமனப் பெண்ணை அணைத்துக் கதிரவன்தேன்
பாகெனவே முத்தம் பதிக்கையிலே - மோகம்
கவிந்த அடிவானம் கண்கள் கிறங்கிச்
சிவந்தே சிலிர்க்கும் சிரிப்பு!
சிரிக்கு மெழில்வானச் சித்திரமென் உள்ளத்தில்
விரிக்கின்ற எண்ணங்கள் விந்தை! - சுரிதகமும்
அம்போ தரங்கமும் ஆர்க்கும் வரிகளிலே
எம்பாட் டெழுதுவனோ இன்று?
இன்றென் னுளம்பற்றி எந்தமிழில் சொல்லெடுக்க
அன்றென் கவிவடிவாய் ஆனவளே! - உன்றனெழில்
விண்டகணம் மின்னல் விரிந்தொளிரும் நெஞ்சகத்தில்
தெண்டிரையாய்ப் பொங்குதே சிந்து.
சிந்தும் சிறுதீச் சிவப்பின் துகிலெனவே
அந்திமகள் கட்டும் அடிவானம்! - சிந்தைகவர்
வானகமே செஞ்சாந்து வண்ணமென ஆனதையே
தானிங்கு பாவடித்தேன் சற்று.
சற்றும் தளராத சாத்தானாம் பேருருவைப்
பற்றிய விக்கிரமன் பாடனெவே - முற்றும்
மயக்கும் தொடுவான வஞ்சியெழில் கண்டு
முயலுமென் பாட்டின் மொழி.
மொழியும் தமிழில் முனையும் வரியில்
பொழிலின் கவிதை புனைந்தேன்! - எழிலார்
இயற்கை விரிக்கின்ற இன்பஞ்சேர் காட்சி
நயமொன்றில் நானும் நனைந்து.
நனைத்திடும் தேறலாய் நாவில் இனிக்கும்
கனவெழிற் கற்பனை காட்சி! - மனிதர்
எவரும் எழுதா எழிலுரு என்றன்
கவியில் முளைத்த கரு.
கருக்கலும் அந்தியும் காதற் கனவாய்
வரமெனப் பாட்டில் வழியும்! - அரக்காய்ச்
சுவைப்பவர் நெஞ்சிலே தீட்டும் அமுதக்
குவையாய் அழகின் குளிர்
குளிர்வளி காலையில் கூரெனத் தைக்க;
பளிக்கென ஆதவன் பாரை - அளக்குமிம்
மாணப் பெருநில வாரிதிக் காட்சியைக்
காணக் கிடைத்ததே கண்.
======================================
வேறு:
======
துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

=====================================
இராச. தியாகராசன்

வேதம் புதிதாய் விதை....

இற்றைக்கு நாட்டின் நிலையெண்ணி, என்றோ மறந்து போன தூரிகையையைத் தொட்டு, இன்றைய காரிகைக்காக நேற்றெழுதிய வரிகள்......

===================================



===================================
வேதம் புதிதாய் விதை....
=======================
மனத்தில் நிறைந்தவன் மாண்பிலா னாகிக்
கணத்தில் மறைகிறான் காண்பாய்! - உனக்கினி
பாதந் தொடுவழி பாதையா யாகிட
வேதம் புதிதாய் விதை.

மங்கையுன் கற்பினை மாய்த்திட நாளுமே
இங்கவன் வேடமே ஏற்கிறான்! - சங்குக்
கழுத்தைப் பிடித்த சுருக்குக் கயிற்றைச்
சுழற்றியே வீசிச் சொடுக்கு.
=========================
இராச. தியாகராசன்

வருவாரே நம் பாரதியாரு.....


பாரதியாரு... பாரதியாரு.... இன்றிருக்கும் கயமைகளைக் களைய பாரதி நிச்சயம் வர வேண்டும் என்பது என்னுடைய அவா. (பாரதியாரின் ஓவியம் மைந்தன் வைகறைச்செல்வனின் கைவண்ணம்..)

====================================================




=================================================

மின்னுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - கால
வெள்ளம்போல வருவாரே பாரதியாரு!
தென்னங்கவி பாடிகிட்டே பாரதியாரு - பால
சிங்கம்போல வருவாரே பாரதியாரு!

துள்ளுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - களி
சோதியாட்டம் வருவாரே பாரதியாரு!
அள்ளுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - ஒளி
ஆர்த்தெரிக்க வருவாரே பாரதியாரு!
நல்லகவி பாடிகிட்டே பாரதியாரு - நம்ம
நாட்டுக்காக வருவாரே பாரதியாரு!
வெல்லகவி பாடிகிட்டே பாரதியாரு - செம்ம
வேந்தனாக வருவாரே பாரதியாரு!
முழங்குகவி பாடிகிட்டே பாரதியாரு - சாதி
மோகமழிக்க வருவாரே பாரதியாரு!
எழுகுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - மோதி
ஈனமழிக்க வருவாரே பாரதியாரு!
தெம்மாங்கு பாடிகிட்டே பாரதியாரு - வீசுந்
தென்றல்போல வருவாரே பாரதியாரு!
கும்மாளம் பாடிகிட்டே பாரதியாரு - நாசக்
கூட்டமழிக்க வருவாரே பாரதியாரு!
சுழலுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - ஆடி
சுத்திசுத்தி வருவாரே பாரதியாரு!
குழந்தகவி பாடிகிட்டே பாரதியாரு - கூடி
கும்மிபோட வருவாரே பாரதியாரு!
பாசகவி பாடிகிட்டே பாரதியாரு - நாட்ட
பாதுகாக்க வருவாரே பாரதியாரு!
நேசகவி பாடிகிட்டே பாரதியாரு - கோட்டு
நெஞ்சொசத்தி வருவாரே பாரதியாரு!
கழனிகவி பாடிகிட்டே பாரதியாரு - பசுங்
காடதிர வருவாரே பாரதியாரு!
முழவுகவி பாடிகிட்டே பாரதியாரு - கசம்
மூடமழிக்க வருவாரே பாரதியாரு!
சிந்துகவி பாடிகிட்டே பாரதியாரு - கருந்
தீதழிக்க வருவாரே பாரதியாரு!
கந்தகவி பாடிகிட்டே பாரதியாரு - வருங்
காலமுயர வருவாரே பாரதியாரு!
======================================
அன்பன்
இராச. தியாகராசன்