ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

எந்தமிழே....

எந்தமிழே! (கொச்சகக் கலிப்பா)
================================================


















================================================
அன்றலர்ந்த ஆம்பலதன் அவிழழகாய் முறுவலிக்கும்
தென்றலிழைச் செழுங்காவின் திருமகளே! தேனமுதே!
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கனியமுதே!
மின்னொளியாய் மிளிர்ந்துநிதம் விளங்குகின்ற நந்தமிழே!

கழறுகின்ற கிள்ளையென, களிக்கின்ற காட்சியென,
எழுகின்ற செங்கதிராய், இழைகின்ற நல்லிசையாய்,
அழகொளிரும் வரிகளினால் அற்புதமாய் உளந்திருடும்
எழிலார்ந்த இலக்கியங்கள் ஏந்திநிற்கும் எந்தமிழே!

கள்ளதனின் போதையெனக் கருத்தேறி கணப்போதில்
வெள்ளமெனக் கரைபுரளும் வியன்கவிதை நான்புனையத்
துள்ளிவரும் குற்றாலத் தூயமலை அருவியென
அள்ளிமனம் கொள்ளையிடும் அமிழ்தனைய அருந்தமிழே!

செறிவான இலக்கியங்கள் சீர்த்திமிகு இலக்கணங்கள்
நறுந்தேனாய்ப் பாக்களுடன் நாவினிக்கும் பாட்டியல்கள்
அறத்துடனே பொருளின்பம் அத்தனையும் தன்னுள்ளில்
சிறப்புடனே எந்நாளும் சீரொளிக்கும் செந்தமிழே!

சுடும் விழிகள்.....

காதலிப்பது பெரும் குற்றமல்ல. காதலும் பெரும் குற்றமல்ல. ஆனால் இன்றைய கால கட்டத்தில், உணர்வு மேலிட்டு காதலிப்பதாக நினைத்துக் கொண்டு, ஒருதலையாக விருப்பங்களை வளர்த்துக் கொண்டு, நங்கையரின் உள்ளங்களை, இளைஞர்கள் காயப்படுத்துவதும், இளைஞர்களின் இதயங்களை மங்கையர்கள் நோகடிப்பதும் தேவைதானா?

இந்த வாலன்டைன் நாள் என்பதே, முதன் முதலாக வாலண்டைன் என்கிற பாதிரியார், பொதுவான பாசத்திற்கும், பரிவுக்கும், பற்றிற்கும், காதலுக்கும், நேசத்திற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும்,  ஒர் அடையாளமாக முன்னிறுத்தியதே.   காதலை, நேசத்தை, மதித்துக் கொண்டாடுகின்ற மனிதர்களில், கறுப்பு மனங்கள் சில, மனிதநேயத்தை மிதிப்பது மட்டும் நிற்கவே இல்லை! (இப்போது நிறையவே முன்னேறி விட்டார்கள் உள்ளங்களைக் காயப் படுத்துவது போய், உடல்களைக் காயப்படுத்தி, உயிரைக்கூட குடிக்கமளவுக்கு வந்துவிட்டார்கள்).  கீழ்வரும் பாடல் முன்னரே எழுதியதென்றாலும், இன்னும் சில பத்திகளைச் சேர்த்திருக்கிறேன்.
=========================================================
சுடும் விழிகள்
(கலிவிருத்தம்)

=========================================================
















=========================================================
மந்தார வான்மகளின் வடிவானச் சீலையொளிர்
சிந்தூர ஓவியமென் சிந்தையிலோர் கவியெனவே
வந்தூற நானதனை வஞ்சியுனக்(கு) அளிக்கவந்தேன்;
செந்தேறல் சொட்டுகின்ற தீவிழியாற் சுடுவதென்ன?

அள்ளிமனம் கொள்ளையிடும் அந்நிலவைக் கண்டதனால்
வெள்ளமெனப் பொங்கியெழும் மையற்பாட்(டு) உரைக்கவந்தேன்;
துள்ளிவரும் மான்விழிநீ தோகையெனத் தோன்றியெனை
கள்ளெனவே போதைதரும் கருவிழியாற் சுடுவதென்ன?

சில்லென்றே வீசுகின்ற தென்றலது தொடுவதுபோல்
சொல்லத்தான் எண்ணியே தோன்றிவிட்ட என்கவிதை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகத் தரவந்தேன்;
நில்லென்றே நீயுன்றன் நீள்விழியாற் சுடுவதென்ன?

தாவிமனம் நாடுகின்ற தண்டமிழில் வெள்ளன்னத்
தூவியென நெஞ்சத்தைத் தொட்டிசைக்கும் பாட்டெழுதி
நாவினிக்கும் நாயகியே நானுனக்கு சொல்கையிலே
தேவிமுகம் பாராதுன் சேல்விழியாற் சுடுவதென்ன?

கன்னதலன் சாற்றுடனே கற்கண்டைத் தான்சேர்த்து
என்னுள்ளே நான்கலந்து என்காதல் தேனமுதை
பொன்னணங்குன் கைகளிலே பூங்கவியாய்த் தரவந்தேன்
புன்சிரித்தே பாராதுன் பூவிழியாற் சுடுவதென்ன?

அறப்பாட்டு அரற்றியதோ....

தமிழை மொழியாக மட்டுமன்றி, பண்ணார் தமிழணங்காக மட்டுமன்றி, பாட்டியல்கள் ஆர்க்கின்ற பண்ணார் தமிழன்னையாகவே, உண்ணும் போதும், உறங்கும் போதும், எண்ணும் போதும், இயங்கும் போதும் எண்ணுவதால், சிலநேரம் உளம்நையும் துன்பநிலை கூட எனக்கேற்படுவதுண்டு.

அறப்பாட்டு அரற்றியதோ உள்ளம்?
(கலிவெண்பா)
=========================================

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=========================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க
வியன்கவி அத்தனை விண்டேனே! ஆனால்;
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசும் என்னுள்ளம்! பொங்குந் துயரம்!

மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தேச்
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்,
விதியென்(று) இதையே உரைத்தாலு(ம்) என்றன்
கொதிக்கு(ம்) உளமெனைக் கொல்கிறதே! உண்மை!

நெறித்தே பிழையென நீதியும் கேட்க
வெறுக்கும் நினைவுகள்; வேதனை கொண்டு;
பிறக்கு(ம்) உயிரே புவியில் நிலையா(து)
அறுக்கு(ம்) அறப்பாட்(டு) அரற்றியதோ உள்ளம்?

கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்கி,
அரிக்கும் துயரத்திற்(கு) ஆளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி(ன்) இயல்பற, எண்ணம்
வரிந்த தமிழே மருந்து!

வாழ்வாங்கு வாழுங்கள்.....

வாழ்வாங்கு வாழுங்கள்......
(கலிவிருத்தம்)
=================================================


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=================================================

வாழ்கின்ற நாள்வரையில் மற்றவர்க்காய் வாழுங்கள்:
சூழ்கின்றத் துன்பத்தைச் சுட்டெரித்தே வாழுங்கள்;
ஊழ்த்துவரும் சூரியன்போல் உத்தமனாய் வாழுங்கள்;
வீழ்வதொன்றே வந்தவர்க்கு விதியென்று வாழுங்கள்!

சீர்த்தியுடன் சிந்தனையே செல்வமென வாழுங்கள்;
கூர்ந்தாய்ந்து காண்பதையே கொள்வமென வாழுங்கள்;
பார்ப்பதெலாம் மெய்யில்லாப் பாதையென வாழுங்கள்;...
ஆர்க்கின்றத் தாய்மொழிக்காய் அன்றாடம் வாழுங்கள்!

சேர்ந்திடுநல் இல்லாள்உம் சீர்மையென வாழுங்கள்;
சார்ந்திடுநல் இல்லறமே சாட்சியென வாழுங்கள்;
வேர்த்துடலால் பாடுபட்டு மேன்மையுடன் வாழுங்கள்;
தேர்ந்தெடுத்த கல்வியொடுச் செந்தமிழ்க்காய் வாழுங்கள்!

சார்தலின்றி அல்லலுறும் தாழ்ந்தவர்க்காய் வாழுங்கள்;
சேர்முகிலும் தருந்துளியைச் சேமித்தே வாழுங்கள்;
மூர்க்கரையும் முறிக்கின்ற மோகமற வாழுங்கள்;
கூர்நகத்தால் பெண்ணழிக்கும் குணமறவே வாழுங்கள்!

தேவிநீ எமைத் தேடிவா......



தேவிநீ எமைத் தேடிவா......
===========================================

  












============================================
ஆதியே எமை ஆளவா:
காளியே எமக் காகவா;
தேவியே எமைத் தேடிவா;
தாவிநீ சுமை தாங்கவா!
.....தாவிநீ சுமை தாங்கவா!
                                                           (ஆதியே)

வானில் ஏறி மறையும் போதும்
தேனில் ஊறித் திகழும் போதும்
ஊனும் நாறி உழலும் போதும்
நானும் மாறி நழுவும் போதும்
..... நானும் மாறி நழுவும் போதும்
                                                           (ஆதியே)

தேடித் தேடி தேய்ந்த போதும்
ஆடி யோடி அலைந்த போதும்
பாடிப் பாடி பறந்த போதும்
ஓடி யாடி ஓய்ந்த போதும்
.....ஓடி யாடி ஓய்ந்த போதும்!
                                                           (ஆதியே)

நாடு விட்டே நலிந்த போதும்
கூடு விட்டே குலைந்த போதும்
பாடு பட்டே படுத்த போதும்
சூடு பட்டே சுருண்ட போதும்
.....சூடு பட்டே சுருண்ட போதும்!
                                                            (ஆதியே)

நித்தம் சாடும் நிகழ்வின் போதும்
சித்தம் தேடும் சிதைவின் போதும்
முத்தம் நாடும் முனைவின் போதும்
அத்தம் கூடும் அழலின் போதும்
.....அத்தம் கூடும் அழலின் போதும்!

                                                            (ஆதியே)

நெகிழ்வான நேரமிதோ.........

இயற்கையை எழுதாத கவிஞர் எவர்? காரிகையைப் பாடாத பாவலர் எவர்?

நெகிழ்வான நேரமிதோ... (கொச்சகக் கலிப்பா)
===========================================















===========================================

மஞ்சொளிரும் அந்தியவள் மாலையிடக் கதிரவனும்
மஞ்சளெனும் சீலையிலே வனைகின்ற சாரமிதோ?
செஞ்சாந்தின் துகள்பூசிச் சிரித்திவளே வாகொதுக்க,
நெஞ்சகமே நெக்குவிடும் நெகிழ்வான நேரமிதோ?

தந்தநிறத் தளிர்க்கரத்தால் சரிந்திடுமோர் காரொதுக்கிச்
சிந்திவிடும் வான்துளியைத் தேடுகின்ற ஓவியமோ?
செந்தேறல் சொட்டுகின்றத் தீஞ்கனியைத் தான்சுவைக்க
வந்தூறி இனிக்கின்ற மனஞ்சொல்லும் காவியமோ?

பறந்தழகாய்ப் புள்ளினமும் பாய்ந்திங்கே பார்ப்பதற்குச்
சிறகடித்தே தானெழும்பச் சிலிர்க்கின்ற தேநிலவோ?
நறுமணமும் நல்லெழிலும் நன்னயமாய்ப் பொலிகின்றச்
சிறந்தவொரு சிறுபொழிலின் சிற்றாம்பல் பூமுகையோ?

நீர்முகந்தே நெடுந்தூரம் நீணிலத்தை நனைக்கின்ற,
கார்காலக் கருமுகிலாய்க் கவிபொழியும் சீற்றமிதோ?
சோர்வகலச் சொல்லடுக்கிச் சொரிகின்றச் சொடுக்கலென
ஆர்த்தெழுந்தே அள்ளியிடும் அருந்தமிழின் ஆற்றலிதோ?

============================================
மஞ்சு = முகில்
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பூமுகை = மலர்மொக்கு

கடலம்மா.....

அன்பர்களே!

உலகளாவிய தடாகம் இலக்கிய வட்டத்தில், இந்த மொழியார்வலனின் ”கடலம்மா” கொச்சகக் கலிவரிகளை ஏற்றதுடன், கூடவே கவியருவி என்ற அடைமொழியும் அளித்தமைக்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.   இதோ கடலம்மா பாடலின் முழுவரிகள்:
 
கடலம்மா! (கொச்சகக் கலிப்பா)
==============================================






 
 
 
 
 
 
 
 

===============================================
கருத்தறிந்தே சோறூட்டிக் காலமெலாம் தாலாட்டிக்
கரிசனமாய்க் கனிவுடனே காக்குமெங்கள் கடலம்மா;
உருக்கமுடம் கேட்பதுன்றன் உள்ளத்தைத் தொடவிலையோ?
செருக்கரெமைச் சிதைப்பதுன்றன் சித்தத்தில் படவிலையோ?

அன்னியரால் அழிகின்ற அவலத்தை வாக்குக்காய்
விண்ணளக்க வாய்பேசும் வீரரெமைக் காக்கவில்லை!
மண்ணகத்து மாந்தருமே வாழ்விக்க வரவில்லை:
உண்பதற்காய் உன்மடியில் உழலுமெங்கள் வாழ்வெதற்கு?

வாயில்லா விலங்கிற்கும் வாழ்வுதரும் மன்றங்கள்;
நோயில்லா வாழ்விற்கும் நூற்றளவில் மருத்துவர்கள்;
வாயிருந்தும் கதறிநிதம் மாய்கின்ற எம்மினத்தை
நீயுமின்று கைவிட்டால் நீதியெங்கே தான்கிடைக்கும்?

உனையெங்கள் தாயெனவே உணர்ந்ததனால் எந்நாளும்
கனவினிலும் காட்சியிலும் கடலுக்காய் வாழுகின்றோம்!
வனைந்தெம்மை பெற்றவர்உன் மலர்மடியில் விட்டதனால்,
சினந்தெமையே சிலநாளில் சீறினாலும், காப்பவள்நீ!

வேறுகதி இல்லாத வெறுந்தமிழன் என்பதனால்
சேறுபூசிச் சிரிக்காத திரையம்மா நீயன்றோ!
வீறுகொண்டே வெடித்தெழுந்து, வீழுமுன்றன் மக்களுக்கு
ஆறுதல்கள் தந்திடவே ஆற்றலுடன் வருவாயோ?

தாடியெனும் மூடி......

பல ஆண்டுகளுக்கு முன்னர், புதுப்பாக்களில் மோகமுற்றிருந்த போதில், நானெழுதிய வரிகள் கீழே!!  இற்றைக்கு அதே கருவினை நானெழுதியிருந்தால், என்று நினைத்து 2010 நான் பகிர்ந்த மரபியல் வரிகள் அதற்கும் கீழே!!...

தாடியென்னும் மூடி......
================================
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
================================
 
அன்பே நீ,
முத்தமிட்ட இடத்தினிலே
வேறு எவரும் முத்தமிட
வேண்டாமென்றே நினைத்து,
நான் போட்டேன் ஒருமூடி
அதுவே என்றன் தாடி!
 
================================

மோகினியே நீயிட்ட முத்தத்தை மறவாநான்
சாகுவரை, முத்தங்கள் தந்தவென் கன்னத்தில்,
மோகத்தில் பிறமங்கை முத்தமீ யாதிருக்க,
வேகின்ற பகலவனின் வேனலென்றும் பாராமல்,
மேகமென்றே போட்டவொரு மெல்லணையோர் மூடியது;
ஆகவென்றே அன்பர்கள் அழைத்திடுமென் தாடியன்றோ!

மெய்யான தோழமைகள் போதும்......

மெய்யான தோழமைகள் போதும்....
================================
















================================

வெள்ளெருக்கம் பூவைப்போல
உள்ளூரார் வேண்டாத
சுண்ணாம்புக் கவிதைக்காரன்;
புண்ணாக்கு பாட்டுக்காரன்;

பார்த்தபடி எழுதுமென்னில்
நேர்மையுண்டு என்பதனால்
இன்றிங்கே புலம்பெயர்ந்து...
என்றென்றும் மறக்காமல்

தன்மொழியை வாசிக்கின்ற
அன்பர்களின் நெஞ்சகத்தில்
உண்மையான நட்பதனை
கண்ணெனவே நேசிக்கின்ற

ஆழமான மெய்யன்புத்
தோழமைகள் போதுமின்று!

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கவிதை எனக்கொரு மொழி....

முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞன் சொல்கிறான் - கவிதையெனக்குத் தொழிலென்று!  இணையத்தின் இலக்கியப் பொழிலான ”சந்தவசந்தம்” கூகுள் குழுவில் நடைபெற்ற, இணையப் பாவரங்கில், பலரும் கவிதை பற்றி பாட்டிசைத்தனர்.  எனக்குப் பட்டது: கவிதை நானறிந்த இன்னொரு மொழியாக. அதைத்தான் பாடினேன். 
=================================================













=================================================
தமிழ் வணக்கம்:
=================
அலைகடற் சீறலை ஆள்பவர்க் கீறலை,
.....அறமிலாச் சாவியாய் ஆர்த்திடுங் கூவலை,
மலையென வென்றவள்; செய்திடும் பாக்களை,
.....மணந்தரும் பூக்களாய் நெய்திட வைப்பவள்;
உலையெனத் தீயினி லென்னுளம் பண்பட
.....உணர்வினை யூட்டிடு மொண்டமி ழன்னையே!
சிலையென நின்றிடும் மோனமும் போதும்மே; 
 .....சீயமாய்ச் சீறியே காத்திட வாரும்மே!

அவை வணக்கம்
=================
மன்றமவ் வானகம்; மலர்ந்திடும் மீன்களும், 
என்றுமப் பாவலர் வனைந்திடும் பாவெனில்,
கண்ணனின் கீதமாய்க் கருத்தினிற் கூடியே 
கன்னலுஞ் சேர்ந்தவோர் கனிந்திடும் பாகமாய், 
மின்னலுந் தீட்டிய மிளிர்ந்திடுந் தேகமாய்த் 
தென்றலி னன்புடந் தெளிந்துளம் பொங்கிட, 
வென்றிடும் பாக்களை விரைவுடந் தந்திடும்
என்னரும் பாவல! இனிதுநீர் வாழியவே!

தலைவர் வணக்கம்
==================
செம்மொழியின் பாசகவி செந்தமிழிற் பேசுகவி, 
அம்மெனுங்கா லாற்றலுட னள்ளியிடு மாசுகவி, 
இம்மெனுங்கா லிப்புவியி னீனமதை ஊதுகவி, 
அம்புலியா யார்த்துலகி லாதவமால் வாழியவே!

பாவென்றன் மொழி
==================
எண்ணமென இதயத்தி லெழுந்திடுமவ் வெழிலாரும் 
வண்ணமதை வரிகளிலே வடிக்குமென்றன் மொழிவிருப்பைக் 
கண்ணசைவிற் பாப்புனையுங் கவியெனவே கருதாதீர்;
நண்ணுகின்ற நற்றமிழை நயந்தொழுகும் நல்லவன்நான்!

முந்தையரின் முத்தமிழை முழுமனதாய்ப் போற்றாமல்,
விந்தைமிகு பன்மொழியும் விருப்பமுட னேற்காமல்,
வெந்தழலாய் நந்தமிழர் வெறுங்கனவி லெரிவதையே,
செந்தமிழிற் சிந்துகவிச் செதுக்குதலு மொருமொழியே!

பால்வடியும் பாலகர்மேல் பாலியலின் வன்மத்தைச் 
சூல்வளர்த்தத் தாயவளைத் துரத்திவிடுந் துன்பத்தைச்
சேல்விழியைச் சீரழித்துச் சிறகொடிக்கும் புன்மத்தைக் 
கால்மிதிக்கக் கொதிக்குமென்றன் கற்பனையு மொருமொழியே!

மஞ்சொளிரு மந்தியவள் மாலையிடக் கதிரவனும், 
மஞ்சளெனுஞ் சீலையிலே வனைகின்ற சாரத்தை, 
நெஞ்சகமே நெக்குவிடும் நெகிழ்வான நேரத்தைப்
பிஞ்சுகவிப் பொழிந்துவரி புனைவதுவு மொருமொழியே!

முடிதேடி முழுமுதலாம் முதல்வனையே முயலுவதை, 
வடிவேலின் வழுவில்லா வளங்களையே புகலுவதை, 
அடியெடுத்தே அருளரச னருந்தமிழால் முனைகின்ற 
முடிவில்லா மோனமெனும் முகவரியு மொருமொழியே!

தந்தநிற தளிர்க்கரத்தாற் சரிந்திடுமோர் காரொதுக்கிச் 
சிந்திவிடும் வான்துளியைத் தேடுகின்ற ஓவியத்தை, 
வந்தூறி இனிக்கின்ற மனஞ்சொல்லும் காவியத்தைச் 
செந்தேறற் பாவெனநான் செய்வதுவு மொருமொழியே!

ஆண்டவனி னடிதேடி அன்புடனே ஆடுதலை, 
வேண்டுமந்த வேதன்தாள் விரைந்துளமே நாடுதலை, 
ஈண்டிங்கே எடுத்துரைக்க ஈகமன்னன் முயலுகின்ற, 
மாண்பொளிரும் பாவென்னும் வரியும்தா னொருமொழியே!

பறந்தழகாய்ப் புள்ளினமும் பாய்ந்தங்கே பார்முழுதுஞ் 
சிறகடித்தே தானெழும்பச் சிலிர்க்கின்ற தேநிலவைச் 
சிறந்தவொரு சிறுபொழிலின் சிற்றாம்பற் பூமுகையை, 
நறுந்தமிழால் நடைபழகி நவில்வதுவு மொருமொழியே!

நீர்முகந்தே நெடுந்தூரம் நீணிலத்தை நனைக்கின்ற, 
கார்காலக் கருமுகிலாய்க் கவிபொழியுஞ் சீற்றமதை, 
ஆர்த்தெழுந்தே அள்ளியிடு மருந்தமிழி னாற்றலதைச் 
சோர்வலச் சொரியுமென் சொல்லடுக்கு மொருமொழியே!
==================================================
இராச தியாகராசன்

மெய்யான மெய்....

மெய்யான மெய்......
(எண்சீர் விருத்தப் பா)
===========================================
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
===========================================

 பூங்கிளையிற் போந்துவரும் தென்றல் காற்று;
.....பூவையரின் பூத்தொளிரும் அன்பின் ஊற்று;
யாங்கணுமே தோன்றிநமை மோதுந் துன்பம்;...
.....யாவருமே ஏங்குகின்ற காத லின்பம்;
ஓங்கிவளர் ஓங்கலதன் உயர்ந்த ஒண்மை;
.....ஊரெழவே ஊழ்த்துவரும் கதிரின் வெண்மை;
ஈங்கனைத்தும் வாழ்வினிலே நிலைப்ப துண்டோ?
.....ஏற்றமிகு மெய்யதுதான் உயிர்க்கு மிங்கே!
===========================================
 
ஓங்கல் = மலை/குன்று
ஊழ்த்து = தோன்றி/உதித்து
ஒண்மை = ஒளிர்வு

சீக்கிரமே வாயேண்டி....

சிங்காரி சீக்கிரமே வாயேண்டி....
(நாட்டுப்புற நடைப் பாட்டு)
==============================












===============================
சிங்காரி சீக்கிரமே வாயேண்டி...
===============================
மருதாணிச் செவப்பழகே;
மருக்கொழுந்து மைனாவே;
குண்டுமல்லிப் பூச்சரமே;
குறிஞ்சிப்பூ ரவிக்கக்காரி;
பஞ்சுமிட்டாய் சீலக்காரி;
பளபளக்கும் பல்லுக்காரி;
மல்கோவா மாம்பழமே; 
மலையாள மயக்குருவே!
மருதமல மயிலுபோல, 
பொழுதுகூவும் குயிலுபோல, 
புதுப்பொண்ணா சொலிக்கிறியே!
சிங்காரி தாகந்தீக்கச்
சீக்கிரமா வாயேண்டி!

அந்திமஞ்சள் வெயிலிலே,
பவுனாட்டம் மினுமினுக்குங் 
கண்டாங்கிச் சீலகட்டி,
கண்ணாடி வளசிணுங்க, 
கம்பங்காட்(டு) ஊடால, 
திருவாரூர் தேராட்டம், 
தலமேல புல்லுகட்ட 
சொமந்துநீ கையவீசி, 
சிலுப்பிகிட்டு நடக்கயில, 
கொல்லாம கொல்லுதடி 
கொலவெறியா ஊம்அழகு!
சிங்காரி தாகந்தீக்கச்
சீக்கிரமா வாயேண்டி!

காத்துவீசி தாவணியும் 
கனசோரா பறக்கயில, 
ஒதட்டோரச் சிரிப்புலயென்
உசிரையே வாங்குறயே!
தூண்டியில சிக்குறது
மீன்தான்னு தெரியுமடி;
என்னாயிது உன்னோட 
மீன்கண்ணு தூண்டியோடி?
தரமேல மீனாட்டந் 
தவிக்குதடி எம்மனசு;
சிங்காரி தாகந்தீக்க
சீக்கிரமே வாயேண்டி?
===============================
இராச. தியாகராசன்

பிகு: 
====
ஊடால - குறுக்காக

தந்தையெனும் பாசம்...

தந்தையெனும் பாசம்
(கொச்சகக் கலிப்பா)
===================================

















=================================================
தந்தையெனும் புதிர்
====================
அன்னையின் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்னல்கள் ஏதுமின்றி எந்நாளும் செழிப்புறத்தான்   
தன்னலமே தான்மறந்து தாரணியில் வாழ்ந்திருக்கும்!

தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!

தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனைத் தீர்ப்பவரும் தந்தையன்றோ?

முழுதுமுணர் மாந்தர்களை, முற்றுபெற்ற இலக்கியத்தை
பழுதின்றித் தன்னன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவின்றி வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்திங்கே தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!

அன்னையென்ற கட்டடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே!
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?

அத்தனைப் பாசத்தை, அற்புதமாய்ப் பரிவினையே
முத்தனையச் சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?

தந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனையனையே
முந்திவந்துக் காத்திடத்தான் முனைந்தாலும், வீழ்ந்தெழுகும்
தந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்
சிந்தனையைக் கூராக்கிச் செப்பமிடும் சீர்மையன்றோ!

நாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து
நாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து
நாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து
நாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து,

தளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல்
வளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவெனக்
களந்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற
உளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ!
======================================
இராச. தியாகராசன்

பெருந்தலைவர்....

பெருந்தலைவர்...
(கொச்சகக் கலிப்பா)
==================================================
















==================================================

நேர்மையினை எளிமையினை நீதியென உரைத்திடுமுன்
கூர்ந்தாய்ந்தே தம்வாழ்வில் கொள்கையெனக் கொண்டதனால்
ஆர்த்தெழுந்தே அன்றிளையோர் அப்பெருந் தீரரையே
பார்முழங்கத் தம்தலையாய்ப் பாங்குடனே ஏற்றனரே!

கொள்ளியென எரிக்குமந்த கொடும்பசி யடங்குமெனில்
வெள்ளியாய் ஒளிர்கின்ற வியன்கல்வி விளங்குமென்று
பள்ளியிலே பாலகர்க்குப் பகலுணவு தந்தவரின்
உள்ளன்பை எவரிங்கே உண்மையாக உணர்ந்திடுவார்?

உன்னருகில் அன்றொருநாள் உணவருந்தி நின்றதையே
என்னிதயம் எண்ணியிங்கே எந்நாளும் விம்முவதை,
அன்பிழிய நீயன்றே அளித்திட்ட அரவணைப்பை,
இன்றிளையோர் உணர்ந்திடவே எடுத்தியம்ப இயலவில்லை!

கல்வியிலாக் கர்மவீரன்; கருணைமிகு தர்மசீலன்;
தில்லிவாழ் அரசியலுந் தேடிவந்தே வேண்டிநின்ற
நல்லவரே நீரிங்கே நலமுடனே இருந்திருந்தால்
புல்லருமித் தமிழினத்தைப் பொசுக்கிவிட ஏலுமோ?

கும்மியடிப் பெண்ணே கும்மியடி....

கும்மியடிப் பெண்ணே கும்மியடி.......
(வெண்டளையான் வந்த பன்னிருசீர்
விருத்தம்/ கும்மிப் பாட்டு)


====================================
















=====================================
(1)ஒன்றி யுணர்வுடன் உள்ள உயர்வுடன்
.....உண்மையும் ஓங்கிடவே
..........ஊழல் ஒழிந்தினி ஓங்கு புகழுடன்
...............உத்தமர் வாழ்ந்திடவே
(2)இன்று புவியினில் கள்ள மழிந்திடக்
.....கற்றவர் நேர்வழியில்
..........என்றும் நடந்திட வேண்டு மெனக்கரம்
...............கொட்டிநீ கும்மியடி!

(3)வண்ணம் மிளிர்ந்திடு மெண்ணங் கவர்ந்திடும்
.....வானவிற் கோலமதாய்
..........மண்ணி லிறங்கிடும் மாந்த ரனைவரின்
...............வாழ்க்கையும் ஆகுமென
(4)எண்ணி உளந்தனில் ஆம்ப லிலையதன்
.....மீதிரு நீரதுபோல்
..........இன்பம் துயரினை ஒன்றாய்க் கருதிட
...............வேண்டிநீ கும்மியடி!

(5)உள்ளம் எழுந்திடு மெண்ண முரைத்திடும்
.....உன்னதச் சாவியென
..........உண்மை எனும்மொழி ஒன்றே உலகினை
...............காத்திடுஞ் சாமியெனத்
(6)தெள்ளத் தெளிவுடன் அன்பு வழியினில்
.....மக்களும் நின்றுலகில்
.........சிந்தை நிறைவுடன் சீர்த்தி நலம்பெறப்
...............பாடிநீ கும்மியடி!

(7)அள்ளும் அழகுடன் ஆழ்ந்து கவிஞரும்
.....யாத்திடும் பாடலைப்போல்
..........அன்பின் அறமதன் பாதை நடப்பவர்
...............வல்லமை பெற்றுவிட
(8)வெள்ளை யுளத்துடன் காணும் அனைவரும்
.....நந்தமிழ்ச் சுற்றமென
..........விக்கல் வெறுமையின் துன்பந் தொலைக்கவே
...............ஆடிநீ கும்மியடி!

தூர்த்திட வேண்டும் துணிந்து.....

தூர்த்திட வேண்டும் துணிந்து...
(கலி வெண்பா)
============================
 





 
 
 
 
 
 
 
============================
நேர்மையே அற்றவோர் நீணில வாழ்விலே
சோர்வதும், சோகமும், தோல்வியும் ஏணியே!
ஆரெமைக் காத்திடும் ஆண்டவன் என்றுளக்
கூரது மங்கிய கொள்கையில் மாய்வதோ?

பறந்திடும் எல்லாம் பறவையா என்றும்,
துறந்திடும் மாந்தர்த் துறவியா என்றும்,
உறவுகள் யாவுமே உண்மையா என்றும்,
அறுதியாய் எங்ஙனம் ஆய்ந்தே அறிவதோ?

மூர்க்கரும் நெஞ்சினில் மோகமே விஞ்சிட
ஆர்த்திடும் பிஞ்சதன் ஆயினைத் தீய்ப்பதோ?
ஊரதைச் சுற்றிய ஊத்தையை சாய்த்திட
யாரெவர் வேண்டும்? எழுந்திடு மானிடா!

பாரதம் பற்றிய பாம்பாம் புரையிதைத்
தூர்த்திட வேண்டும் துணிந்து.
==============================
ஆய் = எழில்
ஊத்தை = பெருங்கேடு
புரை = வளர்தீமை
தூர்த்தல் = அழித்தல்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

வனிதையவளின் மயக்கெழிலோ......


மயக்கெழிலோ (சந்தக் கவிதை)
==============================















வாலைக் குமரி வெண்ணிலவை
மாலை மறையும் வெங்கதிரோன்
சாலத் தழுவிக் கொண்டதனால்
கோலந் தரிக்கும் விண்மீனோ?

நீலத் திரையின் நுரைமலர்கள்
நீரில் சிதறிய பூக்களெனில்,
ஓலம் எழுப்பும் அலைத் தொடர்தாம்
உன்னிப் பறிக்கும் பெண்கரமோ?

விண்ணில் அதிரும் சுடர்நாணே
மின்னல் அணங்கின் சவுக்கென்றால்,
வண்ணங் கொஞ்சும் வானவில்தான்
வானிற் சிலிர்க்கும் பெருவில்லோ?

ஓங்கி உயர்ந்த பெருமலையே
உள்ளம்  முகிழும் நினைவாயின்
ஆங்கே சூழும்  முகிற்சீலை
அடுக்காய் எழுகும் கவிதைகளோ?

தீங்கனி தருகும் இன்சுவையே
தித்தித் திழுக்கும் தமிழானால்,
தூங்கா தொலிக்கும் முரசந்தான்
சுழன்றே மயக்கும் உன்னினைவோ?

பின்னிப் படருங் கொடிமின்னல்
பெண்ணின் நாண முறுவலெனில்,
என்னின் உள்ளே வெடிக்கின்ற
இசையிந் துடிப்பு இடியாமோ?

மலரில் மோதும் தென்றலது
மனத்தி லுறையும் அன்பனெனில்
மலரில் முகிழ்ந்த மணமதுவே
வனிதை யவளின் மயக்கெழிலோ?

கொட்டிக் கிடக்கும் விண்மீன்கள்
கொடியிற் சிரிக்கும் மலரானால்
எட்டிப் பறிக்கும் பெண்முகமே...
இரவில் எழும்பும் வெண்ணிலவோ?

அலைகள் எழும்ப ஏங்கொலித்தே
ஆர்க்கும் அன்பன் ஆழியெனில்,
மலையில் பிறந்த அருவிமகள்
மடுவை நாடும் பெண்ணணங்கோ?
==================================
ஏங்கொலி = இடையறாதொலி, இரைகின்ற ஓசை

(எ-காட்டு பாடல் கீழே:)

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.!
- (தண்டியலங்கார உரையின் தமிழ் வாழ்த்துப்பா)

நற்சூதனைப் பாடுவோம்...

நற்சூதனைப் பாடுவோம்  (கலிவிருத்தம்)
====================================

 




 

 
 
 
 
 
 
 
 
 
 
 
================================================
கிருஷ்ண கிருஷ்ண ஹரி; கிருஷ்ண கிருஷ்ண ஹரி;
கிருஷ்ண கிருஷ்ண ஹரி.... மாலவா!
கிருஷ்ண கிருஷ்ண ஹரி; கிருஷ்ண கிருஷ்ண ஹரி;
கிருஷ்ண கிருஷ்ண ஹரி.... கேசவா!                                    (கிருஷ்ண)

மாலவா, மாயவா, ஶ்ரீதேவி நாயகா...
மாதவா, கேசவா, நவநீத மோகனா!                                      (கிருஷ்ண)

பூதலம் ஈர்த்திடும் பொம்மலாம் தூயவன்;
மாதவ கோபியர் மன்பதை நாயகன்;
யாதவர் சீந்திடும் இன்முக மாயவன்;
ஆதவன் போற்றிடும் ஆய்நிறை மாதவன்!                        (கிருஷ்ண)
 
பாமரர் வாழ்ந்திடப் பாழதும் மாய்ந்திடத்
தீமையும் தீய்ந்திடத் தீயவர் சாய்ந்திடக்
கோமகள் பாலனின் கோகுல வாசனின்
நாமமும் பாடியே நாட்டியம் ஆடுவோம்!                            (கிருஷ்ண)
 
வாடிடும் மாந்தரின் வாழ்வினைத் தாங்கிட
நாடிடும் பாவலர் நாநலம் ஓங்கிடப்
பாடியே பாமலர் பாக்களால் கோதையும்
சூடியே தந்தநற் சூதனைப் பாடுவோம்                                (கிருஷ்ண)
=========================================
பூதலம் = புவியகம்
பொம்மல் = எழில்
மன்பதை = புவியகம்
சீந்திடும் = போற்றிடும்
ஆய்நிறை = அழகுநிறைந்த
நற்சூதன் = மதுசூதன்