செவ்வாய், 31 அக்டோபர், 2023

என்னிடத்தே உண்டு...

இந்த தாடித் தாத்தனிடம் என்னவுண்டு?  நான் யார்?  இப்பெயர்  இவ்வுடலுக்கா அன்றி உயிருக்கா?  இப்புவியகத்தில் எதற்காக வந்தேன்?  என்னதான் செய்கிறேன்.  இந்தக்  கிழவனிடத்தே அப்படி என்னதான் உண்டு!
=================================









=================================
என்னிடத்தே உண்டு.....
======================
அள்ளி அரவணைத்தே அன்புதருந் துணையுண்டு;
துள்ளியே ஆடுகின்ற துடிப்புமிகு மைந்தனுண்டு;
உள்ளமதில் உரமுண்டு; உணர்வினிலே மெய்யுண்டு;
கள்ளமில்லாக் கருத்துண்டு; கறையில்லா நட்புண்டு!

புள்ளினத்தைப் பூவிதழைப் பொழிலூடு பொற்கதிரைக்
கொள்ளை கொள்ளுஞ் கொஞ்சுதமிழ் மொழியினிலே,
வெள்ளமெனச் சொல்லெடுத்து விருத்தமும் வெண்கலியும்,
வள்ளையுடன் வண்ணப்பா வடிக்கின்ற திறனுண்டு!

கள்ளதனை உண்டதுபோல் கண்டபடி உளறியிங்கு,
சுள்ளெனவே எந்நாளும் தூற்றிநிதம் ஏய்ப்பவரைப்
பள்ளிச் சிறுமியரைப் பாழ்படுத்தி மாய்ப்பவரைப்
பொள்ளிவிடும் பாவெழுதிப் பொசுக்கிவிடும் அறமுண்டு!

இயல்பின்றி இப்புவியி லெந்நாளும் அலைந்தலைந்தே,
மயங்கிக் கிடக்காமல் மாமலையாய் நிமிர்ந்திங்கே,
அயர்வின்றிக் கொண்டலது அமுதமழை பொழிவதுபோல்,
கயமையெனுங் கசடுகளைக் கருக்கிவிடக் கவியுண்டு!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் - குருகினம், பொழிலூடு - எழிற்காவின் ஊடாக, 
பொள்ளுதல் - சுடுதல், கசடு - கோது/ பிழை.


சனி, 28 அக்டோபர், 2023

அரவமில்லா இரவுப் பொழுது..

இப்போது நகரத்தில், அரவமில்லா இரவுப் பொழுது எங்கே இருக்கிறது?  நாள் முடிவதோ நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்கு.  மீளவும் அதிகாலை 3 அல்லது 3.30 மணிக்கு.  இருந்தாலும் கவிதையென்பது நகர நரகத்துக்கு மட்டுமல்லவே!
=======================================











=======================================
அரவமில்லா இரவுப் பொழுது...
=======================================
அரவமில்லா இரவினிலும், 
இருள்வெளியின் கனவுதிக்கக் 
கனவினிலே மூழ்கியவர்,
நினைவுகளில் மாய்கின்றார்!

இளவயதின் எண்ணத்தில்
துளித்துளியாய்த் தளிர்க்கின்ற,
துயரோடும் சிந்தனையில், 
அயர்ந்தாடிச் சாய்கின்றார்!

நிழலெனவே நிதமலையும் 
பழகுசுகப் பார்வையதால்,
காதலெனும் கற்பனையாம் 
வேதனையில் வேகின்றார்! 

கடலெனவே ஓங்கியழும்,
உடலுருவ வேதனையால்,
காலமதே அரித்தழிக்குங் 
கோலமெனச் சோர்கின்றார்!

உணவின்றி உறக்கமின்றி,
பணமின்றி பண்புமின்றி,
உலகாய உணர்வுமின்றி, 
சீலமிலா தாடுகின்றார்!

தலைச்சுமையைப் பாராமல்,
அலைந்தலைந் ததன்மேலே
மலைபோலச் சேர்ப்பதுடன்,
உலைநெருப்பில் வீழ்கின்றார்!

களிபொங்கச் சினத்தீயில்,
அளைகின்ற மாந்தரிவர்,
முனைப்பின்றி முகப்பின்றி,
தனைமறந்தே போகின்றார்!

தயவுதிரும் போதினிலே
சுயமழியும் நேரமதில்
செயலிழந்து போகையிலே
அயலவரும் வருவாரோ?
==========================
இராச. தியாகராசன்

புதன், 25 அக்டோபர், 2023

பாரதி நான்மணி மாலை

உள்ளம் செய்யென்று சொன்னதால், பாரதி நான்மணிமாலை ஒன்றைக் கோத்திருக்கிறேன்.
========================================













========================================
பாரதி நான்மணிமாலை.
=======================
காப்பு
======
நோக்கறிய வைத்துவிடும் பாரதியென் வாக்கென்னும்
ஊக்கம் வளர்க்கும் ஒளி.
(பாரதி = மாகவி;  பாரதி = கலைமகள்)
 
வெண்பா
========
ஆணிப்பொன் ஆடகமா யள்ளியெனை ஆட்டுவிக்கும்
மாணிக்கப் பாவலனே  வண்டமிழின் காவலனே!
கேணி,நிலங் காளியிடம் கேட்டவனின் பாவெனக்கு
வாணியவள் தந்த வரம்.
 
கட்டளைக் கலித்துறை
======================
தேச மது(ம்)உயர் வுற்றி டவேவழி தேடியவன்;
நாச மறுநிலை யற்றி டவேதமிழ் நாடியவன்;
பாச மிகு(ம்)உளம் பெற்ற தனால்கவி பாடியவன்;
ஆசு களுமெரிந்(து) இற்றி டவேநட மாடியவன்!
 
எண்சீர் விருத்தம்
==================
சுழல்கின்றச் சூறையெனுங் காற்றைப் போன்றே
....தொன்மத்தைத் தொல்தமிழால் மாற்றும் வீச்சே!
தழலென்னுந் தீக்கதிரின் தீண்டல் போன்றே
....சலிப்பின்றி என்பாட்டைத் தூண்டும் மூச்சே!
எழிற்றோப்பி(ல்) ஓர்ந்துருகுங் குயிலைப் போன்றே
....என்னுள்ளே என்புருக அணைக்குந் தீயே!
உழல்கின்ற ஆழியதன் சீற்றம் போன்றே 
.....உயிர்த்துளியின் பாட்டெடுத்து வாராய் நீயே!
 
அகவற்பா
===========
விண்ணுயர் தமிழிலே விஞ்சிடும் புகழ்செய்
தண்ணெழிற் பாட்டிலே தாரணி போற்றிடக்
கோணலைக் கேடினைக் கூனதைச் சாய்க்கவே
வாணியும் தந்தவெம் வாரிதிப் புனலே;
வேணுவி(ன்) இசையாய் விண்ணின் நிலவாய்
வாணுதல் நங்கையாய் மன்னவன் கண்ணனைக்
காதலி வடிவிலுங் காட்டிய
ஆதவ பாரதி ஆர்த்தெழு(ம்) ஊற்றே!

வெண்பா
==========
சொல்லுக்கு வேந்தன் சுப்ரமண்ய பாரதி
வில்லுக்கு வேந்தன் விசயனெனச் சொல்லெடுத்துக் 
கொள்ளித் கணையெனவே கும்பினியர் ஆட்சியற 
தெள்தமிழில் பாடியதோ தேன்.

கட்டளைக் கலித்துறை
======================
ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் சாற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவிப் பேச்சுரைத்தான்!

எண்சீர் விருத்தம்
==================
கணிப்பொறியும் மென்பொருளும் மேலை நாட்டுக்
     கருவிகளென் றிருப்பதனால் ஆங்கி லத்தில்
நனிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை
     நையபுடைக்கும் பாரதியின் கூற்று முண்டே!
பிணிபிடித்த கண்களிலே மருந்து மிட்டு
     பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டும் என்ற
     கோணலறி வாளரென்று தூற்று கின்றான்!

அகவற்பா
===========
சொல்லரசுத் தம்பன்;  துயிலிலும் பாட்டால் 
வல்லரசை ஆட்டிய வம்பன்! கவியால் 
நல்லவரை ஈர்த்த நற்றமிழ்க் கம்பன்;
கொல்பகை கண்டால் கொதித்த கொம்பன்!
தேர்ந்த செங்கனித் தேனாய் அமிழ்தாய்
நேர்த்திப் பாப்புனை நேர்கவி பாரதியின்
சீர்த்தமிழ் சேந்திய புதுவை
சேர்ந்த பாரதி செந்தமிழ்ச் சாரதியே!

வெண்பா
==========
தூணெனவே அன்னியரை சோர்விலா தெதிர்த்துநின்ற 
மாணமுத பாரதியின் மன்னுதமிழ்க் பாக்களிலே
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல். 

கட்டளைக் கலித்துறை
======================
ஏதி லியாயழும் ஏழை களுக்குணர் வேற்றிடவே, 
சூது களையனற் சூரி யனாய்நிதம் சுட்டெரிக்கப்
பூத லமும்புகழ்  பாடி  டவேபல போர்ப்பரணி 
பாதை யினைச்சொலும் பாக்க ளெனுங்கவிப் பாட்டெடுத்தான்!

எண்சீர் விருத்தம்
==================
துடிக்கின்ற தீக்கனலின் ஆற்றல் பேச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பூச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்தகனிச் சுவைமுதச் சாற்றின் உள்ளம்! 
நடிக்கின்ற கும்பினியர் செய்த கேட்டை 
.....நயபுடைத்த நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!

அகவற்பா
===========
மற்றவர் மொழியை அழிக்கவே இங்கு, 
மயங்கப் பேசியே ஏய்த்து வாழும், 
குற்ற உணர்வு ஏது மில்லாக் 
கூவிடும் அரசியல் பொய்யும் மாய, 
முற்றிய பைத்திய முரண்டு பிடிக்கும்
மூளைச் சலவை முழங்கும் பேர்களால்
வற்றிய தமிழைக் காக்க
மறுபடி பாரதி வாராய் இன்றே!

புதன், 18 அக்டோபர், 2023

வாழ்க்கைக் கல்வி

இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம்.  கற்றலே மேன்மை.  நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே.  கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம்.   ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும்.  நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது.  காலத்தீ  புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."

====================================








====================================
வாழ்வியற் கல்வி: 
(கட்டளைக் கலித்துறை)
===================
பரந்த மரத்திலே நூலின்றிச் சிக்கிய பட்டமதைத் 
துரட்டியாய் மேலேறி தொற்றி யெடுக்கத்  துணிந்தவனை, 
வரிப்பூண் மினுக்கும் மிளாறால் விளாசிய மாமனது 
கரந்தடி கூடப் புவியில் தகவான கல்வியன்றோ?

கண்ண னவரின் கடைக்கு விரைந்துநீ காற்றெனவே
எண்ணெய் யுடன்வா வென்றுபணம் தூக்குடன் என்றெனையே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம் ஆட்டமெனும்
கண்கட்டில் விட்டதாற் கண்ட அடிகூடக் கல்வியன்றோ? 

கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமே 
சிட்டின் சிறகாய் சுழன்றா டுகின்றவென் சிந்தனையாங் 
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளுங் காதுபற்றிக் 
கட்டறக் குட்டிடக் கற்றதும் கற்பகக் கல்வியன்றோ? 

பள்ளிக் கழிவறைப் போந்தே திருடன்போல் பாதகமாங் 
கொள்ளி யிடும்புகைக் கோதாம் பழக்கத்தைக் கொன்றுவிடச் 
சுள்ளெனச் சொல்லியே ஆசான் அரும்பால சுந்தரவர், 
கள்ள மழிக்கக் கொடுத்த அடிகூடக் கல்வியன்றோ? 

நற்றாயும் தன்னிடைப் பாரம் இறக்கிய நாள்முதலாய், 
வெற்றுடற் றீயிலே வெந்தங்கு வெண்ணீறாய் வீழும்வரை, 
உற்றிடுந் துன்பமே ஆயிர மானாலு முண்மையிதே; 
கற்பிக்கும் யாவுமே கோடி யெனுமருங் கல்வியன்றோ?
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
துரட்டி = மரமேவிய காய்/ பொருளை சிக்கலின்றி எடுக்கும் கோல்.
மிளாறு = தண்டிக்கும் பிரம்பு/ மெல்லிய குச்சி. 
கரந்தடி = மறைந்து சடுதியில் அடித்தல்/ கொரில்லாப் போர்முறை.
நுடங்கிடை = சிற்றிடை/ நுட்பமான இடை.
கோது = குற்றம்/ பதர்.

பெண்டிரின் உண்மை உயர்வு...

எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்!  எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்?  வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்! 

காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும்  கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி;  இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை.  இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள்.  கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள்.  வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.

===========================================

===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென, 
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத் 
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக் 
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!

மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்; 
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும் 
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்

சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில், 
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும், 
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!

கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து; 
விற்பனைக் கல்லவ் விளைந்திடும் முத்து! 
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை 
மூழ்கித் தேடி முனையும் போதிலே,

சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில், 
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்! 
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில், 
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!

நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க் 
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப் 
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில், 
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்! 
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர் 
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!

பல்சுவை யுணவால், பல்வகை யணியால், 
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ? 
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும் 
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.

பிகு:
=====
நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல், முத்துக் குளித்தல் (பரதவர் மீனவர் எனில், நுளையர் முத்துக் குளிப்பவர்)