திங்கள், 22 ஏப்ரல், 2024

வாழ்வென வாழ்வமே!.......

============================================

=============================================
வாழ்வென வாழுவீர்! 
(நிலைமண்டில அகவற்பா)
============================
மலைதனில் தோன்றியே மடுவினிற் சேரவே,
அலைந்திடும் புனலென இளமையின் கணங்களும்,
நேற்றென, இன்றென நாட்களும் கரையுமவ்
வாற்றின் பாலமும் ஒருவழிப் பாதையே!

தவறெதும் செய்யாது தண்டனை தருவதும்,
அவதிக(ள்) அவனியில் அத்தனை யுறுவதும்,
தவிப்பினில் மூழ்கியே சலிப்பினைப் பெறுவதும்,
புவியினில் புழங்கிடும் புதுமையின் சாரமோ?

இருப்பினை இளமையை இன்பமாய்த் துய்த்திடும்
கருக்கிலேக் கடக்குமக் காலமாம் காட்சியை
விரும்பியே மனத்தினில் மீளவும் காணலாம்;
திரும்பவும் அடைவது செகத்தினின் நடக்குமோ?

நடந்திடும் இளமையும் நிழற்படக் காட்சியே!
கடந்திடும் காலமும் கானலின் நீர்மையே!
கடுகியே விரைந்திடும் கனவிலே தவழ்ந்திட,
முடிவினைக் கொண்டவர் முயல்வதும் முடியுமோ?

இயற்கையை மாற்றிட ஏந்தலாய்த் தோன்றியே,
வயதினை வென்றினி வாழ்வினில் நிலைப்பரோ?
அழைப்பிலா விருந்தென அந்தகன் பரிசென,
நுழைந்திடும் வாழ்விலே நிச்சயம் முதுமையே!

பயத்தினால் பதவியால் பார்புகழ வாழலாம்;
முயற்சியால் மூடரை முடங்கிவிழச் செய்யலாம்;
அறிவினால் அகந்தையால் அடக்கியே ஆளலாம்;
இறப்பினை எரித்தே ஏய்க்கவும் முடியுமோ?

மாய்ந்திடப் பிறந்திடும் மானிட தேகமும்,
தேய்ந்திடத் தேடிடும் செல்வமும் மெய்ம்மையோ?
சூழ்ந்திடும் ஏனையர் சுகமுடன் வாழ்ந்திட,
வாழ்ந்திடும் வாழ்வதே வாழ்வென வாழ்வமே!
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மடு = பள்ளம் (அ) ஆழ்கடல், புனல் = ஆறு,
அவனி = பூமி, செகம் = உலகம், 
ஏந்தல் = உயர்ந்தவர், அந்தகன் = நமன்.

திங்கள், 15 ஏப்ரல், 2024

வாக்களிப்பீர்......

வாக்களிப்பீர் மக்களே!
=============================













=============================
மறக்காமல் வாக்களிப்பீர்......
=============================
தூண்டிலிலே தொக்கிநிற்குஞ் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாமல்,
காண்பதெலாங் கொள்வதுவுங் கண்போக்கிற் களிப்பதுவும்,
மாண்பென்று மயங்காத மானிடர்க்கே வாக்களிப்பீர்!

தன்னெறியாய்த் தருக்கரவர் தயக்கமற தரணியிலே,
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமில்லாக் கொடும்பாவப் 
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் புழுதியிலே, 
என்றுமுழல் எத்தரிங்கு வீழ்ந்திடவே வாக்களிப்பீர்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்க ளாழ்ந்தூன்ற, 
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுக்கடுக்கா யழுக்கென்னு மாழியிலே வீழ்ந்துழலும்,
நெடுமரத்துக் கயமைகளும் நெக்குவிட வாக்களிப்பீர்!

பணமென்றும், பதவியென்றும், பழகுந்தீ வழக்கென்றும்,
தணலேறி தகிக்கின்றச் சழக்கென்றும், சலிப்பில்லா
துணவென்று மரசியலி லுழலுகின்ற உலுத்தர்கள் 
கணப்போதிற் கரைந்தோடக் கடுஞ்சினத்தில் வாக்களிப்பீர்!

சங்கிலியாய்ப் பின்னலிடுஞ் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சகரும் மயக்கத்தில் 
முங்குவதால், நல்லவர்கள் முன்னெடுக்கும் நல்லறமே 
இங்குநிதம் பொலிந்திடத்தா னெழுச்சியுடன் வாக்களிப்பீர்!

உள்ளத்தி லூழ்க்கின்ற உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
கொள்ளுகின்ற கொடுமைகளைக் கொளுத்திடவே வாக்களிப்பீர்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்,
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென எந்நாளும்
ஓக்கமிலா தாடுகின்ற ஊடகங்கள் அதிர்ந்துறைய,
சாக்கடை அரசியலும் சாய்ந்துவிழ வாக்களிப்பீர்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை;
சுளுவாக உன்கழுத்திற் றொடையலும் விழுவதில்லை; 
தெளிவாகச் சிந்தித்தே திடமாகத் தேர்ந்தெடுத்து,
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கே வாக்களிப்பீர்!

உடலுழைப்பி லுருவாகு முயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறி, களமீதில் வளர்ச்சிகளும்,
நடக்குமென்ற நன்னெறிக்காய் நல்லவர்க்கே வாக்களிப்பீர்!

தளர்வின்றித் தயக்கமற சலிப்பில்லாத் தவிப்புடனே,
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர்க் கனவகற்றுந் 
தெளிவான அரசியல்தான் திறன்மிகுந்தத் தாய்நாட்டின் 
வளர்ச்சிக்கு வழியென்றே வல்லவர்க்கே வாக்களிப்பீர்!

வல்லாட்சி அரசியலின் மமதையினால் நாடோறும் 
சொல்லொணா தழல்போன்ற துன்பத்தி லெரிந்துநிதம்
கல்வியின்றி, காசுமின்றி கண்போக்கில் வாழுமெங்கள் 
இல்லாத ஏழைகளின் எழுச்சிக்காய் வாக்களிப்பீர்!
=====================================================
இராச. தியாகராசன்
====================

பிகு:
====
புன்னெறி = தீயநெறி, முடங்கர் = மாற்றுத் திறனாளி, நெக்குவிட = விரிசல்விட,
உலுத்தர் = கயவர், முங்குதல்= மூழ்குதல், ஊழ்த்தல் = பிறப்பெடுத்தல், 
துய்த்தல் = சுவைத்தல், ஏக்கழுத்தம் = ஈகோ, ஈடணை = இறுமாப்பு, 
முடந்தை = ஊமை, தொடையல் = மலர்மாலை, வல்லாட்சி = சர்வாதிகாரம்.