புதன், 8 ஆகஸ்ட், 2012

மாண்பெனவே கொள்வோமே!


இந்தக் கொச்சகக் கலிப்பாவின் ஆங்கில வடிவத்தினையும் நான் எழுதினேன்.  இரண்டின் ஒற்றுமை/ வேற்றுமைகளை சுவைஞர்கள் தாம் சொல்ல வேண்டும்!  ஆங்கில வடிவத்தின் இழை:
http://tyagas.blogspot.in/2012/08/safe-production-for-development.html
================================================
















================================================
வளர்ச்சிக்கான பாதுகாப்பும் உற்பத்தித் திறனும்..
(கொச்சகக் கலிப்பா)
================================================

எடுத்தபணி யதன்மீதே ஈடுபாடு கொண்டிலங்கி
முடிப்பவர்தாம் வாழ்க்கையிலே முன்னேறிச் சென்றிடுவார்;
அடுத்தவரைத் தான்நோக்கி அழுக்காறு கொள்பவரோ,
நடுகல்லை போலிங்கு நலமின்றி நின்றிடுவார்!

உடமுழைப்பு, பாதுகாப்பு, உற்பத்தி யிவைமூன்றும்
உடமையென தாமெண்ணி உலகிலுள்ள மாந்தர்கள்
கடமையினைச் செய்தாலே கண்ணிமைப்பில் வளர்ச்சிகளும்
நடக்குமென்ற மெய்யதனை நாமிங்கு உணர்ந்திடுவோம்!

தளர்வின்றி எந்நாளும் தவிக்கின்ற முனைப்புடனே,
களமீதில் ஆழ்தியங்கிக் காணும்வீண் கனவகற்றித்,
தெளிந்தஉடல் உழைப்பதுவே சீர்த்திமிகு தாய்நாட்டின்
வளர்ச்சிக்கு வாழ்வியலின் மாண்பெனவே கொள்வோமே!

SAFE PRODUCTION FOR DEVELOPMENT.


I have written this English poem based on my little closeness which I had in my college days with Iombic tri/tetra/penta meters, prosidy, sonnet etc.  I have also translated this in Tamil also (in kalippaa) but you readers have to comment about the translations's closeness!
===================================















===================================

We be hard working hand;
With a love for the same!
Thats sure a magic wand;
For the path of our fame!

Mind working as a knife
Will give a result known!
Envy other people life,
You will be an inert stone!

Working with the safety yields,
Make thy life full of sweets!
Other wise hollow deals,
Always end in empty tweets!

Without any stopping mind,
Our lovely working band,
Toil safely with a bind
Make a Strong Mother Land!

மாண்புடனே வாழியவே!.....


சில நேரங்களில்  உள்ளே உணர்வூறிய ஆற்றொணாத வேதனையை, கையால் ஆகாமல் கைகளைப் பிசையும் கேவலத்தை,  எண்ணி உளம் மாயும் துன்பத்தை என்னென்று சொல்வது?   கடமைகளால் கட்டுண்ட, இயலாமையின் உச்சத்தில் இருக்கும், எம்போன்றோர், என்னதான் செய்ய இயலும்?
==============================================









|

==============================================
மாண்புடனே வாழியவே  
(தரவு கொச்சகக் கலிப்பா)
========================

தீக்கனலே! செம்மொழியே! செந்தமிழே! என்றெல்லாம்
பாக்களினால் தமிழ்பேசி பாசாங்கு செய்தபடி
சாக்காட்டுச் சாதிமத சழக்கென்னும் கோண(ல்)அரை
வேக்காட்டு அரசியலின் வேர்கொண்ட தமிழினமே!

நந்தமிழை நாக்கூச நரகலெனும் வேதனையை,
செந்தமிழைச் செந்தணலிற் றீய்க்கின்ற தீமையினை,
சிந்தனையைத் தான்பொசுக்கிச் சீரழிக்கும் போதையினை,
எந்நாளும் எத்தர்களே ஏத்துகின்ற ஈனமதாம்

தன்னலப்பேய் வெருண்டோடத் தாரணியை வாழ்விக்கும்
அன்பென்னும் அற்புதமாம் ஆழ்கடலில் முக்குளித்து
நன்னலமாம் முத்துகளை நம்மிளையோர் பெற்றிலங்கி
மன்னவராய் ஓங்கலென மாண்புடனே வாழியவே!

தேடித் தேடி.....


சந்தவசந்தம் கூகுள் குழுவில் நடந்த பாவரங்கில் நான் வாசித்தளித்த கவிதை இது!  (சில இடங்களில் தொடையிலக்கணம் பிறழ்ந்திருக்கலாம் - ஆனால் தோன்றியதை அப்படியே எழுதிய பாட்டென்பதால், எதையும் திருத்தவில்லை!)
====================================================

====================================================
தேடித் தேடி (கொச்சகக் கலிப்பா)
===============================

ஆட்டங்கள் வேண்டுமென்றே ஆர்ப்பரிக்கத் தேடும்நீ;
ஆண்டவனை வேண்டியிங்கே அமைதியைத் தேடுவையோ?
அருகிருக்கு மழகறியா தரிதாரந் தேடும்நீ;
அன்பொன்றே மேலாம்மென் றாய்ந்தறிந்து தேடுவையோ?

இருக்கின்ற தைவிட்டே எங்கெங்கோ தேடும்நீ;
இருளன்ன இறப்பொன்றே இயல்பென்று தேடுவையோ?
உருவாகு முவர்கடலி லுல்லாசந் தேடும்நீ;
ஊரெங்கு முறையும்பே ருண்மைதான் தேடுவையோ?

வசந்தங்கள் வாழ்வென்று வலைவீசித் தேடும்நீ
நிம்மதியைத் தேடாது நிழல்களிலே வெல்வதென்ன?
செந்தழலைத் தளிரென்றும் செம்பனியைத் தீயென்றும்
தேய்ந்தாய்தே தேடும்நீ தேய்ந்தோய்ந்து செல்வதெங்கே?

தினந்தினமுந் தீக்குளியல்; தீராத நெஞ்செரிச்சல்;
இனம்புரியா மூச்சடைப்பு; ஏனிந்த விளையாட்டு?
வித்தகியின் விதிவழியே உயிராடுங் கயிராட்டம்
அத்தனையு ஆசைகளால், ஆவலெனும் பூசைகளால்!

வந்ததுவும் தவறில்லை வளர்ந்ததுவும் தவறில்லை
வெந்தரண வேல்வலியில் வெறுங்கூடாய் வாழ்வெதற்கு?
வீசுகின்ற காற்றலையில் உழல்கின்ற சருகான
பாசவலை வாழ்வொருநாள் பட்டெனவே விட்டுவிடும்!

சங்கிலியாய்ப் பின்னல்கள் சிக்கெடுக்கா நூற்கும்பல்;
அங்கதனைப் பிடித்தபடி அடியதனைத் தேடுகையில்;
அறுந்தநூல் கையில்வர வெறுங்கனவே வாழ்வென்னும்
முடிவுதனைக் காண்கின்றாய்; விடியும்வ ரையிதுவே!

இறங்கிவிட்ட நாள்முதலாய் இருக்கின்ற நாள்வரையில்
உறுத்தாத பேருண்மை; இருப்பிற்கோர் காவல்நாம்!
நெறிமுறையை விட்டுவிட்டு நீயுன்றன் வாழ்வினிலே
அறியாமல் தேடுவதேன்? ஆட்டங்கள் போடுவதேன்?

சிங்காரந் தேடுமுடல் சில்லென்று மாகுமடா!
தங்கத்தைத் நாடுமுடல் தழல்தின்னப் போகுமடா!
பாவங்கள் படிந்துவிட்ட பொய்யான மெய்ப்பைதான்
சீவனெனும் சிவலிங்கம் சிரிக்கின்ற கோவிலடா?

கள்ளக் கருநிலவு........


ஒரு இணைய நண்பரின் நிலவு பற்றிய நான்கு வரிப்புதுப்பாவின் தாக்கத்தால் நான் எழுதிய வெண்பாயிது. பல ஆண்டுகள் ஆனதால், அந்நண்பரை அறியேன் இப்போது.   இதே பாடலை சுவைத்த கவிஞர் கி.பெ. சீனுவாசன், தம்முடைய ”புதுவைப் பாமரன்” என்னும் சிற்றிதழில் வெளியிட்டார்.
===================================================

===================================================
கள்ளக் கருநிலவு (கலிவெண்பா)
======================================
கள்ளிருக்கும் பூச்செண்டாய்க் கன்னியவள் காத்திருக்க
முள்ளாம் முழுநிலவின் மோகக் கதிருயர்வோ?
துள்ளு மிளமானாய்ச் சுந்தரியே இங்கிருக்கக்
கள்ளக் கருநிலவின் கானல் கதிருயர்வோ?

தங்கக் கொலுசணிந்த தத்தைமொழி முத்திருக்க, 
அங்கந்தேய் அம்புலியின் ஆர்க்குங் கதிருயர்வோ?
நங்கை விரிக்கின்ற மாயக்கண் வீச்சிருக்க, 
மங்கிவளர் வாநிலவின் வஞ்சக் கதிருயர்வோ?

அள்ளு மழகிருக்க அன்றாடந் தேய்கின்றக்
கொள்ளிக் குளிர்நிலவின் கொட்டுங் கதிருயர்வோ?
முள்ளிச் சிரிப்பிருக்க மோன முகங்காட்டும்
வெள்ளி வெறுநிலவின் வேனற் கதிருயர்வோ?

விண்மதியா யென்மடியில் மெல்லியலாள் வீற்றிருக்கத் 
தண்டமிழில் என்னுளத்தே சந்தப்பாப் பொங்கியெழ, 
வெண்பனியாய்ச் சிந்தி விரலிடுக்கி லோடிவிடும் 
வண்ணச் சிறுநிலவின் மந்தக் கதிருயர்வோ?

மண்ணுலகில் என்னை வலைவீசிக் கட்டிவிடுங் 
கண்ணழகி காவதனில் காதலுடன் காத்திருக்க,
வெண்ணெய்யாய்த் தீயில் விரைந்தே உருகுமந்த 
விண்ணிலவின் தேய்கின்ற விந்தைக் கதிருயர்வோ?

கன்னலாய்த் தித்திக்குங் காவியம்போற் றுள்ளியே 
மன்னுதமிழ் பாவிசைக்கும் மங்கை அணைப்பிருக்கச் 
சென்னி மழுங்கடிக்குஞ் சின்னக் கதிருயர்வோ?
அன்புடனே சொல்வீர் அறிந்து.
===========================
இராச. தியாகராசன்

பிகு:
தத்தைமொழி - கிளிமொழி (இங்கு மங்கை பேச்சுக்கானது)
அம்புலி - நிலவு
முள்ளி - தாழை/ மருதோன்றி/கள்ளு (Frangrantscrew/Baleria/Toddy)
(நான் கள்ளு/ தேறல் என்ற பொருளில் எழுதினேன்)

நம் பெரியார்......


வலையுலாவும் நண்பர்களே!  நான் இறையென்று ஒன்றிருப்பதை நம்புகிறவன்.  அதுபோல இறை  மறுப்பு தவிர்த்து,  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் குறிக்கோள்கள் பலவற்றை பின்பற்றும் பாமரன்.  இஃது பலருக்கும் முரண்பாடாய்த் தோன்றலாம்.  என்ன செய்வது,  மனித மனம்,  எண்ணங்கள், வாழ்வியல் எல்லாமே முரண்பாடுகளைக் கொண்டவையே!
=======================================================

=======================================================
நம் பெரியார் (கலித்தாழிசை)
============================

சாத்திரங்கள் கூறுவதாய்ச் சாதியெனும் வேதனையைச்
சூத்திரமாய்ச் சொல்பவரை சுட்டெரிக்குஞ் சூரியனாம்;
ஆத்திகரா யில்லாமல் ஆறறிவால் வாழ்வமென,
நாத்திகரா யூர்போற்ற நம்பெரியார் வாழ்ந்தாரே!
..........நானிலத்தோர் போற்றிடவே நம்பெரியார் வாழ்ந்தாரே!

பெரும்பதவிப் பட்டங்கள் பெற்றிடவே வாழ்வில்
செருக்குடனே நாளும் திரிந்தலைந்து நாட்டின்
அரசியலை யாட்டுவிக்கும் அம்மிகளு மாட
கருஞ்சட்டைச் சூறையெனக் காவலனாய் வந்தாரே!
..........கைம்பெண்கள் வாழ்விற்குங் காவலனாய் வந்தாரே!

சொல்லிய சொல்லதனைச் செல்வமென தம்வாழ்வில்
துல்லியமாய்க் காலத்த்தைச் சொத்தெனவே தம்வாழ்வில்
வெல்லுந் தமிழினத்தின் வீரரெனத் தம்வாழ்வில்
நல்லாண்மை மிக்கவராய் நம்பெரியார் வாழ்ந்தாரே!
..........நங்கையரின் மேன்மைக்காய் நம்பெரியார் வாழ்ந்தாரே!

உதட்டிலொன்றும் ஆழ்மனத்தின் உள்ளொன்றும் வைத்தே
விதவிதமாய் சொல்லடுக்கி வெற்றழகைக் காட்டும்
பதங்களையேப் பகராத பண்பதனால் இங்கு
மதயானை போல்நிமிர்ந்து மன்னனென வாழ்ந்தாரே!
..........வாழ்நாளில் தாழ்ந்தோரின் மன்னனென வாழ்ந்தாரே!

செங்கண்ணருளாலே.......


அறு சீர் ஆசிரிய விருத்தமாக முக்கண்ணவனை பற்றி நானியற்றிய பாடல்கள் இவை. கட்டமைப்பு, பொதுவாக மா-மா-மா-மா-மா-காய்.  நான் வனைந்த முறை: மா-மா-மா-மா-தேமா-புளிமாங்காய். முழு பாடலிலும் 1-7-13-19 சீர்களின் எதுகைத் தொடை அமைந்தது.  அது போல மோனைத் தொடை, ஓவ்வோரடியிலும் 1-5 சீர்களில்  அமைந்தது.  கீழிருப்பது  அதிகை வீரட்டநாதர்.
============================================

============================================

எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா
..........லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து
..........பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும்
..........பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின்
..........செங்கண் ணருளாலே!

அடையா யெழுந்து மழையாய்ப் பொழியு
..........மாசை யகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கச் சொரியுந்
..........துன்பம் தொலைந்தேக
கடைய னெனையே கடைக்கண் வழியே
..........காக்க வருவாயோ;
விடையூர்ந் துவரு மதிகை சிவனுன்
..........விந்தை யருளாலே!
============================================
முதல் விருத்தம் பதம் பிரித்து:

எந்தை இன்று இங்கு அளிக்கும் தெளிவால் என்னில் உறைந்தாடும்
பந்தம் என்னும் வலையும் அறுந்து பக்தி எழுந்தோங்க
புந்தி ஆளும் பிழைகள் யாவும் பொள்ளிப் பொசுங்காதோ
சிந்தை மேவும் முக்கண்ணவனின் செங்கண்ணருளாலே.

இரண்டாம் விருத்தம் பதம் பிரித்து:

அடையாய் எழுந்து மழையாய்ப் பொழியும் ஆசை அகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கிச் சொரியும் துன்பம் தொலைந்தேக
கடையன் எனையே கடைக்கண் வழியே காக்க வருவாயோ
விடை ஊர்ந்து வரும் அதிகை சிவன் உன் விந்தை அருளாலே!

சில சொல்லாட்சிகளின் பொருள்:

புந்தி = மனம்/ எண்ணம்
அதிகை சிவன் = அதிகை வீரட்டநாதர்

நம்பீசன் நமைக் காப்பான்....


திருவாதிரைத் திருநாளுக்காய் (ஆருத்திரா தரிசனம்) அன்றுநான் ஆதீசனை நாயகனாய்க் கொண்டு, எழுதிய ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.  இணைத்துள்ள  படம் அருள்மிகு நஞ்சுண்டேச்சுவர சுவாமி. 

மாதொரு பாகனே, வாகீசக் கூத்தனே, வேதபுரிவாழ் வேதீசனே, சோமீச சுந்தரா, ஆம்பல் வனத்தோனே, ஆரண்ய வாசனே, பாம்பணியும் பசுபதியே, வண்டுதுறை ஈசனே, வாதவூர் நாயகா, இன்னலறு ஏகம்பா, நீனேரி நாதனே, நமச்சிவாயா, மாகாலா, ஆர்கழலாடும் கூத்தனே, புன்னைவனத்து  ஈசனே, சீர்காழி அத்தனே, சிறப்பின் சீர்கழலா, செங்கமலச் சித்தனே, பேரம்பலப் பித்தனே, சிவனருட்சோதியே, அம்பிகை காதலுறும் அழகனே.  உனையன்றி வேறார் துணையிங்கு?
============================

============================
நம்பீசன் நமைக் காப்பான்
============================
காதிருந்துங் கேளாமல் கண்ணிருந்துங் காணாமல்
மாதென்றுஞ் சூதென்றும் மாய்பவரே! - மேதினியில்
மாதோடு பாகனென்ற வாகீசக் கூத்தபிரான்
வேதீசன் தாள்சேர்க வே!  (1)

வேதபுரி ஈசன்நம் வேதனையை தானேற்றுக்
கோதென்று கொள்பாவக் கூத்தறுப்பான் - மோதுமுளச்
சோதனைகள் முற்றும் தொலைத்திடுமே சோமீசன்
ஆதரவுத் தாள்சேர்த லாம் (2)

ஆம்பல் வனத்தானே ஆரண்ய வாசனே
பாம்பணி கின்ற  பசுபதியே! - மாம்பழத்து
வண்டு சிறைவாச மாயவலை ஆசையற
வண்டு துறையீசா வா! (3)

வாதவூர் நாதனுன் வாஞ்சை துணையிருக்க
ஏதெமக்கு நேர்ந்துவிடும் ஏகம்பனே! - நோதலற
நீதியுடன் காப்பிங்கே, நீனேரி நாதன்தாள்
நாதியிலா தாடும் நமக்கு! (4)

நமக்கின்று நாளும் நலங்கள் தரு(ம்)அந்
நமச்சிவத்தை நம்பாமல் நஞ்சை - சுமந்திறும்
சாகாட்டச் சென்னும் சருகெங்கள் வாழ்விதனை
மாகாலா காத்திடவே வா! (5)

வானமும் வையமும் வாழ்க்கையும் ஆர்கழலன்
தானமென்றே காண்பதுதான் சத்தியம் - ஞானப்பேர்
கூத்துவல்யன் பேரருளால் கொள்வோமே எந்நாளும்
பூத்தொளிரும் உள்ளப் பொலிவு! (6)

பொலிவுடனே புன்சிரிக்கும் புன்னைவனத் தீசா!
நலிந்திடுமோ நம்புமிந் நாளே! - கலியகற்றச்
சீர்காழி அத்தன்தாள் தேனாய்த் துதிபாடிச்
சேர்வோரின் வாழ்வே சிறப்பு! (7)

சிறப்பிலங்கும் சீர்கழலா! செங்கமலச் சித்தா!
பிறப்பிலா(து) ஆடுகின்ற பித்தா! - புறத்துநமைத்
தேடிவந்தே  சுட்டெரிக்குந் தீவினையை நாமறுப்போம்
நாடியுன்றன் நாமம் நவின்று! ( 8 )

நவிலும் நமச்சிவ நாமத்தால் நாளும்
புவியில் நனியறம் பூக்கும்! - கவியும்
கவலையைச் சட்டெனப் போக்குமே ஆதி
சிவனருட் சோதியெனுந் தேன்! (9)

தேனென்றும்  பாகென்றும் தீஞ்சுவைச் சாறென்றும்
மானென்றும் மாடென்றும் மாயுமெம் - கூனுளத்தை
மாதவள் பாகனுன் மட்டிலா மெய்யென்னும்
காதலுறு கண்ணருளால் கா! (10)
===================================================
இராச. தியாகராசன்

வேறு:
=====
அடையா யெழுந்து மழையாய்ப் பொழியு
..........மாசை யகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கச் சொரியுந்
..........துன்பம் தொலைந்தேக
கடைய னெனையே கடைக்கண் வழியே
..........காக்க வருவாயோ;
விடையூர்ந் துவரு மதிகை சிவனுன்
..........விந்தை யருளாலே!

மனிதர்களே மாறுங்கள்.......


சந்தவசந்தம் கூகுள் குழுவில் நடைபெற்ற முதல் படப் பாவரங்கில், எனக்களிக்கப்பட்ட படத்திற்காக நான் வனைந்தளித்த பாடலிது.  படம் கீழே!
==============================================

==============================================
தமிழுக்கென் வணக்கம் 
(கட்டளைக் கலித்துறை)
=======================

துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க  நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

தலைமைக்கும் அவைக்கும் வணக்கம் 
(கட்டளைக் கலித்துறை)
====================================

முடங்கா தொளிரும் ஒடுங்கா வலையாம் முகப்பினிலே;
நுடங்கா தெழுந்த படப்பா வியப்பாம் நுமதரங்கில்;
அடங்கா துயர்ந்தே தமிழ்த்தேன் குடிக்கும், அருங்கவிகள்,
தொடங்கித் தொடுக்கத் துடிப்பாய்க் கொடுக்கும் துரைக்கவியே!

இதுவா வாழ்க்கை? மாறுங்கள்! 
(கொச்சகக் கலிப்பா)
======================================================

தூண்டிலிலே தொக்கிநிற்கும் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாது,
காண்பதெல்லாம் கொள்வதுவும் கண்போக்கில் களிப்பதுவும்
மாண்பெனவே மயங்குகின்ற மானிடரே மாறுங்கள்!

தன்னெறியாய்த் தருக்கர்கள் தணிவின்றித் தாரணியில்
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமிலாக் கொடும்பாவ,
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் பாலியலின்
வன்முறையை வாளெடுத்து மாய்த்திடவே மாறுங்கள்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்கள் ஆழ்ந்தூன்ற
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுத்தவரைத் தான்நோக்கி அழுக்காற்றில் வீழ்ந்தழிய,
நெடுங்கல்லாய் நீணிலத்தில் நிற்பவரே மாறுங்கள்!

பணமென்றும் பகட்டென்றும் பழகுந்தீ வழக்கென்றும்
தணலேறி தகிக்கின்ற சழக்கென்றும் சலிப்பில்லா
துணவென்றும், உலுத்தர்கள் உறவென்றும், உழல்வோரே;
கணப்போதில் காலனுயிர் கரக்குமுன்னே மாறுங்கள்!

சங்கிலியாய்ப் பின்னலிடும் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சனைகள் வாதுகளில்
முங்குவதால், முன்னோர்கள் முனைந்தெடுத்த முயற்சிகளும்
மங்கிவிட, வாழ்கின்ற மனிதர்களே; மாறுங்கள்!

உள்ளத்தில் உருவாகும் உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
அள்ளியள்ளி அனுபவிக்கும் அன்பர்களே மாறுங்கள்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென முதலுதற்கே
ஓக்கமிலா தூழ்த்துவிட்ட ஊடகத்தால் உணர்வின்றி
மாக்களென வாழ்கின்ற மாந்தர்களே மாறுங்கள்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை
சுளுவாக  உன்கழுத்தில் தொடையல்கள் விழுவதில்லை
தெளிவாகச் சிந்தித்து திடமாகத் தேர்ந்தெடுத்து
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கு மாறுங்கள்!

உடலுழைப்பில் உருவாகும் உயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே
கடமைகளும் கருத்தேறிக் கண்ணிமைப்பில் வளர்ச்சிகளும்
நடக்குமென்ற நன்னெறிக்கு நலுங்காமல் மாறுங்கள்!

தளர்வின்றித் தயக்கமறச் சலிப்பில்லாத் தவிப்புடனே
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர் கனவகற்றித்
தெளிவாக உழைப்பதுதான் திறன்மிகுந்த தாய்நாட்டின்
வளமான வளர்ச்சிக்கோர் வழியென்றே மாறுங்கள்!
======================================================
பழந்தமிழ்ச் சொற்கள் நாளுக்கொன்றாய் கற்றுக் கொள்
என்று இலக்கணச்சுடர் இரா. திருமுருகனார் எனக்குச்
சொல்லித் தந்தவை நிறைய!

முடங்கர் = முடங்குதல், மெலிவு
ஏக்கழுத்தம் = இறுமாப்பு
ஈடணைகள் = பேராசைகள்
முடந்தை = வளைந்தது, தாழ்ந்தது, கீழானது
முதலுதல் = தலைமையாதல், முன்னிலையாதல், முன்னே நிற்பது
ஓக்கம் = உயர்வு, பெருமை
ஊழ்த்த = முளைத்த, உருவான
தொடையல் = மாலை

வாய்மூடி நின்ற மௌனங்கள்.......


காதலில் வீழ்ந்தவர்க்குத்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்?
==========================================

==========================================
மௌனங்கள் (கொச்சகக் கலிப்பா)
=================================

சொல்லத்தான் எண்ணித் துணிந்திட்ட சொற்களையே
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
காய்மூடி நின்றதொரு கரும்பச்சை இலைபோல
வாய்மூடி நின்றதோர் மௌனங்கள் எத்தனையோ?

வெள்ளமென உள்ளத்தில் உருவாகும் எண்ணத்தை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
தீமூடி நின்றதோர் செம்புகை போலவே
நாமூடி நின்றவொரு நேரங்கள் எத்தனையோ?

கள்ளமனம் கருவுற்ற காலமெலாம் காதலையே
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
பால்மூடிப் படர்ந்திருக்கும் பாலேட்டை போலவே
சேல்விழி இமைக்குள்ளே சிந்தனைகள் எத்தனையோ?

கணித்தமிழ் வளர்ப்போம்.......


கணித்தமிழ் வளர்ப்பதென்பது  இற்றைக்கு மிகவும் இன்றியமையாத பணி.  ஏனென்றால், இனி வரும்காலம் கணித்தமிழ் காலமென்பதால்.
=========================================

=========================================
(இன்னிசை வெண்பா)
======================

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தைக் கூட்டி
அடிவானம் தீட்டு மழகெழிலைச் சேர்த்துப்
படிக்கின்ற செம்மரபுப் பாட்டே! தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!

(நேரிசை வெண்பாக்கள்)
=======================

எம்மின் தமிழின மென்று முயர்த்திடும்
உம்ப ரமிழ்தனை ஓண்டமிழை — நம்மை
கலக்கிடு மின்பக் கணிப்பொறி தன்னில்
வலம்வரச் செய்யவே வா!

வாழ்வில் பலரும் வழமைத் தமிழையே
தாழ்வென் றொதுக்குஞ் சழக்கையே -வீழ்த்த
வலைவலம் போகின்ற வண்டமிழ் அன்பர்
மலையா யெழுவோம் வளர்ந்து!

என்னி லுறைந்தெனை யென்று முயர்த்திடும்
கன்னற் சுவையாங் கணித்தமிழை — இன்று
வலம்வரும் வண்ண வலைதனி லோங்கி
நலம்பெறச் செய்வமே நாம்!

நச்சரவை மாய்ப்பதெவர்?......


எங்கள் புதுவையில் இருந்து எங்கும் ஒளிவீசி, தமிழ் போற்றிய, இலக்கணச்சுடர், தீந்தமிழ்க் காவலர், இன்னிசை வித்தகர், சிந்துப்பாடலுக்கு முதன்முறையாக இலக்கணம் கண்ட மூத்தவர், முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் மறைவிற்கான  நினைவேந்தலில், உளம்நொந்து யாத்தளித்தப்  பாடலிது:
=================================================

=================================================
நச்சரவை மாய்ப்ப தெவர்? (நேரிசை வெண்பாக்கள்)
=================================================

செஞ்சாந்து வண்ணமெனத் தீந்தமிழில் சொல்லெடுத்து
அஞ்சாத போர்முரசாய் ஆர்த்தீரே! – நஞ்சுமிழ்ந்தே
நந்தமிழை சாய்க்கின்ற நச்சரவை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

விருதுகளைத் தேடும் வியனுகலில் ஊதிச்
சருகெனவே தள்ளிவிட்ட சான்றோய்! – திருமுருக;
செந்தமிழைச் சீரழிப்போர் சிந்தனையை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எருமையென்றே நந்தமிழர் ஈங்கிருப்பைக் கண்டே
வருந்தியதால் விட்டீரோ வாழ்வை! – திருந்தாது
சந்தப்பா வென்றே தமிழடுக்கும் வெறுமையினை
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எம்போன்றோர் கற்றிங்கு யாக்கின்ற சொல்லடுக்கை
செம்மையுற செய்துவிட்ட செவ்வேளே! – எம்பாட்டில்
முந்திவரும் பாப்பிழையை முன்னின்(று) உமைப்போலே
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எண்ணியுளம் தேம்பியதே!....


மறைந்த முனைவர் இரா.திருமுருகனார்க்காக நான் உளமேங்கி அளித்த நினைவேந்தற் பாட்டு.  தன் உடலைக்கூட மருத்துவ ஆய்விற்காக உவந்தளித்த சான்றோர் அவர். உடல் பொருள் ஆவி அத்தனையும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் ஈந்த ஈகை வேந்தர் அவர். தமிழிசையையும், தமிழிலக்கணத்தையும் ஒரு சேர அறிந்திருந்தவர்கள்/ அறிந்திருப்பவர்கள் வெகுசிலரே. இவ்விரண்டிலும் ஆர்வமிருக்கும் எம்போன்றோர்க்கு அவர்தம் மறைவென்பது பேரிழப்பே!
===============================================
===============================================
திருமுருக!  எண்ணியுளம்  தேம்பியதே!
(நேரிசை வெண்பாக்கள்)
=====================================

தீச்சொரியுஞ் சொல்லே! தெளிதமிழே! கூர்வாளே!
கூச்செரியச் செந்தமிழின் கோதுரைத்த – சூச்சுமமே!
மண்ணுதித்த நம்மினத்தின் மாமறவ! நும்மறைவை
எண்ணியுளந் தேம்பி யது!

இயல்மொழியா மெந்தமிழை ஏற்கா திளையோர்
அயல்மொழிதான் வேண்டுமென் றாடுங் – கயமையினைக்
கண்டுளமே வெம்பியதால் காற்றேறிப் போனீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

சந்தயிசை காட்டுகின்ற தாளத்தைக் கற்றதனாற்
சிந்தென்னுஞ் சீர்மையினைத் தேர்ந்திசையாய்த் – தந்தவரே!
விண்ணகமே நுந்தமிழை வேண்டியதாற் சென்றீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

பாவேந்தர் பாதைவழிப் பாசறையின் போர்வாளே!
மூவேந்தர் காத்துநின்ற முத்தமிழின் – மாவேந்தே!
பண்ணார் தமிழணங்கைப் பாருலகி லார்காப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!

பன்னீரின் பூமழையாய்ப் பாட்டோலைக் கம்பனுக்கும்
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்ப் – பண்ணெமக்கும்
ஒண்டமிழி லீங்கினிமேல் ஓன்றாக ஆர்தருவார்?
எண்ணியுளந் தேம்பி யது!

தண்டமிழிற் றூயகலித் தாழிசையும், வானூருங்
கொண்டலென மூவண்ணங் கொட்டியநற் – பண்ணேறே!
மண்மணக்கும் முத்தமிழ்நாம் மாந்திடவே ஆரிசைப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!
=========================================
மூவண்ணம் = குறில் வண்ணம்/ நெடில் வண்ணம்/ சித்திரவண்ணம்
கொண்டல் = மழைமேகம்
பன்னீர் மழை, பாட்டோலை கம்பனுக்கு இவை 
இவரெழுதிய நூல்களின் பெயர்கள்

மெய் தீண்டும் மைவிழி!......

காதலைப் பாடாத கவிஞர் எவருண்டு? மைவிழியைக் நாடாத  ஆடவர் எவருண்டு?  (காதலர் நாளுக்காய் கொஞ்சம் முன்னாடியே போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்!!)   முகநூலின் கவிதை மன்றமொன்றில்,  மெய்  தீண்டும் மைவிழி  என்ற பொருளுக்காக,  நானியற்றிய வெண்பாக்கள் இவை:
================================================

================================================
மெய்தீண்டும் மைவிழி! (நேரிசை வெண்பாக்கள்)
================================================
காதலிலே கண்மயங்கிக் காய்கின்ற வேளையிலே
வேதனையை வேரறுக்க வேண்டுகிறேன்! - ஆதரித்தால் 
மையலெனும் என்நேசம் வாழ்ந்துயிர்த்துச் சேர்வேனே
மெய்தீண்டும் உன்"மை" விழி. 

முல்லையின் மொட்டனைய முத்துச் சிரிப்பழகால்,
இல்லையெனும் சின்ன இடையழகால், – கொல்லுகின்ற
தையலே! மின்னல்  சவுக்கெனவே சாய்க்குடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!

புல்லில் துயில்கின்ற பூம்பனியின் சில்லிப்பாய்,
வில்லின் இழுநாணே மீட்டவெழும் – துள்ளம்பாய்,
பைங்கிளியே! காதற்றேன் பாகினிலே தோய்க்குதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!

காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலைக் காற்றசைக்க,
மாதுன்றன் நீள்விரலால் வாகொதுக்கித் – தூதுவிடும்
வையகத்து வான்நிலவே மாளவெனைத் தேய்க்குதடி 
மெய்தீண்டும் உன்"மை" விழி.

அல்லிப்பூ ஆரணங்கே! ஆடகமாய் மின்னுகின்ற,
வில்லாம் புருவத்தால் வீழ்த்தியே – செல்லுகின்ற
கொய்யாக் கனியமுதே! கொஞ்சியெனை மாய்க்குதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!

விண்ணில் விரையும் வெளிச்ச நிலவெனக் 
கண்ணில் புகுந்தநற் காரிகையே! -  எண்ணியுளம்
நைந்திடவே என்காதல் மண்ணாகச் சீய்க்குதடி
மெய்தீண்டும் உன்"மை" விழி!

கவிஞர்கள் கற்பனையில் காணாத விந்தை;
செவிகளினால் கேளாத சிந்து! – புவியேத்தும்
ஐம்பெருங் பாவியங்கள் அத்தனையும் காட்டுதடி 
மெய்தீண்டும் உன்”மை” விழி!

சுரும்பினைப் போலவே சுற்றிச் சுழன்றே,
கரும்பது தந்திடுங் கள்ளாய் - மருள்கொளச்
செய்தென்னில் நித்தமும் தீக்கதிராய் வாட்டுதடி 
மெய்தீண்டும் உன்"மை" விழி!
===============================================
இராச தியாகராசன்

பிகு:
====
ஆடகம் - பொன், பாவியம் - காவியம், சுரும்பு - வண்டு

தாய்மை.......


=========================================

=========================================
அன்பிற்கும் உண்டோ அணை?
(நேரிசை வெண்பாக்கள்)

===============================
உயிரதனைச் சேர்த்தே உதிரப்பா லூட்டி, 
துயிலதுவுந் தான்மறந்து துன்பம் – நயத்தன்பால் 
தன்மக்கள் மேன்மைத் தவமியற்றுந் தாயவளின் 
அன்பிற்கு முண்டோ அணை?

நன்னெறியை நாடுவைநீ! நானிலத்தில் என்னுயிரே 
புன்னெறியைச் சாடுவைநீ பூமலரே – இன்னுலகில் 
அஞ்சுதலை முற்றும் அறுத்திடுவாய் என்னுந்தாய் 
நெஞ்சுக்கு முண்டோ நிகர்?

எதிர்கொள்ளும் பேராசை, ஏக்கழுத்தம் மாய, 
சதிவலை வீசுவோருஞ் சாய - மதியால் 
முனைந்துநாம் சீர்த்தியுற முன்னுழைக்குந் தாயின் 
கனவுக்கு முண்டோ கரை?
 
வீரத்தைப் பாடலாய் வண்டமிழர்ப் பாவியமாய், 
ஆர்க்கின்ற தாலாட்டாய், அன்புமனச் – சீர்மையெனச் 
சேய்தன் இதயத்தில் சேர்க்கின்ற தாய்மையின் 
தூய்மைக்கோர் ஈடேது சொல்!
================================
இராச. தியாகராசன்

பிகு:
நயத்தன்பால் - மேவிட அன்பால், ஏக்கழுத்தம் = இறுமாப்பு/ ஈகோ, 
சீர்த்தி = கீர்த்தி/ பெருமை/புகழ்,  பாவியம் = காவியம். 

சந்தமவை வாழியவே.......

இணையத்தில் மரபியலைப்  போற்றும்  சந்தவசந்தம் மன்றத்திற்கு  வாழ்த்து!  மன்றத்தின் இழை:  சந்தவசந்தம்
==============================================

==============================================


இசைவொடு(ம்) இயல்பொடு(ம்) இன்றிளையர்
இனித்திடும் மரபெழிற் பாப்புனைய
தசையிலி எலும்பிலி யென்றிலங்க
தடம்பதித் திடுமுயர் செந்தமிழில்
அசையொடு தளையதை நன்குரைக்கும்
அருந்தமி(ழ்) இலக்கணச் சந்தமவை
விசையொடுந் திறத்தொடும் பன்முகமாய்
மிளிர்ந்திடப் பொலிந்திட வாழ்த்துகளே!

தளர்வறத்  தனித்துவம் கொண்டதனால்
வளங்களை வழங்கிடும் வள்ளலைப்போல்
வணங்கிடும் தமிழவள் வாழ்த்துடனே
இணையிலா இலக்கியம் ஓங்கிடத்தான்
அனுதினம்  இணையமே தாங்கிடத்தான்
வினைகளைப் புரிந்திடும்  சந்தமவை
பளிங்கெனப் பளிச்சொளி வீச்சுடனே
வளர்ந்திடப்  பொலிந்திட வாழ்த்துகளே!

காதற்பெண்ணே கானக்குயிலே!.....


இந்தப்பாடல் நான் ஒரு சந்தப் பாடலாக, புதுப்பாவாக 1979இல் எழுதியது. பின்னர் 80களில் அதனை நிலைமண்டில அகவற்பா வடிவில் மாற்றி அமைத்துச் சற்றே மெருகேற்றினேன்.
========================================

========================================
(நிலை மண்டில அகவற்பா)
=========================

காளை என்னைக் காலம் முழுதும்
காக்க வைக்கும் கன்னற் சுவையே!
நாளை என்றன் நாளாய் நானும்
நாளும் வேண்டும் நங்கை நிலவே!
காற்றி லாடும் மலரின் வடிவே!
கருத்தைக் கவரும் காந்தள் கொடியே!
நாற்று வயலின் நெல்லின் அசைவே!
நளினச் சிலையாய்ச் சிந்தும் எழிலே!
நித்தம் என்னை நினைவாம் நெருப்பில்
சித்தம் கலங்க சிரித்தே அழிக்கும்
காதற் பெண்ணே!  கானக் குயிலே!
தூது செல்லும் தோழி யெனவே
சேற்று வயலைச் சீண்டிப் பார்க்கும்
காற்று தேரில் கடுகிச் செல்லும்
வண்ணம் பூசிய மாலை முகிலை
எண்ணம் உதித்த என்றன் இச்சை
தன்னை உனக்கு சொல்ல நானும்
அன்பாய் நிதமும் அனுப்பி வைத்தேன்.
அதையும் நீயே அறிந்தி டாமல்
வதைக்கும் வனிதா மணியே! கேளாய்!
சிதையில் என்னைச் சிரித்தே எரித்த
கதையும் கவியாய்க் காலம் வெல்லும்!

என்..............?

தற்போது இணையத்தின் சிறந்த கூகுள் மரபியற் குழுவான சந்தவசந்தத்தின் பாவலர் சந்தரவர்  தலைமையில், 35ஆவது பாவரங்கில் “என்”   என்றவொரு நீள் பொருளடக்கிய தலைப்பினில் நான் வாசித்தளித்த, கவிதை இது:-  சந்தவசந்தம் குழுவின் இணைய இழை: http://www.groups.google.com/group/santhavasantham
=====================================

=====================================

என்றன் தமிழே! (கட்டளைக் கலித்துறை)

விண்ணி லுலவிடுந் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்
மண்ணிற் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்க்
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்
எண்ணம் நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனு மற்புதமாய்க்
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்ப்
பொன்னின் நிறத்துடன் நித்த மெழுந்திடும் பொற்கதிராய்
என்னி லுறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!
=====================================
என்றன் கோவே! (இன்னிசை வெண்பாக்கள்)

காதலும் காவியமும் காட்சிக் கனவுகளும்
மோதலும் மோசமும் மொய்க்குமிப் பூவுலகில்
வேதவித்து போலெண்ணி, விந்தைத் தலைப்பதற்கே
ஈதென் கவியுரை இன்று!

மாமணியாம் சந்தரவர் மாவரங்கில் செந்தமிழ்ப்
பாமணியாய் நாமணக்கப் பாவிசைப்போர் தம்மிடையில்
தாமதமாய் வந்துற்றேன்; தத்துநடைச் சின்னவனைச்
சேமமுறக் காத்திடுவீர் சேர்த்து!
======================================
என்றன் இறையே! (கலி வெண்பா)

எண்ணக் கடலது என்று மிரைந்திட
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்
கண்ணன் குழலினில் கன்னற் சுவையினில்
விண்ணும் கிறுக்கிடும் மின்னல் கொடியினில்
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்
பண்கள் புனைந்திடப் பாட்டும் இசைத்திட
மண்ணின் கவியென என்னைச் செதுக்கவே
என்னி லுறைந்தவ ளே!
======================================
என்றன் மன்றே! (வெண் கலிப்பா)

தெள்ளுதமி ழினழிப்போர் சிதறிவிட வெடித்தெழுந்து
அள்ளுகின்ற அழகுச்சீர் அடுக்கிவிட்ட அடியெடுத்துத்
துள்ளுஞ்சொல் தொடுத்தவரி சொடுக்கிவிடும் கவிஞரையே
உள்ளத்தால் வணங்குகிறே னோர்ந்து!
======================================
என்றன் திருவே! (இயற்றரவிணை கொச்சகக் கலிப்பா)

என்னைக் கவிதை இயற்ற உரைத்தவராம்,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
என்னி லுணர்ந்த எழிலாந் திருவினையே,
முன்னித் தமிழும் முகிழ்ந்த உருவினையே,
பொன்னி னொளியாய்ப் பொலிந்த கதையினையே,
எண்ணம் முழுதும் எழுந்து நிறைந்ததையே,
மின்னு மழகாய் விரிந்தே யொளிர்ந்ததையே,
சின்னக் கவியாய் செதுக்கி யுரைத்திடுவேன்!
======================================
(வேறு)
என்றன் எழிலே! (இன்னிசை வெண்பாக்கள்)

கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்
பின்னல்கள் சிக்கலெனப் பீடிக்கும் ஆசையற
இன்றிங்கே நானறிந்தேன்; என்றென்றும் எந்தமிழே
என்னை உயர்த்து மெழில்!

புன்மையெனுந் தீயதனில்  புத்தழகுப் பொய்யதனில்
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்துழல,
முன்னவரின் நற்செயலால் முத்தமிழே காவலென
என்னை உயர்த்து மெழில்!

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இப்பிறப்பாம் ஆழியிலே,
என்னுள்ளம் ஓயா தெரிகையிலே, நான்வணங்கும்
உன்னதமா யென்னுள்ளே உட்போந்த செந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே
அன்பதனை ஆற்றலினை அங்கெங்கோ தேடுகையில்
தன்னறிவாய் சத்தியத்தைத் தந்துவிட்ட தீந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.
====================================
(வேறு)
என்றன் தெளிவே! (வஞ்சிப்பா)

என்வாழ்விலே விளைந்திட்டநல் ஏற்றங்களும்
என்தாழ்விலே முளைத்திட்டசொற் றூற்றல்களும்
என்னாற்றலால் தான்வந்ததாய் அன்றெண்ணினேன்!
பைந்தமிழ்
அன்னையி னருளதால் தெளிகிறேன்,
கண்டதைத் தந்ததுங் கன்னலாந் தமிழே!
====================================
(வேறு)
என்றன் உயிரே! (அறுசீர் விருத்தம்)

என்வாழ்வும் என்வளமும் எனதுயிரும்,
.....என்மெய்யும் உன்னருளா லியங்குதடி!
என்னுள்ளில் நீயிருந்தே இயக்குகிறாய்;
.....எந்நாளுந் தேந்தமிழே இயங்குகிறேன்!
என்னெண்ணம் அத்தனையுந் தமிழதுவாய்,
.....இன்றிங்கே ஆனதுவும் உனதுயர்வால்!
என்வாழ்க்கை இன்றிருக்கும் இயல்பினுக்கே,
.....என்நன்றி சொல்லுவனோ தமிழணங்கே!
==================================

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வென்றிடுவோம் புத்துலகை.......

உலக அன்பிற்கான நாளின்று.  கவிஞன் என்றான பின்னே காதலைப் பற்றிக் கவிதை பதியாமல் இருப்பது எப்படி?  இன்றுதான் கணினி/ இணையம் என்பதால், மீள்பதிவாக, இற்றைக்கிருக்கும் நிலையை எண்ணி.....
 ========================================

========================================
வென்றிடுவோம் புத்துலகை. 
(கலிவெண்பா)
========================================
தேனமுதத் தெள்ளுதமிழ்த் தீஞ்சுவையைத் தோய்த்திங்கே
வானளக்கும் வார்த்தைகளால் வாய்ப்பந்தற் றோரணமாய்க்
கானலெனும் காட்சிகளைக் காஞ்சனமாய்ப் பாட்டெனவே
தானளந்து சொல்லடுக்கும் சந்தமிழை பாவலரே!

அன்றலர்ந்த ஆம்பலினை ஆசையுடன் பாடுகையில்;
வன்முறையே வாழ்வென்போர் வஞ்சகமும் சாடுங்கள்!
தென்றலிழைப் பூங்காவை செந்தமிழிற் பாடுகையில்;
புன்மையினைப் போற்றுகின்ற புல்லரையும் சாடுங்கள்!

விண்ணளக்கக் காதலதன் மேன்மையினைப் பாடுகையில்;
பெண்சிசுவைக் வேரறுக்கும் பேதமையும் சாடுங்கள்!
பண்ணழகை, பாவலரை, பாவையரைப் பாடுகையில்
மண்ணுலகின் போதையெனும் வாதையினைச் சாடுங்கள்!

நந்தமிழின் மண்ணழகும் நாமணக்கும் பண்ணழகும்
சிந்தனையைக் கீறுகின்ற சீரியதோர் சொல்லழகும்
புந்தியிலே வைத்திங்கு போர்க்களத்தில் வெல்வோமே
செந்தழலின் பாட்டெடுத்தே சென்று!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
காஞ்சனமாய் = தங்கமென
சந்தமிழை = சந்தம் இழைகின்ற
ஆம்பல் = ஆம்பல் மலர்
புந்தியிலே = அகத்தினிலே

தேவதை எங்கே?......

உங்களால் தேமா/ புளிமா/ இப்படித்தான்  செய்யுளாக எழுதமுடியும்.  திரைப்படப் பாடல்கள் போல எளிமையாக  எழுத இயலுமா என்று 30 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் சவால் விட்டார்.  அவருக்காக எழுதிய சந்தப்பாடலிது.   இன்னொன்றும் சொல்கிறேன்.  மரபுக் கடை மிகவும் பெரியது;  அதில் கடினமான, எழுத்தெண்ணி எழுதும் கட்டளைக் கலித்துறையும் உண்டு.  எளிமையான, ஓட்டமுள்ள குறள் வெண் செந்துறையும் உண்டு.
============================================================

============================================================
தேவதை எங்கே (சந்தப் பாடல்)
============================

எடுப்பு (பல்லவி)
===============
இனியவளே! என்னவளே! இன்பம் இறைப்பவளே! – என்றன்
கனியவளே! கருத்தில்  கலந்தவளே!

தொடுப்பு (அனுபல்லவி)
======================

தண்மை இறைக்கின்ற என்னருமைத் தென்றல் காற்றே!
என்னை எரித்திங்கு நாளும் சுடுவதென்ன?

முடிப்பு (சரணம்)
================

பாடு கின்ற பாடலிலும்
…..பாவை வரும் பாதையிலும்
தேடு கின்ற தேவிமுகம்
…..தோன் றியெனைக் கொல்கிறதே! – நிதம்
…..தோன் றியெனைக் கொல்கிறதே! (பாடுகின்ற)

கூவு கின்ற கருங்குயிலே,
…..கூத் தாடும் மயிலழகே!
தேவ தையைக் கண்டாலே
…..தேடு வதைச் சொல்வீரோ? – நான்
……தேடு வதைச் சொல்வீரோ? (பாடுகின்ற)

சூடு கின்ற மலர்சரமே,
…..சுழ லுகின்ற அலைக்கரமே
ஓடு கின்ற காலமிதை
…..உணர்ந் திடவே சொல்வீரோ? – அவள்
…..உணர்ந் திடவே சொல்வீரோ? (பாடுகின்ற)

அல்லி யவள் செவ்வாயின்
…..அமிழ் தனையச் சொல்லெல்லாம்
புல்லி னிதழ் மேலான
…..பனித் துளியாய்ப் போனதடி! – வெண்
…..பனித் துளியாய்ப் போனதடி! (பாடுகின்ற)

கனவி னிலும் அவளுருவே
…..காணு கின்ற காட்சியென,
நினைவி னிலே நிழலாடி
…..நெஞ் சமதே தொலைந்ததடி! -என்
…..நெஞ் சமதே தொலைந்ததடி! (பாடுகின்ற)

காதலோக் காதல்.........

காதலர் நாளுக்காய் இன்னுமொரு கவிதை...

காதலிப்பது பெரும் குற்றமன்று; காதலிக்கப்படுவதும் பெரும் குற்றமன்று; காதலும் பெரும் குற்றமன்று. ஆனால் இன்றைய கால கட்டத்தில், வெறும் பருவ உணர்வு மட்டுமே மேலிட,  காதலிப்பதாக எண்ணிக் கொண்டு, ஒருதலையாய் விருப்பங்களை வளர்த்துக் கொண்டு, நங்கையரின் உள்ளங்களை, நல்லிளைஞர்கள் காயப்படுத்துவதும், இளைஞர்களின் இதயங்களை மங்கையர்கள் நோகடிப்பதும் தேவைதானா? இந்த வாலன்டைன் நாள் என்பதே, முதன் முதலாக வாலண்டைன் என்கிற பாதிரியார், பொதுவான பாசத்திற்கும் நேசத்திற்கும் ஒரு அடையாளமாக முன்னிறுத்தியதே. பின்னர் காலவோட்டத்தில் காதலர் நாளென மாறிவிட்டது.  நிற்க…

இன்னொரு விவரம். நேர்மையான காதலர்களாய், காதலர் நாளினை "காமன் பண்டிகை" என்று பெயரிட்டு உயர்வாக ஏத்தியவரும், "களவொழுக்கம்" என்று காதலை உயர்வாகப் போற்றியவரும் நந்தமிழரே! திருமணத்துக்கு முன்பாக விரும்புபவரைக் காதலிக்கலாம்;  திருமணத்தின் பின்னர் சேரிணயரையும் காதலிக்கலாம்.  எல்லாமே காதல், பாசம், பற்று, பரிவு, நேசம், அன்பு என்கிற வட்டத்துக்குள்ளே வருவனதானே!
==================================================











==================================================
காதலோ காதல் ( வஞ்சி விருத்தம்)
=================================
(கருவிளம், கருவிளம், கூவிளங்காய் என்ற கட்டமைப்பு)
====================================================
புவியதில் நிறைந்திடும் காற்றெனவே 
தவமென உணர்வுகள் ஊற்றெடுக்கக் 
குவிந்திடும் கனலெனும் வேதனையைக் 
கவிந்திடும் கெழுதகைக் காதலென்பார்!

கருத்தினைக் கவர்ந்திடு மன்பினையே
சுருக்கினில் அவருயிர்க் காதலதாய்
விருப்புடன் நினைத்திடும் அற்புதத்தை
அரும்பிடும் அமரமென் றேத்திடுவார்

அழகிய மலர்வனக் காட்சியிலும்
எழுந்திடும் நிலவதன் சாட்சியிலும்
தழுவிடும் உருவெளித் தோற்றமதாய்க் 
குழுவினில் கவிதைகள் தீட்டிடுவார்!

அலர்ந்திடும் மலர்வனப் பூக்களதும், 
நலந்தரும் இறைவனைச் நாடுதல்போல், 
நிலமதில் செழுத்திடுங் காதலுக்காய், 
வலம்வரும் மனிதரும் தேடிடுவார்! 
 
பழுதறு நனைவொளிர்க் காதலதை,
அழுதிடும் அவர்மன வேதனையை, 
முழுமனம் மயங்கிட நித்தமுமே  
வழுவறப் பலமுறை கூறிடுவார்!

அனைத்துமே சரியெனச் சொல்பவரே;
வனிதையர், வருத்தமில் வாலிபரே!
அனுதினம் உயர்ந்தநல் வாழ்வியலை
மனிதனாய் புரிதலே தேவையன்றோ!
=======================================
இராச தியாகராசன்

பிகு:
====
கெழுதகை = நெருங்கிய தோழமை/ உரிமை.

கவிதையெனக் கருவுயிர்க்கும்.....

ஒரிரவு  எது எனதுள்ளே கவிதையெனக் கருவுற்று உயிர்க்கின்றதென வினா பிறந்தது.   எனதுள்ளம் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்.
=================================================













=================================================
கவிதையெனக் கருவுயிர்க்கும்.....(கொச்சகக் கலிப்பா)
=================================================
வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில்
மனதுள்ளே மானுடத்தின் மயக்கங்கள் மருகிநிதம்
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காரிருளில்
கனவுகளே கார்காலக் கவிதையென கருவுயிர்க்கும்!

கோடியெனக் கோணல்களைக் கொட்டுகின்ற மனங்களிலே
தேடிநிதம் பித்தரெனச் சீரழிக்கும் பொல்லாத
மூடிகொண்ட முகங்களெனும் மோழைகளின் மோசத்தால்
ஆடிவரும் ஆசையெனும் அவலந்தான் ஆட்சிசெயும்!

வையகமும் மானுடமும் வாழ்நாளி லுய்த்துமனம்
துய்த்துணர வேண்டியதைத் துல்லியமாய்த் தூய்மையெனும்
மெய்யான மெய்யதனை மிளிர்கின்ற நேர்மையெனச்
செய்துவிடும் நல்லவர்கள் சீர்த்தியுடன் வாழியவே!

நெடுவழி நாடும் பறவை....

இசையார்வலர் திருமதி சௌம்யா ஸ்ரீனிவாசன் அவர்கள் எடுத்த ஒரு நிழற்படத்தைக் கண்டதும் என்னில் ஏற்பட்ட உணர்வுகள் ஒரு கவிதையென வெளிப்பட்டது.
=================================================













=================================================

நெடுவழி நாடும் பறவை (கொச்சகக் கலிப்பா)
=========================================

கறையில்லாக் கதிரவனும் கதிரடக்கி மேற்றிசையில்
மறைகின்ற மாலையெனும் வான்வெளியில் ஒருபறவை,
இறையவனும் உறைகின்ற இல்லமதைத் தான்வணங்கி
நிறைவெய்த வேண்டுமென்று நெடுவழியைத் தேடிடுதோ?

சிறகடிக்கும் மனப்பறவை சிந்தனைவான் வெளிதனிலே
சிறைபடுத்தும் சங்கிலிகள் தெறித்துவிழ வேண்டுமென்று
கறையில்லாக் கடவுளுறை கோபுரத்தின் சாட்சியுடன்
இறைவனிடம் சேர்ந்திடவே எழுந்திங்கு தேடிடுதோ?

கருத்திருக்கும் ககனத்தில் கருக்கலெனும் வேளையிலே
அருந்தவமாய் ஆண்டவனை அடைந்திடத்தான் அகமுருகி
விருப்புடனே விசும்புயர்ந்த வேந்தில்லத் திசையினிலே
பருந்தொன்று பாய்ந்தழகாய்ப் பறந்தங்கு பார்க்கிறதோ?

இலிங்க பைரவி......

இணையச் சகோதரி, பாவலர் திருமதி ஜெயப்ரபா அவர்களின் இலிங்க பைரவி என்ற தலைப்பிலான கவிதையைக் கண்டதும் என்னில் ஊற்றெடுத்த வரிகள் இவை.   இவ்வரிகளுக்குக் கிடைக்கும் பாராட்டு அத்தனையும்  பாவலர் ஜெயப்ரபா அவர்களுக்கே உரித்து.
=================================================













=================================================
லிங்க பைரவியே..... (கலித்தாழிசை)
=================================================
அன்றலர்ந்த ஆம்பல்போல் அன்றாடம் புன்சிரிக்குந்  
தென்றலிழை பூங்காவின் சீர்மகளே! தேனமுதே!
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கற்பகமே!
மின்னொளி போலிங்கே வீசுமொளிர் வித்தகியே!
....வெண்ணிலவின் தண்மையென வீசுமொளிர் வித்தகியே!

தேடுவதைத் தேடித் தளர்ந்துநான் நிற்கையிலே,
நாடுகின்ற மெய்யை நலுங்காமல் கொண்டிடத்தான்
வாடுகின்ற என்னுளமும் மாரியவள் பேரருளைப்   
பாடியே நித்தம் பரவசமாய் ஆடுகின்றேன்!
....பைரவியை எண்ணிப் பரவசமாய் ஆடுகின்றேன்!

பித்தனவன் ஊழாழி பற்றியெனை ஆட்டிவைக்கச் 
சித்தினியுன் பாசமெனும் தேன்மாரி காத்துநிற்க,
அத்தனை ஆயிரமாய் ஆட்டத்தை தானடக்கி,
மத்தியிலச் சக்தி மனங்குளிரச் செய்வாளோ?
....மாநிலமே போற்ற மனங்குளிரச் செய்வாளோ?

கள்ளதனின் போதையெனக் கார்முகிலின் தூரலெனத்
துள்ளிவரும் குற்றாலத் தூய்மையதன் சாரலென, 
வெள்ளமென நானும் வெடிக்கின்ற பாப்புனைய, 
அள்ளிவரம் தந்தருளும் ஆரமுதே! அம்பிகையே!
....அன்பதனால் என்னிலுறை ஆரமுதே அம்பிகையே!

உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்தளிப்பாள் காளி;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்தவென் லிங்க பயிரவியே!
....எழிலாம் வடிவேயென் லிங்க பயிரவியே!
=====================================
இராச. தியாகராசன்.

அறுசுவை விருந்து.......

என்னுடைய முகநூல் சகோதரி திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் தமது சகோதரிகளுடன் மன்றம் போல் அமர்ந்து உணவு தயாரித்தல் பற்றி கலந்துரையாடும் நிழற்படங்களைக் கண்டவுடன் தோன்றிய உணர்வுகளை ஒரு பாடலாக்க முயன்றேன். ஓரளவு வெற்றிதான். ஆனால் அப்பாடல், முழுவதுமாக உருக் கொண்டு மிளிர்ந்தது, சந்தவசந்தம் 9ஆம் ஆண்டு நிறைவு விழாவில், தமிழன்பர்க்கு நான் கவிதை விருந்தளித்த போதுதான். முகநூலின் நண்பர்களுக்கு நான் பகிர்ந்ததை, திரு நீடுர் அலி அவர்கள் தம்முடைய வலைப்பதிவிலும், இண்ட்லி தளத்திலும் வெளியிட்டு, என் மீதான அன்பினை வெளிப்படுத்தினார். அவருக்கு என் நன்றிகள்.
=====================================================














=====================================================
அறுசுவை விருந்து  (கொச்சகக் கலிப்பா)
====================================

வேகவைத்த வாழைக்காய், மின்னுகின்ற பொன்னுசிலி,
பாகற்காய்ப் பொரியலொடு, பருப்புடனே பச்சடியும்
சேகரித்த சேம்பதுவின் செழுவரட்டி, அப்பளமும்
வாகெனவே நானுமக்கு வாழையிலை விரித்திங்கே

நறுமுகையாய் சாதத்தில் நன்னெய்யைத் தான்விட்டுச்
சிறிதளவே சீரகத்தைச் சீராகப் பொடித்திட்டுக்
குறுமிளகோ டுப்புடனேக் கொஞ்சமாய்க் கிளறியிங்கு
வறுத்தமணத் தக்காளி வற்றலுடந் தருகின்றேன்!

செறிவான செங்கனிகள் தேடிச்சீர்த் துண்டமிட்டுக்
கறந்தபசுந் தயிர்கலந்து கணக்காக உப்புமிட்டு
நறுமணந்தான் வீசிடவே நாவூறத் தாளித்தே
வறுத்தமோர் மிளகாயின் வற்றலுடந் தருகின்றேன்!

விருந்தின்பின் குடந்தையின் வெற்றிலைக்குச் சோடியென
விருதையின் சுண்ணாம்பும், மாயவரம் நெய்சீவல்
விருவிருக்க நாந்தருவேன் வெள்ளியாம் தாலத்தில்;
விருந்துண்ண வாருங்கள் விந்தைமிகு பாவலரே!

எம்மதமும் சம்மதமே!.....

புதுவையின் நாடகக் காவலர் கலைமாமணி திரு இராசா அவர்களின் மன்றத்தில் நான் வாசித்தளித்த பாடல்.   நாடகத்தமிழுக்கு அவர்தம் தொண்டு மிகச் சீரியது. அத்துடன் திங்கள்தோறும் அவர் தமிழார்வலர்களைத் தேர்ந்து, சிறப்பு செய்யும் நேர்த்தியும் மிக அருமை.
===============================================













========================================
எம்மதமும் சம்மதமே! (கொச்சகக் கலிப்பா)
========================================

முத்தனைய சத்தான முழுமுதலாம் இறைவனையே,
நித்தமும்நாம் நெஞ்சினிலே நெகிழ்ந்துருகி நினைத்திடவே,
தத்துவமாய்த் தாரணியில் தலைமேலே தாங்கிடவே,
எத்தனையே சமயங்கள் எடுத்துரைக்கும் நல்வழிகள்.

நீயுயர்வா நானுயர்வா நியமந்தா னுயர்வாவென்(று)
ஐயமறத் தெளிந்துணர அறியாமை யகன்றுணர
ஆயுதத்தா லாகாதென்(று) அறியாம லலைகின்ற
வையகமே, வண்டமிழர் வாழ்வியலை ஆய்ந்துணர்ந்தால்!

செம்மையுற மாந்தரினம் சீர்த்திகளைப் பெற்றிடவே,
எம்மதமாய் இருந்தாலும் எவ்வினமாய் பிறந்தாலும்
தம்மவராய் நினைந்துருகும் தமிழர்த மன்பினையே
சம்மதமாய் தருகின்ற தன்மையினை வாழ்ந்துணர்ந்தால்

இயற்கையினை இன்பமிகு இல்லறத்தை நல்லறமாம்
பயிர்தொழிலை பழகுதமிழ்ப் பாட்டியலை களவியலின்
நயங்களையும் கற்பியலின் நலங்களையும் நாட்டாரின்
உயர்பண்பை எடுத்துரைக்கும் ஒண்டமிழிற் றோய்ந்துணர்ந்தால்

தனிமதமென்(று) ஒன்றில்லாத் தமிழ்ச்சமயத் தத்துவத்தை
மனிதமன நேயமெனும் மகத்தான அற்புதத்தை
இனியிங்கே இயல்பழகாய் ஏற்றுணர்ந்தால் மண்ணுலகம்
கனிவளங்கள் செறிந்தப்பூங் காவெனவே மாறுமன்றோ!
======================================
இராச. தியாகராசன்

செம்மலரின் கொற்றவரே!......

இந்திய நாட்டின் முதல் முதன்மை அமைச்சர், மனிதருள் மாணிக்கம், திரு சவகர்லால் நேருவும், அவருடைய குடும்பமும், நாட்டுக்காக செய்திட்ட ஈகம் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை எவராலும் மறுக்க ஏலாது.  எனக்கும் அவர்தம் கொள்கை/ திட்டங்களில் சில/பல விமரிசனங்கள் உண்டு.  நானெவரையும் கண்களை மூடிக்கொண்டு தொடர்பவன் இல்லை.  அரசியல் பேசுவதிலும் எனக்கு அவ்வளவாக அக்கறையுமில்லை.  ஆனால், நாட்டை விற்றவர்; சபல புத்திக்காரர்;  என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, அவரின் சீர்த்தியை எவரும் குறைக்கவும் முடியாது. 

அரசியலில் மாற்று கருத்திருப்பது சாதாரணம். இம்மனிதருக்கென்று என்னில் என்றுமே ஓரிடம் உண்டு. முதலில் இந்த பாடல் வெளியான தளம் நிலாச்சாரல் என்னும் கவிதைகள் தளம். பின்னர் நீடூர்அலி அவர்களும், முகநூலில் நான் நண்பர்களுக்குப் பகிர்ந்ததை தமது வலைப்பதில் பதிந்தும், பின்னர் இண்ட்லியில் பதிந்தும், என்மீதான அன்பினை வெளிப்படுத்தினார்.  எனக்கு நேரு என்னும் மாமனிதர் என்றுமே நேர்தான். அவர்தம் பிறந்தநாளான மழலைகள் நாளில் (நவம்பர் 14ஆம் நாள்), நினைவுகூர்ந்து அனைவர்க்கும் வாழ்த்துரைக்கிறேன்.  கம்புசுற்றும் வலதுசாரிகளும், இடதுசாரிகளும், அடிப்படைவாதிகளும், அவரவர் பக்கங்களில் சுற்றிக் கொள்ளுங்கள். 

==================================================












==================================================
செம்மலரின் கொற்றவரே! (கலிவெண்பா)
======================================
கொஞ்சுமெழிற் செம்மலரின் கோதிற்சீர் கொற்றவராம் 
பிஞ்சுமொழி பேசுகின்ற பிள்ளைகளுக் குற்றவராம்! 
அஞ்சுதலே இல்லையெனும் ஆன்மபலம் பெற்றாலும், 
வெஞ்சினமாய்ப் பேசாத மெல்லியலுங் கற்றவராம்! 

வேளாண்மை செய்பவர்கள் மேலாண்மை உற்றிடவும், 
நூலகங்கள் நம்நாட்டோர் நூற்றளவிற் பெற்றிடவும், 
ஆளுகின்ற போதிலவர் ஐந்தாண்டுத் திட்டமெலாம்,
சீலமுடன் தீட்டிவைத்த சீர்த்தியையும் நாடறியும்! 

வேட்டையிட்டே அண்டையரை வென்றிடவே எண்ணாமல், 
கூட்டுறவே நாட்டுயர்வுக் கொள்கையெனச் சொன்னாரே! 
மாட்சிமையாய் வாழ்வதற்கே வையகத்தின் மைந்தர்க்கே 
ஆட்சிமுறைத் தத்துவத்தை ஐந்தெனவே தந்தாரே! 

நாலைந்து பிள்ளைகளை நாமுமிங்கு பெற்றிடவோ; 
வாலறிவுக் கல்வியெனும் நல்லொளியை விட்டிடவோ;
சீலமெனுமிச் சீர்த்திதருஞ் சிந்தனையைக் கொண்டால்தான், 
ஞாலமதில் இந்தியரும் நன்னலமாய் வாழ்வமென்றார்! 

வாழ்நாளின் காப்பீட்டை வாழ்க்கையிலே ஏற்பதனால்,
கீழ்நிலையில் நாமடையுங் கேடகன்று போவதுடன்,
வீழ்கின்ற வேளைவரும் வேதனையுஞ் சோதனையுஞ் 
சூழ்துயரம் ஏதுமின்றிச் சுற்றமதும் ஓங்குமென்றார்!

மாந்தருள்ளே நன்மணியாம் மண்ணுதித்த நம்சவகர்;
காந்தியவர் ஏத்தியதைக் கண்ணெதிரில் கண்டோமே! 
ஈந்தளித்த இந்தியமண் எந்நாளும் பேர்துலங்க, 
வேந்தெனவே வாழ்ந்தார்நம் நேரு.
======================================
இராச தியாகராசன்.

பிகு:
செம்மலர் = ரோசா மலர்
வாலறிவு = தூய அறிவு
வாணாள் காப்பீடு = லைஃப் இன்சூரன்சு

கரை சேராப் படகுகள்.....

கவிதைச் சங்கமம் அறிவித்திருந்த கவிதைப் போட்டியில் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பங்குபற்றி, நான் எழுதிய பாடலிது.  கவியருவி என்பது  "தடாகம்"  என்கிற பன்னாட்டு அமைப்பால், எனக்களிப்பட்ட விருது.  இன்னும் வாழ்நாள் சாதனையாளன் விருது, நிலவுப்பாவலன் விருது,  கவிமாமணி விருது, மாகவி விருது, கவிப்பெருஞ்சுடர் விருது, பாவலர்மணி விருது, இப்படிப் பலவற்றைப் பல அன்பான அமைப்புகள் அளித்தும்  இருக்கின்றன.  கவியருவி விருதினை மட்டும் ஏன்  முன்னொட்டாக வைத்திருக்கிறேன் என்பதற்காக கரணியத்தையும், என்னுடைய முகநூல் பக்கத்தில், முதலிலேயே சொல்லியும் இருக்கிறேன், அஃது என்றன் தோழியர் ஒருவர்க்கு  நன்றிக்கடனாய் நானளிக்கும் மரியாதை என்று.  

ஆனால் மீண்டும் மீண்டும், உனக்கு நீயே கவியருவி என்று போட்டுக் கொள்ளும் நீயெல்லாம் ஒரு ஒரு மனிதனா என்றும், நல்ல தமிழார்வலர் என்றுமே தனக்குத் தானே பட்டத்தைப் போட்டுக் கொள்ள மாட்டார் என்றும்; அப்படிப் போட்டுக் கொள்பவர்கள் தமிழை நேசிப்பரே இல்லை; தமிழால் பிழைப்பவர் என்றும், தாய்மொழியை மதிக்காத,   இந்தி/ சங்கதத்தைப் பெரிதாய் எண்ணுந் தமிழர் சிலர் பேசுவதையும், எழுதுவதையும் காண்கையிலே  வருத்தமாய்த் தானிருக்கிறது.  கீழிருக்கும் பாடலில் ஞமலியைச் (நாய்)  சொல்வதால் அந்த நன்றியுள்ள உயிர, மனிதர்களை விடக் குறைவானதன்று.

இன்றைக்கு என்ன தாளிதம்?  ஊன்சோறா (அ) காய்ச்சோறா என்று நிலைச்சேதி போட்டு, 100/200 பின்னூட்டமும் 200/300 விருப்புகளும் தேடுவதென் விருப்பமும் இல்லை.  நேற்று யாரோ; இன்று இவர்; நாளை நான்; அடுத்து நீ;  இதுதான் வாழ்வியலின் தத்துவம்.   எழுதுவது என்கடன் அவ்வளவே!  விருப்பமிருப்பவர் படிக்கட்டும்!  வேண்டாதவர் என்னைப் பட்டியலிலிருந்து விலக்கிவிட்டு அவரவர் பணியைப் பார்க்கப் போகட்டும்;  யார் வேண்டாமென்கிறார்? அவரவர் வழி அவரவர்க்கு. 
==========================================












============================================ 
கரைசேராப் படகுகள்  (கொச்சகக் கலிப்பா)
============================================
வரையில்லா வசதிக்காய் வக்கில்லா வழிகளையே,
நுரையொத்த வாழ்விற்காய் நோக்கில்லாப் பழிகளையே,
அரைவயிற்றுச் சோற்றுக்காய் அன்றாடம் ஏற்கின்ற
புரையொடிப் புண்மேவும் புல்லரென வாழ்வதுமேன்?

அவரவர்கள் தாம்பெற்ற அன்னையரை மதித்திங்கே,
கவனமுடன் கண்போல காக்கின்ற வேளையிலே,
தவறென்ற எண்ணமின்றித் தாய்மொழியைக் கிழிந்துவிட்டச்
சுவரொட்டிப் போலெண்ணித் துச்சமென மிதிப்பதுமேன்?

பாலுடனே பழஞ்சேர்த்தே பாசமது பரிந்தோங்கத்
தாலத்தில் சோறிட்டுத் தந்தவன்புத் தாயவளைத்
தோலுடனே சதையெல்லாஞ் சுருங்கிவிட்டக் காரணத்தால்,
சீலமறக் கந்தையெனத் தெருவினிலே வீசுவதேன்?

கமழ்கின்ற பாமணக்கும் கன்னலதால் தாலாட்டும்
தமிழ்த்தாய்க்குத் தான்பிறந்த தன்மானத் தமிழோனே!
அமிழ்தொத்த அருந்தமிழை அரைக்கின்ற எந்திரமாய்,
உமிழ்துமிழ்துத் துப்புகின்ற உணர்விங்கே யார்கொடுத்தார்?

கரைசேராக் கட்டையெனக் காலமெலாம் கருத்தின்றித்
திரைமேலே தினந்தோறும் திண்டாடுந் தீந்தமிழா!
இரைக்காகச் செய்ந்நன்றி இவ்வுலகி லேத்துமந்த,
குரைக்கின்ற நாய்கூட குவலயத்தில் மேலன்றோ?
============================================
இராச தியாகராசன்

ஆட்கொல்லியில்லா அகிலம்

ஆட்கொல்லி நோயெதிர்ப்பினை ஒட்டி நான் எழுதிய இந்த நேரிசை வெண்பாக்களைத் தனித் தனியாக முகநூலில் பகிர்ந்தாலும், சிற்சில மாற்றங்களுடன், ஒன்று திரட்டி இதை ஓரிடத்தில் முன் வைக்கிறேன்.
=============================================












=============================================

ஆட்கொல்லியில்லா அகிலம்
(நேரிசை வெண்பாக்கள்)
==============================
தங்கத்தில் சீரணியும் தாய்வீட்டுச் சீதனமும், 
துங்கமணி போன்ற சுடர்பட்டும் – நங்கைக்கே 
அற்புதமாய்ச் சேர்ப்பதன்றி அன்பர்களே, தேவையிங்கு 
மற்றவரை நோக்கா மனம்!

சோதிநிகர்ப் பெண்ணே துணையா யிருந்தாலும் 
வேதனையில் வீழ்கின்ற வீணர்காள்! - ஈதுமக்கு
மட்டுந் துயராமோ? வாழ்வறமாம் நேர்வழியைத்
தட்டாத வாழ்வே தரம். 

தேனமுத வாழ்வியலில் சேர்ந்திட்ட நல்லிணையர்
வானுயர ஓருயிராய் வாழ்கையிலே - ஊனுடம்பில் 
வாழுயிரைக் கூசாமல் மாய்க்கின்ற ஆட்கொல்லிப் 
பாழுக்கிட முண்டோ பகர்!

ஆற்றொணா தாளழிக்கு மாட்கொல்லி நோயினையே 
வீற்றிருக்க வாவென்னும் மேதைகளே! – சாற்றுகிறேன், 
போதையில்நீர் மாய்வதன்றிப் பூப்போன்ற நுந்துணையும்
வாதையிலே வீழ்ந்தழி வார்.

உயிர்காக்கும் மாமருந்தின் ஊசியினை மீண்டும்
பயனாக்கி ஆளழிக்கும் பாழ்நோய்த் – துயரத்தில்
போகாமல் ஓரூசி போதுமெனச் சொல்வதுவே
வாகான வாழ்வின் வழி!

சயனமின்றிச் செல்வத்தைத் தான்தேடும் பேர்கள், 
வயணச்ச ரக்குந்தால் வாழ்வோர்! - மயங்கி,
முறைதவறி யிங்கே முயக்கம் விழைந்தால்
உறையொன்றே காக்கும் உணர்!

வருந்துயரம் வெட்ட மருத்துவரை அண்டி 
ஒருகுருதிச் சான்றை ஒழுங்காய்த் – திருமணத்தின் 
முன்பே இருவர்க்கும் முன்வைத்தால் இல்வாழ்வில் 
நன்றாய்ப் பெருகும் நலம்.
===========================================
இராச. தியாகராசன்

முகமூடிகள்.....

முதலில் இதற்கு வேஷங்கள் என்றுதான் தலைப்பிட்டு, முகநூல் அன்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். மீள்பார்வையில் கவிஞர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் வேடங்கள் என்று தமிழ்படுத்தி இருக்கலாமே என்று கருத்துரைத்ததை கண்டேன். வேஷம் என்பது தமிழல்லாத போது திசைச் சொல்லான வேடம் என்பதும் வேண்டாமென, முகமூடிகள் என்று தலைப்பிட்டு விட்டேன்.
=========================================













=========================================
மூகமூடிகள்… (இன்னிசை வெண்பாக்கள்)
======================================

கோடிமலர் பூத்திடுமே கோலமெனக் காவதனில்
ஆடுகின்ற பூக்களிலே அத்தனையும் ஆண்டவனை
நாடிமணம் சிந்திடத்தான் நாளுமின்று நேர்ந்திடுமோ,
தேடியவன் தாள்மீதிற் சேர்ந்து.

முழைநறு பூக்குவையில் மீந்தசில பூக்கள்
குழையர் குழலேறும் கொண்டவனின் கையால்
பிழைத்திட்டக் கூர்முகையில் பேரற்ற பூக்கள்,
விழைவற்று காலடியில் வீண்.

பாடுகுயில் ஆடுமயில் பாசமலர் கோடியெனில்
தேடுமனக் கோணலதால் தேடுவதும் நேர்கையிலே
ஆடிவரும் ஆசையதால் ஆனமனம் வீழ்கையிலே
மூடியெனப் போகும் முகம்.

குணம் சொலும் நோக்கு.....

நோக்கின்றி வாழ்தலரிது.   நோக்குடனே வீழ்ந்தவரும் அரிது.
============================================












=====================================================

குணம் சொலும் நோக்கு....
=========================
நீள்நோக்கு நேர்மையெனும் நெடுந்நோக்கு இவ்விரண்டும்
மீள்நோக்குக் கூரியதோர் வேல்நோக்கு மற்றிரண்டும்
தாள்நோக்கு வான்நோக்குச் சார்நோக்கு மொத்தமுமே
வாள்நோக்காம் செம்மையெனும் வண்டமிழால் வந்தகுணம்.

சீர்நோக்காம் எரிக்கின்றத் தீநோக்கு இவ்விரண்டும்
வேர்நோக்கு வெட்டவெளி வெறுநோக்கு மற்றிரண்டும்
பார்நோக்குச் சேர்நோக்குப் பன்னோக்கு மொத்தமுமே
நேர்நோக்குக் கூர்நோக்காம் நெடுந்தமிழால் வந்தகுணம்.

வளநோக்கு வாழ்வியலின் மறுநோக்கு இவ்விரண்டும்
களநோக்குக் கருக்கிவிடும் கனல்நோக்கு மற்றிரண்டும்
துளிர்க்கின்றத் துடிப்பானச் சொல்நோக்கு மொத்தமுமே
பளிச்சென்ற பெருநோக்காம் பைந்தமிழால் வந்தகுணம்.

கொல்நோக்கைக் கொன்றழிக்கும் கொடுநோக்கு இவ்விரண்டும்
தொல்நோக்கு நல்லறத்தின் சூழ்நோக்கு மற்றிரண்டும்,
வல்லாட்சி வேரறுக்கும் வன்னோக்கு மொத்தமுமே
வில்நோக்கு விசைநோக்காம் வெல்தமிழால் வந்தகுணம்.
======================================================
இராச. தியாகராசன்.

தலையது குனிந்திடாப் பாவலன்....

பாவேந்தரின் பாட்டுப் பரம்பரையில் வந்த பாவலர்களின் ஒருவரும், தாழ்த்தப்பட்ட இனம் என்பதாலேயே, தன்னுடைய ஒரு காவியத்தைத் தொலைக்க நேர்ந்தவரும் ஆன கவிஞர் தமிழ்ஒளிக்கு வாழ்த்துப்பா:
==========================================













==========================================

கொச்சகக் கலிப்பா....
===================

வள்ளையாம் பாடலை மழையதன் துளியெனத்
தெள்ளிய தென்றலும் தெளித்திடும் மணமெனத்
துள்ளிடும் நந்தமிழ்ச் சொல்லதன் சுவையென
அள்ளியே தந்திடும் அருந்தமிழ்ப் பாவல!

அறத்தமிழ்ப்  பாட்டென அருள்மகன் புத்தனின்
பிறப்பெனும் கதையினைப் பிழையற உரைத்தனை;
துறைமுகஞ் சார்தொழில் துன்பமும், தாழ்ந்தவர்
உறுமிடர்த் துயரெனும் உண்மையும் உரைத்தனை!

உலையெரி நெருப்பெனும் உணர்வுறை பாக்களை,
விலையிலாப் பொதுநிலை மிளிர்த்திடப் புனைந்திடு 
தலையது குனிந்திடாத் தமிழ்ஒளிப் பாவல;
நிலைபெறுஞ் சிலையென நினைத்தினி வாழ்வமே!
==========================================
வள்ளைப்பாட்டு, மழைத்துளி, புத்தர் ஜனனம்,
துறைமுகத் தொழிலாளி, அரிசனர், நிலை
பெறும் சிலை, மேதினம் ஆகியவை கவிஞர்
தமிழ் ஒளியின் படைப்புகள்.

அவன் வழியிற் திரள்வோம்....

பட்டுக்கோட்டையாரின் பிறந்தநாள் விழாப் பாவரங்கில் நான் பாடிய பாடல்.
==========================================














==========================================
எண்சீர் ஆசிரிய விருத்தம்
(காய்-காய்-மா- தேமா என்ற கட்டமைப்பு)
======================================

நெறியதுவே இல்லாத மிடிமை தன்னை;
…..நேர்மைக்கே பூட்டுமிட்ட அடிமை வாழ்வை;
வறுமையினைத் தனிப்பாவில் சாடும் தீரன்;
…..வாழ்வினிலே நீதியதைத் தேடும் தீரன்!
அறத்துடனே சிறுவர்க்கும் வீரம் சொன்ன,
…..அரசிளங் குமரிப்பா ஒன்றே சான்று!
மறைந்துமுய்யும் கவிஞனவன் கவிதை உள்ளம்;
…..மலர்தோங்கும் வெண்டிரையில் அறிந்தோம் நாமே!

நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
…..நாதியற்ற வர்களுக்கே நீதி கேட்டான்;
பூமலர்கள் புகழ்மொழிகள் அனைத்தை யுந்தான்
…..புழுவென்றே தள்ளிவிட்டப் பொதுமை வீட்டான்;
ஊமையென வாழ்ந்திருக்கும் தமிழர் தம்மை,
…..உயர்த்திடவே பலநூறாய்க் கவிதை செய்தான்;
ஆமையெனக் கூடடங்கி இருந்தி டாமல்
…..அவன்வழியில் அணியெனவேத் திரண்டோ மிங்கே!

கனவு காணுங்கள்.....

பாவலர் கலாவிசு அவர்களின் ”கவிதை வானில்” அமைப்பு நடாத்திய பாவரங்கில் நான் பாடிய கவிதை வரிகள்.
=========================================













=========================================
கனவு காணுங்கள் (கொச்சகக் கலிப்பா)
====================================

சிற்றலையாய் மாமலையில் தோன்றுகின்ற சிற்றாறோ
மற்றெதையும் தன்மனதில் வாங்கிடவே எண்ணாமல்
சுற்றிநிலங் காடுமலை சூழ்ந்திருக்கும் பேராழி
பற்றிடத்தான் ஓடுவதைப் பார்த்திருப்பாய் என்தோழா!

நாற்றிசையும் ஆளுகின்ற நம்பரிதிச் செம்படராய்
மேற்றிசையில் வீழ்ந்தாலும் வெம்பிழம்பாய் நானிலத்தில்
வீற்றிருந்து நன்னலங்கள் மீட்டிடவே கீழ்த்திசையில்
ஆற்றலொடு மீண்டெழுமே அம்புவிக்குக் காவலென!

மண்ணுலகில் ஊழ்த்துவிட்ட மன்னுயிர்கள் அத்தனையும்
தன்வழியில் ஓர்முடிவைத் தானெடுத்து அவ்வழியே
எண்ணியதை ஓர்முகமாய் ஏற்றிங்கு வாழ்கையிலே
விண்மீனாம் மாந்தரிலே மேன்மையுற்ற இந்தியர்நாம்;

மோழையெனத் தான்மயங்கி மூலையிலே குந்திவிட்டு
சூழுகின்ற காரெனவே தோன்றுகின்ற வீண்கனவில்
வாழுகின்ற நாள்வரையில் வாழ்வதையா கலாமவர் 
தாழுதலில் தன்னுரையாய்த் தந்திட்டார்? இல்லையில்லை!

நீணிலத்தில் காணுகின்ற நேரறிவைத் தம்வாழ்வில்
வாணுதலின் நங்கையவர் கல்வியதைத் தம்வாழ்வில்
தேன்நிகர்த்த நந்தமிழின் மேன்மையதைத் தம்வாழ்வில்
வானகத்துக் கல்வியினை வளர்ப்பதையே தம்வாழ்வில்

எந்நாளும் ஒற்றுமையாய் இருப்பதையே தம்வாழ்வில்
சிந்தைகுளிர் நூல்களுறை சீரறிவைத் தம்வாழ்வில்
இந்தியர்கை ஒங்கியொரு அறிவியலால் வானகத்து
விந்தைவெளி மண்டலத்து வீரரெனத் தம்வாழ்வில்

ஓர்கனவாய் இன்றிளையர் ஏற்றிடத்தான் வேண்டுமென்றார்;
சீர்த்தியதும் வாழ்வியலில் தேடித்தான் வந்தாலும்
ஊருனக்குத் தூற்றுதலைச் சேறெனவே தந்தாலும்
தேர்ந்தெடுத்த நேர்க்கனவைச் சீர்க்கனவாய்ப் போற்றுகவே!

சொல்ல நினைக்கும் ஆசைகள்.....

சொல்லத்தான் நினைக்குமென் ஆசைகள்
(நேரிசை அகவற்பா)
=======================================












=======================================

சொல்லவே யென்மனச் சிந்தனை வானில்
உள்ளதே விடைக ளில்லா ஆசையாம்!
மாநிலம் முழுதும் மலிந்த ஊழல்
காணின் பதைத்துக் கொதித்தி டாமல்
கண்கள் மூடிகைக் குவிக்கும் ஈனமே
மண்ணின் அடியிற் புதைத்து விட்டு;
உள்ளி லொன்றும், உதட்டி லொன்றும்
கள்ளம் பேசும் கோண லரசியல் 
சாதியின வாதமாம் சாய்க்கடை புத்தியை,
வீதியில் நிறுத்தி வெட்டி விட்டு;
நாட்டின் செல்வமாம் நங்கையர் பிறந்ததும்
காட்டில் விளையும் கள்ளிப் பாலதால்
கொல்லும் வீணரின் கொடிய வழக்கை
தலையற நிச்சயம் தட்டி விட்டு;
உலகில் காணும் வன்முறை விருப்பு
உலவு கின்ற தன்மொழி வெறுப்பு
ஓரினம் அழிக்கும் மதவெறி நாசம்
வீரியம் அறுக்கும் போதைப் பாசம்
எல்லா வற்றையும் ஓட்டி விட்டு
நல்லிணக் கமதுவே நம்முன் மெய்யாய்
ஒருநாள் தோன்று மென்றே
விரிவாய்ச் சொல்லிடத் தானென் னாசையே!
=======================================
இராச. தியாகராசன்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கண்ணா, கண்ணா.......

என்னுடைய மைந்தன் வைகறைச் செல்வனுடன் அமர்ந்து விளையாடுகையில், தோன்றிய சிறுவர் பாட்டு இது!
================================================

================================================
கண்ணா கண்ணா.....
====================

துள்ளி விளை யாடணுமே கண்ணா!
தூங்கி விழுந் தாடுவதோ கண்ணா?
சுள்ளெ னவே சொல்லுவதால் கண்ணா!
துன்பங் களும் தொலைந்திடுமோ கண்ணா!

எள்ளி யாடி சிரிப்பதனால் கண்ணா
இன்பங் களும் வந்திடுமோ கண்ணா!
உள்ள மதில் நேர்மையுடன் கண்ணா!
உள்ள வரே நலம்பெறுவார் கண்ணா!

பள்ளிக் கூடம் போகணுமே கண்ணா!
பாடமுந் தான் படிக்கணுமே கண்ணா!
புள்ளி னமாய்ப் பாடணுமே கண்ணா!
புகழு டனே வாழணுமே கண்ணா!

நல்ல வராய் வளர்வதனால் கண்ணா!
நட்பு கூடி வந்திடுமே கண்ணா!
வல்ல வரா யிருப்பதனால் கண்ணா!
மாண்பு மிக வாகிடுமே கண்ணா!

பெற்ற வரை உற்றவரைக் கண்ணா!
போற்று வதே உன்கடமை கண்ணா!
நற்ற மிழைத் தாயெனவே கண்ணா!
நத்து வதில் தான்பெருமை கண்ணா!


இயலுமோ?........


நானும் பலகாலம் என்னால் எதுவும் இயலுமென்று இறுமாந்திருந்தேன்.  நேற்று என்னுடைய உள்ளத்தில் தோன்றிய ஒரு எண்ணத்தின் விளைவாக இந்தக் கவிதை உருவெடுத்தது.  இயலாதவைகளின் பட்டியல் இன்னும் நீளும்.......
==================================================

==================================================
இயலுமோ?  (கொச்சகக் கலிப்பா)
===============================

சில்லென் றிருட்டிலே சிரித்திடும் பொறியெனக்
கல்லூரிக் கனவுகள் கருத்திலே கனன்றுநல்
மல்லிகைப் பூவுதிர் மணமதா யெழுகையில்
நில்லென் றெளிதிலே நிறுத்திட இயலுமோ?

இல்லத் தெதிரிலே இலங்கிய இனியவள்
மெல்லிய வலையெனும் விழியதாற் சிந்திடும்
வெல்லத் தினிப்பினால் மேவிடும் உணர்வினை
செல்லென் றுறுதியாய்த் திருப்பிட முடியுமோ?

மழலைகள் மடியினில் மகிழ்வுடன் அமர்ந்துதன்
கழுத்தினை கரங்களால் கயிறெனக் கட்டியே
அழகொளிர் இதழ்களால் அப்பாவென் றழைத்ததைக்
கிழவனும் எண்ணியேக் கிளர்வதும் மறையுமோ?

எதையும் தாங்கும் இதயம்....

திரைப்படப் பாவலர் பூவை. செங்குட்டுவனின்  தலைமையில், கவிதை வானில் மன்றத்தில் வாசித்தளித்த ஒரு/இரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்.
==============================================

==============================================


கனிச்சுவை பொங்கு மினிமை இருக்க
பனிக்குளிர் வாளியாய்ப் பாழ்ச்சொற் புனைந்திடும்
காரிருள் கனக்கும் கறுப்பா மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

நேராய்ச் சிரிக்கையில் நேயமாய் ஏத்திடும்
பாரா திருக்கையில் பொய்யுரை தூற்றிடும்
சீரிலாச் செருக்கிழிச் சிந்தனை நெஞ்சமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

பொய்யா மொழியார் புகன்றது போலவே
செய்ந்நன்றி கொன்ற கயவர்தம் பொய்மைகள்
ஆர்த்திடுங் கோண லுரைக்கு மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

தடவிப் படிக்குந் தாய்மொழி நூலின்
மடங்கிய தாளின் மடிப்பின் தடச்சொல்
வேரது வடமொழி என்பா ரிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!