புரட்சியாளர் "எர்னசுட்டோ சே குவாராவின்" பிறந்தநாள்: சூன் 14ஆம் நாள் 1928. புரட்சி வீரனின் உடலை அழித்தவர் பெயரோ, ஊரோ, பெரும்பான்மை பேருக்குத் தெரியாது. ஆனால் தாழ்ந்தவர்க்காய் இன்னுயிரை ஈந்தவனின் பெயர், புகழ், ஈகம், பட்டி தொட்டியெல்லாம் இற்றைக்கு முழங்குகிறது. அதுதான் புரட்சியாளரின் ஈகத்தின் மேன்மை. அவர்கள் மலர வைக்கின்ற புரட்சிப் பூவின் பெருமை.
"எங்கெல்லாம் அடக்கியொடுக்கப்படுபவரின் இதயத்துடிப்புகள் கேட்கிறதோ, அங்கெல்லாம் என்னுடைய கால்கள் நிச்சயம் பயணம் செய்யும்!"
"வன்முறை என்பது வீரமன்று; விலங்கினத்தின் செயலது; வீரமென்பது உயிரைக் கொல்வதில் இல்லை; உயிர்களைக் காப்பதே வீரம்; அதுவே புரட்சியாளனின் செயல்."
=== எர்னசுட்டோ சே குவாரா.
என்றவர் முழங்கியது போலவே, தமது சொந்த நாட்டில்/ வாழ்ந்த நாட்டில் இறக்காமல், பொலிவியா சென்று அடக்குமுறை செய்யப்பட்டவர்க்காக கரந்தடி புரட்சி (Guerrilla warfare) மேற்கொண்டார். அங்கேயே ஒரு விட்டோடியின் (deserter) உதவியுடன் அந்நாட்டு வல்லாட்சியரால் கொல்லப்பட்டார். அவர்தம் பிறந்தநாளில் என்றன் வீரவணக்கத்தைப் பதிவு செய்கிறேன்.
புரட்சிவீரன் எர்னஸ்ட் சே குவாராவின் புகழ் என்றென்றும் உலகில் நின்று நிலைத்திருக்கும். புரட்சியாளர்கள் மண்ணில் மறைந்து போனாலும், அவர்தம் வழியைப் பின்பற்றி, தொடர்ந்து நடைபோட, அறத்தை உயிரினும் மேலாய் எண்ணுபவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
=============================================

=============================================
புரட்சிப் பூவே......
=============================================
பேணுமன்பைப் புறந்தள்ளி, பதவி யாசை,
.....புந்தியிலே புகழ்மயக்கந் தலைக்குள் மீற,
நாணமின்றி வன்முறையில் மூழ்கி யன்று,
.....நானிலத்தில் நல்லவரை நசுக்கி யாண்டு,
கோணலுள மயக்கத்தால் தீய்ந்தே வீழ்ந்த,
.....கொற்றவரின் முடிவென்னும் வரலாற் றைத்தான்
ஆணவத்தால் அறத்தினையே காலில் தேய்க்கும்,
.....அறிவற்ற ஆட்களெலாம் மறந்தே போனார்!
நேர்மையினைப் பூட்டுகின்ற அடிமை வாழ்வை
……….நீதியினை வாட்டுகின்ற நாட்டின் தாழ்வை
பார்த்தகணம் வீறுகொண்டே கண்ணில் காணும்
……….பாதகத்தை வேரறுக்க முன்னே நின்றான்!
சீர்த்திகளை செல்வத்தைத் தேடு வோரில்
……….தீமைகளால் நாதியற்ற வர்கள் தேடும்
தீர்ப்பிற்கே அன்றெழுந்த சேகு வாரா;
……….செந்தீயாய் செலுத்துமென்றன் வணக்கம் ஈதே!
நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
……….நசுக்கப்பட் டவர்களுக்கே நீதி கேட்டு,
பூமலர்கள் புகழ்மொழிகள் எதுவும் இன்றி
……….புரட்சியொன்றே வாழ்க்கையென்று மண்ணில் வாழ்ந்தான்!
ஊமையென்றே வாய்களின்றி வாழ்ந்த மக்கள்
……….உயர்ந்திடவே அயர்வின்றி உழைத்த உன்னை
பாமலரால் ஏத்துகின்றேன் ஈகை மன்னன்;
……….பாரெங்கும் மணக்குமுன்றன் புரட்சிப் பூவே!
=================================================
இராச தியாகராசன்.
பிகு:
பிகு:
====
சீர்த்தி = கீர்த்தி, ஈகமன்னன் = தியாகராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக