ஞாயிறு, 23 ஜூன், 2024

அகமும், புறமும்....

அகமும், புறமும், அகநானூறாய், புறநானூறாய்ப் பொலிகின்றன நந்தமிழ்ச் சங்க இலக்கியத்தில்.  தமிழர் நாம் அகம், புறம் இரண்டையுமே இணையாக கொண்டே வாழ்ந்திருந்தோம்.   இற்றைக்கிருக்கும் வேலன்டைன் நாளைக்கூடத் தமிழர்நாம் அகமென்று சொல்லி, காமன் பண்டிகையாய்ப் போற்றினோம்.
மற்போரை/ விலங்கு வேட்டையைப் புறமென்றே  மல்லாட்டமாய், பாரி வேட்டையாய்ச் சாற்றினோம்.
==========================================








========================================
அகமும் புறமும்....
(கொச்சகக் கலிப்பா)
=================
நெடும்புற மென்கின்ற நிலைதனையே வெளியென்றுந் 
தொடுமகம் என்கின்ற தோற்றத்தை உள்ளென்றும், 
நடப்பினிலே நந்தமிழர் நன்றாகக் கருத்தூன்றிப்
படிப்பதுவும் பாங்காமோ பகன்றிடுவீர் பாவலர்காள்!

புறம்தமிழர் வாழ்வினிலே போர்முழக்கம் வீரமெனில், 
செறிவான அகமங்கே சேர்ந்துறையுங் காதலன்றோ? 
நிறைவாக இவ்விரண்டை நெஞ்சிருத்தி ஒன்றெனவே
முறையாக வாழ்ந்திருந்த முத்தமிழர் நாமன்றோ?

வள்ளுவனோ மேலேபோய் வரைந்தானே தன்குறளை;
உள்ளபடி அறமென்றும், உயர்வான பொருளென்றும், 
எள்ளலிலா இன்பமென்று மெவருமிங்கே ஏற்பதற்கு 
வெள்ளமெனப் பொருள்தருகும் விந்தையாம் ஈரடியில்!

என்றென்று மினிக்கின்ற இலக்கிய இலக்கணமாய், 
அன்றிருந்த அகம்புறத்தை ஆழ்ந்தூன்றிப் பயிலாமல், 
அன்பென்று மாசையென்று மழியாதக் காதலென்றும்
இன்றிங்கே இணையத்தில் எளிதாகக் கதைக்கின்றார்!

புறந்தள்ள வேண்டியப் புன்மைகளைப் போற்றியதால், 
சிறுவர்களைச் சிறுமியரைச் சீரழிக்கும் இனக்கவர்ச்சி 
வெறுங்காதல் வளர்ந்திங்கு வீரத்தை வெட்டியதோ?
மறப்பண்பு மாறியதால் வடுக்காதல் ஓங்கியதோ?

வானத்தில் இல்லையடா வண்டமிழர் வாழ்வுயினி;
தீனக்குர லெழுப்பித் தேம்புவதை விட்டிங்கே, 
ஏனிந்த அவலநிலை இரும்புமனத் தமிழனுக்கென்(று)
ஆனவரை அவலங்கள் அழிக்கத்தான் முயல்வோமே!
=======================================
இராச தியாகராசன்

பிகு:
====
புறம் = வீரர் மரபு, அகம் = காதல் மரபு, 
மறப்பண்பு = வீரப்பண்பாடு, கதைத்தல் = கருத்தாடல், 
வடுக்காதல் = சிறுவர்/சிறுமியர்க் காதல்,

வீசுங்கள் பாச்சவுக்கை....

பாவலர்க்கு ஒரு வேண்டுகோள்; பாச்சவுக்கை வீசுங்கள் பாவலரே!  இணைத்திருக்கும் ஒளிப்படம், தமிழ் தேசியப் பாவலர், பாவலரேறு திருமிகு பெருஞ்சித்திரனார்.
================================================
================================================
பாச்சவுகை வீசுங்கள் பாவலரே.......
(கொச்சகக் கலிப்பா)
====================
சித்தத்தில் சிலிர்க்கின்ற சிந்தனையின் சீதளமாய், 
முத்தமிழை முகந்தெடுத்த முகநூலின் முகவரியாய்,
எத்திக்கும் புகழ்மணக்கும் எந்தமிழில் எழிற்கவிதை 
தித்திக்க வனைகின்ற செந்தமிழின் பாவலரே!

கற்கண்டின் பாகுடனே கனிச்சாற்றை கலந்திங்கே, 
சொற்றிறத்தால் நாமணக்கச் சொக்கவைக்கும் சொல்லடுக்கி, 
வற்றலில்லா வளப்பமிகு வண்டமிழில் செழுங்கவிதை,
அற்புதமாய் நெய்கின்ற அருமைமிகு பாவலரே!

உன்னித்த எண்ணமதை ஊழ்த்தமன உணர்வுகளைப் 
பின்னலாம் நல்லெதுகை பேர்புகழும் மோனையுடன், 
நன்னூலு முரைக்கின்ற நற்றமிழில் நறுங்கவிதை, 
மின்னல் சவுக்கெனவே வீசுங்கள் பாவலரே!
===================================
இராச தியாகராசன்

பிகு:
====
சீதளம் = குளிர்ச்சி, 
எந்தமிழ் = என்றன் தமிழ், செந்தமிழ் = செம்மைத் தமிழ்,
வண்டமிழ் = வளமைத் தமிழ், உன்னித்த = துளிர்த்திட்ட,
ஊழ்த்தமன = பிறந்தமன. எதுகை/மோனை = தளையோத்துகள்,
நற்றமிழ் = நல்ல தமிழ், செழுங்கவி = செழுமைக்கவி.

புதன், 19 ஜூன், 2024

என்றன் பேராசை....

பிறந்தவர் யாவரும் ஒருநாள் வந்த இடத்துக்கே செல்ல வேண்டுமென்பது எல்லாம் வல்ல வித்தகி விதித்துவிட்ட நீதி! நானும் செய்ய வேண்டிய கடமைகளை இயன்றவரை செய்துவிட்டேன்; அந்தகனின் அழைப்புக்காய்க் காத்திருக்கிறேன்; ஆசையும், ஆவலுமில்லாத மனிதரெவர்? இற்றைக்கென்றன் ஒரே ஆசை எந்தை போலவே எவருக்கும் துன்பமில்லாத, எவர் கையையும் எதிர்பாராத, எவர் தயவையும் நாடாத, தன்னிறைவான இறப்பு மட்டுமே. நேற்றும், இன்றும் அவர், இன்றோ நாளையோ நான்!  என்றன் எந்தை திருமிகு இராஜகோபால சர்மா வாழும்போதில் கூட ஒரில்லறத் துறவியென வாழ்ந்து, 1987ஆம் ஆண்டு, அவருடைய 69ஆவது அகவையில் எவருக்கும் துன்பந் தராத வகையில், இறையடி நீழலில் இளைப்பாரச் சென்றார்.  அப்படியொரு முடிவை வேண்டுகின்ற இந்தச் சிறு பாவலனின் பேராசை, ஒரு கவிதையாய் உருவெடுத்தது.
=======================================













=======================================
என்றன் பேராசை....
(கொச்சகக் கலிப்பா)
====================
சின்னஞ்சிறு அகவையில்நான் சிந்தையும் சிலிர்த்திடவே
என்தந்தை கைக்கோத்து எங்குமே சென்றதில்லை;
கன்னத்தைக் கிள்ளுமந்தக் கட்டிமுத்தம் பெற்றதில்லை;
தன்கரத்தால் கட்டிலிட்டந் தாலாட்டும் உற்றதில்லை!

அவரென்னை அணைத்தென்றும் அறிவுறுத்தும் நூல்படித்து, 
நவரசமாய் நற்கதைகள் நாளெல்லாம் சொன்னதில்லை;
தவறிழைத்தால் தடிகொண்டு தண்டித்தும் பார்த்ததில்லை;
கவலையதால் கண்சிவந்து, கசப்பிழியச் சோர்ந்ததில்லை;

சிவன்மால், சக்தியென்றும், திருவிழாத் தேரென்றும்,
அருங்கவிதை, அண்டவெளி, ஆகாயம், ஆன்மிகம்,
வருங்காலம் என்றுநான், வானத்தை ஆளுமந்தக்
குருகெனவே பறக்கமனக் கோபுரங்கள் காட்டவில்லை;
 
கண்களிலே வைத்தென்றுங் காக்கின்ற அன்புணர்வால்,
எண்ணமதில் என்றென்று மிலங்குகின்ற நேர்மையதால், 
உண்மையுடன் ஓர்ந்துளமே உணர்கின்ற இறையுணர்வால்,
மண்ணகத்தில் தம்மைந்தன் வளம்வாழ நின்றுழைத்தார்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்ந்திங்கே, 
நாவினிக்கும் அறுசுவையை, நல்லதிரைப் படங்களையும்,
பூவுலகின் இன்பநிலைப் பொருள்களையும் புறந்தள்ளித் 
தேவியவள் சேவடியைச் சீந்தியவர் வாழ்ந்திருந்தார்!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள், 
கோலத்தைத் தான்வணங்கிக் காலமெலாம் நானிங்கே, 
ஞாலத்தில் மெய்மையெனும் ஞானத்தைப் பெற்றுவிட
சீலமுடன் சிந்தித்தே சிறப்புடனே எனைவளர்த்தார்!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தழிக்கும், 
இயல்பினையே எரிக்கின்ற எண்ணமதை வேரறுக்க, 
வியனுலகைக் காக்கின்ற வித்தகியைத் தான்வணங்கி, 
நயந்தொழுகும் நேர்வழியில் நாடோறும் நடந்திறந்தார்!

வருமிறுதி காலத்தில் மற்றவரின் துணையின்றி, 
கருக்காக மருத்துவக் களம்கண்டே சாய்ந்துவிட்ட, 
நெருப்புநிகர் உளவுறுதி நேசரவர்; அன்றாங்கே
மருத்துவரும் வியந்துவிட்ட மாவுறுதி மறவரிவர்!

ஒன்றுமட்டும் நானறிவேன் உண்மையென இப்புவியில்;
இன்றுவரை மெய்யதுவா யெண்ணுகிறேன் என்னுளத்தில்;
தன்னிருப்பைத் தன்பணியைத் தன்முடிவை என்னுளத்தில்
என்முடிவாய் ஏற்றிவிட என்றுமவர் நினைத்ததில்லை;

கையூட்டுக் காசுபணம் கறைபடியா வாழ்வினிலே, 
செய்தவற்றை என்வாழ்விற் றிருத்தமாய்ச் செய்துவைத்து, 
வையகத்தில் வாழ்கையிலே மலரிலைபோல் வாழ்தவென்றன், 
ஐயனைப்போ லென்முடிவும் அமைந்திடத்தான் பேராசை!
==========================================
இராச. தியாகராசன்.

சனி, 15 ஜூன், 2024

ஒளியில் சிரிக்கும் ஒயில்....

செயற்கை நுண்ணறிவு ஓவியமென தோழர் திரு அருள்குமரன் முகநூலில்  பகிர்ந்த சில ஓவியங்கள் என்னில் முகிழ்த்த வெண்பாக்கள்.
================================















=========================
ஒளியில் சிரிக்கும் ஒயில்
========================
களிப்புங் கனவுங் கவியெனப் பொங்க, 
நெளிவிலா தன்பின் நினைவாற் - றுளிர்த்து, 
வெளிப்படும் எண்ணமே விண்ணிலே தோன்று 
மொளியிற் சிரிக்கு மொயில்.

விண்ணில் முழுதும் விளைந்த உணர்வினைப் 
பண்ணெனப் பாடவைக்கும் பாவையே! - வெண்ணிலா
வண்ணமாய் மின்னிடும் மங்கையுன் கண்ணொளி
எண்ண முடியா வெழில்.
========================
இராச தியாகராசன்

வெள்ளி, 14 ஜூன், 2024

புரட்சிவீரன் சே குவாரா....

புரட்சியாளர் "எர்னசுட்டோ சே குவாராவின்" பிறந்தநாள்: சூன் 14ஆம் நாள் 1928. புரட்சி வீரனின் உடலை அழித்தவர் பெயரோ, ஊரோ, பெரும்பான்மை பேருக்குத் தெரியாது.  ஆனால் தாழ்ந்தவர்க்காய் இன்னுயிரை ஈந்தவனின் பெயர், புகழ், ஈகம்,  பட்டி தொட்டியெல்லாம் இற்றைக்கு முழங்குகிறது.  அதுதான் புரட்சியாளரின் ஈகத்தின் மேன்மை. அவர்கள் மலர வைக்கின்ற  புரட்சிப் பூவின் பெருமை.  

"எங்கெல்லாம் அடக்கியொடுக்கப்படுபவரின் இதயத்துடிப்புகள் கேட்கிறதோ, அங்கெல்லாம் என்னுடைய கால்கள் நிச்சயம் பயணம் செய்யும்!"

"வன்முறை என்பது வீரமன்று; விலங்கினத்தின் செயலது; வீரமென்பது உயிரைக் கொல்வதில் இல்லை; உயிர்களைக் காப்பதே வீரம்;  அதுவே புரட்சியாளனின் செயல்."

=== எர்னசுட்டோ சே குவாரா.

என்றவர் முழங்கியது போலவே, தமது சொந்த நாட்டில்/ வாழ்ந்த நாட்டில் இறக்காமல், பொலிவியா சென்று அடக்குமுறை செய்யப்பட்டவர்க்காக கரந்தடி புரட்சி (Guerrilla warfare) மேற்கொண்டார்.  அங்கேயே ஒரு விட்டோடியின் (deserter) உதவியுடன் அந்நாட்டு வல்லாட்சியரால் கொல்லப்பட்டார். அவர்தம் பிறந்தநாளில் என்றன் வீரவணக்கத்தைப் பதிவு செய்கிறேன்.

புரட்சிவீரன் எர்னஸ்ட் சே குவாராவின் புகழ் என்றென்றும் உலகில் நின்று நிலைத்திருக்கும்.  புரட்சியாளர்கள் மண்ணில் மறைந்து போனாலும், அவர்தம் வழியைப் பின்பற்றி, தொடர்ந்து நடைபோட, அறத்தை உயிரினும் மேலாய் எண்ணுபவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
=============================================

=============================================
புரட்சிப் பூவே......
=============================================
பேணுமன்பைப் புறந்தள்ளி, பதவி யாசை, 
.....புந்தியிலே புகழ்மயக்கந் தலைக்குள் மீற,    
நாணமின்றி வன்முறையில் மூழ்கி யன்று, 
.....நானிலத்தில் நல்லவரை நசுக்கி யாண்டு, 
கோணலுள மயக்கத்தால் தீய்ந்தே வீழ்ந்த, 
.....கொற்றவரின் முடிவென்னும் வரலாற் றைத்தான்
ஆணவத்தால் அறத்தினையே காலில் தேய்க்கும், 
.....அறிவற்ற ஆட்களெலாம் மறந்தே போனார்! 

நேர்மையினைப் பூட்டுகின்ற அடிமை வாழ்வை
……….நீதியினை வாட்டுகின்ற நாட்டின் தாழ்வை
பார்த்தகணம் வீறுகொண்டே கண்ணில் காணும்
……….பாதகத்தை வேரறுக்க முன்னே நின்றான்!
சீர்த்திகளை செல்வத்தைத் தேடு வோரில்
……….தீமைகளால் நாதியற்ற வர்கள் தேடும்
தீர்ப்பிற்கே அன்றெழுந்த சேகு வாரா;
……….செந்தீயாய் செலுத்துமென்றன் வணக்கம் ஈதே!

நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
……….நசுக்கப்பட் டவர்களுக்கே நீதி கேட்டு,
பூமலர்கள் புகழ்மொழிகள் எதுவும் இன்றி
……….புரட்சியொன்றே வாழ்க்கையென்று மண்ணில் வாழ்ந்தான்!
ஊமையென்றே வாய்களின்றி வாழ்ந்த மக்கள்
……….உயர்ந்திடவே அயர்வின்றி உழைத்த உன்னை
பாமலரால் ஏத்துகின்றேன் ஈகை மன்னன்;
……….பாரெங்கும் மணக்குமுன்றன் புரட்சிப் பூவே!
=================================================
இராச தியாகராசன்.

பிகு:
====
சீர்த்தி = கீர்த்தி, ஈகமன்னன் = தியாகராசன்