புதன், 6 மார்ச், 2024

மங்காமல் வாழும் வழி...

இற்றைக்கு என்னுளத்தை பாதித்து, சிந்தனையைச் சிலுப்பிய சமுதாய நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.
நங்கையர் நாளுக்காய் ஒரு மீள்பதிவு செய்கிறேன்.  சமீப காலமாய்ப் புதுவை என்றில்லை, இந்தியத் துணைக்கண்டம் யாங்கணுமே பரவலாக சிற்றகவை, பேரகவைப் பெண்டிரை சீரழித்துக் கொல்லும் கேவலமான பண்பாடு ஏனிப்படி நச்சுக் கொடியாய் வளர்ந்தோங்கி கவிந்திருக்கிறது? இந்த நிலைமைக்கு முடிவு வரவே வராதாவென்று ஏங்குகிறது உள்ளம். அன்று நிர்பயா, அனிதா, ஆசீபா, கௌரி லங்கேஷ், த*ம*ரி, தூ*து*கு*,  @*ணி*ப்பூ*@, *ள்ளா*சி;  இன்று புதுவையின் ஆர்த்தி.  (முழுசாய் ஊர் பெயரைச் சுட்டினால், பதிவு எவரையும் அடையாதென்பதால், மறைபெயர்; அன்பர்  மன்னிக்கவும்)
============================================












============================================
மங்காமல் வாழும் வழி....
(ஒரு பஃது அந்தாதி வெண்பா மாலை)
====================================
தேனிருக்க நஞ்சினைச் சீரென்றே நாடுகின்ற
மானுடமே! சீர்த்திமிகு வாலிபமே! - கானினுறை 
மாக்களல்ல நாமென்றும் வஞ்சியரைப் போற்றுவதே 
ஊக்கமுறை ஓங்கலெனும் வாழ்வு. (01)

வாழ்விதுவே வாழ்வென வாழ்தலையே வாழ்த்தலின்றி 
வாழ்ந்துநிதம் வாழ்வறுந்த வாழ்வினமே! - சூழ்துயரந் 
தானகன்றே எம்மகளிர் தானவர்போல் வாழ்ந்திருக்கக் 
கூனகலக் கோடுதலே கோது. (02)

கோதின் வழியிருந்துங் குற்றமிலாச் சீரிருந்தும், 
மாதரவர் மாண்பினையே மாசாக்கும் - வேதனைகள் 
வேர்த்தழிய வேண்டுமென வீறுகொண்டே மாந்தரினம்
ஆர்த்தெழுந்தால் நீறாகும் ஆசு. (03)

ஆசுகளைக் கொள்ளியிட்டு ஆற்றலுடன் நம்மிளையோர்
பாசமுடன் பண்பாட்டைப் பார்ப்பதுதான் - நாசமற,
நங்கையரு மிப்புவியில் நன்னலமே பெற்றிலங்கி,
மங்காமல் வாழும் வழி. (04)

வழியில்லாப் பாதையிலே மானமின்றிச் சென்றே 
அழிப்பதுதான் ஆக்கமுறை அன்போ? - செழிப்புறவே
மாந்தரும் மங்கையரை வாடாமற் காத்துநித  
மேந்துவதே என்று மெழில். (05)

எழிலாரும் பெண்மையத னீகையெனும் பண்பே
வழுவில்லா வையகத்தின் வாசல்! - விழுப்புறவே
சால்பனைத்து மள்ளியிடுந் தன்னலமே இல்லாத
ஆல்நிகர்த்த அன்னையெனு மன்பு. (06)

அன்பொன்றால் தாயெனவே ஆதரித்துக் காத்துநின் 
றின்பந் தருபவளும் இன்மகளே! - இன்றுலகிற் 
றங்கையென அக்கையெனத் தாயுமெனத் தாரமென 
மங்கையரைப் போற்றுதலே மாண்பு! (07)

மாண்பென்ற சொல்லுக்கு மாறா இலக்கணமாய் 
ஆண்கள் அறவழியில் ஆர்த்தெழுவோம்! - பெண்ணுயர 
எல்லாருங் கைகோத்தே ஈனமெலாந் தீயிலிட் 
டில்லாமற் செய்வதுவே ஏற்பு. ( 08 )

ஏற்ப தனைத்தும் இயல்பென் றிருக்கவா 
நேற்றிங்(கு) உதித்தோமிந் நீணிலத்தில்? - தூற்றும்பேர்  
ஆளுமெம் பெண்டிரின் ஆற்றலை மாய்த்துவிடின் 
தாளுமோ தாயகந் தான். (09)

தானென்ற வாழ்வுஞ், சரிகின்ற எண்ணமுங் 
கானலின் நீராய்க் கருதியே - நானிலப்பெண் 
தாழ்வற் றிருக்கச் சலிக்கா துழைப்பவர்
வாழ்வே அமுதமயத் தேன். (10)
====================================== 
இராச. தியாகராசன்.

பி.கு:  
====
ஓங்கல் = குன்று,  கோது = நேராக (சீப்புக்கு இன்னொரு பெயர் கோதுகலம்), 
விழுப்பு = சிறப்பு. சால்பு= மேன்மை/நற்பண்பு, மாண்பு= மாட்சிமை/ பெருமை.

2 கருத்துகள்:

  1. ஐயா இராஜ.தியாகராஜன் அவர்களின்
    மங்காமல் வாழும் வழி..

    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு