வியாழன், 15 அக்டோபர், 2020

நிலவுக்கும் கதிர்கள் உண்டு....

15 ஆண்டுகளுக்கு முன் என்று நினைவு.  கம்பன் கலையரங்கில், "புதுவை நண்பர்கள் தோட்டம்" அமைப்பினர் நடத்திய 25 ஆவது பாவரங்கில் சீர்மைக் கவிஞர் திருமிகு ஈரோடு தமிழன்பன் தலைமையில் நான் வாசித்தளித்த  கட்டளைக் கலித்துறை பாடலிது.  "நிலவுக்கும் கதிர்கள் உண்டு."  தமிழுக்கும் எண்ணிமை, மின்னியல் எல்லாமே உண்டு.  மின்வலைத் தமிழர் நாம் தான் சற்றே முனைய வேண்டும் என்பதென் உளக்கிடக்கை.  
==============================
===============================
நிலவுக்கும் கதிர்கள் உண்டு...
=============================
விந்தை துலங்க மிளிர்ந்தே எழுகுநல் வீங்கெழிலாய்ச்
செந்தமிழ்க் காவலர்; தீந்தமிழ்ப் பாவலர் சிந்தனையில்,
கந்தமாய் வீசிடும் கன்னித் தமிழின் கதிரதுவே,
புந்தியி லோங்கிப் புலர்ந்தே இனிமை பொழிந்திடுமே!

புனையுங் கவியில், புதுக்குந் தமிழில் பொழுதனைத்தும்
வனையுந் தமிழின் வளமை மறந்தே வாழுஞ்சிலரும்,
வினையாய்த் தமிழை விலக்கி அயல்மொழி மேன்மையுற,
முனைந்தே உழைக்க முயல்கிறார் செம்மைத் தமிழகத்தில்!

காலமும் மென்மை; கவினுறு காட்சிக் கவிதையென,
கோலம் புனைந்தே குவலயத் தோரும் குலைந்துநின்றால்,
சாலத் தமிழினி நாட்டிற் தழைந்தே தமிங்கிலமாய்
வாலலை பட்ட மணல்வீ டெனவே விழுந்தழியும்!

இன்புற் றருந்தமி ழேற்றமும் பெற்று தொடர்ந்திலங்க,
அன்புற் றவையிலென் அன்னைத் தமிழி லழைப்பிதுவே;
மின்னியல் கற்றநல் ஒண்டமிழ்க் காளை விரைந்திடுநீ;
இன்வலை ஏகிடும் என்றமிழ்ப் பாவை எழுந்திடுநீ!

எங்கு மெழுந்த இனிய வலையா மிணையமிதில்
செங்கதி ரன்னச் செழுந்தமிழ் பல்கிச் சிறந்திடவே
தங்கத் தமிழிற் றரவுகள், மெல்லியந் தந்திடுவீர்;
பொங்கு மிணையம் புதுக்கித் தமிழையும் போற்றிடுவீர்

எந்நாளு மெல்லோர்க்கு மேந்தி யிடந்தரு மெம்மினமே!
வந்தார் மொழியதும் வாழ விழைகின்ற வண்டமிழே!
சிந்தையை விற்றுநீ  சீர்த்தி இலக்கியஞ் சேர்ப்பதுவோ?
நந்தமிழ்க் கண்ணை நசுக்கிநீ ஓவியம் நாடுவதோ?

நலந்தருஞ் சாதனை நாளும் படைத்திடும் நந்தமிழர்;
சொலிக்கா திடிந்த சுவரென நிற்பதும் சோதனையோ?
வலம்வருந் தீந்தமிழ் மக்கள் கலையாய் வலையகத்தில்
சலிக்கா திணையந் தழைக்கவே செய்வோம் தருணமிதே!
======================================================
இராச. தியாகராசன்

பிகு: எனக்கென்னவோ மென்பொருள்/ வன்பொருள் சொல்லாட்சிகள்
செயற்கையாய்த் தோன்றியதால், மெல்லியம் = software, வல்லியம் = hardware இவற்றைப் பயன்படுத்துகிறேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக