ஏகம்பனின் உருவந்தான் என்னுள்ளே சுழன்றாட, என்றென்றும் என்னுள்ளே ஏகன் எழில்......
=========================
========================
என்னுள்ளே ஏகன் எழில்...
========================
கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்,
பின்னல்களின் சிக்கலெனப் பீடிக்கும் ஆசைகள்
இன்றிங்கே தானடங்க என்றிங்கே நானறிவேன்
என்னுள்ளே ஏகன் எழில்?
புன்மையெனுந் தீயதனில் புத்தழகுப் பொய்யதனில்,
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்தெரிய,
முன்னவரின் நற்செயலால், முன்வினைகள் பற்றறவோ
என்னுள்ளே ஏகன் எழில்?
இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இக்கடலில் நானுந்தான்
அன்றாடந் தீர்வின்றி ஆடுகிறேன் நாவாயாய்,
உன்மத்த வெறும்பிறப்பை உய்விக்க வந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?
என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே,
அன்னவனை ஆண்டவனை அங்கெங்கோ தேடுகையில்,
தன்னறிவாய் சாந்தமனச் சத்தியத்தைத் தந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?
=============================================
இராச. தியாகராசன்
இராச. தியாகராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக