திங்கள், 29 மார்ச், 2021

ஓங்கலும் உன் வசந்தான்....

அவரைப் போல் நானில்லை;  என்னைப் போல் அவரில்லை;  இவரைப்போல் அவரில்லை; அவரைப் போல் இவரில்லை; இஃதுயர்வு, அஃது தாழ்வு; இவர் கீழே, அவர் மேலே; என்றெல்லாம் கனசோராய் எத்தனை கருத்தாடல்கள்/ கருத்துரைகள்/ வாக்குவாதங்கள்/ வரம்பு மீறல்கள்/ உயர்வு மனப்பான்மைகள்/ தாழ்வு மனவோட்டங்கள்.  இவையனைத்துமே வேடிக்கை விளையாட்டென்னும் வீண் தேடல்களே!  இவ்வுலகில், வெண்மையெனும், மெய்ம்மை அன்பொன்றே நிலையானதாய் ஒளிர்கிறது. 
===============================================================


===============================================================
ஓங்கலும் உன்வசமே....
(கொச்சகக் கலிப்பா)

====================
பார்முழுதும் பட்டுபோல் பருத்தியில்லை; ஆனாலும்
வேர்க்கின்ற வேக்காட்டு வேனலுக்குச் சுகமதுவே!
ஆர்க்கின்ற காகமது அவனியிலே மயிலாமோ?
தேர்வாய்நீ தோகைக்காய் தொல்லைகள் மயிலுக்கே!

தங்கமும் தகரமும் சரிசமமாய் ஆவதில்லை;
அங்கத்தில் தங்கத்தை அன்புடனே அணிந்தாலும்
இங்கின்று தகரத்தின் எத்தனையோ பணிகளுக்கு
தங்கந்தான் ஆகுமோ? சரியாக அறிவாயே!

பொதிசுமக்கும் கழுதையும் போர்க்கலிமா ஆவதில்லை;
நதியருகில் சலவைக்கு நன்றாக உதவுகின்ற
எதிர்ப்பில்லா கழுதையது எந்நாளும் செய்வதையே
அதிவீரக் கலிமாவும் அன்றாடம் செய்வதில்லை!

இல்லமெங்கும் குடிக்கின்ற இன்னீர் யாங்ஙணுமே
துல்லியமாய்த்  தூய்மையுடன் சொரிந்தே வழிந்தாலும்
எல்லீரும் அடுக்களையில் இருக்கின்ற குழாயில்தான்
நல்லதென்று பிடித்திங்கு நாடோறும் குடிக்கின்றார்.

அதற்காக குளியலறை அமைந்திருக்கும் குழாய்களையே
மதியின்றி அகற்றிவிடும் வன்செயலைச் செய்யாமல்
இதந்தரும் அந்நீரை  இன்றுலகில்  தினந்தோறும்  
விதவிதமாய் பயன்படுத்த மேதினியோர் மறுப்பாரோ!

நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவர்க்கே
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் காண்பாய்நீ!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியுனை யடித்தாலும்
அவனியிலே உனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநீ
உவகையுடன் பணிசெய்தால் ஓங்கலும் உன்வசந்தான்!
===================================================
இராச தியாகராசன்

பிகு:
====
வேக்காட்டு வேனல் = வேர்க்கின்ற கோடை, போர்க்கலிமா = போர்க்குதிரை, ஓங்கல் = குன்று, கூற்றுவன் = அந்தகன், அவனி = உலகம், 
செம்மலர் = சிவந்த மலர் (இங்கு தாமரைக்கு ஆகி வந்தது),

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக