செவ்வாய், 19 டிசம்பர், 2023

தேடுங்கள் மானிடரே தேடுங்கள்..

சாதிமதச் சழக்குகளைப் புறந்தள்ளி, பேர்புகழைப் பாராமல், புகழ்/பதவியொன்றே குறிக்கோளாய் வாழாமல், அறவழியே மேன்மையெனக் கொண்டு, மாசுகளில் உழலாமல், மமதையிலே வீழாமல், வித்தகியின் திருவடியைத் தேடுங்கள் உலகீரே!
====================================













====================================
தேடுங்கள் மானிடரே தேடுங்கள்.....
====================================
அறிவென்னு மற்புதத்தை ஆழ்ந்துணர வகையின்றி,
வெறுப்புவளர் சாதிமத  வேற்றுமையே மெய்யென்று,
முறிக்கின்ற மோகத்தில் மூங்கையென உழன்றுநிதம்,
அறமென்னு(ம்) ஆடகத்தை அழிப்பாரே தேடுங்கள்!

சேரிடமு மறியாமல், தேர்ந்தெடுக்கத் தெரியாமல்,
ஆரென்ன சொன்னாலு(ம்) அகமயக்கந் தலைக்கேறப்
பாரினிலே விருதுகளைப் பதவியினை வேட்டையிட்டு,
பேரன்பை மிதிக்கின்ற பேதைகளே தேடுங்கள்!

வரிக்கின்ற நட்புமெது; வாய்த்திருக்குஞ் சுற்றமெது?
எரிக்கின்ற ஏக்கழுத்த இறுமாப்பின் விளையாட்டால்,
அரிக்கின்ற வினையறவே, அழிவில்லா மோனத்தில்
சிரிக்கின்ற சீரணங்கின் திருவெழிலைத் தேடுங்கள்!

கூட்டமாய்க் கூடியே குற்றத்தில் முக்குளித்து,
வாட்டியே வேரறுக்கும் மமதையின் விளையாட்டால், 
மூட்டிவிட்டச் செந்தழலாம் முடிவென்னும் பாசத்தால்
ஆட்டுகின்ற காளியவள் அருளமுதைத் தேடுங்கள்!

பாதையதை மறந்திங்கு பாழ்வெளியாம் மயக்கமெனும்
போதையிலே குளியலிடும் பூவுலகின் மானிடரே;
சாதலெனும் மெய்யென்றே சத்திய மென்றுணர்ந்தே
ஆதியவள் நேரன்பை அன்றாடந் தேடுங்கள்!

குத்துக் காலிட்டக் குழலெழிலைத் தேடுங்கள்;
அத்தன் மயங்குகின்ற அன்புருவைத் தேடுங்கள்:
நத்தும் புல்லாக்கு(ம்) ஒளிரெழிலைத் தேடுங்கள்;
சித்துகள் புரிகின்ற சீருருவைத் தேடுங்கள்!

வித்தைகள் காட்டுகின்ற வித்தகியைத் தேடுங்கள்;
சித்தம் சிலிர்க்கின்றச் சித்தினியைத் தேடுங்கள்;
தத்தை தோள்சேர்ந்தச் சங்கினியைத் தேடுங்கள்;
நித்தம் நிறைவுதரும் நேரிழையைத் தேடுங்கள்!

பித்தம் அறுக்கின்ற பேரெழிலைத் தேடுங்கள்:
கத்தும் கடல்நோக்கும் கன்னிகையைத் தேடுங்கள்;
நித்தில மாலையணி நிரந்தரியைத் தேடுங்கள்:
புத்தம் புரியிலுறை பூவிழியைத் தேடுங்கள்! 

செறிவான வாழ்வுதருந் தேனம்மை தேடுங்கள்;
அறம்வளர் அன்புருவ அழகம்மை தேடுங்கள்;
கறையில்லாக் காலனுறை கண்ணம்மை தேடுங்கள்;
மறைவடிவி லாள்கின்ற மங்கம்மை தேடுங்கள்;

கோதில்லாச் சீரிலங்குங் கொற்றவையைத் தேடுங்கள்;
காதலொடு மாகாலன் காப்பவளைத் தேடுங்கள்;
மாதொரு பாகனவன் மாதவளைத் தேடுங்கள்;
ஆதியெனும் ஆனந்த ஆரமுதைத் தேடுங்கள்!

ஈசனவன் இல்லாளை இடையறாது தேடுங்கள்; 
மாசில்லாச் சோமனுறை வஞ்சியினைத் தேடுங்கள்;
ஊசிமுனை தவம்செய்யு(ம்) உலகம்மை தேடுங்கள்;
சாசுவத தெய்வமாஞ் சக்தியைத் தேடுங்கள்!

சிரிக்கின்ற சங்கரியிஞ் செங்கழலைத் தேடுங்கள்;
கருணையுடன் காக்கின்ற கருமாரி தேடுங்கள்;
வரமருளும் மாரியெங்கள் வாரிதியைத் தேடுங்கள் 
திருவளர் செல்வியின் திருவடியைத் தேடுங்கள்!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
அத்தன் - சீர்காழி அத்தன்
நத்து/ புல்லாக்கு - பழந்தமிழ் மகளிரின் அணிகலன்.
தத்தை - கிளிப்பறவை
புத்தம்புரி இல் - புதுமையான வீடு
ஏக்கழுத்தம் - தானெனும் அகந்தை (ஈகோ)
இறுமாப்பு - தற்பெருமை
பேதை - அறிவிலி
ஆடகம் - பொன்
பாசத்தால் - பாசக் கயிற்றால்
மூங்கை - ஊமை
கோது - குற்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக