செவ்வாய், 26 ஜனவரி, 2021

அறம்வளர்ந் தார்க்குமே அன்பு

திருவாதிரைத் திருநாளில், அச்சீர்காழி அத்தன் மீதில் நான் வனைந்த ஒரு பஃது வெண்பா அந்தாதி
============================== 

          











=============================
அறம்வளர்ந் தார்க்குமே அன்பு
=============================
வீணர்தம் வெற்றுச்சொல் வீச்சறவே வல்லவரும்
நீணிலத்தில் நாடோறும் நேர்மையினை! - தூணிற்
பிறந்தவெம் சீயமால் போன்றிங்கே காக்க,
அறம்வளர்ந் தார்க்குமே யன்பு.1

அன்பெனும் அற்புத ஆடகம் நாடாது
வன்மமும் தேடுதல் வாழ்வாமோ? - கன்னலாய்
வாக்குரைக்க வைக்குமென் வாதவூர் ஈசனே
ஆக்கும் அருளுருவில் ஆள்.2

ஆளும் சிலபேர்க் கடுத்தவரின் வாழ்வினையே 
மாளத் தீய்த்தல் மகிழ்வென்றால் -  நாளும்
தடுத்தவரை காக்குமெங்கள் சாம்பசிவா; தீயவரின்
இடிப்பொடியச் செய்வாய் இனி!3

இனிக்குஞ் சுவையிருக்க இல்லா இலவங்
கனியை விழைவதுவோ காதல்? - மனிதருக்
கிந்நாளில் ஆறறி வேய்க்கு மினக்கவர்ச்சி
எந்நாளும் வீணென் றியம்பு.4

இயம்புகிறார் இல்லையென்(று) எத்தனையோ ஏட்டில்:
மயங்குமுளம் நிச்சயமாய் மாறிச் -  சுயம்புவென
அன்னவனை காணும் அற்புதத்தைப் பெற்றவர்கள்  
புன்மைகளை மாய்ப்பார் பொருது.5

பொருதல் பிழைத்தல் பொறுத்தல் பெறுதல்
உரைத்தல் உறுத்தல் உறைதல் - உறங்கல்
பழித்தலிவை தாண்டி, பனிச்சிவமே நம்மை
எழுச்சியுறத் தூண்டும் இசை.6

இசையை, ஏழிலார் இயற்கை வனப்பை,
புசியும் அற்புதப் பொருளாய் - புசிக்கும்
உள்ளமே ஊத்தையை, ஊழ்க்கும் ஊழலை
விள்ளுதல் என்னே வியப்பு.7

வியக்கப் பழகி, விரும்பி வெறுத்து,
மயக்கம் தெளிந்த மனத்தில் - தயக்கம்
அகழ்ந்து தன்னை அறியும் உணர்வில்
மகிழ்தல் இறைநிலை மாண்பு.8

மாண்புகள் ஈதென மாந்தர்கள் நாளுமே
பூண்டவை நூறாம் புந்தியில் - ஆண்டவன்
உண்டென  உன்னில் உணர்தலே மெய்யெனும்
எண்ணக் கருத்தில் இரு. 9

இருந்திறக்கு முன்றன்  இலையுதிர் வாழ்வில்
மருந்தென மாந்தர்க்கு மகிழ்ச்சி - தருவதன்றி
கூடிப்போ தழிக்கவே கூட்டமாய்ச் சுற்றிடும்
வேடிக்கை யாவுமே வீண்.10
============================================
இராச. தியாகராசன்

வேறு:
======
எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா 
....லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து 
....பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும் 
....பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின் 
....செங்கண் ணருளாலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக