காவடிப் பாட்டொன்றை ஒரு ஐயப்ப பூசையில் 4 வரிகள் ஒருவர் பாடினார். அதன் தாக்கத்தால், நானெழுதிய காவடிப்பாட்டு இது. கூகுளில் காவடி வகைகள் என்று தேடிய போதில், எத்தனைக் காவடிகள் என்று அசந்து போனேன்.
==============================
=======================================
காவடியாம் காவடி கதிர்வேலன் காவடி
=======================================
காவடியாம் காவடி கதிர்வேலன் காவடி;
கந்தனுக்கும் காவடி; செந்திலுக்கும் காவடி;
வேலனுக்கு அரோகரா; வேந்தனுக்கு அரோகரா..
மலையனுக்கு அரோகரா; மருதனுக்கு அரோகரா. (வேலனுக்கு)
(காவடி)
திருத்தணிகை தீரனுக்குத் திருவேலால் காவடி;
சித்திதரும் நந்தனுக்குச் சித்திரத்தால் காவடி;
திருச்செந்தூர் தேவனுக்குத் திருநீறால் காவடி;
சிங்கார சூரனுக்கு தேங்காயால் காவடி! (காவடி)
வள்ளிமண வாளனுக்கு வங்கிவளைக் காவடி;
வள்ளியூர் வள்ளலுக்கு வண்ணத்தேர்க் காவடி;
புள்ளிசைக்கும் பொம்மனுக்கு புங்கங்பூக் காவடி
புவனகிரி வேலனுக்குப் பூந்துகிலால் காவடி; (காவடி)
மாலவனின் மருகனுக்கு மஞ்சளிலே காவடி;
மதுரவயல் முருகனுக்கு மருக்கொழுந்துக் காவடி;
சேலையூரின் சேயனுக்குத் செங்கமலக் காவடி;
செந்தமிழின் செல்வனுக்குச் செந்தூரக் காவடி! (காவடி)
குறவள்ளி காந்தனுக்கு குங்குமத்தால் காவடி;
குன்றிலாடு குமரனுக்குக் கூடையாலே காவடி;
மறத்தமிழர் மாரனுக்கு மாம்பழத்தால் காவடி;
மருதமலை மாயனுக்கு மாவிலையில் காவடி! (காவடி)
விராலிமலை வினயனுக்கு விளாம்பழக் காவடி;
வேங்கையின் மார்பனுக்கு வேப்பிலையால் காவடி
சிராவண சிங்கனுக்குச் சில்லறையால் காவடி;
சிங்கபுரி தேயனுக்குத் தீச்சுடரால் காவடி! (காவடி)
சங்ககிரி நாதனுக்கு சர்ப்பத்தால் காவடி;
சதுரகிரி சாந்தனுக்கு சலங்கையில் காவடி;
தங்கமயில் நேயனுக்கும் சல்லடையில் காவடி;
சம்புவன சாந்தனுக்கு தங்கரளிக் காவடி! (காவடி)
கண்ணழகு காந்தனுக்குக் கர்ப்பூரக் காவடி;
கதிர்காமக் கோலனுக்குக் கற்கண்டால் காவடி;
எண்ணமுற்ற ஏந்தலுக்கு இளநீரால் காவடி;
ஏலகிரி எழிலனுக்கு ஏலக்காய் காவடி! (காவடி)
வேல்கொண்ட வேந்தனுக்கு விளாமிச்சைக் காவடி;
வெள்ளிமலை வாசனுக்கு வெல்லத்தால் காவடி;
பால்போன்ற பாலனுக்குப் பன்னீரால் காவடி;
பழநிமலை வீரனுக்குப் பால்பழத்தால் காவடி! (காவடி)
அள்ளுமெழில் அன்பனுக்கு அன்னத்தால் காவடி;
அரனுடைய மைந்தனுக்கு அரக்கினால் காவடி;
கள்ளமிலாக் கந்தனுக்குக் கருகமணிக் காவடி;
கந்தமலை கொற்றனுக்கு கதிர்நெல்லால் காவடி! (காவடி)
குடவாசல் கொம்பனுக்குக் கொஞ்சுதமிழ்க் காவடி;
விருதுநகர் வள்ளலுக்கு வெங்காயக் காவடி;
வடபழனி வம்பனுக்கு மயிற்பீலிக் காவடி;
மயில்கொண்ட மலையனுக்கு மகிழம்பூக் காவடி! (காவடி)
======================================
இராச. தியாகராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக