சிந்துவேந்தனுக்குப் பிறந்தநாள் (டிசம்பர், 11ஆம் நாள்). மக்கள்கவி, மாந்தநேயன், நாட்டுப்பற்றாளன், விடுதலைப் போராட்ட வீரன், சமுதாயச் சீர்திருத்தவாதி, என்றெல்லாம் ஊரெங்கும் போற்றப்பட்ட மகாகவியின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் வெறும் 14 பேர்கள் மட்டுமே! இருக்கும் போது ஒருவரின் மதிப்பைப் போற்றாது விட்டுவிட்டு, இல்லாமல் போன பின்னர், நம்நாட்டு அரசியலார் செய்கின்ற மரியாதை என்ன; சூட்டுகின்ற கணக்கிலடங்கா மாலையென்ன; நடத்துகின்ற நாடகமென்ன?
கம்பன், புகழேந்தி, ஔவை, ஒட்டக்கூத்தர், காளமேகம், தாகூர், பாவேந்தர், கவியரசு, சேக்சுபியர், காஃப்கா, யீட்சு, கீட்சு, வேட்சுவர்த்து, நெருடா, எசுரா பவுண்டு, பைரன் இப்படிப் பலரின் (இன்னும் பல கவிஞர்கள்) பாடற் படைப்புகளில் மூழ்கித் திளைத்தே அகங்குளிரச் சுவைத்திருந்தாலும், நம்முடைய சிந்து வேந்தனின் கவிதைகளே என்றன் முதல் காதலி; அவனே என்றன் கவிதைகளின் தோணி. இந்தப் பிறந்தநாளில் அவனுடைய மொழியாற்றலை, கவித்திறனை, நாட்டுப்பற்றை, சமத்துவ அறத்தை, குமுகாயச் சிந்தனையை எண்ணி நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
=========================================
தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்
காணிநிலம் காளியிடம் கேட்டவனின் பாக்களிலே
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
=============================
=============================
பாட்டன் வரவேண்டும் இன்று!
=============================
மொழியென்னும் தமிழ்புரவித் தேரைப் பூட்டி,
.....மோடுமுட்டிச் சழக்ககலப் பாட்டுந் தீட்டி,
வழக்கென்றும் மன்றென்றும் அலைந்தே சோர்ந்த,
.....மாகவிக்கின் றூரெல்லாம் முழங்கும் வாழ்த்து!
செழுமையுடன் சுற்றமதோ வாழ்த்த வில்லை;
.....செருக்கர்கள் நீபிழைக்க விடவு மில்லை;
இழுத்திழுத்தே ஊரெங்கும் ஓட விட்டே,
.....இளைப்பார இடமுமின்றி மாய்ந்தா யன்றே!
துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை பூச்சு;
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பேச்சு!
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்;
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்!
நடிக்கின்ற அரசியலார் செய்யும் கேட்டை
.....நயபுடைக்கும் நெருப்புநிகர் கவிதைச் சாட்டை!
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!
மற்றவரின் தாய்மொழியை அழித்தே இங்கு,
....மயக்குமொழி பேசிநிதம் ஏய்த்தே வாழும்,
குற்றமன உணர்வுநிலை ஏது மில்லாக்
.....கொக்கரிக்கும் மேட்டிமையின் திட்டம் மாய,
முற்றிவிட்ட பைத்தியஞ்செய் சட்டஞ் சாய,
.....முத்தமிழால் சொல்லடுக்கும் பாட்டுத் தீயால்,
வற்றிவிட்ட வண்டமிழை காக்க வென்றே,
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!
கரிமிதித்தோ காலனவன் கவர்ந்தா னும்மை?
.....கால்வருடிக் கயவருனைக் காட்டித் தந்தே,
சிரித்தபடி சிலுவையிலே அறைந்தாற் போலச்
.....தீயுளத்தோர் வஞ்சகமாய்ச் சாய்த்து விட்டார்;
எரித்தழிக்க முடியாத காற்றின் வீச்சாய்,
.....எத்தரையே பொசுக்கிவிடும் கவிதை மூச்சாய்,
மரிக்கொழுந்தின் மயக்குமந்த மணத்தை போல,
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!
==================================
இராச. தியாகராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக