பலருக்கும் அன்பான காதலி இருக்கக் கூடும். அவருடனேயே திருமணமும் ஆகியிருக்கக் கூடும்; ஆகாமலும் போயிருக்கக் கூடும். ஆனால் காதலென்பது மெய்ம்மை. என்னுடைய உள்ளங்கவர் காதலி யாரென்று கேட்கிறீர்களா?
================================
மகாகவி பாரதி |
================================
யாரென்றன் உள்ளங்கவர் காதலி?
================================
காவதனிற் கதிர்பரப்புங் கதிரவனைக் காண்கையிலே,
மேவுநிலா நெஞ்சகத்தில் நெருஞ்சியெனத் துளைக்கையிலே,
பூவமர்ந்து வண்டொன்று பூந்தேனைச் சுவைக்கையிலே,
நாவமர்ந்த நற்கவிதை நறுந்தேனாய் சுரக்கையிலே,
மழலைகள் மண்மேலே மலர்போலப் பறக்கையிலே,
குழலூது மிசைகூட குளிர்வளியா யுறைக்கையிலே,
எழிலாரு மோவியமு மினித்தென்னை யிழுக்கையிலே,
விழிக்குமந்த வைகைறையும் வெண்பட்டா யொளிர்கையிலே,
அன்பின்றி எதற்கிந்த அவலமென்றே அழுகையிலே,
என்வாழ்வில் நான்தளர்ந்தே இடிந்தொருநாள் விழுகையிலே,
உன்மத்தம் பிடித்தவன்போ லோடித்தேய்ந் தெரிகையிலே,
பின்னல்க ளென்வாழ்வின் பேதமையாய்ச் சிரிக்கையிலே
எனைச்சேர்ந்த என்னவளும் என்னருகிற் றானிருந்தே,
பனித்துகளின் சாறெனவே பற்றியெனைப் பரிவுடனே
கனிச்சுவையா யினிக்கின்ற கற்கண்டுக் களிப்பூட்டி,
மனச்சோர்வைக் கணப்போதில் மாயமென மாற்றிடுவாள்!
உள்ளமதி லின்பஞ்சே ருயர்வான தருணத்தில்,
கள்ளமற இயல்பெழிலாய்க் கைக்கோத்து வந்திடுவாள்;
வெள்ளமென இயற்கையவள் வெளிப்போந்த நிலையழகை,
உள்வாங்கும் வேளையிலு முடனிருந்தே சுவைத்திடுவாள்!
அகவையோ மீறியுனைக் காடணுகும் வேளையிலே,
முகநூலில் பகர்கின்றாய்; அகச்சுவையின் காதலியை!
நகைப்புத்தான் வெட்கமில்லை; நானிலத்தோர் சிரிப்பாரே!
பகிர்விதுவோ பண்பென்று பார்முழுதும் கரிப்பாரே!
சீரணங்காய்த் துணையிருக்கச் சீயமென மகனிருக்க,
யாரவந்தக் கள்ளியென யாவருமே கேட்பீர்கள்;
சாரதியாய்க் கவிச்சொடுக்கித் தமிழ்த்தேரி ழுத்திட்ட
பாரதியின் கவிதையெனும் பைங்கிளிதா னக்கள்ளி!
காலமெலா மென்னுடனே காதலியாய்க் கற்பனையில்,
ஆலெனவே ஆழ்ந்தூன்றி அரவணைத்து நிற்பவளைச்
சீலமொடு சீர்த்திகளைச் சேர்த்திருக்க வைப்பவளை,
மேலிருந்து படியுங்கள்; மீண்டுந்தான் படியுங்கள்!
=========================================
இராச. தியாகராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக