திங்கள், 30 ஜூலை, 2012

பெண்ணே நீயும் புறப்படு....

கவிதை வானில் பாவரங்கில், புலவரேறு, தமிழ்மாமணி,  காலஞ்சென்ற அரிமதி தென்னகனார்  தலைமையில்,  நான் வாசித்தளித்த சந்தப் பாடலிது!  இன்று (13.10.2019), பாவேந்தரின் பெயரன், கலைமாமணி,பாவலர் திரு கோ.பாரதி அவர்களின் தலைமையில், மேலும் மெருகேற்றி, சில பத்திகள் சேர்ந்து, பெண்மகள் நாளுக்காய்ப் பாடினேன்.
=======================================

 =======================================


எடுப்பு:
=======
மங்கை நீயும் ஓங்கலிடை,
கங்கை போன்று பொங்கியிங்கே,
தங்கத் தம்ழாய்த் தாரணியில்,
எங்கு(ம்) உயர்வாய் மண்மேலே!

தொடுப்பு:
==========
புறப்படு..... புறப்படு.....
புத்தம் புதிய விதியாகப்,
பொலிந்தே ஒளிரப் புறப்படு! புறப்படு!

முடிப்பு:
========

மண்ணில் மலரும் பூப்போலே,
மலர்ந்து மணக்கும் பெண்மகளே!
மென்மை மட்டும் வாழ்வினிலே
மேன்மை யாமோ புறப்படு!               (புறப்படு)

பேதை என்றே இருப்பதால்
பேரும் புகழும் வந்திடுமோ?
சூது நிறைந்த கயவரையே
சுட்டெ ரிக்கப் புறப்படு!                        (புறப்படு)

உள்ள துறைகள் அனைத்திலுமே
உலகப் பெண்கள் இருக்கையிலே
கிள்ளுக் கீரை  இந்தியரோ?
கிளம்பிக் கலக்கப் புறப்படு!               (புறப்படு)

நாதம் ஒலிக்கும் மணியாக
நங்காய் நீயும் புறப்படு!
பாதம் மிதிக்கும் மண்ணதனை
பாதை ஆக்கப் புறப்படு!                      (புறப்படு)

வீழ்ந்தே கிடக்கும் கல்லாநீ?
வெற்றித் திருவின் உருவம்நீ!
சூழுஞ் சழக்கைக் கொளுத்திடவே
சுழன்றிங் கெழுந்தே புறப்படு!         (புறப்படு)

தாயாய், மகளாய், அன்பிழியுந்
தார(ம்) எனவே பல்லுருவ
மாயாவடிவம் நீயென்றே
வாய்மை யுணர்த்தப் புறப்படு!       (புறப்படு)
==========================================
இராச. தியாகராசன்.