செவ்வாய், 31 ஜூலை, 2012

தேடித் தேடி.........

தேடித் தேடி என்ற தலைப்பில் கவி பாட வேண்டுமென்றார் சந்தமவை முன்னவர் - நானும் பாடினேன் பாட்டென்று ஏதோவொன்றை! தமிழ் வணக்க/ அவை வணக்கப் பாடல்களை எப்போதும் போல மரபுப் பாட்டியல் வடிவிலேயே எழுதினேன். ஆனால் “தேடித் தேடி” என்ற தலைப்பு என்னை நிறைய யோசிக்க வைத்துவிட்டது. ஆகவே அந்தத் தலைப்பிலான பாடலை இந்தவிதமான கட்டமைப்பு என்றெண்ணி எழுதாமல், உள்ளத்தில் பொங்கிய எண்ணத்தை எழுத்தில் வடித்தேன். ஆனால் எனை அறியாமலேயே தரவு கொச்சகமாய் அமைந்துவிட்டதென்று பாவரங்கத் தலைவர் கவிமாமணி இலந்தையார் அவர்கள் சொன்னார்கள். இதோ அந்தப் பாடல்:-
=================================================================

=================================================================
தமிழ் வணக்கம் (கட்டளைக் கலித்துறை)
அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனும் அற்புதமாய்,
கன்னல் சிரிப்புடன் பிள்ளை யுருவெனும் கற்பகமாய்
பொன்னின் நிறத்துடன் நித்த முதித்திடும் பொற்கதிராய்
என்னி லுறைந்தெனை யென்றும் வளர்த்திடும் என்தமிழே!

கண்கள் மலர்ந்திடப் பின்னல் சுழற்றிடும் பெண்ணழகாய்,
விண்ணி லுலவிடுந் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்,
கண்ணில் புகுந்திடும் மின்னல் வடிவெனுங் கற்பனையாய்,
எண்ணம் நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் என்தமிழே!

தேடித் தேடி  (கொச்சகக் கலிப்பா)
செந்தழலைத் தளிரென்றும் செம்பனியைத் தீயென்றுந் 
தேய்ந்தலைந்தே தேடும்நான் தேய்ந்தோய்து  செல்வதெங்கே?  
வெந்தெரிய வாழ்வினிலே வேதனையைத் தேடும்நான்; 
கந்தனருள் தேடாமல் கருநிழலில் வெல்வதென்ன?              (கருநிழலில்)

தினந்தினமும் தீக்குளியல்; தீராத மூச்சடைப்பால், 
இனம்புரியா நெஞ்செரிச்சல்; ஏனிந்த விளையாட்டு? 
உத்தமியின் விதிவழியே உயிராடுங் கயிற்றாட்டம்; 
அத்தனையும் ஆசைகளால், ஆவலெனும் பூசைகளால்!     (ஆவலெனும்)

வந்ததுவும் தவறில்லை, வளர்ந்ததுவும் தவறில்லை; 
வெந்தரண வேல்வலியில் வெறுங்கூடாய் வாழ்வெதற்கு? 
வீசுகின்ற காற்றலையில் வெருண்டோடுஞ் சருகெனவே 
பாசவலை வாழ்வொருநாள் பட்டெனவே விட்டுவிடும்!       (பட்டெனவே)

சங்கிலியாய்ப் பின்னலிட்ட சிக்கெடுக்கா நூற்கண்டை 
என்கரத்தில் ஏந்திங்கே இழைநுனியைத் தேடுகையில்; 
அறுந்தநூல் கையில்வர வெறுங்கனவே வாழ்வென்னும்
முடிவுதனை காண்கின்றேன்; விடியும்வ ரையிதுதான்!      (விடியும்வரை)

இறங்கிவிட்ட நாள்முதலா யிருக்கின்ற நாள்வரையில் 
இறக்காத பேருண்மை; இருப்பிற்கோர் காவலெனும் 
நெறிமுறையை மறந்துவிட்டு நிழலான வாழ்வினிலே
அறியாம லாடுகிறேன்; ஆட்டங்கள் போடுகிறேன்!             (ஆட்டங்கள்)

சிங்காரந் தேடுமுடல் சில்லென்றும் ஆகயிலே, 
தங்கத்தை நாடுமுடல் தழல்தின்னப் போகயிலே, 
பாவங்கள் படிந்திலங்கும் பாழான மெய்ப்பையால், 
சீவனெனும் சிவலிங்கச் சிரிப்பதனைத் தேடுவனோ?   (சிரிப்பதனை)

ஆட்டத்தை விழைந்திங்கே ஆர்ப்பரிக்கத் தேடும்நான்;
அத்தனவ னளிக்கின்ற அமைதியைத் தேடுவனோ?
அருகிருக்கும் அழகறியா(து) ஆசுகளைத் தேடும்நான்;
அன்பொன்றே மேலாமென் றகிலவனைத் தேடுவனோ?(அகிலவனை)

இருக்கின்ற தைவிட்டே எங்கெங்கோ தேடும்நான்;
இருளில்லா இறப்பொன்றே இயல்பென்று தேடுவனோ?
உருவாகு முவர்கடலி லுல்லாசந் தேடும்நான்;
அரன்வழியே மேலென்ற அறத்தைத்தான் தேடுவனோ?  (உண்மைதான்)
==================================================
இராச தியாகராசன்

பிகு:
====
ஆசுகளை = குற்றங்களை/ பிழைகளை
உருவாகும் உவர்கடல் = ஆண்/பெண் முயங்குதலில் உருவாகும் உப்புவேர்வை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக