செவ்வாய், 31 ஜூலை, 2012

சில்லுக் கருப்பட்டியே......

கிராமிய மணம் வரிசையில் நானெழுதியப் பாட்டு.  கண்டும் காணாமல் கண் வீசிப் போகின்ற பெண்மகளை நோக்கி, அலைபாயும் காதலன் ஏங்கிப் பாடுவதாக வனைந்திருக்கிறேன்.  இதே வகையான சொல்லாட்சி கொண்ட பல பாடல்களை நாட்டுப்புறப் பாடல்களில் காண்கிறேன்.  அவற்றை எவரும் முயன்று அச்சிடவோ தொகுக்கவோ பெரும்பாலும் முயலவில்லை என்றே தோன்றுகிறது. அந்த வகையாக நாட்டார் பாடல்களைப் படித்தவுடன் ஏற்பட்ட தாக்கத்தால் நான் வனைந்த இரண்டாவது பாடலிது.
=====================================================================

=========================================================

சில்லுக் கருப்படியே!....
===================
கருப்பு மேலாக்கும்,
காதோரம் லோலாக்கும்,
காத்துலதான் அலபாய,
கஞ்சிச்சட்டி ஏந்திகிட்டு,
கரைமேலே போறவளே!
காக்கா அலம்புறது
காதுலதான் கேக்கலியோ?
செரவிக் கூட்டமெல்லாம்
சடசடன்னு போகயில
சஞ்சலத்தால் எம்மனசு
சருகாத்தான் ஆகலியோ?
சில்லுக் கருப்பட்டியே!
சிறுவந்தா டுடுத்தவளே!
சின்னமலை சிறுபழமே!
சரக்கொன்ன ராசாத்தி;
இருவாச்சிப் பூமணமே;
வரகரிசிப் பழஞ்சோறும், 
கருவாட்டு வெஞ்சனமும், 
கம்மங்கூழும் தாயேண்டி!
கொடிகால் வெத்தலையும்;
மாயவரம் நெய்ச்சீவல்;
விருதையின் சுண்ணாம்பு;
வரதம்பட்டி போயலையும்;
உன்கையால் மடிச்செனக்கு 
ஊட்டிவிட வாயேண்டி! 
தெனந்தெனம் ஒனக்காக
சீவன்நான் கிடக்குறனே
சிங்காரி ஒம்மனசு
சத்தே எறங்காதோ?
=====================
இராச. தியாகராசன்.

லோலாக்கு = காது சிமிக்கி (நாட்டார் வழக்கு)
அலம்புதல் = கத்துதல், கரைதல் (நாட்டார் வழக்கு)
செரவி = இரவில் சிறிதாக ஓசையெழுப்பி வயலில் 
நெல் திருடும் சிரவி என்கிற பறவைக் கூட்டம்.
கருவாட்டு வெஞ்சனம் = உப்புக்கண்ட வறுவல்
போயலை = புகையிலை
சத்தே = சற்றே
=====================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக