நாட்டார் பாடல் வகையில், ஆவல் மீதூர, ஆண் கேட்பதும், நாணம் மீதூர பெண்
மறுதளிப்பதுமாக பாடலை வனைந்தேன். மேலூரு மச்சானே, கீழக்கரை சந்தனமே, கெழக்குவெளிச் சூரியனே, ஆசைக்கார மாமாவே, பாசக்கார மச்சானே, அத்த பெத்த இரத்தினமே, அழகுருவ அஞ்சுகமே, சிவகாசி சீலக்காரி, செந்தூரப் பொட்டுக்காரி, செவ்வெளநீர் இனிப்புக்காரி, சிரிக்கும் சின்னவளே, ஒலாந்தைப் பூக்காரி, எந்திருட்டு ராசாவே, என்னாசைக் களவாணி, நெஞ்சத்து நெலாமவளே, செவ்வரத்தைப் பூவாயி, புவனகிரிப் பூச்சரமே, புத்துருக்கு நெய்மணமே!
=================================================================
அட அட அட என்னவொரு நாட்டுப்புற மொழிவழக்கு? பாடல் என்னுடையதென்றாலும், பெரும்பான்மை சொல்லாட்சி நாட்டுப்புற பாடல்களில் வருபவையே!
==================================================================================================================================
புவனகிரிப் பூச்சரமே....
=======================
ஆண்:
ஆத்துமீனு அயிரமீனே!
அத்தபெத்த ரத்தினமே!
அணைக்கர ஓரத்துல,
அஞ்சுகமே வாயேண்டி!
அருச்சலா சேத்தணைக்க….
பெண்:
மேலூரு மச்சானே!
மேலாக்கு போட்டுபுட்டேன்;
வெண்ணாத்தங் கரையோரம்
விரசாத்தான் வருவேனோ?
மாராப்பொடு சேத்தணைக்க….
ஆண்:
சிவகாசி சீலகட்டி,
செவ்வெளநி காயாட்டம்,
சிங்கார கருக்கலிலே,
சின்னவளே வாயேண்டி!
செந்தூரஞ் சேத்தணைக்க….
பெண்:
கீழக்கரச் சந்தனமே!
கெழக்குவெளிச் சூரியனே!
கருக்கலிலே வருவேனோ?
கண்ணாளம் கட்டாமல்,
கருவமணி சேத்தணைக்க….
ஆண்:
செவ்வரத்த பூவோட,
தெம்மாங்கு பாடிக்கிட்டு,
சின்னமலை காட்டருகில்,
சீக்கிரமே வாயேண்டி!
தெனந்தெனமுஞ் சேத்தணைக்க....
பெண்:
ஆசக்கார மாமாவே;
பாசக்கார மச்சானே;
தனியாத்தான் வருவேனோ,
மஞ்சகயிறு கட்டிக்காம,
மயங்கியே சேத்தணைக்க....
ஆண்:
ஒலாந்தை பூச்சூடி,
நெலாமவளே நிசிநேரம்
ஏரிக்கரை ஓரமாத்தான்
மணமணக்க வாயேண்டி!
வாரித்தான் சேத்தணைக்க....
பெண்:
என்னாசக் களவாணி,
எந்திருட்டு ராசாவே,
ஊர்பாத்துச் சேராம,
ராத்திரிக்கு வருவேனோ,
ரகசியமா சேத்தணைக்க....
ஆண்:
புவனகிரிப் பூச்சரமே!
புத்துருக்கு நெய்மணமே!
புதுசாத்தான் கேக்குறயே?
பொஞ்சாதி ஆக்கிருவேன்;
போதெல்லாஞ் சேத்தணைக்க….
=========================
இராச. தியாகராசன்.
பிகு:
====
அருச்சல் = அவசரம் (வட்டாரவழக்கு)
கருவமணி = கருகமணி (வட்டாரவழக்கு)
கண்ணாளம் = திருமணம் (வட்டாரவழக்கு)
செந்தூரம் = குங்குமம் (வட்டாரவழக்கு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக