செவ்வாய், 31 ஜூலை, 2012

கண்ணம்மா……

நாட்டார் பாடல்களைச் சுவைப்பதும் சுகம்;  நாட்டார் பாடல்களின் சாயலில் பாட்டெழுதுவதும் சுகம்.  இந்தப் பாடலில், ஆவல் மீதூர,  ஆண் தன் உளங்கவர்ந்தவளைக் கேட்பதாகப் பாடலை வனைந்தேன்.  
================================================

================================================
ஆத்தூரு சாலையில
ஆத்தங்க ரையினிலே
அரசம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
ஆடிவர வேணுமடி பொன்னம்மா!         (ஆடிவர)

மானாம ருதையில
மாடுவிக்குஞ் சந்தையிலே
வாதம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
வஞ்சிவர வேணுமடி பொன்னம்மா!      (வஞ்சிவர)

பச்சவயக் காட்டினிலே
பயத்தங் கருதிருக்க
பாக்கம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
பாடிவர வேணுமடி பொன்னம்மா!          (பாடிவர)

ஏத்தமெ றைக்கயிலே
ஏரிக்கர மோட்டருகில்
எலந்தம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
இருட்டிவர வேணுமடி பொன்னம்மா!   (இருட்டிவர)

பூவரசங் காட்டருகில்
பூத்திருக்கும் கொளக்கரையில்
புங்கம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
பொழுதுவர வேணுமடி பொன்னம்மா!  (பொழுதுவர)

நாட்டரசங் கோட்டையில
நாகராசன் செலையருகே
நாவம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
நாடிவர வேணுமடி பொன்னம்மா!           (நாடிவர)

சிவகங்கச் சீமையில
சிலுசிலுக்குந் தோப்பருகே
தேக்கம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
தேடிவர வேணுமடி பொன்னம்மா!        (தேடிவர)

கரிசவயக் காட்டருகே
கடலூரு ரயிலடியில்
கருவம ரத்தடியில் - கண்ணம்மா - நீ
கருக்கில்வர வேணுமடி பொன்னம்மா!   (கருக்கில்வர)

எலவங்காட் டருகினிலே
இருவாச்சி பூக்கயிலே
இலுப்பம ரத்தடியில் - கண்ணம்மா - நீ
இழுத்தணைக்க வேணுமடி பொன்னம்மா!   (இழுத்தணைக்க)

உருவயாத்து மணக்கரையில்
ஓலப்பொட்டி பின்னயிலே
உசிலம ரத்தடியில் - கண்ணம்மா - நீ
ஒதுங்கிவர வேணுமடி பொன்னம்மா!        (ஒதுங்கிவர)
==============================================
இராச. தியாகராசன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக