புதன், 24 ஜனவரி, 2024

எம்புதுவை வாருங்கள்...

நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள்.  1977இல் இருந்தெனையொரு  பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக),  குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட,  போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!

என்றுமே எம்புதுவை பாவானம் தான்.  எத்தனை மரபியற் கவிகள்;  எத்தனைப் புதுக்கவிகள்;  எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்;  எத்தனைக் கலைமாமணிகள்;  எத்தனைத் தமிழ்மாமணிகள்.

==============================













==============================
பா - வானம் எம்புதுவை
=======================
மன்னவரை, மாடதனை, மாண்பெனவே கொள்ளாமல்,
மன்பதைக்கே வாழ்ந்திட்ட மாகவியின் பாச்சுவையே
என்புரட்சிப் பாவலனின் ஏற்றமிகு பாச்சொடுக்கே
இன்பமெனக்(கு) என்றிருக்கும் இன்னூராம் என்புதுவை!

பாருலகைப் பாடியநம் பாரதியாம் நாவரசைப் 
பாரதியின் தாசனவன் பாசமிகு பாவரசை, 
வேருடனே தாங்கிநின்று மேதினியோர் ஏத்துபுகழ்ப் 
பேரதனை எந்நாளும் போற்றிநிற்கும் என்புதுவை!

தெண்டிரை ஆழிசூழ் செம்புலத்து மண்ணிலே, 
வண்டமிழ் வண்ணமும், வள்ளையும் சிந்துமாய்த் 
தண்ணிலவுச் சொல்லடுக்கிச் சந்தமணப் பாப்புனைய, 
விண்முட்டுச் சங்கொலியாய் வீற்றிருக்கும் என்புதுவை! 
  
பண்ணொடு பாங்கெழிற் பாட்டியலின் சாற்றுடனே, 
எண்ணமுகிழ் எந்தமிழின் இன்பத்தேன் ஊற்றெனவே, 
வண்ணஞ்சேர் பாவொளிரும் மன்னுதமிழ் நாற்றெனவே, 
எண்ணிலாப் பாவரங்கம் ஏந்திநிற்கும் எம்புதுவை!

கண்ணிமைப்பில் கன்னற்பா கட்டுகின்றார் பாரய்யா;
மண்ணகத்து மாந்தரெலாம் வாழ்த்துகின்ற சீரய்யா;
தண்டமிழைத் தாழாது தாங்கிநிற்கும் பேரய்யா;
ஒண்டமிழர் வேங்கையென ஓங்கிநிற்கும் ஊரய்யா!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழின் சொல்லெடுத்துத்
தூவானந் தூவுகின்ற தூறலெனப் பன்னூறாய்,
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனையும்
பாவானம் என்புதுவை பார்!
=======================================
இராச. தியாகராசன்

பிகு:
====
மாடதனை - செல்வத்தை, மன்பதை - மண்ணுலகு, இன்னூர் - இனிய ஊர், தெண்டிரை - தெள்ளிய அலை, ஆழிசூழ் - கடல்சூழ், வண்டமிழ் - வளமைத் தமிழ், தண்ணிலவு - குளிர்நிலவு, தண்டமிழ் - தண்மை+தமிழ், கன்னற்பா - கரும்பனைய பாட்டு,  ஒண்டமிழர் - ஒளிர்கின்ற தமிழர், பா-வானம் - பாக்கள் நிறைந்த வானம்.

கருத்துகள் இல்லை: