செவ்வாய், 31 அக்டோபர், 2023
என்னிடத்தே உண்டு...
சனி, 28 அக்டோபர், 2023
அரவமில்லா இரவுப் பொழுது..
புதன், 25 அக்டோபர், 2023
பாரதி நான்மணி மாலை
========================================
புதன், 18 அக்டோபர், 2023
வாழ்க்கைக் கல்வி
இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம். கற்றலே மேன்மை. நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே. கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம். ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும். நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது. காலத்தீ புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."
====================================
(கட்டளைக் கலித்துறை)
===================
பரந்த மரத்திலே நூலின்றிச் சிக்கிய பட்டமதைத்
துரட்டி யுடனேறி தொற்றி யெடுக்கத் துணிந்தவனை,
வரிப்பூண் மினுக்கும் மிளாறால் விளாசிய மாமனது
கரந்தடி கூடப் புவியில் தகவான கல்வியன்றோ?
கண்ண னவரின் கடைக்கு விரைந்துநீ காற்றெனவே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம் ஆட்டமெனும்
கண்கட்டில் விட்டதாற் கண்ட அடிகூடக் கல்வியன்றோ?
கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமே
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளுங் காதுபற்றிக்
கட்டறக் குட்டிடக் கற்றதும் கற்பகக் கல்வியன்றோ?
பள்ளிக் கழிவறைப் போந்தே திருடன்போல் பாதகமாங்
சுள்ளெனச் சொல்லியே ஆசான் அரும்பால சுந்தரவர்,
கள்ள மழிக்கக் கொடுத்த அடிகூடக் கல்வியன்றோ?
நற்றாயும் தன்னிடைப் பாரம் இறக்கிய நாள்முதலாய்,
உற்றிடுந் துன்பமே ஆயிர மானாலு முண்மையிதே;
கற்பிக்கும் யாவுமே கோடி யெனுமருங் கல்வியன்றோ?
===========================================
இராச. தியாகராசன்
பிகு:
மிளாறு = தண்டிக்கும் பிரம்பு/ மெல்லிய குச்சி.
கரந்தடி = மறைந்து சடுதியில் அடித்தல்/ கொரில்லாப் போர்முறை.
நுடங்கிடை = சிற்றிடை/ நுட்பமான இடை.
கோது = குற்றம்/ பதர்.
பெண்டிரின் உண்மை உயர்வு...
எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்! எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்? வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்!
காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும் கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி; இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை. இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள். கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள். வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.
===========================================
===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென,
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத்
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக்
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!
மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?
அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்;
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும்
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்
சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில்,
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும்,
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளைந்திடும் முத்து!
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை
மூழ்கித் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில்,
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில்,
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!
நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க்
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப்
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!
மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்,
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர்
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!
பல்சுவை யுணவால், பல்வகை யணியால்,
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ?
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும்
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.
பிகு:
=====
நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல், முத்துக் குளித்தல் (பரதவர் மீனவர் எனில், நுளையர் முத்துக் குளிப்பவர்)