புதன், 18 அக்டோபர், 2023

வாழ்க்கைக் கல்வி

இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம்.  கற்றலே மேன்மை.  நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே.  கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம்.   ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும்.  நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது.  காலத்தீ  புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."

====================================








====================================
வாழ்வியற் கல்வி: 
(கட்டளைக் கலித்துறை)
===================
பரந்த மரத்திலே நூலின்றிச் சிக்கிய பட்டமதைத் 
துரட்டி யுடனேறி தொற்றி யெடுக்கத்  துணிந்தவனை, 
வரிப்பூண் மினுக்கும் மிளாறால் விளாசிய மாமனது 
கரந்தடி கூடப் புவியில் தகவான கல்வியன்றோ?

கண்ண னவரின் கடைக்கு விரைந்துநீ காற்றெனவே
எண்ணெய் யுடன்வா வென்றுபணம் தூக்குடன் என்றெனையே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம் ஆட்டமெனும்
கண்கட்டில் விட்டதாற் கண்ட அடிகூடக் கல்வியன்றோ? 

கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமே 
சிட்டின் சிறகாய் சுழன்றா டுகின்றவென் சிந்தனையாங் 
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளுங் காதுபற்றிக் 
கட்டறக் குட்டிடக் கற்றதும் கற்பகக் கல்வியன்றோ? 

பள்ளிக் கழிவறைப் போந்தே திருடன்போல் பாதகமாங் 
கொள்ளி யிடும்புகைக் கோதாம் பழக்கத்தைக் கொன்றுவிடச் 
சுள்ளெனச் சொல்லியே ஆசான் அரும்பால சுந்தரவர், 
கள்ள மழிக்கக் கொடுத்த அடிகூடக் கல்வியன்றோ? 

நற்றாயும் தன்னிடைப் பாரம் இறக்கிய நாள்முதலாய், 
வெற்றுடற் றீயிலே வெந்தங்கு வெண்ணீறாய் வீழும்வரை, 
உற்றிடுந் துன்பமே ஆயிர மானாலு முண்மையிதே; 
கற்பிக்கும் யாவுமே கோடி யெனுமருங் கல்வியன்றோ?
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
துரட்டி = மரமேவிய காய்/ பொருளை சிக்கலின்றி எடுக்கும் கோல்.
மிளாறு = தண்டிக்கும் பிரம்பு/ மெல்லிய குச்சி. 
கரந்தடி = மறைந்து சடுதியில் அடித்தல்/ கொரில்லாப் போர்முறை.
நுடங்கிடை = சிற்றிடை/ நுட்பமான இடை.
கோது = குற்றம்/ பதர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக