உள்ளம் செய்யென்று சொன்னதால், பாரதி நான்மணிமாலை ஒன்றைக் கோத்திருக்கிறேன்.
========================================
========================================
========================================
பாரதி நான்மணிமாலை.
=======================
காப்பு
======
நோக்கறிய வைத்துவிடும் பாரதியென் வாக்கென்னும்
ஊக்கம் வளர்க்கும் ஒளி.
(பாரதி = மாகவி; பாரதி = கலைமகள்)
வெண்பா
========
ஆணிப்பொன் ஆடகமா யள்ளியெனை ஆட்டுவிக்கும்
மாணிக்கப் பாவலனே வண்டமிழின் காவலனே!
கேணி,நிலங் காளியிடம் கேட்டவனின் பாவெனக்கு
வாணியவள் தந்த வரம்.
கட்டளைக் கலித்துறை
======================
தேச மது(ம்)உயர் வுற்றி டவேவழி தேடியவன்;
நாச மறுநிலை யற்றி டவேதமிழ் நாடியவன்;
பாச மிகு(ம்)உளம் பெற்ற தனால்கவி பாடியவன்;
ஆசு களுமெரிந்(து) இற்றி டவேநட மாடியவன்!
எண்சீர் விருத்தம்
==================
சுழல்கின்றச் சூறையெனுங் காற்றைப் போன்றே
....தொன்மத்தைத் தொல்தமிழால் மாற்றும் வீச்சே!
தழலென்னுந் தீக்கதிரின் தீண்டல் போன்றே
....சலிப்பின்றி என்பாட்டைத் தூண்டும் மூச்சே!
எழிற்றோப்பி(ல்) ஓர்ந்துருகுங் குயிலைப் போன்றே
....என்னுள்ளே என்புருக அணைக்குந் தீயே!
உழல்கின்ற ஆழியதன் சீற்றம் போன்றே
.....உயிர்த்துளியின் பாட்டெடுத்து வாராய் நீயே!
அகவற்பா
===========
விண்ணுயர் தமிழிலே விஞ்சிடும் புகழ்செய்
தண்ணெழிற் பாட்டிலே தாரணி போற்றிடக்
கோணலைக் கேடினைக் கூனதைச் சாய்க்கவே
வாணியும் தந்தவெம் வாரிதிப் புனலே;
வேணுவி(ன்) இசையாய் விண்ணின் நிலவாய்
வாணுதல் நங்கையாய் மன்னவன் கண்ணனைக்
காதலி வடிவிலுங் காட்டிய
ஆதவ பாரதி ஆர்த்தெழு(ம்) ஊற்றே!
வெண்பா
==========
சொல்லுக்கு வேந்தன் சுப்ரமண்ய பாரதி
வில்லுக்கு வேந்தன் விசயனெனச் சொல்லெடுத்துக்
கொள்ளித் கணையெனவே கும்பினியர் ஆட்சியற
தெள்தமிழில் பாடியதோ தேன்.
கட்டளைக் கலித்துறை
======================
ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் சாற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவிப் பேச்சுரைத்தான்!
எண்சீர் விருத்தம்
==================
கணிப்பொறியும் மென்பொருளும் மேலை நாட்டுக்
கருவிகளென் றிருப்பதனால் ஆங்கி லத்தில்
நனிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை
நையபுடைக்கும் பாரதியின் கூற்று முண்டே!
பிணிபிடித்த கண்களிலே மருந்து மிட்டு
பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டும் என்ற
கோணலறி வாளரென்று தூற்று கின்றான்!
அகவற்பா
===========
சொல்லரசுத் தம்பன்; துயிலிலும் பாட்டால்
வல்லரசை ஆட்டிய வம்பன்! கவியால்
நல்லவரை ஈர்த்த நற்றமிழ்க் கம்பன்;
கொல்பகை கண்டால் கொதித்த கொம்பன்!
தேர்ந்த செங்கனித் தேனாய் அமிழ்தாய்
நேர்த்திப் பாப்புனை நேர்கவி பாரதியின்
சீர்த்தமிழ் சேந்திய புதுவை
சேர்ந்த பாரதி செந்தமிழ்ச் சாரதியே!
வெண்பா
==========
தூணெனவே அன்னியரை சோர்விலா தெதிர்த்துநின்ற
மாணமுத பாரதியின் மன்னுதமிழ்க் பாக்களிலே
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
கட்டளைக் கலித்துறை
======================
ஏதி லியாயழும் ஏழை களுக்குணர் வேற்றிடவே,
சூது களையனற் சூரி யனாய்நிதம் சுட்டெரிக்கப்
பூத லமும்புகழ் பாடி டவேபல போர்ப்பரணி
பாதை யினைச்சொலும் பாக்க ளெனுங்கவிப் பாட்டெடுத்தான்!
எண்சீர் விருத்தம்
==================
துடிக்கின்ற தீக்கனலின் ஆற்றல் பேச்சு;
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பூச்சு!
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்;
.....விரிந்தகனிச் சுவைமுதச் சாற்றின் உள்ளம்!
நடிக்கின்ற கும்பினியர் செய்த கேட்டை
.....நயபுடைத்த நெருப்புநிகர் கவிதைச் சாட்டை!
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!
அகவற்பா
===========
மற்றவர் மொழியை அழிக்கவே இங்கு,
மயங்கப் பேசியே ஏய்த்து வாழும்,
குற்ற உணர்வு ஏது மில்லாக்
கூவிடும் அரசியல் பொய்யும் மாய,
முற்றிய பைத்திய முரண்டு பிடிக்கும்
மூளைச் சலவை முழங்கும் பேர்களால்
வற்றிய தமிழைக் காக்க
மறுபடி பாரதி வாராய் இன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக