இந்த தாடித் தாத்தனிடம் என்னவுண்டு? நான் யார்? இப்பெயர் இவ்வுடலுக்கா அன்றி உயிருக்கா? இப்புவியகத்தில் எதற்காக வந்தேன்? என்னதான் செய்கிறேன். இந்தக் கிழவனிடத்தே அப்படி என்னதான் உண்டு!
=================================
=================================
என்னிடத்தே உண்டு.....
======================
அள்ளி அரவணைத்தே அன்புதருந் துணையுண்டு;
துள்ளியே ஆடுகின்ற துடிப்புமிகு மைந்தனுண்டு;
உள்ளமதில் உரமுண்டு; உணர்வினிலே மெய்யுண்டு;
கள்ளமில்லாக் கருத்துண்டு; கறையில்லா நட்புண்டு!
புள்ளினத்தைப் பூவிதழைப் பொழிலூடு பொற்கதிரைக்
கொள்ளை கொள்ளுஞ் கொஞ்சுதமிழ் மொழியினிலே,
வெள்ளமெனச் சொல்லெடுத்து விருத்தமும் வெண்கலியும்,
வள்ளையுடன் வண்ணப்பா வடிக்கின்ற திறனுண்டு!
கள்ளதனை உண்டதுபோல் கண்டபடி உளறியிங்கு,
சுள்ளெனவே எந்நாளும் தூற்றிநிதம் ஏய்ப்பவரைப்
பள்ளிச் சிறுமியரைப் பாழ்படுத்தி மாய்ப்பவரைப்
பொள்ளிவிடும் பாவெழுதிப் பொசுக்கிவிடும் அறமுண்டு!
இயல்பின்றி இப்புவியி லெந்நாளும் அலைந்தலைந்தே,
மயங்கிக் கிடக்காமல் மாமலையாய் நிமிர்ந்திங்கே,
அயர்வின்றிக் கொண்டலது அமுதமழை பொழிவதுபோல்,
கயமையெனுங் கசடுகளைக் கருக்கிவிடக் கவியுண்டு!
=====================================
இராச. தியாகராசன்
பிகு:
====
புள்ளினம் - குருகினம், பொழிலூடு - எழிற்காவின் ஊடாக,
பொள்ளுதல் - சுடுதல், கசடு - கோது/ பிழை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக