வியாழன், 2 ஆகஸ்ட், 2012

புத்தம் புது பூமி வேண்டும்.....

15.7.2011 காலை 9.30 மணி பாவரங்கில் கலந்து கொள்ள நான் பாடல் எழுத வேண்டுமென்று முயலும் போது, பணி சார்ந்த அழைப்பினால் தடையானது.  எனவே அன்புடன் ஒருங்குறி கூகுள் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுவிழாப் போட்டில், இசைக்கவிதை பிரிவில் பங்கு பற்றிய என்னுடைய கவிதையையே தந்தேன்.  இந்த வாய்ப்பிற்கு சந்தக் கவிஞர் புகாரிக்கு என் உளமார்ந்த நன்றிகள்.  இந்த கவிதை, நடுவர் இசைக்கவி இரமணன் அவர்களால் ஊக்க பரிசிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதன் ஒலி இழையை விரைவில் இதே இழையில் தருகிறேன்.  புது பூமி வேண்டும் என்று ஒலியெழுப்பும் மனிதரிகளிடம், பூமகள் புத்தம் புது மனிதம் வேண்டும் என்று கேட்கிறாள்.
==============================================


===============================================
தமிழே எழுவாய்!(அதிகரீணி வகையிலான கலிவிருத்தம்- 
அமைப்பு, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி புளிமா)
===========================================
கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம துணர்வில்
தினமும்நமை யழிக்கும்பகைச் சினமாய்நம தெதிரில்
மனிதந்தகர் நலிவாங்கொடு வழியையழித் திடவே
அனலாய்க்கலந் துறையுந்தமி ழழலேயென எழுவாய்!
=======================================
புது மானுடம் வேண்டும் (ஆனந்த கும்மி)(செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற மெட்டு)
===========================================

மின்னிடும் மின்னலை வாகெடுத்து – முடி
மேகத்தைக் கோதிடும் பூமகள்நான்!
கண்களில் அன்பெனும் பாகெடுத்து – நெடுங்
காலத்தைத் தாவிடும் நாமகள்நான்!

நானிலங் காத்திடுஞ் செங்கதிரில் – நிதம்
நன்னலம் பொங்கிடும் நங்கையும்நான்!
பூணுமப் பற்றரைத் தங்கமென – உடல்
பூரித்து விம்மிடும் மங்கையும்நான்!

எண்ணிலா ஊழிகள் கண்டதனால் – நிகர்
ஈடிலா ஏற்றமும் பெற்றவள்நான்!
நின்றுணர் ஆற்றலைக் கொண்டதனால் – பெரு
நீசங்கள் யாவுமே அற்றவள்நான்!

எத்தனை கேடினி வந்திடினும் – தமிழ்
இத்தரை மீதினில் தாழ்வதுண்டோ?
புத்திளம் மேனியே வெந்திடினும் – புவிப்
பூமகள் நானுமே வீழ்வதுண்டோ?

அன்பெனும் சோலையு மிங்கிருக்கக் – கொடு
அத்தமும் தேடியே ஓடுகின்ற
புன்னெறி யாளர்கள் வன்முறையால் – நெடும்
பூவுல காள்வதும் நீதியடி?

நீறாக என்னுடல் ஆகிவிட – எனை
ஞாட்பெனுங் குப்பைமே டாக்கிவிடும்
ஆறறி வுகொண்ட அற்பர்களே – இடம்
அற்றதென் றேவானிற் றேடுகின்றீர்!

வந்தவர் வாழ்ந்திடத் தேவையொரு – புது
மண்ணுல கென்றிடும் பாவிகளே!
என்னிடம் கேளுங்கள் நானுரைப்பேன் – அது
இன்னுல காப்புது மானிடமே!
===========================================
அத்தம் =  பாலைநிலம்
ஞாட்பு = போர்க்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக