வியாழன், 16 நவம்பர், 2023

சலிக்காது உழைத்த சங்கரையா..

நானிங்கே பேசுவது திராவிட அரசியலில்லை; தமிழ் தேசிய அரசியலில்லை; எதிர்க்கட்சியான பேராயாயர் கட்சியின் குற்றச்சாட்டில்லை; பொதுவுடைமை கட்சியின் கோரிக்கையுமில்லை.  நான் பேசுவது அறம்.  இதற்கும் முட்டுக் கொடுக்க மூளைச் சலவை செய்யப்பட்டவர் ஆயிரம் பேர் வரலாம்.  என்ன செய்வது நாட்டின் நிலை அப்படி இருக்கிறது.  

விடுதலைப்போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற வீரரென்றாலும் சரி, நாளும் மக்களுக்குழைத்த மாமனிதர் ஆனாலும் சரி, வெறும் வெள்ளைத்தாள் முனைவர் பட்டக் கோப்பில் கூடக் கையெழுத்திட மாட்டேன் என்னும் அரசின் ஆளுநர்க் கொள்கை.  மேதகு ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமை இருக்கலாம்.  ஆனால் ஒரு ஈகியருக்கு வெள்ளைத்தாள் பட்டமளிப்பது அவ்வளவு துன்பந் தரும் செயலா?  உள்ளம் மிக வருந்துகிறது.  தகைசால் அறிஞர்திருமிகு சங்கரையா இறந்த சேதி கேட்டு என்னுளத்தில் முளைத்த ஒரே வினா இது.  நீங்கள் எந்த கொள்கை, எந்த கட்சி, என்றாலும், ஒரேயொரு நொடி சிந்தியுங்கள், இது சரியாவென்று. 

இஃதென்னுடைய பக்கம் எனக்கு அறமெனப்பட்டதை எழுதுகிறேன்.  உள்ளம் வருத்தும் இரங்கல் சேதியில், ஒரு செயலின் அறமற்ற தன்மையை, கட்சி கட்டிக் கொண்டு, முட்டுக் கொடுக்கவரும் தோழமை/சுற்றத்தவர் அவரவர் பக்கத்தில் செய்து கொள்ளுங்கள்.  என்ன சொல்லுவீர்கள் நானொரு திராவிடன்/ கொம்மி/ நக்சலைட்டு/ டம்ளர்/காங்கி கசுமாலம் என்றுதானே.  சொல்லிக் கொள்ளுங்கள்:
===================================
"நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவன்நான்;
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் எனக்கென்றும்!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியெனை யடித்தாலும்
அவனியிலே எனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநிதம் 
உவகையுடன் வாழுமெனக்(கு) ஓங்கலதும்  என்வசந்தான்!"
===================================

அவர்தம் மறைவால் அல்லலுறும் அவரதம் தொண்டர்கள், தோழமை, சுற்றத்தோர் அனைவருக்கும் என்றன் உளம்பற்றிய ஆழ்ந்த இரங்கல்.  இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வல்லமையை எல்லாம் வல்ல வித்தகியே அளித்திட வேண்டுகிறேன்.
===================================













===================================
சலிக்காது உழைத்த சங்கரையா
===================================
நந்தமிழ் விளங்கெழிலாய் நலந்தருகும் இந்நாள், 
எந்நாள், பொன்னாள் என்றெல்லாம் எண்ணாமல் 
இந்நாட்  டேழைகளின் ஏந்தலெனச் சங்கரையா, 
முந்தி முழுநேரம் முகஞ்சலிக்கா துழைத்தீரே!

மமதையுடன் நானென்னும் மந்தமன மேட்டிமையை, 
அமைதியோ டுறுதிமிக அறுத்தெறிந்து வாணாளில், 
நமதிந்திய மாந்தரிங்கே நன்னலமாய் வாழநிதம் 
சமதைமெனும் பொதுமைவழி தத்துவப்போர் புரிந்தீரே!

மேவுநிலா இறைக்கின்ற வெளிச்சவிதை தருகின்ற, 
பாவியத்தைப் பாட்டியலை பாவழங்கும் பாவினிப்பை,  
காவியத்தைக் கனவுலாக் கவிவடிக்கக் கவிஞருண்டு;
பூவுலகின் ஏழைகட்காய்ப் பொங்கயினி எவருண்டு?

ஞாலத்தில் ஏதிலிகள் நெஞ்சகமே நெக்குவிடக் 
கோலவெழிற் குவலயத்தோர் குன்றியே குமைந்துருகக் 
காலமெனுங் கரையான் கரைத்தரித்தே தின்றதுவோ?
சால்பறவே மூப்பதுவும் சாக்காடும் வென்றதுவோ?
 
வனைகின்ற வரிகளிலே வெறுமையதும் சுழன்றுழலப் 
புனைகின்றப் பாக்களிலே பொலிவதுவும் கழன்றுவிழ, 
நினைவுகளில் மங்குமுளம் நெருப்பினிலே துடித்தழுகக் 
கனலொன்றின் சுடரொளியுங் காற்றேறிச் சென்றதுவோ?
===============================
இராச தியாகராசன்

பிகு:
ஏந்தல் = தலைவர்/ சான்றோர்,
ஏதிலி = ஏதுமற்றோர்/ ஆருமில்லார்
நெக்குவிட = விரிசலேற்பட
குமைதல்= உள்ளுக்குள் உருகியழுதல்
குவலயம் = புவியகம்/ புவியகத்தோர்
சால்பு = சிறப்பு/ பெருமை
மூப்பு = முதுமை
சாக்காடு = இறப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக